கோ.துக்காராம்
நான் மரத்தின் கீழே படுத்திருந்தேன். ஒரு குளம். அதன் அருகே ஒரு மரம். மரத்து நிழல், குளத்தை சுற்றிலும் பூச்செடிகள். மெல்லிய காற்று, அந்த காற்று பூக்களைத் தொட்டு நறுமணத்தை எடுத்துக்கொண்டு குளத்தின் மீது இறங்கி அந்த குளிர்ந்த குளத்து நீரின் மீது விளையாடி என்னைத் தொட்டுச் செல்லும் ஒரு தென்றல். இதுதானய்யா வாழ்க்கை.
நகரத்தை விட்டு ஓடி வந்துவிட்டேன். எங்கெங்கு பார்த்தாலும் செயற்கை நிரம்பி வழிகிறது நகரத்தில். அம்மா அப்பாவை விட்டு ஓடி வருகிறோமே என்ற உணர்வு என்னிடம் இல்லை. காரணம், அவர்கள் எப்போதோ என்னுடைய புரட்சிகரமான கருத்துக்களுக்காக கை கழுவி விட்டுவிட்டார்கள். தொழில்நுட்பம் கூடாது, அறிவியல் ஆராய்ச்சிகள் தேவையில்லை, எல்லோரும் காட்டில் மரம் செடி கொடிகளை வைத்துக்கொண்டு பழைய காலத்து வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள் நகரத்தில் ? பையன் கிறுக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், நான் கிறுக்கு இல்லை. என் நண்பர்களும் கிறுக்கு இல்லை. என் நண்பர்களின் கூட்டம் சற்று அதிகமாகி வருகிறது. காரணம் வெளிப்படை. பழங்கால ஆசாமிகள் ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் அறிவியல், தொழில்நுட்பம் என்று இயந்திரங்களை பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலும் தொழில்நுட்பமும் சாதித்தது என்ன ? இது மனிதனை மனிதனிடமிருந்து பிரித்துவிட்டது. அதனை, ‘நான் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இருக்கும் இடைவெளியை குறைக்கிறேன் ‘ என்று சொல்லித்தான் செய்தது. அதுதான் அதன் ரகசியமே.
அண்ணாந்து பார்க்கிறேன். கூரை இருக்கிறது. பாருங்கள். குளத்தின் மீது கூரை இருக்குமா ? பூமியில் இருக்கிறது. எதற்கப்பா புயல், எதற்கப்பா வெள்ளம், எதற்கப்பா இவ்வளவு பிரச்னைகள் என்று சொல்லிவிட்டு, பூமி மொத்தத்துக்கும் மேலே கூரை போட்டு விட்டார்கள். அந்த கூரைக்கு மேல் போனவர் யாருமில்லை. போனவர் வந்ததில்லை. புயலில் காணாமல் போய்விட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்துவிட்டது. அணு உலைகள் கொடுத்த அளக்கமுடியாத சக்தியை இப்படி விரயம் பண்ணுகிறார்கள்.
ஆக இந்த குளமும் மரங்களும் இன்ன பிறவும் கூட உண்மையான காடு இல்லை. காடு மாதிரியான ஒரு இடம். அவ்வளவுதான். இதற்கு ஓடிவருவது கூட நகரத்தில் புரட்சிகரமானதாக ஆகிவிட்டது. தலைவிதி.
எல்லா தொழில்நுட்பத்தையும் நான் எதிர்த்தாலும் நான் முக்கியமாக எதிர்ப்பது மரபணு மாற்றத்தை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. இதுவரை அறிவியல் தொடக்கூடாது என்று தடை செய்து வைக்கப்பட்டிருந்த ஒரே அறிவியல் துறை அதுதான். இன்று அதிலும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் திணிக்கத் துடிக்கிறார்கள் இன்றைய அறிவியலிஸ்டுகளும் அரசியல்வாதிகளும்.
ஒரு வினோதமான ஜந்து என்னைக்கடந்து சென்றது
அதற்கு ஒரு ஆறு அங்குல நீளம் இருக்கலாம். பூரான் மாதிரியும் இருந்தது அதே சமயம் அதன் தலை ஒரு ஆட்டின் தலைபோலவும் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு பூரானை நான் பார்த்ததில்லை.
மரபணுக்களை மக்களிடம் சொல்லாமலேயே மாற்ற ஆரம்பித்துவிட்டார்களோ என்னவோ.
என் நண்பர்கள் என்னை தேடி வந்தார்கள்.
‘முருகா, என்னப்பா சே-மூன்று பகுதியில் இருப்பேன்னு சொல்லிட்டு இப்படி சே-ஐந்தில் உட்கார்ந்திருக்கிறாய் ? ‘
‘இந்தக் குளத்தைப் பார்த்தேன். அழகா இருக்கேன்னு அப்படியே உக்காந்து பார்த்தேன். இது தாண்டா இயற்கைன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போது இங்க பாத்தா ஒரு ஜந்து ஓடுது. தலையைப் பாத்தா ஆடு மாதிரி இருக்கு. உடம்பைப் பாத்தா பூராண் மாதிரி இருக்கு. ‘
‘அடப்போடா நீ ஒன்னு. அது பூராண்தாண்டா. தென்னாப்பிரிக்க பூரான். இன்னும் கொஞ்சம் போனா, அது மேன்னு கத்திச்சின்னு சொன்னாலும் சொல்வ ‘ என்றான் ரங்கன்.
‘இல்ல எதுக்கு சொல்லவர்ரேன்னா.. நூறு வருஷத்துக்கு முன்னாடி, மரபணு மாற்றதையே தடை செஞ்சிருந்தாங்க.. எல்லாத்திலயும் தொழில்நுட்பம் முன்னேற்றம் ஆச்சி. ஆனா மனுஷங்க தாவரங்க விலங்கு எல்லாம் அப்படியே தான் இருந்தோம். இப்ப நிறைய வெளச்சல், நோய் குறைவு, இந்த மாதிரி காரணங்களை சொல்லி திரும்பவும் மரபணு மாத்த ஆரம்பிச்சிருக்காங்க ‘ என்றேன் நான்.
‘இவங்கன்னு யாரைச் சொல்ற… நடுமலர் நிறுவனம்னு பேரைச் சொல்லு ‘ என்றான் ரங்கன்.
‘ஆமா இவங்கதான். காரணம் என்னன்னா, நடுமலர் நிறுவனத்தோட சொந்தக்காரன் முன்னாடி அரசியல்வாதிங்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் பண்ணிக்க முயற்சி செய்துகிட்டு இருந்தான். இப்ப என்னன்னா, அவனே அரசியல்வாதியா ஆகி பிரதமராவும் ஆகிட்டான். இனிமே இவன் வச்சதுதான் சட்டம்ற மாதிரி, காசை கொடுத்து எல்லா எம்பியையும் வளச்சிட்டான் ‘ என்றேன் நான்.
‘எழவு, காசு நெறய இருந்தா என்னப் பண்ணமுடியும் ? நிறைய திங்கமுடியுமா இல்ல நிறைய பேழ முடியுமா ? ‘ என்றான் குப்பு.
‘அதுடா, அந்த காசாசை மரபணுவிலேயே ஊறணது.. மரபணுவைத்தான் மாத்தக்கூடாதுன்னு நூறுவருஷத்துக்கு முன்னாடி முடிவுபண்ணாங்களே. ஒருவேளை அந்த காசாசையை அப்பவே மரபணுவிலேர்ந்து எடுத்திருந்தாங்கன்னா ஒருவேளை இப்ப நடுமலர் நிறுவனம்னு ஒன்னே இல்லாம ஆகியிருக்கலாம் ‘ என்றேன் நான்.
‘அதுனாலத்தான் நம்ம வரலாற்றிலேயே முதன்முறையா போராட்டம்னு ஒன்னை நடத்தணும் ‘ என்றான் ரங்கன்
‘உலகம் தழுவியதா வேற இருக்கணும். ‘ என்றான் குப்பு.
‘தொடாதே தொடாதே மரபணுவைத் தொடாதே ‘ என்றான் ரங்கன்.
‘அழிக்காதே அழிக்காதே இயற்கையை அழிக்காதே ‘ என்றேன் நான்.
‘கோஷமெல்லாம் பண்ணலாம். ஆனா நாம நாலு பேரு மட்டும் பண்ணோம், நம்மை காணா அடிச்சிருவான் நடுமலர்க்காரன் ‘ என்றான் குப்பு.
‘அதுக்குத்தான் நமக்கு ஒரு நல்ல ஆள் துணை வேணுங்கிறது. அதுக்கு நாம சுந்தரவடிவேலுவைத்தான் போய் பார்க்கணும் ‘ என்றான் ரங்கன்.
‘அந்த ஆள் அரசியலே வேணாம்னு ஒதுங்கிட்டாரேப்பா ‘
‘இந்தப் பிரச்னையை அவர் முன்னாடி வப்போம். அவர் என்ன சொல்றார்னு பாப்பம் ‘ என்றான் குப்பு.
***
சுந்தரவடிவேலு தாடியைத் தடவியவாறு உட்கார்ந்திருந்தார். தாடியில் வெள்ளை நரை அங்கங்கு தெரிந்து கொண்டிருந்தது.
சற்று மெளனத்துக்குப் பிறகு சொன்னார்.
‘தம்பிகளா… நான் பழையகாலத்துக்காரன். எனக்கு அரசியல் வேண்டாம்னுதான் ஒதுங்கிட்டேன். அதுக்கு நான் தோத்துப்போயிட்டன்னு அர்த்தமில்லை. இனிமே பண்ண ஒன்னுமில்லைன்னுதான். ஒரு காலத்துல உலகத்தில எப்படிப்பட்ட அட்டூழியங்களும் எப்படிப்பட்ட அரக்கத்தனமும் ஓடிக்கிட்டு இருந்திச்சின்னு உங்களுக்குத் தெரியாது. அவனவன் கரிக்காகவும் எண்ணெய்க்காகவும் நாட்டையே அழிச்சானுங்க.. ஒருத்தன் மேலெ இன்னொருத்தன் அணு குண்டு போட்டான். போன நூறு வருஷமா அதெல்லாம் கிடையாது. அதெல்லாம் ஏன் தெரிஞ்சிக்கணும், எல்லோரும் நல்லா இருக்கறதுதான் முக்கியம், பழசைக் கிளறினா, பழைய சமாச்சாரத்தை மனசில வச்சிக்கிட்டு இப்பவும அடிச்சிப்பானுங்கன்னு நான்தான் முன்னாடி நின்னு வரலாற்றையே சொல்லித்தர வேண்டாம்னு தீர்மானம் போட்டேன். ஆனால் சொல்லித்தந்திருக்கணுமோ என்னமோ. நடுமலர்க்காரனைப் பார்த்தா நான் வரலாற்றில படிச்சதுதான் ஞாபகம் வர்ரது ‘ என்றார்.
‘அப்ப நீங்க திரும்பவும் அரசியலுக்கு வரணும் ‘
‘உண்மைதான் தம்பி.. என்ன பண்றது.. நீங்க மரபணு மாத்தறதை தடை செய்யணும்னு சொல்றீங்க. இவ்வளவு காலமா அது தடையாத்தான் இருக்கு. அந்தத் தடையை எடுக்கணும்னு நடுமலர்க்காரன் சொல்றான்.. ஜனநாயகரீதியிலன்னு சொல்லிட்டு எம்பியை எல்லாம் விலைக்கு வாங்கிட்டான். இன்னிக்கி இருக்கற எந்த எம்பிக்கும் வரலாறு தெரியாது ‘
‘மரபணு மாத்தறதை நாங்க எதிர்க்கறதுக்குக் காரணம் நாங்க பொதுவா தொழில்நுட்பத்துக்கே எதிரானவங்க என்கிறதாலத்தான். ஏற்கெனவே எங்களை லுட்டைட்டுன்னு சொல்லி கிறுக்கனுன்னு சொல்றாங்க. எங்களால உங்களுக்கு பாதகம் ஆகக்கூடாது பாருங்க ‘ என்றேன் நான்.
‘தம்பி, நான் மத்தவங்க எதிர்ப்பாங்களேன்னு நினைச்சிக்கிட்டு ஒரு விஷயத்தைச் சொல்லாம இருந்தது கிடையாது. இன்னிக்கி கேக்கலைன்னாலும் இன்னும் கொஞ்ச காலத்தில மத்தவங்க யோசிச்சிப் பாப்பாங்க. சொல்றது நம்ம கடமை. அதுதான் ஜனநாயகம் ‘ என்றார் சுந்தரவடிவேலு.
‘வர்ர ஜனவரி ஒன்னாந்தேதி தடையை எடுத்திருவாங்க. அதுக்குள்ள நாம ஒரு பெரிய போராட்டத்தைப் பண்ணிக் காமிக்கணும். அதுக்கு இது சம்பந்தமா எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சிலயும் இது பத்தி விவாதம் கொண்டுவந்தாதான் இது பத்தி மக்கள் யோசிப்பாங்க ‘ என்றான் குப்பு.
‘என்னோட பழைய செல்வாக்கை பயன்படுத்தி கொஞ்சம் காரியம் பண்ணிப்பாக்கறேன். தம்பி அந்த கம்ப்யூட்டரை எடுத்துவா ‘ என்று சுந்தரவடிவேலு என்னிடம் சொன்னார். நான் சென்று கம்ப்யூட்டரை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
கம்ப்யூட்டரை திறந்து சில பட்டன்களைத் தட்டி, ஹலோ என்று சொன்னார்.
கம்ப்யூட்டர் திரையில் தோன்றிய முகங்களிடம் பேசினார். ‘என்ன சொல்றது சரிதானே.. பசங்க வருவாங்க.. பேசுங்க.. இத பெரிய பிரச்னையா ஆக்கணும் ‘
திரையிலிருந்து … ‘இது பெரிய பிரச்னையா… அந்த பசங்கதான் லுட்டைட்டு மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் வேணாங்கிறாங்கன்னா… நீங்களும்… ‘
‘இல்ல ,… இது தொழில்நுட்பம் இல்லை. இது வேற… பாவம் பசங்களுக்கு உதவி பண்ணுங்க.. அவங்ககிட்டயே பேசுங்க ‘ என்றார் சுந்தரவடிவேலு.
‘சரி ஐயா நீங்க சொல்றீங்களேன்னு… ‘
இதே மாதிரித்தான் சுந்தரவடிவேலு திரையிடம் பேசிய அனைத்து பேச்சுக்களும் ஏறத்தாழ இருந்தன.
கம்ப்யூட்டரிலேயே அச்சுப்பதிவு செய்து ஆளுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
‘இதில முகவரி இருக்கு.. வீட்டில போய் பேசுங்க… உங்களோட கருத்துக்களைச் சொல்லுங்க… நல்லதுதான் நடக்கும்.. நிச்சயமா இத ஒரு பெரிய போராட்டமா ஆக்குறது உங்க கையிலதான் இருக்கு ‘ என்றார் சுந்தரவடிவேலு.
‘ஐயா நீங்க நாங்க கேட்ட உதவிக்கு மேல செஞ்சிருக்கீங்க.. இன்னும் மூணு மாசம் இருக்கு பாப்பம் ‘ என்றேன் நான்.
***
அடுத்த இரண்டு மாசம் நாயாக உழைத்தது, கிறுக்கர்கள் என்ற பட்டத்தை கொஞ்சம் குறைத்தது அவ்வளவுதான். கொஞ்சம் பேர்கள் எங்களுடன் சேர்ந்தார்கள். நாலு பேராக இருந்தது நாற்பது பேர்களாக ஆனது. என்னுடைய மதிப்பீடு இன்னும் நானூறு பேர்கள் அமைதியான முறையில் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது.
ஜனவரி ஒன்று வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. பொது வீதியில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தோம். அதனை பின்னர் மாற்றி, பாராளுமன்றத்துக்கு முன்னால், அந்தப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். யாரும் எங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளாததால், யாரும் எங்களைத் தடுக்க முயற்சிகூட செய்யவில்லை. போலீஸ் கூட எங்களைப் பார்த்துசிரித்துக்கொண்டே உதவினார்கள்.
பாராளுமன்றத்தின் முன்னே கூடினோம்.
எங்கள் குரல் எழுந்தது.
‘தொடாதே தொடாதே மரபணுவைத் தொடாதே ‘ என்றான் ரங்கன்.
‘அழிக்காதே அழிக்காதே இயற்கையை அழிக்காதே ‘ என்றேன் நான்.
கோஷ்டியாக குரல் எழுந்தது
அனைவரும் ஒட்டு மொத்தமாக எங்களது மூன்றாவது கையை உயர்த்தி முஷ்டியை மடக்கி கத்தினோம்.
‘அழிக்காதே அழிக்காதே இயற்கையை அழிக்காதே ‘
***
thukaram_g@yahoo.com
***
- விக்கிரமாதித்யன் கவிதைகள்
- பொருந்தாக் காமம்
- உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)
- நமது வசையிலக்கிய மரபு
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1
- சுஜாதா – எனது பார்வையில்
- ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.
- ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)
- இரண்டு கவிதைகள்
- தண்ணீர்
- வாரபலன் ஜூன் 24, 2003 (குயில்கள், கவிதைகள், குறுந்தொகைகள்)
- கூட்டுக்கவிதைகள் இரண்டு
- அன்புள்ள மகனுக்கு ….. அம்மா
- பார்க் ‘கலாம் ‘
- உலகத்தின் மாற்றம்
- கணையும் கானமும்
- நான்கு கவிதைகள்
- பிரம்மனிடம் கேட்ட வரம்!
- கவி
- தீத்துளி
- மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.
- தமிழா எழுந்துவா!
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- பேய்களின் கூத்து
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
- விடியும்! (நாவல் – 3)
- தீராநதி
- மரபணு
- மனிதர்கள்
- இராமன் அவதரித்த நாட்டில் …
- பாருக்குட்டி
- விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)
- நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம
- மூன்று கவிதைகள்
- இரண்டு கவிதைகள்
- மணி
- சிறையா, தண்டனையா ? ?
- ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9
- கண்காட்சி
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள
- சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்