ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு ஜனவரிமாதம் பத்தாம் தேதி காலை மணி பத்து.

அந்த விபத்துபற்றிச் செய்தி வந்தபோது, பார்வதி தனது அரை ஏக்கர் நஞ்சை நெல் விளைச்சலைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

விளைந்த நெல்லை வீட்டில் கொண்டுவந்துசேர்ப்பது, தலைப் பிரசவத்திற்குக் காத்திருப்பது போல.. எந்த வில்லங்கமுமில்லாமல் வீடு வந்து சேர வேண்டும். கதிர் முற்றிச் சோலை பழுக்க ஆரம்பித்திருந்தது. வருடா வருடம் குதிரைவால்சம்பா பயிரிடுவது வழக்கம். இந்த வருடம் ‘பொன்னி ‘. திண்டிவனம் கமிட்டியில நல்ல விலைகிடைக்குதுண்ணு கேள்விபட்டு எல்லோரையும் போல ‘ பொன்னி ‘க்கு ஆசைப்பட்டு, ராமசாமி திருச்சிற்றம்பலத்திலிருந்து விதைநெல் கொண்டுவந்தான். காலாகாலத்தில நாற்றங்காலிட்டு, நடவின்போது சேடைகூட்டுவதற்கு முன்னதாக, பூவரசு மரங்களில் ‘இலை கழித்து ‘, சேர்த்த நான்குக் கட்டுகளையும், வீட்டுக் குப்பையிற் சேர்த்த ஐந்து வண்டி எருவினையும் அடியுரமாக இட்டு, காத்திருந்து, ஒரு முறைக்கு இருமுறையாக, பார்த்துப் பார்த்து ‘பரம்பு ‘ ஓட்டி, முழங்கால் சேற்றில் நடவு நட்டு காத்திருந்த, சொர்ணவாரி சாகுபடி. பிறகு அப்போதைக்கபோது களை, குருத்துப்புழுவிற்கு வேப்பம்பூ புண்ணாக்கு, மேலுரமாக யூரியா. அரை ஏக்கர் விவசாயின்னாலும் ராமசாமிக்கு அனைத்தும் அத்துபடி. விதை அளவு, நாற்றங்கால் – நடவு, உரம் மற்றும் தண்ணீர், பயிர் பாதுகாப்பு,… ஊருக்கே யோசனை சொல்லக்கூடியவன். விளைச்சலைப் பார்த்தபோது, பார்வதி மனம் நிறைய ராமசாமி.

ராமசாமிக்குக் காம்புகளோடு கூடிய விரிந்த மார்பு, அதிற் குறைந்தும் கூடியும் பரவியிருந்த மயிற்கண் ரோமம், பெரிய முகம், அதற்கொத்த நாசி. நாசி துவாரங்களை அடைத்துக்கொண்டு அடர்ந்த மீசை, அவனோடு எப்போதும் ஒட்டியிருக்கும் வேப்பம் பூ மனம்… சந்தோஷ நாட்களைவிட துக்க நாட்களில்தான் அவன் அவளை அதிகமாகச் சேர்ந்திருக்கிறான். அவர்கள் குடிசையில் வறுமையும் அதைச் சார்ந்த துக்கமும் அதிகம். கமலத்தின் உடலில் எச்சிலூறியது. ஊமை வெய்யிலும் ஊதற்காற்றும் சேர்ந்துகொள்ள உடல் சிலிர்த்தது., இடுப்பிலிருந்த முந்தானையை எடுத்துப் பிரித்துத் தலையிற் சுற்றியவள் வீட்டிற்குத் திரும்பினாள்..

‘இன்னும் ‘ஒரு தண்ணீர் ‘ தேவைப்படும். தைமாதக் கடைசி. வாய்க்கால் காய்ந்துவிட்டிருப்பது, ஏரித்தண்ணீர் வற்றிக் கொண்டிருப்பதற்கான அடையாளம். அடுத்தப் பாய்ச்சலுக்கு, மதகுல ‘தொட்டி ஏற்றம் ‘ போடணும். இல்லைன்னா தலை நிமிர முடியாது. விளைச்சலை நம்பி வரிசையா பிரச்சினைகளிருக்கு. பழைய தொல்லை முடிஞ்சபாடில்லை. களத்து மேட்டிலேயே கண்ணுப் பிள்ளைக்கு போன வருடம் விதைக்கு வாங்கிய நெல்லுக்குக் கலத்துக்கு நாலு மரக்கால்னு அளக்கணும். அப்புறம் நாலு வருசமா, நாத்தனார் சரோஜா கல்யானத்துக்குக் காசாம்பு முதலிகிட்ட புரோநோட்டுமேல வாங்கிய கடன், வட்டியும் அசலுமா வளர்ந்து மென்னியப் புடிக்குது. விதை நெல்லுக்குப் போக, மிகுந்ததைக் குறுவைச் சாகுபடிவரை வைத்துக்கொண்டு வயிற்றை கழுவணும். பிறகு எப்போதும் போல கார்த்திகை மாசத்துல ‘கூத்து நெல்லுங்காரங்கக் ‘ கிட்ட அரிசி வாங்கி பொழைப்பை நடத்தணும்…. ‘ ம். இழுத்து மூச்சு வாங்கினாள்.

‘தாயே மாரியாத்தா! உன்னைத் தாண்டியம்மா மலைபோல நம்பியிருக்கன் ‘ குளத்தடி மாரியம்மனை, மார்பில் மண்பட விழுந்து கும்பிட்டு எழுந்தபோதுதான், அந்தச் செய்தி.

‘ஏம்மா பார்வதி நம்ம ராமசாமியை வேன் அடிச்சுட்டுதாமே ? ‘ தேவையை கருதி இரண்டாவது முறையாக திரும்பவும் சொன்னார்; நிஜத்தை நிழலில் மறைக்கும் வித்தையிற் தேர்ந்த தில்லைக்கண்ணு செட்டியார். விபரீதத்தைப் பக்குவாமாக இறக்கிவைத்துவிட்டு அவளைப் பார்த்தார். மார்புக் கூட்டின் ஏற்ற இறக்கம் அவர் நெடுந்தூரம் ஓடி வந்திருப்பதை உறுதிப் படுத்தியது. செய்தியின் பயங்கரத்தை வாங்கிக் கொள்ள அவளுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

ராமசாமி – பார்வதி திருமணம் குமளம்பட்டு பெருமாள் கோவிலில்வச்சு சுறுக்கா முடிஞ்ச திருமணம். உள்ளூர் தெருக்கூத்தில், கர்ண மோட்சத்தில் கர்ணன் ஆகவும், ஆர்யமாலாவில் காத்தவராயனாகவும் படுதா விலக்கப்படும்போதெல்லாம், அவனது தேஜசைக் கண்டு ‘வயசுப் பெண்கள் ‘ மோகித்துப் பேசியபேச்சு இவளையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஊர்த்திருவிழாவின் இறுதி நாளன்று, ‘முறையானவர்களின் ‘ மேல் மஞ்சட் தண்ணி ஊற்றுகின்ற வழக்கப்படி, சாமி ஊர்வலத்தில் ‘சகடைக்கு ‘ முட்டுக்கட்டைப் போட்டு வந்த ராமசாமி மேல் மஞ்சட்தண்ணீரை ஊற்றிவிட்டு அவள் ஓடி ஒளிந்ததும் அதற்கு அடுத்தகிழமை பெண்கேட்டு இவள் வீடு தேடி அவன் வந்ததும் கிராமத்துப் பெண்கள் பேசிப் பேசி புளித்த செய்தி..

வினோபா புண்ணியத்தில் ராமசாமி அப்பா சின்னசாமிக்கு, ஒருகுழி மனை பூமிதானமாக கிடைத்திருந்தது. தானமாக கிடைத்த மனையில், இருக்கின்ற குடிசையைப் பெருசாக்க ஆசைபட்டு, கடைசிவரை அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமலேயே அவர் போய்ச்சேர்ந்தார். கொஞ்ச நாளாக தகப்பன் ஆசையை நாமாவது நிறைவேற்றியாகனும் என்கின்ற வேகத்தில், ராமசாமி தெரிந்தவர்களிடம் கேட்டு சவுக்குக் கம்புகளும், பனையோலையும் வாங்கிவைத்திருந்தான். இதற்காகவே காத்திருந்ததுபோல மறுநாள், ஆளுங்கட்சிகாரன் ஒருவன் சும்மாக் கிடந்த மனையில் ஒரு கம்பை நட்டு கொடியேற்றிவிட்டுப் போக, அதற்கு மறுநாள் எதிர்கட்சிக்காரன் அவன் பங்கிற்கு ஒரு கம்பை

நட்டுக் கொடியேற்றப்போக, ராமசாமி தாலுக்கா ஆபிஸிலிருந்து கலெக்டர் ஆபீஸ்வரை மனு போட்டுக்கொண்டிருக்கிறான். இன்றக்கும் அதற்காகத்தான் வானூருக்கு ‘தாலுக்கா ஆபிஸ்வரை போயிட்டுவரேன் ‘, என்று போனவன் இப்படித் துக்க செய்தியா திரும்புவான்னு பார்வதி நினைக்கவில்லை.

செய்தியின் உக்கிரத்தைப் புரிந்துகொண்டு ‘ என் ராசாவே ‘ என அவள் குரலெழுப்ப, பக்கத்து அரசமர கிளைகளில் வெய்யிலுக்காக ஒதுங்கியிருந்த இரண்டொரு காகங்கள் அரண்டு பறந்தன. மயங்கி விழ இருந்தவளை, ஊர்த் திடலில் சாணி பொறுக்கிக் கொண்டிருந்தப் பெண்களில் இருவர் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். அவர்களை உதறிவிட்டு, ஆவேசம் கொண்டவள்போல தலைதெறிக்க ஓடினாள்

1994ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி காலை மணி பதினொன்று.

அவள் அந்தப் பிரதான சாலையை அடைந்தபோது திருவிழாப்போலக் கூட்டம். இவளை குறிவைத்து பரிதாப விமர்சனங்கள். உச்சுகள். ஏற்கனவே அறிந்த, கேள்வியுற்ற சாலை விபத்துகள் பற்றிய தகவல் பறிமாற்றங்கள். மீண்டும் மீண்டும் முகங்கள், இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு எனப் பெருகி மொய்க்கும் கண்கள். அவற்றின் ஆர்வப் பார்வைகள்.

இரண்டொரு பழகிய முகங்கள், தீவிர துக்கத்தைச் சுமந்துகொண்டு இவளை நெருங்கி நிற்கின்றன.. அவற்ைறை ஒதுக்கிக் கொண்டு ராமசாமியை – அவளது உயிரைத் தேடினாள். கிடைத்த இடைவெளியில் விழுந்து புரண்டு தலையிலடித்துக் கொண்டு கதற, இன்னும் பெரிதாகக் கூட்டம்.. அவளது எதிர்வீட்டுப் பெண்மணி, பார்வதியின் இரு பெண்களையும் முன்னே தள்ளி விடுகிறாள்.

ராமசாமியின் உடல் மீது போட்டிருந்த தென்னங்கீற்று அகற்றப்படுகிறது.

கைகள் துவண்டு விரைத்திருக்க, கரும் பழுப்பு இரத்த சாயத்தில் தோய்த்த கேசம். வலம் இடம் குழப்பத்தில் கால்கள், ஒருக்களித்த தலையில் காது துவாரத்தில் இரத்தம் கசிந்து உலர்ந்திருந்தது. பிறகு அவளுக்குப் பிடித்த நாசி துவாரங்களை அடைத்த மீசையிலும் புள்ளி புள்ளியாய் இரத்த மணிகள். நிறைய ஈக்கள். இறைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகள். திட்டுத் திட்டாய் இரத்தம்..இரத்தம் இரத்தம்..

கூட்டம் மொத்தமும் வெடித்து ‘ஹோ ‘வென்று புலம்புகிறது. அந்தப் புலம்பல்களிலிருந்து வேறுபட்டு உரத்து, அறிந்த முகங்களிடமெல்லாம் தன் துக்கத்தை விண்ணபித்துவிட்டு, வெகு நேரம் ஒலித்த பார்வதியின் அழுகை, கொஞ்ச கொஞ்சமாக அடங்கி ஒற்றைக் குரலாக துவண்டு கம்முகின்றது. பார்வதி மயங்கிச் சாய்ந்தாள்.

அடுத்த வெள்ளிக்கு…..

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts