இரா முருகன்
16
ராஜா அரண்மனை சிறுவயலை அடைந்தபோது அதிர்வேட்டு முழங்கிக் கொண்டிருந்தது.
வேட்டுக்காரன் ஊருணிக்கரைப் பொட்டலில் பத்துப் பதினைந்து அதிர்வேட்டுக்களை வரிசையாக நிறுத்திப் பொருதி வைத்தபடி வெய்யிலில் நீள ஓடிக் கொண்டிருந்தான். புகையும் வெடிமருந்து வாடையும் காதை அடைக்கும் சத்தமுமாக அந்தப் பிரதேசமே மாறி இருந்தது.
அப்புறம் தப்புக்கொட்டுக்காரர்கள். கையில் எடுத்த கொட்டும், தோளில் தொங்க விட்டுக் கொண்டதுமாக வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொட்டடித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒரு பெரிய கூட்டமாக. அவர்களில் ஒருவன் ஒப்புச் சொல்ல மற்றவர்கள் தாயாரே தாயாரே என்று தாவித் தாவிக் கொட்டடித்தார்கள். கந்தர்வ கானமாக இல்லாவிட்டாலும் சகித்துக் கொள்ளும்படியாக இருந்தது அது.
கந்தர்வ நாட்டில் என்னத்துக்கு ஒப்பாரி வைப்பது ? ராஜாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. நரைமீசையைத் தடவிச் சரி செய்வது போல் வாயை மூடிக் கொண்டார்.
இன்றைக்குப் பார்த்துப் பார்த்துக் காரியம் செய்து பிரயாணம் கிளம்ப எல்லா நடவடிக்கையும் மேற்கொண்டாலும் தாமதமாகி விட்டது.
சமையல்காரன் தோசையை ஒரு பக்கம் தீய்த்து விட்டான். முட்டைக் குழம்பில் காரம் குறைச்சல். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார் ராஜா. இவனோடு எழவெடுத்துக் கொண்டிருந்தால் மாமனார்க் கிழவன் எழவு முடிந்து கருமாதி ஆரம்பிக்கும் நாளைக்குத் தான் போய்ச் சேரமுடியும் என்று புத்தி எச்சரித்தது காரணம்.
அய்யர் கூப்பிட்டனுப்பியபோது புதுமாப்பிள்ளை போல் கொஞ்சம் முறுக்கோடு தான் வந்தார். திவசத்துக்கு இறங்கி வந்த முன்னோர்கள் மாமிசமும் சாராயமும் கேட்டு அவர் கொடுத்த எள்ளையும் நீரையும், சொன்ன மந்திரத்தையும் மதிக்காமல் போனது அவரை வெகுவாக மனம் நோகச் செய்திருந்தது. நாமக்கல் ஜமீந்தார் கூப்பிடுகிறார் வாவா என்று. அவ்வளவு தூரம் இந்த வயசான காலத்தில் போவானேன் என்று தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் காரண காரியமில்லாமல் இரண்டு தடவை சொன்னார்.
அரசூரை விடப் பெரிய ஊர் அது. ஆடும் மாடும் நிறையத் தொலைந்து போகும். மூக்குத்தியையும் வெள்ளி அரைஞாணையும் கழற்றி வைத்த இடத்தை மறந்துவிட்டவர்கள் இன்னும் நிறையப் பேர் இருப்பார்கள். அது இருக்கும் இடம் தெரிய அய்யருக்குத் தட்சணை வைத்துத் திண்ணையில் குந்த, அய்யர் சோழிகளை நிறுத்தாமல் உருட்டி எங்கே தேட வேண்டும் என்று சொல்வார்.
தொலைத்தது கிடைத்த சந்தோஷத்தில் படுத்து எழுந்து பத்து மாசம் கழித்து ஜாதகம் கணிக்க வண்டி கட்டிக் கொண்டு வந்து கூப்பிடுவார்கள். அந்த ஊர் ஜமீந்தார் துடைத்து வைத்த கஜானாவோடு இல்லாமல் கொஞ்ச நஞ்சமாவது பசையோடு இருப்பார். திதி திவசத்துக்கு இறங்கும் அவருடைய முன்னோர்கள் நல்ல வயசாளிகளாக எள்ளையும் தண்ணீரையும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு தேவபாஷை அசுரபாஷை எல்லாவற்றிலும் வாழ்த்திப் போவதால், மழையும், குளிர்ச்சியும், விளைச்சலும், போகமும், சம்போகமும் ஒரு குறைச்சலுமில்லாமல் நடக்கும்.
ராஜா ஒரு நிமிடம் அய்யயரைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு உள்ளே போய் ஒரு மரத்தட்டில் நாலு வெற்றிலையும் பாக்கும் ஒரு வராகனுமாக வந்தார். குருவி போல் சேர்த்து வைத்த வராகனில் ஒன்று குறைந்து விட்டதில் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் அய்யரைப் போக விடக்கூடாது என்று தீர்மானம் செய்திருந்தார்.
இரும்புப் பெட்டியிலிருந்து மஞ்சள் துணிப்பையை அவிழ்த்து வராகனை எடுத்தபோது முன்னோர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார். மயான அமைதியாக இருந்தது இன்றைக்கு. அப்புறம் தான் நினைவு வந்தது முன்னோர்கள் புஸ்தி மீசைக் கிழவனைக் கைபிடித்து மேலே கூட்டிப் போக அரண்மனை சிறுவயல் போயிருப்பார்கள் என்று.
அய்யர் வராகனைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மடியில் முடிந்து கொண்டார். தான் நாலு தலைமுறையாக அரசூர் சக்கரவர்த்திகளின் விசுவாச ஆஸ்தான புரோகிதர் மற்றும் பஞ்சாங்கக்காரர் என்று பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு அறிவித்தார். நாமக்கல்லார் நாமம் போட்டு விடுவார்கள். நான் ஏற்கனவே பட்டை நாமம் பரக்கச் சாத்திண்டு வந்திருக்கேனே என்று சிரித்தார்.
மரியாதைக்கு ராஜாவும் சிரித்து வைத்தார். இந்தப் பார்ப்பான் படி இறங்கிப் போகும்போது யாரையாவது ஒளிவாக அனுப்பி வராகனைப் பிடுங்கிக் கொண்டு பூணூலை அறுத்து விட்டு இவனையும் நாலு சார்த்தி விட்டு வரச் சொல்லலாமா என்று யோசனை வர, அதை முளையிலேயே கிள்ளி எறிந்தார்.
அய்யர் சொன்னபடிக்கு நாலு வீசை கருப்பட்டி, எட்டுக் கவுளி வெற்றிலை, மூணு பலம் ஜாதிபத்திரி, அரை ஆழாக்கு ஆமணக்கு எண்ணெய், நீல வஸ்திரம், கம்பளிக் கயறு, பட்டுக் கோவணம் என்று சேவகர்களை ஏவி வாங்கி வந்ததில் இன்னொரு வராகனையும் இரும்புப் பெட்டியிலிருந்து எடுக்க வேண்டிப் போனது.
ஆனாலும் எல்லாம் அதது அதனதன் பாட்டில் விரசாக நடந்து முடிந்தது.
குதிரை வண்டியில் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு இருந்தபோது தான் பனியன் சகோதரர்களின் நினைவு வந்தது. அவர்களுடைய படம் பிடிக்கும் பெட்டி வேணுமே.
பனியன் சகோதரர்கள் கொஞ்சம் தாமதித்துத்தான் வந்தார்கள்.
கார் மக்கர் பண்ணி விட்டது. ரிப்பேர் செய்து கொண்டு வந்தோம்.
பாதி தான் பேசுகிற பாஷையும் பாதி புரியாததுமாக ஏதோ சொன்னார்கள்.
சரி போகிறது. இப்போது அது ஓடும் தானே ?
ராஜா ஆஸ்டின் காரைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.
ஓ பிரமாதமா. பெட்ரோல் ஐயங்காரிடம் ஆத்திர அவசரத்துக்குப் பெட்ரோல் வாங்கி வந்தோம் சமஸ்தானம் அவசரமாக் கூப்பிட்டதாலே. யுத்த காலமாச்சுதா. ஒண்ணும் கிடைக்கிறதில்லை.
எங்கே யுத்தம் ? யார் யாரோடு சண்டை போடுகிறார்கள் ? அவ்வளவு காசு கொட்டிக் கிடக்கிறதா என்ன ஊரில் ?
ராஜா கேட்க நினைத்தார். இது அவர் காலத்துக்கு அப்புறம் நடந்த சங்கதி. தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. புஸ்தி மீசைக் கிழவனைப் பல்லக்கு ஏற்றுவது தான் இப்போது நடக்க வேண்டிய காரியம். அதுக்கு முன்னால் இந்தக் களவாணிகள் நூதனமான வண்டியில் வந்து இறங்கி அதற்கு மசகெண்ணெயோ மற்றதோ போட்ட வகையில் காசு வசூலிக்கப் பார்க்கிறான்கள்.
ராஜா அந்த அவசரத்திலும் இடுப்பு மடிப்பில் உப்பு எடுத்து வைத்துக் கொள்ள மறக்கவில்லை. நறநறவென்று இடுப்பில் வியர்வையோடு அது இழைகிறது பழகிப் போய் சுகமாக இருந்தது.
படம் பிடிக்கும் பெட்டி கொண்டு வந்திருக்கிறீர்களா ?
ராஜா கேட்டபோது ஆமாம் என்றார்கள் இரண்டு பேரும் ஒரே குரலில். அந்த மூடுவண்டிக்குள் வைத்திருக்கிறதாம்.
சரி எல்லாத்துக்கும் சேர்த்துக் கொடுத்திடறேன். கிளம்பி நேரா அரண்மனைச் சிறுவயல் வந்து சேருங்கள்.
ராஜா சொல்லிக் கொண்டே குதிரை வண்டியில் ஏறப் போனார்.
நீங்களும் காரிலேயே வந்து விடுங்களேன். விரசாகப் போய்விடலாம்.
அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது. நூதன வாகனம். ராஜா காலத்துக்குப் பிற்பட்ட மனுஷர்கள் ஏற்படுத்தி எடுத்து வந்திருக்கிறார்கள். ஏதாவது குளறுபடியாகிப் போய் இது குடை சாயும் பட்சத்தில் ராஜாவுக்கும் தாரை தப்பட்டை முழங்க பல்லக்கு சவாரி கிடைக்கிற அபாயம் உண்டு.
நான் சாரட்லேயே வரேன். நீங்க கிளம்புங்க.
கொஞ்சம் பெரிய குதிரை வண்டியை சாரட் என்று சொல்லக் கூடாதுதான். ஆனாலும் இவன்கள் என்ன சொன்னாலும் கேட்பார்கள். எந்தக் காலத்தில் இருந்து வந்தால் என்ன ? காசு எல்லார் வாயையும் அடைத்துப் போடுமே.
ராஜா குதிரை வண்டியில் ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்த போது பனியன் சகோதரர்கள் காரில் விருட்டென்று கிளம்பி முந்திக் கொண்டு போனார்கள்.
போகட்டும். போய்க் காத்திருக்கட்டும். ராஜா போகாமல் மாமனார்க் கிழவன் பரலோகம் புக முடியாது. எல்லாக் கோலாகலத்தையும் கருப்புப் பெட்டியில் அடைக்க ராஜா உத்தரவு கொடுத்தால் தான் பயல்கள் காரியம் மேற்கொள்ள முடியும்.
போகும் வழிக்குத் தாகம் எடுத்தால் தணிக்க கூஜாவில் மோர், இனிப்பான ஊருணித் தண்ணீர், பானகம் எல்லாம் வண்டியில் எடுத்து வைத்திருந்தான் சமையல் காரன். வழியில் வயிறு பசித்தால் கொஞ்சம் போல் பசியாறக் கடலை உருண்டை, அதிரசம் எல்லாம் ஒரு சஞ்சியில்.
பாதி வழி போவதற்குள்ளேயே எல்லாம் தின்று தீர்த்து, குடித்துத் தீர்த்து, வண்டியை நாலு தடவை நிற்கச் சொல்லி வழிக்கு ஓரமாகக் குந்தவைத்து அற்ப சங்கை தீர்த்துக் கொண்டு விட்டார் ராஜா.
அப்புறம் எதிர்ப்பட்ட ஊருணியில் தண்ணீர் மொண்டு வர, வழியில் பலாச்சுளையும் வெள்ளரிக்காயும் வாங்க என்று ராஜாவின் வண்டிக்குப் பின்னால் ஓடிக் கொண்டும் மட்டக் குதிரையில் சவாரி செய்து கொண்டும் வந்த சேவகர்கள் பரபரப்பாக அலைந்தார்கள்.
வருடத்துக்கு ஒரு தடவையாவது வியர்வை சிந்தி வேலை செய்யட்டும். அது நல்லதுக்குத்தான் என்று ராஜா சொல்லிக் கொண்டு பலாச்சுளையைக் கடிக்க அரண்மனை சிறுவயல் வந்து விட்டிருந்தது.
தண்ணியிலே தாமரப் பூ
தாயாரே தாயாரே
தரையெல்லாம் ஆவரம்பூ
தாயாரே தாயாரே
வாழக்காய் எங்களுக்கு
தாயாரே தாயாரே
வைகுந்தம் உங்களுக்கு
தாயாரே தாயாரே
ராஜா பார்க்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி நிதானமாக ஒப்புச் சொன்னார்கள். அவர் அங்கீகரித்துத் தலையை ஆட்டும் போது காரை விட்டு இறங்கி அதன் மேல் சாய்ந்தபடிக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்த பனியன் சகோதரர்கள் கண்ணில் பட்டார்கள்.
இவன்களோடு வந்திருந்தால் இப்படி முந்தி முந்தியே வந்திருக்கலாம். ஆனால், பார்க்க வைத்துக் கொண்டு பலாச்சுளையும் அதிரசமும் சாப்பிட முடியாது. ராஜாவானதால் அதைக் குடிபடைகளோடு பங்கு போட்டும் தின்ன முடியாது.
ஒப்புக்காரன் ராஜாவைக் கும்பிட்டான். அவன் ஒப்புச் சொல்வதை நிறுத்திக் கண்காட்ட, நாயனக்காரன் வாத்தியத்தை மேலே உயர்த்தி ஊதினான்.
ஐயய்யோ போய்ட்டாகளே போய்ட்டாகளே.
ராஜா நடந்த வழியில் அவருக்கு முன்னால் ஒரு சரவெடியைப் பற்ற வைத்துக் கொண்டு குலை தெறிக்க ஓடினான் அதிர்வேட்டுக்காரன்.
இழவு விழுந்த வீட்டில் வேறு எப்படியும் வரவேற்பு தரப்படமாட்டாது என்று ராஜாவுக்குத் தெரியும்.
ஐயய்யோ போய்ட்டாகளே போய்ட்டாகளே.
திரும்ப நாயனம் முழங்க வீட்டுக்குள்ளிருந்து பெண்கள் மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முக்கியஸ்தர்களிலும் முக்கியஸ்தர் வந்திருப்பதாக நாயன முழக்கத்திலும் வெடிச் சத்தத்திலும் அறிந்து கொண்ட அவசரம் தெரிந்தது.
எல்லோருக்கும் பின்னால் ராணி நடந்து வந்து வாசல் அருகிலேயே நின்றாள்.
எப்போதையும் விட இப்போது அவள் அதி சுந்தரியாக இருப்பதாக ராஜாவுக்குப் பட்டது. சேடிப் பெண் ராணிக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் ராணியை விட ரூபவதியாகிப் போனதாகவும் தோன்றியது.
சாவு வீட்டில் வைத்து இப்படிக் காமாந்தகரானாகக் கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு ராஜா முன்னால் நடந்தார்.
அவரிடம் ஏதோ சிடுசிடுப்பாக ராணி சொல்லத் தொடங்கும் முன்னால் உள்ளே இருந்து மைத்துனர்கள் எதிர்ப்பட்டார்கள். இரண்டு பேரும் சிவப்பு வஸ்திரம் தரித்து இருந்தார்கள். பாதிச் சாப்பாட்டில் எழுப்பி இழுத்து வந்தமாதிரி இருந்தது அவர்களை.
ராஜா அவர்களை ஒவ்வொருவராக ஆதரவாகக் கையைப் பிடித்துக் கொள்ள அவர்கள் ‘ஆமா ‘ என்றார்கள்.
இழவு விழுந்ததற்கு தான் ஆஜர் கொடுத்து வருத்தப்பட்டதும், அது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப் பட்டதும் முடிய, ராஜா சம்பிரதாயமான கேள்விகளைச் சுற்றி இருந்தவர்களை இலக்கு இல்லாமல் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்.
எப்படி ஆச்சு ? எத்தனை மணிக்கு ? நேத்துக்கு ராத்திரி என்ன சாப்பிட்டார் ? தொடுக்குத் தொடுக்குன்னு இருந்தாரே இந்த வயசிலும் ?
என்னென்னமோ பதில்கள் காதில் விழ யாரோ உள்ளே பார்த்து மரியாதையாகக் கையைக் காட்டினார்கள்.
வாசலில் திரும்ப பெரிய வெடிச் சத்தம்.
ராஜா திரும்பிப் பார்த்தார். நீர்மாலை எடுக்கப் பெண்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்கை மூங்கில் வளைத்துச் சீராக்கிக் கொண்டிருந்தவர்கள் மரநிழலில் புகையிலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ராஜா கனவில் வந்த பல்லக்கில் அது அரைத் தரத்தில் இருந்தது.
இந்தத் தடியன்களை ஏன் கூடவே கூட்டி வந்திருக்கிறீர்கள் ?
ராணி ராஜாவின் காதில் கிசுகிசுத்தபோது, பின்னால் பனியன் சகோதரர்கள் வந்து கொண்டிருந்தது ராஜாவுக்கு நினைவு வந்தது.
காரியமாத் தான். உங்க அப்பாரை விதம் விதமாப் படம் பிடிச்சு வச்சு ஆயுசு முடியப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.
ராஜா கருணை பொழியும் புன்சிரிப்பைச் சிந்தும் போது இன்னொரு வராகன் குறையப் போகிறது என்ற நினைப்பும் கூடவே வந்தது.
யாரோட ஆயுசு முடியற மட்டும் ?
ராணியின் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
(தொடரும்)
eramurug@yahoo.com
- மனம் தளராதே!
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- இது உன் கவிதை
- சின்னச் சின்னதாய்…
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- என்னம்மா அவசரம் ?
- முதல் சந்திப்பு
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- ஆனாலும்…..
- காதல் காதல் தான்
- காற்றாடி
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- என் ஜீவன் போகும்…
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதங்கள்
- விடியும்! நாவல் – (6)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- ஒரு சொட்டு இரும்பு
- என் கவிதைக்குக் காயமடி!
- அரியும் சிவனும் ஒண்ணு
- கரடி பொம்மை
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- வெண் புறா
- அரசியல்
- சார்புநிலைக் கோட்பாடு
- தவறிய செயல்கள்
- பெண்ணே
- ஆசி
- போராடாதே … பிச்சையெடு
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வசிட்டர் வாக்கு.