அப்பா

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாடா… எங்கே நீ பாட்டுக்குப் போற ? உங்கம்மாக் கிட்டயா ? இங்க நானொருத்தன் குத்துக்கல்லாட்டம் நிக்கறேனே தெரியலையா ? சொல்ல வேண்டியதை எங்கிட்டச் சொல்லக் கூடாதா ?

என்னடா முணுமுணுங்கறே ? இருந்த வேலையையும் போயிட்டுது. எங்கயாவது மூலையில சுருண்டு கிடக்காம இந்த ஆளுக்கு என்ன புலம்பல் வேண்டிக்கிடக்குது ? அப்படித்தான நினைக்கிற ? சொல்லித் தொலையேன். உங்கம்மா குணம் உனக்கு….. வேண்டாண்டா.. அவளை நான் கொண்டாடினதும் போதும்.. அதனால நான் பட்டதும் போதும்.. நம்பாதே..! அவளை மட்டுமல்ல எந்தப் பெண்ணையுமே நம்பாதே.. கொஞ்சம் விட்டா சக்திதான் பெரிசும்பாங்க….

நான் உளறல.. உண்மையைச் சொல்றன்.. எனக்கு நேர்ந்தது உனக்கும் நேர்ந்துடக் கூடாது பாரு. அந்த அக்கறையில சொல்றேன்…..

*****

கையில் வாங்கிய வேலை நீக்க உத்தரவை ஒருமுறைக்கு இருமுறையாக வெங்கடாசலம் படித்துப் பார்த்தார். ஏதேதோ உதவாக்கரைக் காரணங்கள். கையாலாகாத அரசாங்கம். அதற்கு வசதியாக ஒரு சட்டம். முகத்தைத் திருப்பி, துளிர்த்த கண்ணீர்த் துளிகளைக் கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துக் கொண்டார். வேலை நீக்கத்திற்கான வரிகள் பழுக்கக் காய்ந்த அலகாக நெஞ்சில் இறக்கப்பட்டிருந்தது. மெழுகாக உருகி நெஞ்சை அடைத்த துயரைக் கட்டுபடுத்த முயன்றுபார்த்தார். மார்பை அடைத்தது. அப்படியே பக்கத்திலிருந்த தூணில் மெல்ல சாய்ந்தார். இன்னும் கொஞ்ச நேரமிருந்தால் துக்கம் அவரை சின்னாபின்னமாக்கி விடுமென்கிற பயம்.. அவரது கபாலம் நிறைய ஏதேதோ ஊர்ந்தன..

அரசுப் பணி வாழ்க..!.

*****

ம் சொல்லு… எங்கிட்ட சொல்லு.. உனக்கு ேலை கிடைச்சுதா ? எங்களைப் பலிபீடத்துல நிறுத்திட்டு உங்களுக்குப் பட்டாபிஷேகமா ? எத்தனை நாளைக்குடா ? நம்பிக்கை இருக்குதா ? உங்களுக்கு அரசாங்கத்து மேலேயும் அரசாங்கத்துக்கு உங்க பேர்லயும் பரஸ்பர நம்பிக்கை வரணுமே.. வருமா ?

என்ன அப்படி பார்க்கிற ? ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் நான் ஏதாவது சொல்லும் போதெல்லாம் அலட்சியம் காட்டுற. எனக்கு வேலை போனது வாஸ்த்தவம். ‘அப்பன் ‘ ங்கிற ஸ்தானம் கூடவா இல்லாம போயிடும். ஏன் உன்னோட சரீரம் இப்படி நடுங்குது ? கண்களைப் பாரு.. பெண்களிடத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுகின்ற குணம் பளிச்சுண்ணு தெரியுது.. எனக்குள் மட்டுமல்ல உன் இரத்தத்திலும்கூட அடங்கிப் போகும் குணம் பூரணமா, தெளிவா இருக்குது. அதைத்தான் எந்த நரம்பையாவது துண்டித்து கொட்டிடுன்னு சொல்றேன்…..

*****

வெங்கடாசலம் தாலுக்கா அலுவலக வளாகத்திலிருக்கும் வேப்ப மர நிழலில் ஒதுங்கினார். கடந்த சில வாரங்களாகப் பியூன் ராமசாமியிலிருந்து தாசில்தார்வரை உத்தியோக பேதமின்றி, கடன் சொல்லி வாங்கிய டாயுடன், அவரவர் விருப்ப தமிழ்த் தினசரிகளில் வந்துள்ள, தங்கள் வேலைநிறுத்தம் குறித்துச் செய்திகளை விவாதித்து, நீதிமன்றத் தீர்ப்புகளில் நம்பிக்கை வைத்து, இறுதியாக எங்கே எவரிடம் குறைந்த வட்டியில் பணம் கிடைக்குமென்கிற தகவலுடன் கலைகின்ற சபை; இன்றைக்கு ஆதரவற்றிருந்தது. வெங்கிடாசலம் வானத்தையும் மண்ணையும் தேவையின்றித் திரும்பத்திரும்பப் பார்த்தார்.. தள்ளியிருந்த சாலையில் பதினொன்றே காலுக்கு வந்தவாசிக்கு புறப்பட்டுச் செல்லும் அரசுப் போக்குவரத்து பேருந்து வழக்கம் போல பதினொன்றரைக்குப் போய்க் கொண்டிருந்தது. தேய்ந்த டயர்ச் செருப்போடு கணுக்கால் தெரியும் சாயம் போன நூற் சேலையும், வியர்வையில் முதுகு நனைந்த இரவிக்கையும், முந்தானை சும்மாட்டில் சாப்பாட்டுக் கூடையுமாகத் தாலுக்கா அலுவலகத்திற்கு ஆண்டாள் சரியாக பதினொன்றைரைக்கு வந்து விடுவாள். வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்த ‘கிளைவ் ‘ காலத்து முண்சீப்கோர்ட்டு கூடுதல் நீதிபதி எப்போதும் போல முகத்தை இறுகவைத்து, பதட்டத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். பஞ்சபூத சேர்க்கையிலான உலகம் தன் பாட்டிற்கு வெங்கடாசலத்தைப் பற்றிய கவலையின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. உச்சிவெயில். தார்ச்சாலை சிற்றெறும்பாய், இவர் திசைமயக்கத்திலிருந்தார்.

அரசுப் பணி வாழ்க..

*****

உங்க அம்மாவைப் பத்தின உன்னோட அபிப்ராயமென்ன ? கொஞ்சம் முயற்சி பண்ணிபாரு. நல்லதா நாலுவார்த்தை.சொல்ல முடியுமா ?.. முடியாது. அவளோட முகம், அவளோட கண்கள், அந்தத் திராவகம் தோய்ந்த குரல், அதில் தெறிக்கும் நெடி.. ராட்சஷி. புண்களைக் குத்தி சுகம் காணும் காக்காய் ஜாதி.. அவளின் கைப்பிடியில் சிக்கி அழுக்கேறிய துணியாய் கல்லில் அடிபட்டு கிழிந்திருக்கிறேன். வேறென்ன சொல்ல.

*****

வெங்கிடாசலம் கடந்த அரைமணி நேரமாக மனம் போனபோக்கில் நடந்து கொண்டிருக்கிறார். திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். பார்க்கின்றவர்கள் கண்களில் ஆச்சரியமும் தொடர்ந்து அலட்சியமும் சேர்ந்து கொள்கின்றது.

‘கொஞ்சமாவது விவஸ்தை இருக்கணும். நாலுபேரபோல பிழைக்கத் தெரியணும். நீங்க எதுக்கும் லாயக்கற்றவர். ‘ பார்வதியிடம் சாதாரண நாட்களிலேயே வருகின்ற பஞ்சமில்லாத வார்த்தைகள்.

‘என்ன தப்பு செஞ்சேன் ? இந்த நாற்பது வருட சர்வீஸ்ல ஒரு குறை, ஒரு தவறு சொல்ல முடியுமா ? ஒரு மெமோ உண்டா ? கை நீட்டி ஓர் அஞ்சுரூபா வாங்கியிருப்பேனா ?…. தீ விபத்துண்ணு வர அப்பாவிங்கக்கிட்டகூட அம்பது நூறுண்ணு கறக்கும் பயலும், முதுகில எலும்பில்லாம வளைஞ்சு கொடுத்து காக்காய் பிடித்துக் காலம் தள்ளுற பயலெல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டும்…நான் வேண்டாம். இருபது வருஷப் படிப்பு, சர்வீஸ் கமிஷன், ரெவன்யூ டெஸ்ட், முப்பத்தைந்து வருஷ சர்வீஸ் எல்லாத்தையும் பெருக்கிக் கூட்டி குப்பைகளோட சேர்த்தாச்சு. இனி கொஞ்சம் கொஞ்சமாக மக்கணும். விட்டுடுவேனா ? விசாரணை நடக்கட்டும். எல்லாப் பயலுவளையும் நாற அடிச்சுடறேன் பாரு ‘ தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

திண்டிவனத்தை குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு, வீட்டை அடைந்தபோது மாலை ஐந்து. வீடு

பூட்டியிருந்தது.

ஒவ்வொரு நாளும் பார்வதி இந்த நேரத்தில் கதவருகில் இவரை எதிர்பார்த்து காத்திருப்ப்பாள். எங்கே போய்விட்டாள் ? இவர் நுழையும்போதே முகத்தைச் சுளித்துச் சுளீரெனச் சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளால் விளாசப் பழகியவள். சோர்ந்து கூடத்திலிருந்த நாற்காலியில் விழுந்தார். திடாரென்று விழித்துப் பார்த்தபோது, எதிரே பார்வதி.

‘எங்க வந்தீங்க. ? அப்படியே எங்கேயாவது ஒழிய வேண்டியதுதானே ? ‘

‘பார்வதி வேண்டாம்.. உன்னோடு விவாதம் பண்ண நான் தயாராயில்லை. நொந்துபோய் வந்திருக்கேன். என்னை குதறாதே. நீ எங்கே போயிருந்த ?.. ‘

‘எங்கே போனா என்ன ? சம்பாதிக்கறவனத் தேடிப் போனன்.. உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு உப்பு மிளகாய்க்குக்குக் கூட வழியில்லையே..! ‘

‘அசிங்கமா பேசாதே.. ‘

‘நானா பேசறேன். அப்படி பேச வைக்கிறீங்க. வயசுக்குத் தகுந்த புத்தி இருக்கணும். ஒழுங்காகச் சம்பாதிச்ச காலத்துலேயே மளிகை பாக்கி, பால் பாக்கிண்ணு மென்னியைப் பிடிக்குது. இப்ப வேலையையும் தொலைச்சுட்டு வந்து நிக்கறீங்க.. என்ன செய்யப் போறதா உத்தேசம் ? ‘..

‘அவனுவ போன்னு சொன்னா போய்விடுவேனா ? தொலைச்சிட மாட்டேனா ? பார்க்கத்தான் போற.. சுப்ரீம் கோர்ட்வரை போவன் ? ‘

‘கிழிச்சீங்க.. ஆம்பிளையா லட்சணமா யோசனை பண்ணுங்க. சித்தமுன்ன சாம்பசிவம் சாரை பார்த்துட்டு வந்தேன். நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அவர் ஆலோசனைப்படி நடக்கப் பாருங்க..அப்படி இல்லன்னா.. விடுங்க. இந்த வீட்டுல ஒண்ணு நீங்க இருக்கணும் இல்ல நாங்க இருக்கணும்.. முடிவுக்கு வாங்க.. சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள். ‘

மெல்ல எழுந்துபோய், பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பார்வதியின் தோளைப் பற்றினார். பதறிக் கொண்டு திரும்பினாள். ‘தள்ளி நில்லுங்க. என்னைத் தொடாதீங்க… உத்தியோகம் புருஷ லட்சணம். அதையும் உதறிட்டுவந்தா பொம்பிளை எப்படி மதிப்பா ? ‘

‘பார்வதி.. நிதானமா யோசனை பண்ணு. நானா வேலை வேண்டாம்னு நிக்கறேன். என்னை நோக அடிக்க இது நேரமில்லை. எங்க அப்பாவும் இப்படித்தான், கிராமத்துல கர்ணமாகவிருந்தார். திடார்னு ஒரு சட்டம் கொண்டுவந்து அத்தனைபேரையும் வீட்டுக்கு அனுப்பிச்சாங்க. அப்பவும் இப்படித்தான் எங்க அம்மா வேலை போனதுக்கு எங்க அப்பதான் காரணமின்னு ஆவேசப்பட்டாங்க. அப்பா பொறுமையாகச் சொல்லிப் பார்த்தார். கேட்கலை… பிறகு என்ன நடந்தது தெரியுமா ?.. வேண்டாம்.. அதைப்பற்றி பேச நான் விருப்பப்படலை. இங்கே பாரு நான் தனி ஆள் இல்லை. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க ஆயிரக் கணக்குல இருக்காங்க…. இதற்கு அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆகணும்…

‘ இங்கே பாருங்க உங்க வியாக்கியானமெல்லாம் எனக்கு வேண்டாம். முடிஞ்சா வேலையோடு திரும்ப வாங்க.. இல்லை நான் கிளம்பறேன். ‘

‘எங்க சாம்பசிவம் கிட்டியா ?.. ‘ வேண்டாம்டி. நான் மூர்க்கன். எங்கப்பா படிச்சுப் படிச்சு சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்ணு சொன்னார். அதை உண்மையாக்கிடாதே. அவரை மாதிரியே என்னையும் கொண்டு போயிடாதே ‘ வெங்கிடாசலம் நெருங்கி வந்தார். முகம் கருத்திருந்தது. கண்களில் திடாரென இரத்தம் பரவிநின்றது.

‘என்னைச் சீண்டனிங்கன்னா, விதண்டாவாதத்துக்காவது அப்படித்தான் என்பேன் ‘

‘அப்பா நீங்க சொன்னது சத்தியம். நான் உங்க பேச்சைக் கேட்டிருக்கணும். என்னை மன்னிச்சிடுங்கப்பா..

‘நில்லுங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு ?.. திடார்னு இப்படி என்னென்னவோ பேசறீங்க ?

‘சிவம் பெருசுண்ணு சொல்லவறேன்.. கிட்டவா வலிக்காது.. எங்க அப்பா அம்மாவை அடக்க கையாண்ட வித்தை. இரண்டு விரல் போதும்…. ‘

‘என்னது ?… எதுக்காக என் கழுத்தை இப்படி.. என்ன.. என்ன செய்யறீங்க நீங்க…ஐய்….! ‘

******

என்னடா நான் சொல்றது காதிலே விழுந்ததா ? பெண்களை நம்பாதேண்ணு எங்கப்பா எனக்குச் சொன்னார். அதை நான் உனக்குச் சொல்றேன். உம்மனசுல என்ன ஓடுதுண்ணு எனக்கு விளங்குது. என்னை பைத்தியக்காரன்னு நினைக்கிற. என் பிம்பத்தை சுத்தமாத் துடைச்சிட; என்னை மறந்திட துடிக்கிற. எப்படி முடியும் ? என்னோட பிரதி நீ. கருப்பு வெள்ளை நிழற்படமல்ல, இரத்தமும் தசையினாலுமான வார்ப்பு. வேறொரு தகப்பனுக்கு அவனோட பிள்ளை அன்னியனாக்கூட மாறிப்போகலாம். என்னிடம் முடியாது. நான் அனுமதிக்கமாட்டேன். எனக்கேற்பட்ட ரணமும் வலியும் உனக்கு வேண்டாம். நாளைக்கு நீயும் இந்தத் தப்பைச் செய்யக்கூடாது பாரு. வா.. உன்னை அடைகாக்க நானிருக்கேன். எங்கப்பா மாதிரியே பொத்தி பொத்தி வளர்ப்பேன்.. உன்னோட அப்பன் சொல்றேன் அப்பன்…

‘என்ன வழக்கம்போல தனியே நிண்ணு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்களா ? உள்ளே வாங்க. ரோட்டுல போற ஜனம் அத்தனையும் உங்களத்தான் பார்க்குது. இல்லாத பிள்ளையை கற்பனை செய்துகொண்டு..

கடவுளே. ‘. பார்வதி தலையிலடித்துக்கொண்டாள்..

******

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts