இரா முருகன்
அத்தியாயம் பத்தொன்பது
ராஜா நாற்காலி போட்டுத் திண்ணையில் குந்தி இருந்தார். எதிர்த் திண்ணையில் கேதத்துக்கு வந்தவர்கள் அவருடைய மூத்த மைத்துனனுக்குத் தலையில் பரிவட்டமாக லேஞ்சி கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான்.
புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான்.
அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும் வைத்திருக்கிறவன். எல்லாம் அவன் கட்டிய புலியடிதம்மம் பெண்பிள்ளை கொண்டு வந்தது. ராஜாவுக்கு அவள் எதோ உறவு முறையில் சகோதரமாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவருக்கு புலியடிதம்மம் சம்பந்தம் வாய்த்திருக்கும். சட்டமாக நிலத்தில் வேலையாட்களை விரட்டிக் கொண்டு, தோப்பில் தேங்காய் பிடுங்கிப் போடுவதைக் கணக்குப் பண்ணிக் கொண்டு முழங்காலுக்கு மேலே கட்டிய ஒற்றை வேட்டியும் மேலே தறித் துண்டுமாக நின்றிருப்பார்.
அரண்மனையில் உட்கார்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதை விட உசத்தியா என்ன அதெல்லாம் ?
இல்லை என்று உறுதியாகத் தலையசைத்து எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருந்த மொட்டையனைக் கனிவோடு பார்த்தார் அவர்.
எல்லோருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் அவர்.
கட்டலாமா ?
யாரோ கேட்டார்கள். மொட்டையன் தலையை ஆட்டுகிறான். உருமால் தலையில் ஏறுகிறது. வந்தவன் துக்கம் ஏற்பட்டது போல் முகத்தை வீங்க வைத்துக் கொண்டு எழுந்து கொட்டகையில் இட்டலி தின்னப் போகிறான்.
காலையிலிருந்து இதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது அலுப்புத் தட்ட ஆரம்பித்தது ராஜாவுக்கு. எழுந்து கொஞ்சம் காலாற நடமாடி விட்டு வந்தால் என்ன ?
செம்மண் நிறத்தில் அலையடித்துக் கொண்டிருந்த நல்ல தண்ணி ஊருணி மனதில் வந்தது. ரம்மியமான பிரதேசம். போன தடவை இங்கே வந்தபோது புஸ்தி மீசைக் கிழவன் ஜீவியவந்தனாக இருந்ததால், ஒரு சாயங்கால வேளையில் குதிரையில் ஆரோகணிக்க வைத்துக் கூட்டிக் கொண்டு போய் வெகு வினோதமாகக் காட்டினான் அந்த நீர்நிலையை.
முரண்டு பிடிக்கும் குதிரையும், லகானைப் பிடித்தபடி கூடவே வந்த சிப்பாயும், ஊருணிக்குப் பக்கம் அனுமார்சாமி கோவிலும் அங்கே சுக்காக உலர்ந்த வடைகளைக் சணல் கயிற்றில் கட்டி சாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகக் கொடுத்த கன்னட பாஷை பேசும் குருக்களும் நினைவில் வரத் தவறவில்லை.
எச்சில் படாமல் விண்டு வாயிலிட்டு வடைகளை ருசித்துக் கொண்டு, ஊருணியில் தண்ணீர் தூக்கிப் போன படி இருந்த பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு இருட்டும் வரை உட்கார்ந்திருந்த அந்த இடத்துக்கு இன்னொரு முறை போய் வந்தால் என்ன என்று ராஜா யோசித்தார்.
தொரெ
குனிந்து வணங்கி ஒரு பணியாள் தாம்பாளாத்தில் வாழை இலை பரத்தி அதன் மேல் எதையோ வைத்து இன்னொரு இலையால் மூடிக் கொண்டு வந்து நீட்டினான்.
மேல் இலையை மெல்லத் தூக்கிப் பார்த்தார் ராஜா. லட்டு உருண்டை நாலும் கார சேவும்.
வக்காளி, சாப்பிட வச்சே ஒழிச்சுடுவானுங்க போல இருக்கே. அதுவும் முழுச் சைவமான பதார்த்தங்கள். எண்ணெய்ப் பலகாரங்கள். நொடிக்கொரு தரம் இப்படித் தின்றால் ஊரில் இருக்கப்பட்ட ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் சந்ததியாவது விருத்தியாவது. வைத்தியன் மூத்திரக் கொல்லையில் இடது கையால் பறித்த கண்ட பச்சிலையையும் சாறு பிழிந்து பவ்யமாக வணங்கிக் குடிக்கக் கொடுப்பதை விழுங்குவதை விட மயானம் போவதே மேல்.
அந்தத் தட்டை நீட்டியவன் நீட்டியபடியே குனிந்து நின்றிருந்தான். வேண்டாம் என்று மறுக்கவும் மனம் இல்லாமல் ராஜா ஒரு லட்டை எடுத்து உதிர்த்து அசை போட ஆரம்பித்தார். கூட அந்த அனுமார்சாமி கோவில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு வண்டியை உடனே சித்தம் பண்ணுங்கள். நல்ல தண்ணி ஊருணிப் பக்கம் போய் வர வேணும்.
ராஜா நேராகப் பார்த்துக் கொண்டு உத்தரவு செய்தார். யாராவது செய்து விடுவார்கள் என்று தெரியும்.
மூன்று லட்டு உருண்டைகளும் கால் வீசை கார சேவும் வாயில் அரைபட்ட பிறகு பின்னால் சத்தம் கேட்டது.
சாவுத் தீட்டு இருக்கும் போது சாமி கோவிலுக்கு யாராவது போவார்களா ? உங்களுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது ?
ராணிதான். பக்கத்தில் குனிந்து சொல்லவே, காதை உஷ்ணம் தகித்துப் போட்டது.
அது எனக்குத் தெரியாதா என்ன ? கோயிலுக்குள் எல்லாம் போக மாட்டேன். அந்த ஊருணிக் கரையில் கொஞ்சம் லாந்தி விட்டு வந்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்டம் தேய்ந்து போயிடுத்து பெண்ணே.
சின்ன மைத்துனனின் பிள்ளைகள் அதற்குள் குதிரை வண்டியைச் சித்தம் பண்ணிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தார்கள்.
விரசா வந்துடுங்க. துஷ்டிக்கு வந்தவர்கள் ஒருத்தொருத்தராக் கிளம்புவார்கள் இனிமேல். சொல்லிக் கொண்டு போக முடியாதில்லையா ? கண்ணசைத்து உங்களின் மேலான உத்தரவு இல்லாமல் அவர்களெல்லாம் பிரயாணம் கிளம்புவது உசிதமாக இருக்காதே.
பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது.
‘லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ ‘
மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான்.
தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச் சேர்ந்த தாக்கல் வந்தபோது கழிச்சல்லே போற நான் என்ன ஏதுன்னு கூடக் கேட்க முடியாம மயக்கம் போட்டுச் சுருண்டு கெடந்தேன். சாமி சத்தியமா, நம்ம குலதெய்வம் சத்தியமா.
மொட்டையன் முன்னால் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான் முக்கால் கிழவன் ஒருத்தன். அவனுக்கும் வசதியாக ஒரு இடத்தைப் புஸ்தி மீசையான் தான் போய் விழுந்த இடத்தில் பிடித்து வைக்கலாம்.
பெரியண்ணே, மாமன் சொல்றது நிசம்தான். பாவம் ரொம்பத் தளர்ந்து போயில்லே வந்திருக்காரு. பாரு.
ராணி சமாதானம் செய்து வைக்கப் போனாள்.
உனக்குத் தெரியாது தங்கச்சி. இந்தாளு மருதையிலே சீமைச் சாராயம் அடிச்சுட்டு மேல மாசி வீதி முச்சூடும் இடுப்புலே துணி தங்காமே உருண்டுட்டுக் கிடந்தானாம். கேதம் சொல்லப் போனவங்க சொன்னாங்க.
மொட்டையன் இல்லாத மீசையை நீவிக் கொண்டான். உலகத்தின் துக்கமெல்லாம் மொத்தமாகத் தன்மேல் கவிந்தது போலவும் அதைக் கொஞ்சம் நகர்த்திக் கூடத் தோ:ள் கொடுக்க யாரும் முன்னால் வரவில்லை என்ற ஆதங்கத்தோடும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது.
ஐயோ யாரோ பொரணி பேசற தாயோளி சொல்லியிருக்கான் அப்படி. மருதையாவது மானாமருதையாவது. கொல்லையிலே போய்க் குத்த வைக்கவே உடம்பிலே சக்தி இல்லே. பாரு, வைத்தியனையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்.
வந்த கிழவனோடு அவசரமாக வந்து ஒட்டிக் கொண்ட வைத்தியன் கெச்சலாக, சுறுசுறுப்பாக இருந்தான். இவனிடம் சிட்டுக் குருவி லேகியம் இருக்கா என்று கேட்கலாமா என்று ராஜா ஒரு வினாடி யோசித்தார்.
வண்டிக்காரன் கும்பிட்டுக் கொண்டே நிற்க, குதிரை அலைபாய ஆரம்பித்திருந்தது. அதை நிறுத்திப் பிடித்திருந்தவர்கள் ராஜா எப்போது வண்டி ஏறுவார் அடுத்த வேலைக்குப் போகலாம் என்று காத்திருந்தார்கள்.
வம்பு வழக்கைத் திரும்பி வந்து வேடிக்கை பார்க்கலாம் என்று உத்தேசித்து ராஜா வண்டியேறினார். இவன்கள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இதையே வைத்து நடுராத்திரி வரை அடித்துக் கொள்வார்கள்.
அவர் ஊருணிக் கரைக்கு வந்தபோது இடமே அமைதியாக இருந்தது. ராஜா தண்ணீருக்கு வெகு பக்கத்தில் ஆலமரத்தடி மேடையில் உட்கார்ந்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசையிலும் பார்த்தார்.
செம்மண் தண்ணீர். மரம். கோவில். மேலே எவ்விப் பறக்கும் காக்கைகள். தரையில் தத்தும் மைனா, கிளி, குருவிகள். எல்லாம் இருந்தது. தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் எங்கே ?
ஒருத்தர் கூடவா இல்லை ? ஊரோடு காணாமல் போனார்களா ? இல்லை தான் வருவது தெரிந்து, தூர்த்தன் வருகிறான். துன்மார்க்கன் வருகிறான். ஓடிப் போய் ஒளிந்துகொள் என்று கண்ணுக்கு மறைவாகப் போனார்களா ?
அவர் உள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டதுபோல் சேவகன் முன்னால் வந்து வணங்கி புத்தி என்றான்.
என்னடா பயலே ?
இன்னிக்குக் கோயில்லே பிரதோசமாம். சனம் எல்லாம் அங்கேதான்.
இந்தக் களவாணிகளுக்கு ராஜாவின் நினைப்பு எல்லாம் அத்துப்படி.
அவர் மெளனமாகப் புன்சிரித்தபோது காலடியில் ஏதோ ஊர்கிற மாதிரி இருந்தது. அவசரமாகக் காலை மேலே ஏற்றிக் கொள்ள, ஒரு செருப்பு தண்ணீருக்குள் விழுந்தது.
அடடா நல்ல தண்ணி ஊருணிக்குள்ளாற விழுந்துடுச்சே.
கவலைப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தார் அவர்.
எத்தனை வீர சாகசக் கதைகளில் படித்திருக்கிறார். ராஜ விசுவாசியான வீரர்கள் உயர்ந்த மலைகளில் இருந்தும், அருவியின் நீர்ப்பெருக்குக்கு இடையிலும், பாலைப் பிரதேசங்களிலும் உயிரைத் துச்சமாக மதித்து அரசனின் குறிப்பறிந்து பணியாற்றுவது வழக்கமில்லையோ.
இவன்களுக்கு ஒரு செருப்பை ஊருணிக்குள் கைவிட்டு அளைந்து எடுக்கக் கூடத் துப்பில்லை. போதாக்குறைக்கு எஜமானனையே குற்றம் சாட்டுகிற மாதிரிப் பேச்சு வேறு.
தேர்ந்தெடுத்து நாலு வசவுகளைச் சொன்னார். அதெல்லாம் கலந்து எழுந்து காற்று கெட்ட வாடை அடிக்க ஆரம்பித்தபோது திரும்ப வண்டியேறினார். இன்னொரு கால் செருப்பைச் சுமந்து கொண்டு லொங்கு லொங்கென்று வண்டியோடு கூட ஓடி வந்தவனை அவர் லட்சியம் செய்யவே இல்லை.
சாவு வீட்டில் விளக்கு வைத்து, கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவே இருக்கிறவர்களை எங்கோ பார்த்த நினைவு ராஜாவுக்கு.
கொலைச் சிந்து பாட வந்தவர்கள். புஸ்தி மீசைக் கிழவனைக் கூடத்தில் கிடத்திக் குளிப்பாட்ட நீர்மாலை எடுத்து வந்தபோது வாசலில் நின்று மரியாதையாகக் கும்பிட்டவர்கள்.
யாரோ எடுத்து வந்து ஓசையில்லாமல் பின்னால் நகர்த்திய மெத்தை வைத்த ஆசனத்தில் ராஜா ஆரோகணித்தார். நாலைந்து தீப்பந்தங்கள் இலுப்பை எண்ணெய் வாடையோடு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, கொலைச் சிந்துப் பாடகர்கள் பாட ஆரம்பித்தார்கள்.
வந்தனம் ஐயாமாரே
வாருமம்மா தேவியரே
சாமித்துரை புண்ணியவான்
சீமைத்துரை ஆவதற்கு
பல்லக்கு பரிவட்டம்
பாங்கான தப்புக் கொட்டு
நல்ல தண்ணி நீர்மாலை
நாக்குலேதான் வாக்கரிசி
எல்லாமும் கவுரதையாய்
எசமான்கள் செய்துதந்து
வழியனுப்பி வச்சாரே
வமிசம் செழிக்க வாழ்த்துவீரே.
ஐயாமார் எல்லாம் அவனுக்கு முன்னால் கால் மடித்து உட்கார்ந்திருந்தார்கள். தேவியர் எல்லோரும் முற்றத்தின் விளிம்புகளில் பாதி மறைந்தும் மறையாமலும் வெகு அழகோடு அமர்ந்திருந்தார்கள். தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் எல்லோருமே அப்சரஸ்களாக ராஜாவுக்குத் தெரிந்தபோது புஸ்தி மீசைக்காரனின் ஆசைநாயகியான காது வளர்த்த கிழவி நான் கூடவா என்று சிரித்து வாயில் புகையிலைக் கட்டையை அடக்கிக் கொண்டாள்.
யாரோ முன்னால் குந்தியிருந்த பாட்டுக்காரன் காதில் ஓதிவிட்டு வர அவன் சங்கடமாகப் பார்த்தான். இன்னும் நாலு பேர் எழுந்தார்கள். எல்லோரும் சின்ன வயசு. அவர்களும் பாட்டுக்காரனிடம் ஏதோ கேட்டார்கள்.
அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு புராணக்கதை சொல்ல ஆரம்பித்தான்.
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா.
கச்சு அகற்றிப் பழம்போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்.
கொட்டி முழக்கினார்கள். ராஜாவுக்குக் கொஞ்சம் பசியெடுத்தது.
நிறுத்துலே.
சாயந்திரம் பரிவட்டம் கட்ட மன்றாடியவன் எழுந்து சத்தம் போட்டான்.
இதெல்லாம் இப்போ வேணாம். மொதல்லே கொலைச் சிந்து. அப்புறம் மத்ததெல்லாம். சம்பிரதாயத்தை மீறக்கூடாதுன்னேன். என்ன நான் சொல்றது ?
அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் மைத்துனன் மொட்டையன் ஆமா ஆமா என்று பலமாகத் தலையாட்டினான். எழவெடுத்தவன்கள் சமாதானமாகப் போய்விட்டார்கள். ராஜாவுக்கு எரிச்சல் வந்தது.
ஆமாமா, கொலைச் சிந்துதான் பாடணும் அப்பூ.
துரைத்தனத்தார் போல் சட்டமாகச் சொன்னாள் காது வளர்த்த கிழவி. ராஜாவுக்குள் பிரம்மாண்டமாக ஒரு பசி எழுந்து கொண்டிருந்தது.
தொரே ஒத்தச் செருப்பை என்ன பண்ணனும்னு உத்தரவாகணும்.
சேவகன் காதருகே குனிந்து வேண்டிக் கொண்டான்.
சுட்டு எடுத்துட்டு வாடா. பிச்சுத் தின்னுக்கறேன்.
ராஜா சொன்னது பக்கத்தில் கேட்டிருக்கும்.
சரி பெரிசுங்க சொல்றபடிக்குக் கொலைச் சிந்து மொதல்லே. பொட்டைப் புள்ளைங்க எல்லாம் சாப்பிட்டுப் படுத்தப்புறம் நடுராத்திரிக்கு ரிசிபத்தினி கதை.
மைத்துனனில் பிள்ளைகளில் ஒருத்தன் சத்தமாகச் சொல்ல இளவட்டங்கள் ஏக ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
பாட்டுக்காரர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் குரலில் சலிப்பு குடியேறி இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியபோது, சமூகம் ஆகாரம் பண்ண வர உத்தரவாகணும் என்றார்கள் யாரோ இருட்டில் பின்னால் குனிந்து.
காயடிக்கப் பட்டவனாக இருந்தாலும் அவன் வம்சம் நாலு தலைமுறை வாழட்டும் என்று மனதில் நினைத்தபடி ராஜா எழுந்தார்.
தாது வருசப் பஞ்சம் வரப்போவுதுன்னு வரப்போவுதுன்னு சோசியன் சொல்றான். அது வரும்போது நாம இருப்போமோ இல்லாம மண்ணோட மண்ணா மக்கிப் போவோமோ தெரியலைங்க தொரகளே, தொரசானிகளே. வர்ற கதையைச் சொல்ல நமக்கு வார்த்தை போதாதுங்க. போன கதையைச் சொல்றோம். செவி கொடுக்க வேணும்.
ஒற்றை தப்பட்டை அடக்கி ஒலிக்க குரல் வேண்டுகோளாக எழுந்து வரப் போகும் சுவாரசியத்தைக் கோடி காட்டி, உக்காருங்க என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார்த்தியது எல்லோரையும்.
நூறு வருசம் முந்தி தரணியெல்லாம் காஞ்சு போன ஜனங்கள் பசியோடு பரிதவிச்சுச் செத்த கொடும் பஞ்சம் ஒண்ணு வந்தது.
கொலைச் சிந்துக்காரர்கள் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அது எப்போ ஏற்பட்டிருக்கும் ? ராஜா யோசனை பண்ணிப் பார்த்தார். நினைப்பு எல்லாம் இட்டலி, தோசை, கறிச்சோறு என்றுதான் போனது.
ராஜா உள்கட்டில் உட்கார்ந்தபோது இலை நிறையச் சோறைப் பரிமாறி வாழைக்காயைக் கறியாக்கி வைத்து, புளிக்குழம்பையும் மேலே புத்துருக்கு நெய்யையும் போதும் போதும் என்று கைகாட்ட நிறுத்தாமல் ஊற்றினான் சமையல் காரன். அரண்மனை சமையல்காரனை விடச் சுத்தமாக இருந்தான். அய்யனாக இருப்பானோ ? மாரில் நூலைக் காணலை. அவன் யாராவது வேணுமானாலும் இருந்து போகட்டும். மணமும் ருசியுமாகச் சமைத்திருக்கிறான். அது போதும்.
பிரும்ம குலக் கன்னியகையும் கூடப் பிறந்தவனும் பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போய் பாழுங்கிணத்துலே விழுந்து உயிரை விட்ட சரித்திரம் இது. கல் மனசையும் கரைக்கும் கதையிதனைக் கேட்பீரே எஜமான்களே.
திரும்ப தப்பட்டைகள் உச்சத்தில் முழங்கின. ராஜாவுக்குத் திருப்தியாக இருந்தது. பழுக்காத் தட்டில் ஒப்பாரிப் பாட்டு கேட்கக் கொடுத்து வைக்காத குறைச்சலை கொலைச் சிந்துப் பாடகர்கள் நீக்கி விட்டிருந்தார்கள்.
மழையில்லை தண்ணியில்லே
மரமில்லை செடியில்லே
வானம் பார்த்து வானம் பார்த்து
வாயழுத வயல்காடு
கட்டாந் தரையாச்சு
கரையெல்லாம் கத்தாழை.
அவன் பாட்டுக் குரலை மீறிக் கொண்டு திடாரென்று இன்னொரு குரல் எழுந்தது.
ஆமடா. மழையில்லை. தண்ணியில்லை. கட்டாந்தரையாக் காடு. பஞ்சம் பிழைக்க நான் தான் ஊரை விட்டுக் கிளம்பினேன். பாழும் கிணத்துலே தவறி விழுந்தேன். உசிரை விட்டேன். இப்போ வந்திருக்கேண்டா. பக்கத்துலே தான் இருக்கேன். சாமாவுக்குப் பொண்டாட்டிடா நான். சாமிநாத சிரவுதிகள் தெரியுமா ? ஆத்துக் காரன் பெயரைச் சொல்லக் கூடாதாமே. சொன்னா என்ன ? அவனும் அல்பாயுசிலே போவானோ ? போகட்டுமே. நான் போகலியா என்ன ? ஆனாக்க, கேட்டுக்கோடி எடுபட்டவளே. நீ பாக்கச் சொன்னே. என் கொழுந்தன் பாத்தான். அம்புட்டுத்தான். வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.
ராணி குரல் அது.
ராஜா சாப்பிட்டது தொண்டையில் அடைக்க அங்கேயே நின்றது.
(தொடரும்)
eramurug@yahoo.com
- வழியில போற ஓணான…
- தாய்மைக் கவிதை
- மனிதனாக வாழ்வோம்
- உருவாக்கம்
- அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)
- சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
- அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )
- நாவலும் யதார்த்தமும்
- சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்
- தஞ்சைக் கதம்பம்
- வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12
- சங்கப் பாடம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
- ஆடு புலி ஆட்டம்
- என்று உனக்கு விடுதலை
- மனசெல்லாம் நீ!
- செயலிழந்த சுதந்திரம்.
- அப்பா
- விடியும்! நாவல் – (9)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது
- ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்
- கடிதங்கள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி
- குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ
- சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ
- 4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக
- சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்
- சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3
- தாயே வணங்குகிறோம்
- ராஜீவின் கனவு
- எந்திர வாழ்க்கை
- சுவைகள் பதினாறு
- நல்லவர்கள் = இஇந்தியர்கள்