குதிரை

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


சுவாமிப் பலகைக்கு முழந்தாழிட்டு கடவுளை நினைத்து சுண்டியெறிந்து பொத்திய நாணயம் விரும்பியது போலவே தலையாக விழுந்ததும் ஆறுமுகம் புறப்படத் தயாரானார் குதிரையைப் பார்க்க.

குதிரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா> இதுதான் காசு சுண்டியதன் காரணம். காரியம் இனித்தான். ப+ விழுந்திருந்தால் என்ன முடிவிற்கு வந்திருப்பார் என நேர்மையாக யோசித்துப் பார்க்க அவர் முயலவில்லை. இறைவனின் அங்கீகாரம் கிடைத்து விட்டது. எல்லாம் தெரிந்தவர் அவர். சரிகளையும் பிழைகளையும் நிறுக்கிற நீதிவான். நன்மையோ தீமையோ பாவமோ புண்ணியமோ எல்லாம் ஒரு சுண்டுதலில் அவர் பாதங்களில் பாரப்படுத்தியாயிற்று. இனி அவர் பொறுப்பு.

மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த நீதி நியாய வாதங்களை இனி ஒதுக்கி விடலாம். சுண்டும்போது ப+ விழுந்து விடக் கூடாதேயென்ற பயம் இருந்தது உண்மைதான். விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும்! நினைத்தது வேண்டாமென கை கழுவியிருப்பாரா ? இல்லை. மேலும் இரு தடவைகள் சுண்டி மொத்தமாக மூன்று தரங்களில் எது கூட வந்தது என பார்த்திருக்கக்கூடும். ஆக> நினைத்தது வரவேண்டும்.

எடுத்ததற்கெல்லாம் அவர் காசு சுண்டிப் பார்ப்பதில்லை. அப+ர்வமாக நுண்ணிய ஆசைவித்து சங்கல்ப வேர் விட்டு எண்ணக்கிளை பரப்பி ஆல விருட்சமாய் மனதை நிறைக்கிற போது சுண்டிப் பார்ப்பதற்கான தேவை அவரைப் பற்றிக் கொள்ளும். பிழையான ஆசையென்று புத்தி தலையில் இடிக்கும். முடிவு எடுக்க முடியாமல் மனம் கிடந்து தவிக்கும். நிம்மதி குறைந்து நித்திரையும் தவறப் பார்க்கும். ஆசை மட்டும் சிறிதும் குறையாமல் நெஞ்சில் அப்படியே இருக்கும். வேறு வழியில்லை. நாணயத்திடம் அவர் அடைக்கலமாவது இப்படித்தான்.

ஐயா எனக்கு பேராசைதான். அது பிழையென்றும் நல்லாகத் தெரிகிறது. என்ன செய்வேன் என்னால் முடியவில்லையே. நான் உன் பிள்ளை. நீதான் விக்கினங்கள் இல்லாமல் நிறைவேற்றித் தரவேண்டும்.

ஆறுமுகம் முற்றத்தில் இறங்கினார். கொடியில் தொங்கிய வேட்டியை எடுத்து உதறிக் கொண்டு விறாந்தையில் ஏறினார். வேட்டி கட்டி மடிப்புகள் நேராக்கியாயிற்று. வாலாமணி அணிந்து சுவர் ஆணியில் தொங்கிய உடைந்த கண்ணாடியில் எட்டிப் பார்த்தாயிற்று. படித்து முடித்த பக்கத்திற்கு வைத்த அடையாள மட்டையோடு சத்தியசோதனை மேசையில் கிடந்தது. சரஸ்வதி இன்னும் விளக்கு வைக்கவில்லை. சுவாமிப் பலகைக்கு வந்தார். நெற்றியில் அப்பிக் கொண்டார். திரியை உயர்த்தி விளக்கு வைத்தார். தலை பணிந்து கை கூப்பி விடை பெற்றுக் கொண்;டார்> கடவுளே நீதான்.

அம்மா இதில போயிற்று ஓடி வாறன் என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளை மிரித்தார். கையில் வேலையாக இருந்த சரஸ்வதி அலம்பிக் கொண்டு வாசலுக்கு விரைந்து தெருவிற்குத் தலையை நீட்டிப் பார்த்தாள். கூப்பிடு தொலைவைக் கடந்து விட்டிருந்தார். இடம் பொருள் ஏவல் சொல்லாமல் அவர் வெளியே போனதில்லை. ஏதோ அவசரந்தான். என்ன அவசரம்!

இருபது வருட தாம்பத்தியத்தில் புருசனின் நேர்மை தெரிந்தவள். பிழையான வழியில் போகிற ஆள் இல்லையெனப் புரிந்தவள். பக்கத்து வீட்டுக் கமலத்திடம் பேன் பார்க்கத் தலை நீட்டும் நேரத்தில் பெருமிதமாய் கதைக்கவும் கதைப்பாள். அவரோடொத்தவர்கள் வசதியில் ஜொலிப்பது கேட்டு புழுங்கவும் செய்வாள். அதற்கு ஆறுமுகம் சொல்வார்>

சரஸ்வதி> காசுபணம் இல்லாட்டில் பரவாயில்லை. ஒரேயொரு ஆசைதான் எனக்கு. என்ர பிள்ளை டொக்டராக வரவேனும். ஏழை எளியதுக்கெல்லாம் வைத்தியம் பார்க்க வேனும். அயல்ச்சனமெல்லாம் உன்ர பிள்ளை தங்கப்பவுண் என்டு சொல்ல வேனும். அது போதும் எனக்கு.

பிள்ளைக்குப் பல் விழுந்து முளைக்கு முன்னரே துளிர்த்துவிட்ட ஆசை மொட்டு அது. இன்னும் விரியாத மொட்டு. தோளில் போட்டு உலாத்தும் போது பொச்சம் தீர்த்துக் கொள்ள> நீ என்னவாய் வருவாய் மேனே> என்று சின்னப் பிஞ்சிடம் கேட்பார். சொன்னவுடன் தந்தையின் முகம் பிரகாசிக்கும் என்று பயலுக்குத் தெரியும். டொக்டர் என்று மழலையில் சிந்துவான். டொக்டராவது எப்படியென்று பிள்ளைக்கு எப்படித் தெரியும்! தெரிந்ததெல்லாம் அப்பாவின் முகமலர்ச்சி ஒன்றுதான்.

இளைப்பாறிய அந்தக் காலத்து மராமத்து ஓவசியர். கிம்பளத்திற்கு யாரிடமும் தலை சொறியத் தெரியாத மூளை பழுதான மனிதர். சரஸ்வதி சீதனமாகக் கொண்டு வந்த ஒரு அறை விறாந்தை வீடு தகரக்குசினி கோழிக்கூடு கப்பிக்கிணறு இவைகள்தான் அசைகிற அசையாத சொத்துகள்.

மகனுக்கு 19 வயது. இரண்டு தரம் ஏலெவல் பரீட்சை எடுத்துவிட்டான். போனமுறை ஒரு புள்ளியால் தட்டுப்பட்டுப் போனான். இது கடைசித் தரம்> பிறைவேற்றாகப் போட்டிருக்கிறான். இந்த முறை விடாப்பிடியாய் ஒரேயிரையாய் இருந்து படிக்கிறான். இதில் தேறவில்லையோ டொக்டர் கதை கந்தல் தான். தனக்குள் குழம்பிப் போனார் ஆறுமுகம். முத்துக்குமாரின் ரூபத்தில் குதிரை அப்போதுதான் வந்து நுழைந்தது.

குதிரைக்கு நாலு கால் என்றுதான் அவருக்குத் தெரியும். இந்தக் குதிரைக்கு இரண்டுகால் தானாம். அவருடைய மகனுக்குப் பதிலாக பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்யுமாம். எல்லோரையும் முந்திக் கொண்டு போகுமாம். பல்கலைக்கழகம் அனுப்பி டாக்டராக்குமாம். முத்துக்குமார் சொல்லச் சொல்ல குதிரையின் மகாத்மியம் புரிந்தாலும் அவர் பயந்தே போனார். நண்பன் உருவில் யமனே வந்ததாக மிரண்டார். நாலு நாட்களாய் அவனது வீட்டுப் பக்கமே தலை வைக்கப் பயந்து இடம் மாறிப் படுத்தார். புத்திர வாஞ்சை பொல்லாதது!

“ஓன்டுக்கும் யோசிக்காதை ஆறுமுகம். நேர்மை நேர்மையென்று என்னத்தைக் கண்டாய். இதுதான் கடைசிச் சான்ஸ். இதையும் விட்டியோ உன்ர மகன் எங்கையும் கடையில கணக்கெழுத வேண்டித்தான் வரும் ”

“எனக்குப் பயமாயிருக்கு முத்து> அம்பிட்டால் ? ”

“பயப்பிடாதை. உனக்கு நான் கேடு நினைப்பனா. நீ மட்டும் அன்டைக்கு விசாரணையில காட்டிக் குடுத்திருந்தா என்னைப் புதைச்ச இடத்தில புல்லு மிளைச்சிருக்கும். சாகுந்தனைக்கும் மறக்க மாட்டன். உனக்கு நான் கைம்மாறு செய்ய வேனும்ஸஸஸஸஸஎன்று சொன்னவனது விசுவாசம் நெஞ்சைத் தொட்டது> ஒன்றாக வேலை செய்தவன். எப்போதோ செய்த உதவிக்கு பிரதியுபகாரம் செய்யும் துடிப்பு.

“ஆர் குதிரை ? ”

“என்ர மகன் சிவபாலன். கம்பஸ் மூன்டு மாதமா மூடிக் கிடக்கு. இங்கதான் நிக்கிறான் ”

“விசர்க்கதை பேசாதை. எனக்காக உன்ர பிள்ளையை காவு குடுக்கப் போறியா ? ”

“ஒண்டும் நடக்காது. என்ர பிள்ளையே உனக்காக ஓமெண்டேக்கிள்ள என்ன பயம் ”

“யோசிச்சு நாளைக்குச் சொல்றனே”

ஆறுமுகம் யோசித்து விட்டார். மகன் என்ன சொல்லுவானோ தெரியாது. அவனிடம் கதைக்கப் பயம். ஆனாலும் முத்துக்குமார் சொன்னது சரியென மனம் நிறுவிவிட அறிவு தலையாட்டிவிட்டது. காசும் சுண்டிப் பார்த்துவிட்டார். முடிவு சொல்லப் போய்க் கொண்டிருந்தார். மார்க்கட் சந்தியில் இரானுவம் நிறுத்தி சோதித்தது. அறிமுக அட்டை கேட்டது. வெளிச்சம் அடித்து முகம் பார்த்தது. வயது விளங்கியதும் போக விட்டது.

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

வீடியோக் கடையில் பெரிய சப்தத்தில் பாட்டு போட்டிருந்தார்கள். முத்து> என் மகனுக்காக நீ என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவேன்.

இருட்டின் அமைதியில் காதைக் கிளித்த காதல்ப் பாட்டின் வரிகளில் அவர் கசிந்து போனார். அவருக்காகவே அந்தப் பாட்டை அந்த நேரத்தில் போட்டதாக எணணினார். சிந்தனையின் சிறகடிப்பில் எதிரே வந்த யாருடனோ முட்ட> முட்டுப்பட்டவன் சினந்தான்.

“பாத்து வாறேல்லையா ? ”

அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சைக்கிளை விட்டிறங்கி உருட்டினார். அவன் சொல்வதும் சரிதான். எங்கு போனாலும் பார்த்துப் போக வேண்டும். பள்ளமா திட்டியா நீதியா நியாயமா பாவமா புண்ணியமா ? என் பிள்ளை வீட்டோடு இருந்து படிக்கிற கட்டுப்பாடான பிள்ளை. டெனிம் கேட்கவில்லை. பொனியம் கேட்கவில்லை. வயசுக்கேற்ற நாகரிகம் கேட்கவில்லை. அவனை எப்படியென்றாலும் அவையத்து முந்தியிருக்கச் செய்ய வேண்டும். தகப்பனின் கடமை செய்தே ஆக வேண்டும்.

கடமை! அந்தப் புனிதமான சொல்லினுடைய மூலம் தேடிப் போயிற்று மனம். உதிரத்தில் உதித்த மகனின் எதிர்காலம் பற்றிய கற்பனைகள்> அவற்றைச் செயலாக்க முனையும் காரியங்கள். காரியங்களின் வழி சரியோ பிழையோ அதற்கு தியாக மகுடம் சூட்டிவிட வேண்டியது. மரியாதை மலர் தூவி புனிதப்படுத்திவிட வேண்டியது. புனிதமாக்கிவிட்ட கடமையின் பெயரால் முடிந்தவரை சுயநலத்தோடு செயலாற்ற வேண்டியது. எல்லாவற்றிலும் நாமே என்று முந்திக் கொண்டு குதிரையோட வேண்டியது. நியாயந்தானா ?

முத்துக்குமாரின் தெரு வந்தது. முதல் வளவிற்குள் நாய் குரைக்க அயல் நாய்கள் ஏக காலத்தில் வழிமொழிந்தன. அந்த வளவுவேலி ஏகத்திற்கு தெருவை நிறைத்த சைக்கிள்கள். அது டிய+சன் சொல்லிக் கொடுக்கும் இடம். அதைக் கடந்து விட்டால் முத்துக்குமாரின் வீடுதான். மறிப்பை உடைத்து விட்ட வாய்க்கால் நீராய் குபு குபுவென பிள்ளைகள் டிய+சன் முடிந்து வெளியேற> ஆறுமுகம் ஓரமாய் ஒதுங்கினார். இருட்டிலும் பளிச்சென்றிருந்த சிரித்த முகங்கள். பரீட்சையில் பாஸ் பண்ணிவிட பறந்து பறந்து படிக்கும் பட்டாம் ப+ச்சிகள். சொந்தக் காலில் நின்று உயரத் துடிக்கும் சின்னஞ் சிறிசுகள்.

ஒரு இரட்டைப் பின்னல் ஓடி வந்து தெருவில் காத்திருந்த தகப்பனின் சைக்கிள்பாரில் ஏறிற்று.

“என்னம்மா சந்தேகம் கேட்டியா ? ”

“சேர் நல்லா விளங்கப் படுத்தினாரப்பா. இப்ப நம்பிக்கை வந்திருக்கு. இந்த முறை கட்டாயம் பாஸ் பண்ணீருவன். நீங்க யோசிச்சு மூளையைப் போட்டுக் குழப்பாதீங்கப்பா”

கொஞ்சத்தில் சைக்கிள்கள் காணாமல் போக தெரு வெறிச்சோடிப் போயிற்று. ஒரேயொரு எட்டுக்குள் முத்துக்குமாரின் வீடு. முற்றத்தின் வெளிச்சம் தெருவாசலில் விழுந்து குத்துவிளக்கு வைத்து அவரை வரவேற்றது. தெரு நீளத்திற்கு இருட்டின் இராச்சியம். ஆறுமுகம் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றார்.

பாட்டு முடியும் நேரம். கடைசி வரிகள் துல்லியமாகக் கேட்டன.

நீ காற்று நான் மரம் என்ன

சொன்னாலும் தலையாட்டுவேன்.

மனக்குதிரை கனைத்துக் கொண்டு முன்னங்கால் பிரேக் போட்டு திரும்பிப் பார்த்து மூச்சு வாங்கிற்று.

அவர் சைக்கிளைத் திருப்பினார். குதிரை வேகத்தில் விரைந்தார் வீட்டை நோக்கி.

Series Navigation

author

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Similar Posts