சுகம்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


இனிது இனிது ஏகாந்தம் இனிது. படித்திருக்கிறேன். அனுபவித்துப் பார்க்க விருப்பந்தான். முடிகிறதா ?

‘நித்திரைப்பாயில பபா ஒன்டுக்கு இருந்திட்டுது. என்னன்டு பாருங்களன். ஓரு கையால நான் எத்தினையென்டு பாக்கிறது ‘.. .. என் துணைவி பிள்ளைகளுடன் கோயிலுக்குப் போயிருக்கிறாள். இருந்தாலும் பிள்ளைக் கரச்சலில் அவள் சலித்துக் கொள்ளும் குரல் காதில் ஒலிப்பது போலிருந்தது. தமிழ்ச்செல்விதான் என்ன செய்வாள்! புருசன் பிள்ளைகள் என்று தன்னைத் தேய்த்துக் கொள்ளும் பிறவி. ஆறு மணிக்குப் போய் கூட்டி வர வேண்டும்.

எங்கள் வீட்டுப் பின்கதவைத் திறந்தால் நட்ட நடுவில் நீண்டு பரந்த நீலக் கடல். கீழ்வானத்தைத் தொட்டு நேர் கோடு கீறி நிற்கும் நீர்க்காடு. பட்டர் தடவிய மணற்திட்டுகளில் கால் புதைய வலப்பக்கமாக நடந்தால் வயதான ஒருவர் சாய்மனக் கதிரையில் சாய்ந்திருக்குமாற் போல் தோன்றும் கருங்கல் மலை. உச்சிக்குப் போய் அரை மணி நேரமாவது தனியாக இருக்க வேண்டும் என்று நெடுநாளாக ஆசை.

மாறி மாறி ஓடி வந்து பாறைகளின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டு கீழிறங்கி வழிந்து மறையும் குழந்தைகள் போல் அலைக் கூட்டங்கள். குழந்தைகளிடம் அறை வாங்கி முகம் வெளுத்து அழுது நுரைப்பது போல் பாசாங்கு காட்டும் பாறைகள். மலையுச்சியிலிருந்து பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்!

பின்னேர மீனுக்குக் கரைவலை போட வள்ளம் வலையோடு மீனவர்கள் கரையில் காத்திருப்பார்கள். மீன்களின் அடர்த்தியான ஒன்றுகூடலில் தகதகவெனத் துடிக்கும் நீர்ப்பரப்பை மலையுச்சியில் நின்று குறியிட்டுக் காட்டிக் கத்துவான் ஒருவன். இன்று ஒருவரையும் காணவில்லை.

இப்போதே போனால் இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். முகம் கழுவி தலை இழுத்து பவுடர் போட்டு.. .. ..மனித சஞ்சாரமற்ற மலையில் ஏறுவதற்கு ஸ்டைல் தேவைதானா மடையா.. .. .. மண்ணைத் தட்டிக்கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினேன்.

எங்கள் தெருவில் ஒரு சொறி நாய் அடிக்கடி என் கண்ணில் படுவதுண்டு. நாய் கண்டால் கல் தேடும் சுபாவம் எனக்கு. இந்தச் சொறிநாய்க்கு கடற்கரையில் என்ன வேலை! தன்பாட்டில் ஓதுங்கி நின்றாலும் பரவாயில்லை என் காலையே ஒட்டி மணந்து கொண்டு ஏன் தொடர வேண்டும். சடாரென விலகி ஓட முற்பட்டு அதன் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டால் காலில் சதையுள்ள இடமாகப் பார்த்துக் கவ்வி இரத்தம் வடிந்து.. .. .. வேண்டாம்.. .. ..நான் ஓடாமல் ஊாந்தேன். அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவனாய் வந்த பெரிய அலை பாறையில் ஓங்கி அறைந்தது. நாயின் கவனம் சற்றே விலக தருணம் உணர்ந்து நான் ஓட்டம் பிடிக்க மலையடிவாரம் அண்மித்தது.

முதல் மலைப் பயணத்திற்கான முழுவியளம் சரியில்லை. மலையில் இசகு பிசகாக ஏதும் நடந்து.. .. .. உறுதியற்ற மனம் உளைந்தாலும் கால்கள் நீரில் இறங்கி மலையேறிக் கொண்டிருந்தன.

உச்சியிலிருந்து கீழே பார்க்க நீலக் கடலும் வெள்ளைக்கரையும் வீடுகளும் மரங்களும் புதுவருடக் கலண்டர் காட்சியாய் தெரிந்தன. தென்னை பனை வேம்பு என்று வெவ்வேறாய் தெரியாத ஒன்றித்த பச்சைப் பசுமை. மேடு பள்ளம் பெரிது சிறிது அற்றுப் போன கொம்ய+னிஸ்ற் காட்சி.

குளிர்ந்த மாருதம் தேகத்தைத் தொட்டு மனதைத் தழுவிற்று. அடிவயிறு வரை மூச்சை இழுத்து விட ஆனந்தம் பொங்கிற்று. குறுக்கும் நெடுக்குமாய் சின்னச் சின்ன செடிக் கூட்டங்கள். பெயர் தெரியாத ப+க்களின் கதம்ப வாசம். நீளத்திற்குப் புல்படர்ந்து சிலிர்த்த பாறைப் ப+மி. வுட்;டமிடும் வடிவான வண்ணாத்திப்ப+ச்சிகள். மெல்லிய பட்டு விரிப்பை போர்த்திக் கொண்டு மங்குகிற மாலை மதியம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கில வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசனென்தை இணையடி நிழலே

தொண்டை வைத்து யாரோ பாடியது சற்று இறக்கத்தில் கேட்டது. என் ஏகாந்தத்தைக் கெடுக்கவென்று ஏற்கனவே மலையேறி வந்த மாபாவி யார் ? மெதுவாக பாறையில் கை ஊன்றிக் கீழிறங்கினேன்.

‘என்ன தம்பி இந்தப் பக்கம் ‘

வழியில் தெருவில் அடிக்கடி காண்கிற கிழவர்தான். பழகியதில்லை. இந்த நேரத்தில் கிழம் இங்கு என்ன செய்கிறது! நாயிடம் தப்பி பேயிடம் அகப்பட்டுக் கொண்ட அந்தரம் சேர்ந்து கொள்ள ஓடி விடலாம் போலிருந்தது.

‘வாங்க இப்படி இருங்க ‘.. .. ..வயது கருதி தட்ட முடியில்லை. எதிர்ப்பாறையில் பணிவுடன் அமர்ந்தேன். மாசில் வீணையும்.. .. ..அடுத்த ரவுண்ட் தொடங்கியது.

‘தட்டத்தனிய இருந்து என்னய்யா செய்யிறீங்க.. .. .. பயமில்லையா ? ‘

‘பயமா.. .. ..பெரியவரோடு இருக்கிற எனக்கு என்ன பயம்! ‘

‘ஆர் ? ‘ என் கண்கள் பாறைகளின் இடுக்குகளில் தேடின.. .. ..இங்கு வேறு யார் இருக்கிறார்கள் ? கிழடுக்குப் பைத்தியம்.

‘மாசில் வீணையும் தெரியுமா ? ‘

‘இது தெரியாதா ? பால்குடிவயசு தொடங்கி படிக்கிற தேவாரம். ‘

‘திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் கிடங்கில போட்டு அடைச்சது தெரியுமோ! ‘

‘தெரியும். அதுக்கென்ன இப்ப ‘

‘அவரையும் இப்படித்தான் ஒருவர் கேட்டார். என்ன நாவுக்கரசரே சுண்ணாம்புக் கிடங்கு சுகமாயிருந்ததோ ?

ஐந்து இந்திரியங்களும் இன்பத்தை அனுபவிக்க ஆண்டவனின் நிழலில் ஆனந்தமாயிருக்கிறேன் என்று நளினமாகச் சொன்னார் நாவுக்கரசர். ‘

‘எனக்கு விளங்கேல்லை ‘

‘ஐந்து இந்திரியங்களும் எனனென்ன ? காது கண் மேனி மூக்கு வாய் ‘.. .. .. கிழடு தன்னை பல இடங்களில் தொட்டுக் காட்டிக் கொண்டே சொன்னது.

‘இப்ப தேவாரத்தைப் பாருங்க. ‘

மாசில்லாத வீணையின் அமிர்த கானத்தை என் காதுகள் கேட்கின்றன.

ப+ரணச் சந்திரன் ப+ரிப்போடு வருகிற மாலை மதியத்தை என் கண்கள் பார்க்கின்றன.

ஜிவ்வென்று வீசும் தென்றல் என் மேனியைத் தழுவுகின்றது.

இளவேனில் காலப் புஸ்பங்களின் சுகந்தம் என் மூக்கைத் துளைக்கின்றது.

பொய்கையை நாடி வரும் வண்டுகள் உறிஞ்சும் தேன் என் நாவில் இனிக்கின்றது.

என் பெரியவனின் காலடியிலிருந்து இத்தனை இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னை சுண்ணாம்புக் கிடங்கு என்ன செய்யும்!

‘ஒரு சந்தேகம். சுட்டெரிக்கும் சுண்ணாம்புக் கிடங்கில் சுகம் அனுபவிக்க முடியுமோ ? ‘

‘முடியும். பெரிசோட சேர்ந்திட்டால் பாரம் இலேசாகி விடும். மேலேயிருந்து கீழே பாருங்கள். எல்லாம் சிறிதாகத்தான் தெரியும். உயர்ந்த நோக்கத்துடன் வாழப் பழகி விட்டால் உடலின்; கஷ்டம் தெரியாது. ‘

‘மன்னிச்சுக் கொள்ளுங்கோ எனக்குப் புரியவில்லை ‘

‘உங்களுக்குப் புரிகிற மாதிரி சொல்கிறேன். கறப்பத்தான் ப+ச்சியைக் கண்டால் எங்கள் பெண்பிள்ளைகள் கத்திக் கொண்டு ஓடுவார்கள். இடி முழக்கம் கேட்டால் தாயின் மடிக்குள் புகுந்து ஒட்டிக் கொள்வார்கள். அப்படியிருந்த பிள்ளைகள் இன்றைக்கு எப்படி ?

என் கண்களை அச்சொட்டாகப் பார்த்தார் பெரியவர்.

‘அடர்ந்த காட்டில் கொட்டுகிற மழையில் எறிக்கிற வெய்யிலில் ஊன் உறக்கம் பாராமல் பாம்பு ப+ரானுக்குப் பயப்படாமல் துவக்கைத் தூக்கிக் கொண்டு போராடுகிறார்கள். நாங்கள் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளைகள் இப்படிப் பொங்கியெழுந்ததன் காரணம் தெரியுமோ ?

மீண்டும் என்னை ஆழமாகப் பார்த்தார் அவர்.

‘எங்கள் அடிமை விலங்கு உடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்.. இறுதிவரை சுருதி மாறாத சுதந்திரத் தாகம். எங்கள் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று கனவில் கூட நினைத்திருப்போமா!

அடர்ந்த காடு கூட அன்னியமாய்த் தெரியவில்லை.

சுண்ணாம்பு மட்டும் சுட்டு விடுமா தம்பி! ‘

இருட்டிக் கொண்டு வந்தது. பெரியவரோடு சேர்ந்து கீழிறங்கினேன். மனதிற்குள் மாசில் வீணையும்.. .. .. ப+க்குவியலாய் சொரிந்து கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் வளமாக வரவேற்றாள் துணைவி.

‘கதவைத் திறந்து போட்டு எங்க போயிற்று வாறீங்க. மேசைல வைச்ச எலாம் மணிக்கூட்டைக் காணேல்லை ‘

***

karulsubramaniam@yahoo.com

Series Navigation

author

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Similar Posts