அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

இரா முருகன்


பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

கிட்டாவய்யன் காலையிலிருந்து நாலு தடவை குடத்தில் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டு விட்டான். ஆனாலும் வியர்வை வெள்ளமாகப் பிரவகித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வியர்வை தலையை முழுக்க நனைத்துக் கண்ணை மறைக்கிறது. உதட்டில் எச்சிலில் கரைந்து நாக்கில் கரிக்கிறது. மூத்திரம் சரியாக இறங்காமல் நோவோடு பிரிகிறது. உடம்பு வலுவெல்லாம் வியர்வையாக வெளியே போய்க் கொண்டிருக்கிறதாக பிரமை.

போகட்டும். போனது எல்லாம் பணமாகத் திரும்பி வரப் போகிறது. கைமள் வீட்டு விசேஷம் முடியும்போது கை நிறையக் கிடைக்கும். எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்த பிறகும் கணிசமாகக் கீசையில் முடங்கும்.

அப்புறமும் இருக்கிறது புனலூரும், கொல்லமும், கருநாகப் பள்ளியும், வடக்கேவிளயும்.

பணம் வேண்டி இருக்கிறது.

தட்டானிடம் வளையல் வாங்க. சீனி மிட்டாய் வாங்க.

மரப்பாச்சி ?

வேண்டாம். தொட்டுத் தடவிப் புல்லரிக்க வைத்துச் சுகித்து புத்திர பாக்கியம் வேண்டும். பின்கட்டில் பிரஷ்டை காதில் ஓசைப்படாமல். பிருஷ்டத்தில் எலி

ஏறி இறங்கி ஓடிப் போகாமல்.

பணம் வேண்டி இருக்கிறது.

கடைசித் தங்கை பகவதியைக் கரையேற்ற. நாளைக்கு மூத்த பெண் திரண்டு குளித்தால் அவளுக்கு வழி பண்ண.

திரும்பிப் பார்ப்பதற்குள் சின்னவளும் அப்புறம் கடைக்குட்டியும் கல்யாணத்துக்குத் தயாராக நிற்பார்கள்.

எல்லாம் ஓய்ந்தால் கட்டையைச் சாய்க்கச் சின்னதாக மங்களூர் ஓடு வேய்ந்து ஒரு வீடு. கையகலமாவது நெல் பாட்டம். நாலு பாக்கு மரமும் தென்னையுமாக பரம்பு. வாய்க்க வேண்டும்.

அதற்கு எல்லாம் முன்னால் ஒரு புத்ரன்.

காலையில் குளித்து சந்தியாவந்தனம் செய்து அம்பலத்தில் தொழுது விட்டு வந்து அடுப்புப் பற்ற வைத்தபோது இதுதான் பிரார்த்தனையாக இருந்தது.

இன்னொரு குடம் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டான் கிட்டாவய்யன்.

குடுமியை அவிழ்த்து அலசியபோது பிரிந்து வந்த இழை வெள்ளியாக மினுமினுத்தது.

வயதாகிக் கொண்டிருக்கிறதா ?

முப்பத்தைந்து எல்லாம் வயதானதில் சேர்த்தியா என்ன ?

குளத்துப்புழை பாலகன் கடாட்சம் இருந்தால் கிட்டாவய்யனுக்கும் புத்திரபாக்கியம் அடுத்த வருடமே வாய்க்கும். எள்ளும் தண்ணீரும் இரைத்துக் கரையேற்ற சந்ததி தழைக்கும்.

என்ன அண்ணா நொடிக்கு ஒருதடவை குளி ? அரி வைப்புக்கு நாழியாகலியா ?

சோமநாதன் நெருங்க வந்து காதில் கிசுகிசுத்தான்.

வா போகலாம்.

அரையில் நனைந்து ஒட்டிய வேட்டியோடு கிளம்பினான் கிட்டாவய்யன்.

ஈர வஸ்திரத்தோடு அரிசி வடிக்கக் கூடாது. அதுவும் சுப காரியம் நடக்கப் போகிற வீட்டில். நீங்கள் தானே எப்பவும் சொல்றது.

வியர்ப்புத் தாங்கலை சோமா. அதான் இப்படி. ஒரு தோர்த்து கொண்டு வா.

சோமன் உள்ளே போய்த் தோர்த்தும் பிரி போல் முறுக்கிய முண்டும் கொண்டு வந்து கொடுத்தான்.

தலையைத் துவட்டிக் கொண்டு கிட்டாவய்யன் வீட்டை ஒட்டி வெளியே பரம்பில் தாவளம் அடித்து இறக்கி ஏற்படுத்தி இருந்த உக்கிராணத்துக்குள் நுழைந்தான்.

என்ன சோமா ஆரையும் காணலே ?

காலியாகக் கிடந்த உக்கிராணத்தில் கண் ஓட்டிக் கொண்டே கேட்டான் கிட்டாவய்யன்.

ஓரமாக உட்கார்ந்து பரங்கிக்காய் நறுக்கிக் கொண்டிருந்த வயசன் தவிர்த்து எல்லோரும் எங்கே போனார்கள் ?

வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது. தடார் தடார் என்று தரையதிர யாரோ ஓடும் சத்தம். அப்புறம் கட்டைக் குரலில் பாட்டு. கூட்டமாகப் பாடுகிறார்கள்.

கிட்டாவய்யன் வெளியே வந்து பார்த்தபோது அரையில் தார்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும் மேலே முறுக்கி வளைத்து முடிச்சுப் போட்ட உத்தரீயமுமாகப் பத்துப் பதினைந்து பேர் இரும்பு உலக்கைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.

தீர் சே போல்

ஜோர் சே போல்

சுபே தக் ராத்

விஸ்வ நாத்.

பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். மாரெல்லாம் காய்த்துத் தழும்பேறிப் போயிருக்கிறது. உலக்கைகள் கருத்து நீண்டு பயங்கொள்ள வைக்கின்றன.

யார் இதெல்லாம் ?

கிட்டாவய்யன் சோமநாதனைப் பார்வையால் விசாரித்தான்.

வடக்கே இருந்து வரும் பைராகிகள். கோஷ்டியாக ராமேசுவரம் தீர்த்த யாத்திரை போய்ப் பரசுராம பூமியையும் தரிசித்துக் கொண்டு திரும்பிப் போக வந்தவர்கள்.

சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பைராகிகளில் ஒருத்தன் கிட்டாவய்யன் பக்கத்தில் வந்து உருட்டி விழித்துச் சிரித்தான். சடை விழுந்த தலைமுடியைச் சுற்றிச் சின்னச் சின்னதாகக் குளவிகள் பறந்தபடி இருந்தன அவனுக்கு.

குள்ளக் கிட்டாவய்யன் பக்கத்தில் அவன் ஆறடிக்கு மேல் வளர்ந்த பிரம்மாண்டமான சொரூபனாக நிற்கிறான். இந்தக் கையில் உலக்கையையும் அந்தக் கையில் கிட்டாவய்யனையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தயாரானவன் போல் அவன் கை பரபரக்கிறது.

அவன் பாடிக் கொண்டே ஓடுவான். உலக்கையால் மாரில் அரைந்து கொள்வான். கிட்டாவய்யனைக் குப்புறப் புரட்டித் தொடையில் மோதிக் கொள்வான். ஒரு மரப்பாச்சி போல் அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவான். தரையில் போட்டு ஓங்கி உயிர்த்தலத்தில் மிதித்து பீஜங்களை நசுக்கிக் கூழாக்குவான். கிட்டாவய்யனுக்குப் பிராணன் போகிற போது எள்ளும் தண்ணீரும் இறைக்கப் பிள்ளை பிறக்க வழி இருக்காது இனி ஒருபோதும்.

அரையில் இரண்டு கையையும் இறுகப் பொத்தியபடி கிட்டாவய்யன் நடுங்கிப் போய் நின்றான்.

பைராகி உலக்கையால் தன் வயிற்றில் மாறி மாறி அடித்துக் கொண்டு கரமுர என்று இந்துஸ்தானியில் ஏதோ சொன்னான்.

அவனுக்குப் பசிக்கிறது. அவன் கூட்டம் முழுவதற்கும் போஜனம் செய்ய வேண்டி இருக்கிறது.

சோமநாதன் கிட்டாவய்யன் காதில் மொழி மாற்றிச் சொன்னான்.

துவாரகைக்கும் வடமதுரைக்கும் போய் வந்த நம்பூத்திரிகளுக்குச் சமைத்துப் போட இரண்டு முறை வடநாடு போயிருக்கும் காரணத்தால் அவனுக்கு அந்த ஊர்ப் பாஷை பிடிபட்டிருக்கிறது.

கிட்டாவய்யன் சமையல்காரன் என்று பைராகி எப்படித் தெரிந்து கொண்டான் ? தொழில் பார்க்க வந்த இடத்தில் இவனுக்கும் இவனுடைய கோஷ்டிக்கும் என்ன கொடுக்க முடியும் கிட்டாவய்யனால் ?

ஒவ்வொருத்தனும் இருக்கிற ஆகிருதியைப் பார்த்தால் நாலு ஆள் சாப்பிடுகிறதை ஒருத்தனே லகுவில் சாப்பிட்டுப் போதாதற்கு அந்த உலக்கையையும் விழுங்கி சுக்குக் கஷாயம் ஒரு சொம்பு முழுக்க எடுத்துக் குடித்துத் தீர்த்து ஏம்பக்கம் விடுவான் போல் தெரிகிறது.

உலக்கையைக் காலுக்கு நடுவே லிங்கம் போல் ஊன்றிக் கொண்டு பைராகி இரண்டு கையையும் விரித்துத் திரும்பவும் ஏதோ சொன்னான். கூட வந்தவர்கள் சுற்றிச் சுற்றி வந்து முதுகிலும் மாரிலும் உலக்கைகளால் அறைந்து கொண்டு விஸ்வநாத் விஸ்வநாத் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தார்கள். எல்லோர் தலையிலிருந்தும் புறப்பட்ட குளவிகள் ஒன்றை ஒன்று மோதித் தரையில் விழுந்து இறக்கை உரித்து ஊர்ந்தன. காற்று அஸ்தமித்துப் போயிருந்த அந்தப் பகல் பொழுதில் அந்த இறக்கைகள் தீனமாக ஒலி செய்தது கிட்டாவய்யனுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.

இவர்கள் சாதம் சாப்பிடுவார்களா ? வட்டித்து எடுக்கிற வரை பொறுப்பார்களா ? என்றால் கைமளிடம் சொல்லி முதலில் இவர்களுக்காகத் தனியே இலை போடச் சொல்லலாம்.

பரத கண்டத்தில் இருக்கப் பட்ட சகல புண்ணிய ஸ்தலமும் ஓடி நடந்து தரிசனம் செய்து, நகர்கிற நதியில், சங்கமிக்கும் சமுத்திரத்தில் எல்லாம் தேக, மனசு, ஆத்மாவில் ஒட்டிப் பிடித்த அழுக்கை எல்லாம் கரைத்து நீக்கிப் பரிசுத்தப்பட்டுக் கொண்டு அடுத்த ஜன்மமும் நரக வாதனையும் கூடாதே போகும் வண்ணம் கர்ம பலனான வாதனை எல்லாவற்றையும் சுயமாகவே சதா வழங்கி அனுபவித்துக் கொண்டு, சிக்குப் பிடித்த சடைமுடியும் அதில் ஊர்ந்து நெளியும் குளவியும் பாம்பும் கூட வரச் சொர்க்கம் புகத் தயாரான இந்தப் பைராகிகளின் ஆசீர்வாதத்தோடு கிருஷ்ணனுண்ணி நாயர் புடவை எடுத்துக் கைமளின் மகளுக்குப் புடமுறியாகக் கொடுத்துக் கல்யாணம் கழிப்பது எல்லோருக்கும் உவப்பான காரியமாகவே இருக்கும்.

சாதம் வட்டித்துப் பிடிதுணியால் பற்றிக் கீழே ஆவி பறக்க இறக்கும் வரை இவர்கள் இந்த முற்றத்தில் காத்திருப்பார்களோ ?

அண்ணா இவர்கள் அயல் மனுஷர்கள் சமைத்த பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை. அரிசியோ கோதுமை மாவோ கொடுத்தால் கட்டி எடுத்துப் போய் ஊர் எல்லையில் அவர்களே பாகம் செய்து பசி நிவர்த்தி செய்து கொள்வார்கள்.

சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிட்டாவய்யன் அவசரமாக வீட்டுப் பின்வசத்துத் தாவளத்துக்குள் நுழைந்தான்.

அந்த வயசன் இன்னும் கருமமே கண்ணாக உள்ளே வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். குத்திருமலால் அவன் திரேகம் குலுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு வாய் சூடுவெள்ளம் குடித்து மாமரச் சுவட்டில் குந்தி இருந்து ஸ்ரம பரிகாரம் செய்துவிட்டு வாருமே ஓய்.

கிட்டாவய்யன் சொல்லியபடியே வயசன் பக்கமாக நடந்தான். உள்ளூரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எடுபிடிக் காரன். விசேஷத்தின் போது மூணு வேளை சாப்பாடும், வெற்றிலை பாக்கும், நாலைந்து சல்லிக் காசும் கொடுத்து இந்த மாதிரி உதிரிகளை அனுப்பி வைக்கிற வழக்கம்.

வயசனுக்குப் பக்கத்தில் தான் கோதுமை மாவும் அரிசி மாவும் உப்பும் வெல்லமும் கோணிச் சாக்கு மூட்டைகளிலும் ஓலைக் கடகங்களிலும் வைத்திருக்கிறது.

முத்தச்சா, மாறிக்கோ.

நாழியால் அளந்து பெரிய துணி சஞ்சியில் கோதுமை மாவைக் கவிழ்க்கும்போது வயசனை உற்றுப் பார்த்தான் கிட்டாவய்யன்.

சட்டென்று பொறி தட்டியது.

ஓய் நீர் சாவக்காட்டு அயல் வேதக்காரன் இல்லியோ.

வயசன் நடுங்கிக் கொண்டு எழுந்து நின்றான். அவன் இருமல் இன்னும் அதிகமாக இருந்தது.

நானும் பிராமணன் தான் அண்ணா. தயவு செய்யுங்கோ. செத்தக் கூட மாட இங்கே பணி எடுக்கறேன். பசி தாளலை. போஜனம் மாத்ரம் போதும்.

அவன் பூணூலை இழுத்துக் காட்டி இரண்டு கைகளுக்கு நடுவில் அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, வயதில் தன்னை விட எவ்வளவோ சின்னவனான கிட்டாவய்யனைத் தெண்டனிட்டு நமஸ்கரித்தான்.

கிழவனைக் கிட்டாவய்யனுக்குத் தெரியும். அவனுடைய தமையனார்களுக்கு சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமணன்மார் எல்லோரையும் பற்றித் தெரியும்.

எப்போதோ கப்பலில் வந்து இறங்கி புதுசாக வந்த நிஜ வேதம் இது என்று காட்டி, சாவக்காட்டில் ஸ்மார்த்தப் பிராமணர்கள் அர்க்கியம் கொடுக்கும்போது இரைத்த தண்ணீர்த்துளிகளை அந்தரத்தில் நிறுத்தினானாம் ஒரு வெள்ளைத் தோல்காரன். தோமையன் என்று அவனுக்குப் பேர்.

நீரே எமக்கு ஞான சூரியன். வேதவித்து. பிரம்மத்தை உணர்த்த வந்த குரு.

அந்தப் பிராமணர்கள் நீள அங்கி அணிந்த தோமையன் கூடப் போனாலும் பூணூலைக் கழட்டவில்லை.

ஆனாலும் என்ன ? மற்ற பிராமணர்கள் சாவக்காட்டோடு சம்பந்தப் படுவதை முறித்துப் போட்டார்கள். அது எத்தனையோ தலைமுறைக்கு முந்திய விஷயம்.

மார்க்கம் பிரிச்சா என்ன ? சகோத்ரம் இல்லியா ? மாம்ச பட்சணம் செய்யறதில்லே. பூணூலை இன்னும் போட்டுண்டு தான் இருக்கோம். ஜோதி ஸ்வரூபமா பிரம்மத்தைத் தான் நாங்களும் மனசிலே தியானிக்கறோம். எங்கள்லேயும் ஸ்வகார்யமா பாட்டத்திலே நெல்லு விளைக்கவும், வியாபாரிகள் கிட்டே கணக்கு எழுதவும், சங்கீத சிட்சைக்கும், துபாஷி உத்தியோகத்துக்கும் போய் மத்த ஊர் பிராமணாள் போல் நல்ல ஸ்திதியிலே இருக்கப்பட்டவாளும் உண்டு. என்னைப் போல் பஞ்சத்துலே அடிபட்டு ஜீவிதம் முழுக்க வெறும் சாதத்துக்காக நாடெல்லாம் அலஞ்சு திரியற பாவப்பட்ட ஜீவன்களும் உண்டு. பத்மனாபஸ்வாமி க்ஷேத்ரத்திலே ஊட்டுப்புரையிலே ஒரு வேளையாவது சாப்பிடலாம்னு போய் நின்னேன். அப்ப ஸ்தோத்ரம் செய்தது சத்யமா அந்த பகவானைத் தான். சாவக்காட்டுக் காரன்னு யாரோ சொல்லத் துரத்தித் துரத்தி அடிச்சுக் காலை முடமாக்கிப் போட்டா. அப்புறம் உங்க பிதாவோட கூடத் தேகண்டத்துக்கு எடுபிடியா வந்து.

கிழவன் இருமலுக்கு இடையே பழைய கதை சொல்லியபடி குந்தி உட்கார்ந்தான். அவனுடைய பஞ்சடைந்த கண்கள் கிட்டாவய்யனைத் தொடர்ந்து யாசித்தபடி இருந்தன.

ஆமா. பின்னே இல்லியோ. ஊரை ஏமாத்தறவனாச்சே நீயும் உன் கூட்டரும். எங்க பிதாவோட சிநேகிதன் சிவராம அம்மான் அடிச்சுப் பொறத்தாக்கி நீ உசிரைக் கையில் பிடிச்சுண்டு ஓடினது திருநெல்லியிலே தானே ? முப்பது கொல்லம் முந்தின சமாச்சாரம். கேட்டிருக்கேன். உமக்கு ஓர்மை இருக்கில்லியோ ?

ஸ்வாமி, உங்க பிதா ஒரு மகான். சிவராம அய்யரும் கூடத்தான். எனக்குத் தான் அப்போ நேரம் சரி இல்லே. அப்ப மட்டும் என்ன. எப்பவுமே தான். சாவக்காட்டுலே பிறந்தது என்னோட தப்பா அண்ணா ?

கிழவன் கெஞ்சுகிற குரலில் தொடர்ந்த போது திரும்பவும் இருமல்.

இந்தக் களி எல்லாம் என்னோடு வேணாம். கேட்டியா. கெட்ட கேட்டுக்கு ரோகம் வேறே.

கிழவன் வாயை இறுகப் பொத்தி இருமலை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றான்.

அய்யோ. அது வரட்டு இருமல் அண்ணா. எனக்குப் பசி ஒண்ணுதான் நோக்காடு. உங்களுக்கு தாசனா ஊழியம் பண்றேன். நித்யப்படி ஒரு வேளை ஒரே ஒரு வேளை வெறும் சாதம் கூடப் போதும். பிண்டம் போடற மாதிரி எறிஞ்சாலும் பிடிச்சு எடுத்து நாவார மனசார வாழ்த்திண்டு பூணலைப் பிடிச்சுண்டு சாப்பிடுவேன்.

அயல் வேதக்காரனுக்கு என்ன எழவுக்குப் பூணல் ? இன்னும் என்ன ஒனக்கு பிராமண வேஷம் கள்ளப் பட்டி மோனே ?

கிட்டாவய்யன் எக்கிக் கிழவனின் பூணூலைப் பிடித்து இழுத்தான். நைந்திருந்த அது கிழவனின் நெஞ்சுக் கூட்டுக்குக் குறுக்கே மாலையாகப் படர்ந்து நழுவித் தரையில் அறுந்து விழுந்தது.

தீர் சே போல்

ஜோர் சே போல்

பின்னால் பெருஞ்சத்தம். பைராகிகள் தாவளத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

எடோ கிளவா. நான் சவட்டிப் புறத்தாக்கறதுக்குள்ளே ஓடிப் போ. கண்ட மிலேச்சனும் வந்து தேகண்டத்துக்குக் கரண்டி பிடிக்கற இடம் இல்லே இது. பிராமணன், பிராமணன் மாத்திரம் செய்ய விதிக்கப்பட்ட விஷயம். சுபகாரியத்துக்கு இறங்கி வரும் பிருக்கள் சபித்துப் போடுவா.

அண்ணா. பசி உசிர் போறது. சொல்றேனே. நானும் பிராமணன் தான். வேதம் வேறேயானா என்ன ?

என்னவா ? அந்தத் தோமையன் கூடக் குரிசைப் பிடிச்சுப் போன சாவக்காட்டுப் பிராமணன் எல்லோரும் அத்தோடு செத்துப் போய் வம்சம் நசிச்சாச்சு. நீ கிறிஸ்தியானி.

சரி. கிறிஸ்தியானிப் பிராமணன். அநாதை. பசியோட யாசிக்கறேன். கடாட்சம் பண்ணுங்கோ. புண்ணியமாப் போகும்.

திரும்பத் திரும்பச் சொல்றே என்ன தைர்யம் உனக்கு ? நீ பிராமணனா ? பாதரட்சையாலே அடிப்பேன் கேட்டியா. இறங்கிப் போடா புழுத்து ரோகம் பிடிச்ச கிளவா.

கிட்டாவய்யன் பிடித்துப் பலமாகத் தள்ளியதில் மிளகு விழுது பாதி அரைத்து வைத்திருந்த கருங்கல் அம்மியில் தலை மோத விழுந்தான் வயசன். அவன் நெற்றிக்கு மேல் சிவப்புக் கீற்றாக ரத்தச் சுவடு.

பைராகிகள் தரையில் கிடந்த கிழவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அந்தப் பூஞ்சை திரேகத்தைக் கடந்து முன்னால் வராமல், சொல்லி வைத்தாற்போல் வந்த வழியே திரும்பி வெறுங்கையோடு நடந்து போனார்கள்.

இருங்கோ. அரிசி மாவு. கோதுமை. வெல்லம். எல்லாம் இந்தோ.

தீர் சே போல். ஜோர் சே போல்.

கிட்டாவய்யன் வார்த்தைகளையும், பைராகிகளின் கோஷத்தையும் மீறிக்கொண்டு வயசனின் தீனமான குரல் தட்டுத் தடுமாறி எழுந்தது.

கிட்டாவய்யன் அவன் வயிற்றில் ஓங்கி உதைத்து வெளியே சவட்டிக் கொண்டு போய்ப் புறத்தாக்கினான்.

பைராகிகள் புழுதியைக் கிளப்பியபடி உலக்கைகளால் நெஞ்சில் அறைந்து கொண்டு கூப்பிடு தொலைவில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அந்தத் திசையில் இருந்து பறந்து வந்து கிட்டாவய்யன் தொடையில் ஊர்ந்த குளவி ஒன்று சாவதானமாக அவன் கால் வழியே கெளபீனத்தில் புகுந்து உறுப்பு நுனியில் உக்ரமாகக் கொட்டியது.

தூரத்தில் இருந்து பைராகி திரும்பிப் பார்த்து சத்தமாகச் சொன்னான்.

உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது.

சோமா, என்ன சொல்றான் பைராகி ?

அரைக்கட்டில் வலி உயிர்போக உயிர்த் தலத்தைப் பொத்திப் பிடித்தபடி கேட்டான் கிட்டாவய்யன்.

சபித்துப் போட்டானோ ?

எனக்குச் சரியாக் கேட்கலை அண்ணா.

சோமநாதன் தள்ளாடி நடந்து போகிற வயசனைப் பார்த்தபடியே சொன்னான். அவனுக்கு எல்லாம் கேட்டுத்தான் இருந்தது.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts