அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

இரா முருகன்


மூணு தலைமுறையாகக் கரண்டி பிடிக்கும் குடும்பம் கிட்டாவய்யனுடையது. பாண்டிக்கார அய்யன்மார் என்று கொல்லம் பிரதேசம் முழுக்கப் பிரசித்தம். வீட்டில் தமிழ் பேசும் குடும்பம்.

மூணு சகோதரர்கள். மூணு சகோதரிகள்.

மூத்தவன் குப்புசாமி அய்யன். அடுத்தவன் துரைசாமி அய்யன். கடைசி புத்திரன் கிட்டாவய்யன். அவனுக்குப் பத்து பிராயம் ஆனபோது தகப்பனார் போய்ச் சேர்ந்து அண்ணா குப்புசாமி அய்யன் கரண்டி உத்தியோகத்துக்குத் தலையெடுத்திருந்தான்.

குப்புசாமி அய்யன் விசாலாட்சி மன்னியையும் துரைசாமி அய்யன் காமாட்சி மன்னியையும் ஆலப்புழையில் கல்யாணம் கழித்துக் கூட்டி வந்த மறுவருடம் மருமகள் ரெண்டு பேர் கையிலும் வீட்டு நிர்வாகத்தைக் கொடுத்து விட்டு கிட்டாவய்யன் அம்மாவும் போய்ச் சேர்ந்தாகி விட்டது.

எச்சுமி கிட்டாவய்யன் அக்கா. ஒரு வயசு மாத்திரம் வித்யாசம் ரெண்டு பேர்க்கும்.

அலமேலு அவன் தங்கை. அப்புறம் பகவதி.

கடைக்குட்டி பகவதி திரண்டுகுளி இந்த இடவ மாதத்தில் தான் நடந்தது. சுந்தரிப் பெண்குட்டியான அவளுக்குக் கல்யாண ஆலோசனைகள் வந்தமணியம் இருக்கின்றன. பாண்டியில் அரசூர்ப் பட்டணத்தில் புகையிலை வியாபாரம் செய்யும் அம்மா வழி உறவிலிருந்து சம்பந்தம் குதிர்ந்திருக்கிறது தற்போது. வரன் தனுஷ்கோடி கடந்து எல்லாம் போய் வியாபாரத்தில் புலி என்று பேரெடுத்த அதி சமர்த்தனாம். அரசூர் போய்ப் பார்த்துவிட்டு வந்த கிட்டாவய்யனின் பெரியப்பா பிள்ளை பரசுராமன் வாய் ஓயாமல் சொல்கிறான்.

பகவதிக்காவது வேறு தொழில் பண்ணுகிற புருஷன் வாய்க்கட்டும். கிட்டாவய்யனின் மற்ற சகோதரிகளைக் கைபிடித்தவர்களும் கரண்டி பிடிப்பவர்கள் தாம். மதுரையில் இருந்தும், நன்னிலத்தில் இருந்தும் பெண் எடுக்க வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள்.

ராமேந்திரனும் சோமநாதனும் அப்படி வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள்.

ராமேந்திரன் எச்சுமி வீட்டுக்காரன். சோமநாதன் அலமேலுவை பாணிக்ரஹணம் செய்தவன்.

இரண்டு சகோதரிகளுக்கும் போன தைப்பூயத்தின் போதுதான் ஒரே நாளில் ஒரே பந்தலில் கிட்டாவய்யனும் தமையனார்களும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

சோமா, ராமேந்திரன் அத்திம்பேர் ஆதிச்சநல்லூர்லேருந்து ஏதாவது சொல்லிவிட்டாராமா ? அலமேலுவுக்குப் பிரசவ லேகியம் வாங்கி அனுப்பறேன்னாரே ? எச்சுமி கிட்டே விஜாரிச்சியோ ?

கிட்டாவய்யன் மாட்டை வண்டியில் பூட்டினான். இல்லை என்று தலையாட்டினான் சோமனாதன்.

ஒரு நாள் முன்னாலேயே கிளம்பிக் கைமள் வீட்டு விசேஷத்துக்காகக் காய்கறியும் இலைக்கட்டும், கொல்லத்தில் அஸ்கா சக்கரையும் அல்வா கிண்ட கோதுமையும் எல்லாம் வாங்கிச் சித்தப்படுத்தி வைக்க ராமேந்திரனைக் கிட்டாவய்யன் அனுப்பி வைத்திருக்கிறான்.

அண்ணா. எட்டு பெரிய கரண்டி, நாலு குண்டான். பந்த்ரெண்டு வெங்கலப் பானை. ரெண்டு ஈயச் செம்பு. செப்புக் கங்காளம் மூணு. முப்பத்து நாலு குவளை. எண்ணிக்கறேளா.

வேண்டாம் சோமா. நீ பாத்துட்டே இல்லியோ. திரிச்சு வரும்போதும் நீயே ஒருகைப்பாடா ஏத்தி விட்டுட்டா சரியா இருக்கும்.

சோமன் திருப்தியோடு கைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு குடுமியை இறுக முடிந்து கொண்டான்.

செரி. நீ வண்டியிலே ஏறி ஓட்டிண்டு வா. நான் இதோ பெரியப்பா கடையிலே புகையிலையும் முறுக்கானும் வாங்கிண்டு பின்னாலேயே வரேன். கிருஷ்ணா குருவாயூரப்பா. முல்லைக்கல் பகவதி. பழனி சுப்ரமண்யா. எல்ல்லோரும் எப்போவும் கூடவே வந்து இருந்து ரட்சிக்கணும்.

அண்ணா நான் பனைஓலை விசிறியை எடுத்துண்டு வந்துடறேன்.

சோமன் வீட்டுக்குள் ஓடினான்.

அலமேலுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பப் போகிறான்.

கர்ப்பிணிப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு கிளம்பக்கூடாது என்று ஏதோ சாஸ்திரம் சொல்கிறது. என்ன சாஸ்திரம் என்று கிட்டாவய்யனுக்குத் தெரியாது.

சட்டுனு வா சோமா. நாழியாயிண்டே இருக்கு. என்னமோ ஏதோன்னு ராமேந்திரன் அத்திம்பேர் அங்கே கெடந்து அலமந்து நின்னுண்டு இருப்பார்.

இதோ ஆச்சு அண்ணா.

வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளை வேலை ஏவக் கிட்டாவய்யனுக்கு மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கிட்டாவய்யனோடோ, அவன் தமையனார்கள் குப்புசாமி அய்யன், துரைசாமி அய்யன் கூடவோ புனலூர், பூயப்பள்ளி, சூரநாடு, வடக்கேவிள, குளத்துப்புழ என்று வருடம் முழுக்க தேகண்டம் என்னும் சமையல் உத்தியோகத்துக்காக இன்னும் நாலைந்து அரிவெய்ப்புக் காரர்கள், இனிப்புப் பதார்த்தம் பண்ணுகிறவர்கள், காய் நறுக்கி, சாதம் வட்டித்து, பப்படத்துக்கு எண்ணெய் சுடவைத்து ஒத்தாசை பண்ணுகிறவர்கள் என்று ஏழெட்டுப் பேரோடு ஓடி நடக்கிறதிலும் உக்கிராணத்தை நிர்வகிக்க ஒத்தாசை செய்வதிலும் புதுசு புதுசாகச் ஆக்கவும் பொரிக்கவும் கற்றுக் கொள்வதிலும் அவர்களுக்கும் அனுபவம் ஏறிக் கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு வருடத்தில் ராமேந்திரனும், சோமனும் தனியாகக் கிளம்பி விடலாம் அவரவர்களுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு.

அப்போது எச்சுமியையும், அலமேலுவையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டி வரும்.

இல்லாவிட்டாலும் வீட்டில் ஆள்கூட்டம் பெருகிக் கொண்டு போகிறது. மூணு சகோதரர்களின் குடும்பங்களும் கீழ் வீட்டில். கூடவே வயசுக்கு வந்த கடைக்குட்டித் தங்கை பகவதியும்.

மேலே மச்சில் சகோதரிகளின் குடும்பங்கள்.

எல்லாப் புருஷர்களும் ராத்திரி மொட்டைமாடியில் படுத்துக் கொள்ள ஸ்திரிகளும் குழந்தைகளும் வீட்டுக்குள்.

பூனை போல ஓசைப்படாமல் இறங்கி, இருட்டில் அவரவர்களுக்கு நிர்ணயித்திருந்த இடத்தில் பெண்டாட்டியைத் தேடிச் சத்தம் போடாமல் உசுப்பிக் கரப்பானும், எறும்பும் ஓடும் உக்கிராணத்துச் சாணி மெழுகிய தரையிலோ, மிளகாயும் அரிசிச் சாக்கும் வைத்த உள்ளில் உமி மூட்டைக்கு மேலோ கிடத்தி அவசரமாகப் புணர்ந்து சுகித்து வெளியே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபடி காதில் பூணூலோடு சுத்தம் செய்து கொள்ள கிணற்றடிக்குப் போவதில் கிட்டாவய்யனுக்கு அலுப்புத் தட்டிக் கொண்டு வருகிறது.

சில பொழுது உசுப்பும்போது குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து பரக்கப் பரக்க விழித்தபடி ஓமப்பொடியோ இனிப்பு சோமாசியோ கேட்டபடி அழ ஆரம்பிக்கும்.

உக்கிராணத் தரையில் கொட்டாவியோடு வஸ்திரத்தை நெகிழ்த்திக் கொண்ட ஸ்திரியைக் கிடத்தும்போது அதிக உணர்ச்சி காரணமாக உடனே ஸ்கலிதமாகிச் சரி போய்ப் படுத்துக்கோ என்று திரும்ப நடக்க வேண்டி வரும்.

பின் கட்டில் வீட்டு விலக்கால் பிரஷ்டையான பகவதியோ, மற்ற சகோதரிகளோ மன்னிமார்களில் யாராவதோ சாக்கு விரிப்பில் தூங்கச் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். உக்கிராணத்தில் மூச்சு விட்டாலும் அங்கே சத்தம் கேட்கும். சதா அதையெல்லாம் நினைத்தபடி ஜாக்கிரதையாகப் போகம் அனுபவிக்க வேண்டும்.

அரிசி மூட்டை அடைத்த உள்ளில் எலி ஒரு தடவை கிட்டாவய்யனின் புட்டத்தில் விழுந்து அந்தப்பக்கம் ஓடினது.

கிணற்றடியில் தண்ணீர் சேந்தித் தேக சுத்திக்கு ஒதுங்கியபோது கிட்டாவய்யனின் தமையன் துரைசாமியோ குப்புசாமியோ கோவணத்தை உலர்த்திக் கொண்டு கண்ணில் படுவதுண்டு.

ஒரு தடவை தன் வீட்டுக்காரி சிநேகாம்பாள் பிரஷ்டையாக வெளியறையில் இருப்பது ஞாபகம் இல்லாமல்

கீழே குழந்தைகளோடு குழந்தையாகக் கிடந்த இளைய மன்னி காமாட்சியை எழுப்பிவிட்டான் கிட்டாவய்யன்.

அந்த அரை நிமிட ஆலிங்கனம் இன்னும் மனதில் இருக்கிறது கிட்டாவய்யனுக்கு. மன்னி தாய் ஸ்தானம் என்று கேட்டுக் கேட்டுப் பழகிய மனது அது. எட்டமனூரில் ஒரு தடவை தேகண்டத்துக்குப் போனபோது நிலாக் கால ராத்திரியில் துண்டு விரித்துப் படுத்திருந்தபோது திரும்பத் திரும்ப இது மனதில் வந்து இம்சைப் படுத்த, எழுந்து உட்கார்ந்து நூத்தெட்டு காயத்ரி சொன்னான் கிட்டாவய்யன்.

துரைசாமிக்கு இன்னும் புத்திரபாக்கியம் இல்லை. காமாட்சிக்கு சூல் கொள்ளாமல் உதிர்ந்து போகிறது. ஒரு விசை நெல்லிமுள்ளிக்கோ குல தெய்வ ஆராதனைக்காக தூரதேசமான ராமேஸ்வரத்துக்கோ போய்வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆலப்பாட்டில் இருந்து போனதடவை கிட்டாவய்யனின் மாமனார் வந்தபோது சோழி பரத்தி ஜோசியம் பார்த்துச் சொன்னார்.

அப்போது அவருக்குத் துரைசாமி அய்யன் நாலணா தட்சணையும் தாம்பூலமும் கொடுத்தான். காசு எல்லாம் எதுக்கு என்று அவர் தாம்பூலத்தை மட்டும் மடிசஞ்சியில் முடிந்து கொண்டார்.

வீட்டுக்கு மூத்தவனான குப்புசாமி அய்யனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து பெரியம்மையில் போய்ச் சேர்ந்து இந்த விஷுவுக்கு நாலு வருஷம் ஆகப் போகிறது. வீட்டில் வளைய வருகிற குழந்தைகள் மூணுமே கிட்டாவய்யனுடையவை. மூணுமே பெண்கள்.

குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுகள் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கடைக்குட்டி அழும். மூத்த இரண்டும் சித்தாடையும் நார்ப்பின்னலுமாக எங்கே போறே என்று கேட்டு நச்சரிக்கும்.

கிட்டாவய்யனுக்குக் குழந்தைகள் மேல் வாத்சல்யம் தான். மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் சின்னவளைத் தூக்கிக் கொண்டு உத்தரியத்தில் மூக்கைத் துடைத்தபடி தோப்பும் துரவுமாகச் சுற்றி வருவான் அவன் ஊரில் இருக்கும்போது.

அது மாதத்தில் ஒருதடவை நடந்தாலே அதிகம். ஆனாலும் கரண்டி பிடிக்க வெளியூர் போய்த் திரும்பும்ப் போது குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வாங்கி வருவதற்குத் தவறுவதில்லை அவன்.

கண்டவனும் பிருஷ்டம் அலம்பிக் கொண்ட அசுத்தக் கையால் உண்டாக்கிக் கொடுக்கிறதை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டு வந்து நீட்டினால் அதுகள் ஒட்டக் கழித்து விட்டு வாந்தியும் பேதியுமாக வீட்டில் ஒடுங்கப் போகிறதுகள்.

கிட்டாவய்யனின் வீட்டுக்காரி சிநேகாம்பாள் எத்தனை உருட்டி விழித்துத் தடுத்தாலும் குழந்தைகள் அதையெல்லாம் கையில் கொடுத்த உடனே பொதியழித்துச் சாப்பிட்டு விடும். இதுவரை அதுகள் ஆரோக்கியத்துக்கு எந்த குறைச்சலும் வராமல்தான் சுற்றி வருகின்றன.

சீனி மிட்டாய் எழவு வேண்டாம். அவள் கோவிக்கிறாளே என்று ஒருதடவை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி வாங்கி வந்தான் கிட்டாவய்யன்.

மாசம் ஒருதடவை தொட்டுத் தடவினால் இதுகளும் சுரணை மரத்துப் போன வெறும் பாச்சியாகி விடப்போகிறது பார்த்துக் கொண்டேயிருங்கள்.

சிநேகாம்பாள் அக்கம்பக்கம் யாரும் இல்லையா என்று பார்த்தபடி தன் மார்க்கூட்டைக் காட்டிச் சொல்வது இது.

இந்தத் தடவை ஆதிச்சநல்லூரிலோ கொல்லத்திலோ தட்டானிடம் சொல்லி வைத்து ஒரு ஜதை தங்க வளையலோடு திரும்பினால் அவள் சந்தோஷப்படலாம்.

ஸ்வர்ணமும் சுகம் கொடுக்கக் கூடியதுதான். சம்போகத்தில் வருவது போல் ரெண்டு பேருக்கு மாத்திரம் இல்லாமல் வேறு மாதிரி.

கிளம்பலாமா அண்ணா ?

சோமன் உள்ளே இருந்து அவசரமாகப் பனைஓலை விசிறியோடு ஓடி வந்தான். அலமேலு அவன் உதட்டைக் கடித்து அனுப்பியிருக்கிறாள். நாக்கால் மேல் சுண்டை நீவியபடி வருகிறான்.

கிட்டாவய்யனும் உள்ளே போய் இன்னொரு பனைஓலை விசிறியோடு திரும்பலாமா என்று யோசித்தான். சிநேகாம்பாளுக்குக் கொஞ்சம் முன்னால் நீண்ட பல்வரிசை.

குழந்தைகளும் நித்திரை கலைந்து எழுந்திருக்கும்.

எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.

விசாலாட்சி மன்னி குளித்துத் தலையில் நுனிமுடிச்சோடு நிர்மால்ய தரிசனத்துக்காக திருவம்பலத்துக்குக் கிளம்பிக் குறுக்கே புகுந்து போனாள். அவள் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு. போகிற காரியம் ஜெயிக்கட்டும் என்று அந்தச் சிரிப்பு சொன்னது.

நல்ல சகுனம் அண்ணா.

சோமன் காளைவண்டியைக் கிளப்பினான்.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts