இரா முருகன்
விடிகாலையிலேயே கலுபிலு என்று சத்தம். அடிபிடி சண்டை.
வீட்டில் ஸ்திரிகள் இருந்தாலே போதும். கூக்குரலுக்கும் சிரிப்புக்கும் அழுகைக்கும் சச்சரவுக்கும் கும்மாளத்துக்கும் குறைச்சல் இல்லை.
எங்கப்பா ஆலப்பாட்டிலேருந்து வரச்சே பாண்டிப் பணம் நாலணா மடிசஞ்சியிலே முடிஞ்சுண்டு வந்தார். சஞ்சி இருக்கு. மேல் துண்டும் முண்டும் இருக்கு. காசு மாத்ரம் போன எடம் தெரியலை. அடைக்கா கட்கறவாளத் தெரியும். ஆனை கக்குவா அவாளையும் தெரியும். ஆசனத் துவாரத்திலே செருகி வச்சாலும் அஞ்சு தம்படியைக் கூடக் கட்கற வர்த்தமானம் நூதனமில்லியோ.
கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் தான் கீச்சுக் கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிறாள். விடிந்ததிலிருந்து புகைந்து கொண்டிருக்கிறது அவளுக்கும் அவள் ஓரகத்தியும் கிட்டாவய்யன் தமையன் துரைசாமி அய்யன் பெண்டாட்டியுமான காமாட்சிக்கும் நடுவே தர்க்கம். குதர்க்கம்.
துப்புக் கெட்டவளே. காலம்பற அம்பலம் தொழுதுட்டு வந்து நாமம் சொன்னாலும் புண்யம் உண்டு. வையாதேடி யாரையும் முண்டை. ஒத்துப் போ மன்னியோட.
கிட்டாவய்யன் அவள் காதில் நாலைந்து தடவை சொல்லவே அவள் எரித்து விடுவது போல் பார்த்தாள்.
ஆத்துக்காரனே பொண்டாட்டியை முண்டைன்னு வசு தீர்க்கறதை விட இது உத்தமம்தான். நீங்க இறங்கிப் போய்ட்டு வாங்கோ. ஆலோசனை சொல்ல வந்துட்டேள் பெரிசா. திருவிதாங்கூர் திவான்னு நெனப்பு.
அலுத்துப் போய் வாசலுக்கு வந்திருக்கிறான்.
மூத்த தமையன் துரைசாமி அய்யன் மைநாகப்பள்ளிக் குரூப்பு வீட்டில் இழவு விழுந்த ஏழாம் நாள் தேகண்டத்துக்கு என்று நேற்றுத்தான் கிளம்பிப் போனான். இருந்தால் அவனும் தன் பெண்டாட்டி காமாட்சியிடம் இதே போல்தான் சொல்வான்.
பெண்டுகள் கேட்கிறதில்லை. அடித்துக் கொள்கிறார்கள். ஆண்கள் வாசலுக்குப் போன, வீட்டில் இல்லாத தைரியத்தில் வசைபாடிக் கொள்கிறார்கள்.
அப்புறம் சமாதானமாகி மத்தியானம் இழைந்து சாயந்திரம் குளித்துவிட்டு ஒன்றாக பகவதி க்ஷேத்ரமும் சர்ப்பக்காவும் போய்த் தொழுதுவிட்டு வருகிறார்கள். முற்றத்தில் விளக்கேற்றி வைக்கிறார்கள். பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கண்ணை மூடி அம்மே நாராயணா தேவி நாராயணா என்று நாம ஜபம் செய்கிறார்கள். சேர்ந்து உலைவைக்கிறார்கள், ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு சத்தம் வராமல் சிரிக்கிறார்கள். பதிவான இடங்களில் படுத்து நித்திரை போகிறார்கள். விடிகாலையில் மறுபடி குளிக்கும் முன்னால் சணடைக் கோழிகளாகக் கொத்திப் பாய்ந்து குதறிக் கொள்கிறார்கள்.
எங்கப்பா மடிசஞ்சியிலே முடிஞ்சு கொண்டு வந்த தட்சணைப் பணம். என் குழந்தைகளுக்கு முட்டாயும் சேவும் வாங்கித் தரதுக்கு வச்சிருந்தது. கண்குத்திப் பாம்பு மாதிரி நொடிக்கொரு விசை இடுப்பைத் தடவித் தடவிப் பாத்தபடியே படுத்துண்டிருந்தார். அவருக்கு வந்த ஒரு கஷ்டம். ஹே ஈஸ்வரா.
சிநேகாம்பாள் அழுகிற சத்தம்.
அவரா. வெய்யில் கண்ணைக் குத்தற போது கூட ஏந்திருக்காம மொட்டை மாடியிலே வேஷ்டி விலகினது தெரியாமப் படுத்து உறங்கிண்டு இருக்கப்பட்டவர். இப்படிப் பெரியவா பாஷாண்டியாத் தூங்கிண்டு கிடந்தா நாலணாவும் போகும். இடுப்பு வஸ்திரமும் சேர்ந்தே நழுவிடுமாக்கும்.
காமாட்சி மன்னி குரல் எட்டு ஊருக்குக் கேட்கும்.
என்ன எக்காளமும் எகத்தாளமும். பாவம் புகைச்சல் இருமலோட அவர் ராத்திரி முழுவன் கொரச்சுக் கொரச்சு விடிகாலையிலே செத்தக் கண்ணயரறார்.
கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் அழுகைக்கு நடுவே சொல்கிறாள்.
கொட்டக் கொட்ட முழிச்சிண்டு இருக்காரோ என்னமோ. ராத்திரியிலே மொட்டை மாடியிலே இருந்தபடிக்கே நாலு கொடம் மூத்ரம் ஒழிச்சுக் கொட்டியாறது. கீழே யாராவது நடந்து போனா புண்ய ஸ்நானம் தான் அர்த்த ராத்திரியிலே. யாராவது தீர்த்தமாடிக் கீழே இருந்து ஆசீர்வாதம் கேட்டு நல்ல வார்த்தை சொல்லியிருப்பா. இது மடிசஞ்சியிலே திவச தட்சணையா முடிஞ்சு வச்சிருந்த நாலணாவைப் பிரியமா விட்டெறிஞ்சிருக்கும்.
மன்னி காமாட்சி விடுவதாக இல்லை. அப்படி இப்படிச் சுற்றி சிநேகாம்பா சொல்லப் போகிறது காசை எடுத்தது காமாட்சி தானென்று.
அதற்கு முன் முஸ்தீபு பலமாகக் கட்டிக் கொண்டால் எந்த அபவாதத்தையும் சமாளிக்கத் திராணி ஏற்பட்டுவிடும் காமாட்சி மன்னிக்கு.
பெரியவாளை தூஷிக்காதேடி கடங்காரி. அதான் உனக்கு இத்தனை வருஷமா வம்ச விருத்தியாகம துணியை இடுக்கிண்டு தூரம் குளிச்சுண்டு கிடக்கே. எங்கப்பாவாவது மூத்ரம் ஒழிச்சார். போன ஆராட்டு சமயத்துலே பூதக்குளத்துலே இருந்து உன் தமக்கை ஆத்துக்காரர் வந்தாரே. நாள் முழுக்க மனைப் பலகையைப் போட்டுண்டு கொட்டக் கொட்ட முழிச்சுப் பாத்துண்டு, வாசலும் மித்தமும் அடிச்சுத் தூர்க்க வந்த கல்யாணிக் குட்டியைக் கையைப் பிடிச்சு இழுத்தது ஊரோட நாறினதே. ஓர்மை இருக்கோன்னோ.
சிநேகாம்பா அழுகையை நிறுத்தி சரியான நேரத்தில் சரியான விஷயம் நினைவுக்கு வந்த சந்தோஷத்தோடு இன்னும் கொஞ்சம் கீசு கீசு என்று இரைகிறாள்.
நீ ஏன் சொல்ல மாட்டே. நேத்ரம் பழுதாகி பிஷாரடி வைத்தியன் கிட்டே தைலம் புரட்டிப் போக வந்தார் எங்க அத்திம்பேர். என் குரலும் கல்யாணிக்குட்டி கொரலும் ஒரே மாதிரி இருக்கறதாலே.
மன்னி காமாட்சி பேச ஆரம்பித்து அபத்தம் பற்றிப் போனதாக மனதில் பட சட்டென்று நிறுத்திக் கொள்கிறாள்.
ஓஹோ அப்படிப் போறதா குட்டிச் சாத்தான் குசும்பு. அந்த மனுஷ்யன் உன் கையைத் தான் இழுக்கற வழக்கமா ? பகல்லே கை. அப்புறம் ராத்திரியிலே மத்ததா ?
சிநேகாம்பாள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். தன்னோடு போகத்தின் போது கூட அவள் இப்படிச் சந்தோஷித்ததில்லை என்று வாசலில் நிற்கிற கிட்டாவய்யனுக்குத் தோன்றியது. ஆலப்பாட்டில் இருந்து மடிசஞ்சியில் நாலணாவைக் கட்டிக் கொண்டு வந்து பறிகொடுத்துவிட்டு நிற்கிற அவளுடைய அப்பா விஷயம் கூட மறந்து போயிருக்கும்.
ஆமாண்டி என் பொன்னு ஆலப்பாட்டு மடத்துக்காரி. குட்டி சாத்தன் ஏவலும் மத்தியானத்துலே மல்லாத்திக் கிடத்தி வம்ச விருத்தி பண்றதையும் தவிர உங்க புருஷாளுக்கு வேறே உருப்படியா ஏதாவது காரியம் உண்டோ.
மன்னி சுருக்கென்று குத்துகிறாள்.
ஆலப்பாட்டு மடம் என்ற ஆலப்பாட்டுக் குடும்ப வீடு ஜோசியத்துக்குப் பேர்போனது. அந்தப் பெருமைக்காகவே கிட்டாவய்யனுக்கு அங்கே பெண் எடுத்தார்கள்.
சோழி உருட்டிப் போட்டுக் கணக்குக் கூட்டிப் பார்க்கிற விஷயம் ஜோசியம். அது பெண்டுகள் சச்சரவின்போது துர்தேவதைகளோடு ஈஷிக் கொண்டு இழைகிற பில்லி சூனியமாகி விடும்.
மற்றப்படி ஆலப்பாட்டு வீட்டில் மத்தியானத்தில் பெண்டாட்டியோடு சுகித்தது என்பது பிராயம் தள்ளிப்போய்க் கல்யாணம் கழிந்து வந்த ஒரு முப்பாட்டன் செய்து சிரிப்புக்கிடமான காரியம். எத்தனையோ வருஷம் முந்தின சமாச்சாரம். சிநேகாம்பாளே ஒரு சுமுகமான நேரத்தில் வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டிருந்தபோது காமாட்சி மன்னியிடம் சொன்னது. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அஸ்திரமாகப் பிரயோகமாகிறது.
ஆமா. அவா வம்ச விருத்தி பண்ணா. நீ பக்கத்திலே விசிறிண்டு நின்னே. நாலணாவை மடிசஞ்சியிலேருந்து கட்டவள் நீதானேடா.
சிநேகாம்பாள் விஷயத்துக்கு வந்துவிட்டாள். இப்போது நிறுத்தாவிட்டால் மத்தியானம் வரை இவர்கள் குளிக்காமல் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். நடுவே சிநேகாம்பாளின் குழந்தைகள் எழுந்து வந்தாலும் அததுகளைக் கவனித்து சவரட்சணை செய்தபடி சம்வாதம் பாட்டுக்கு முன்னால் போகும்.
ஏய் சிநேகாம்பா நிறுத்திக்கோ. சொல்லிட்டேன். இப்பவே நிறுத்திக்கோ.
கிட்டாவய்யன் கீழே இருந்து இரைகிறான்.
மன்னியை நேரடியாகக் கோபிக்க முடியாது. அவன் இரைவது அவளுக்கும் சேர்த்துத்தான்.
அந்தக் கிழவனோட மூத்திரத் துணியை நினச்சாலே குமட்டிண்டு வருது. அதுலே கையை வேறே விட்டுக் காசை எடுக்கப் பிராந்தா என்ன இங்கே ஆருக்கும் ?
காமாட்சி மன்னி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கக் கிளம்புகிறாள்.
கிட்டாவய்யனுக்கும் தன் மாமனார் பற்றி அப்படி ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனாலும் நாலணா போனது நிஜமாகவே இருக்கக் கூடும். காமாட்சி மன்னி எடுத்திருக்க மாட்டாள்தான். இந்த எழவெடுத்த பகளமும் கூப்பாடும் மனுஷனை நிலைகுலைய வைக்கிறது. பார்க்க வேண்டிய காரியம் எதையும் முழு கவனத்தோடு செய்ய முடிவதில்லை.
பெண்டுகள் இல்லாமல் போயிருந்தால் கிரஹம் தான் எத்தனை நிசப்தமாக இருக்கும்.
சத்தமும் நிசப்தமும் பெண்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீட்டு மனுஷ்யர்கள், குழந்தைகள், ஸ்திரிகள் என்று கூடி இருந்து ஜீவிக்கிறதில் உண்டாகிற கலகமும், பிணக்கும் சந்தோஷமும் மற்றதும் இதெல்லாம்.
கிட்டாவய்யன் தலையை ஆட்டிக் கொண்டான்.
போகட்டும். அவனுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொழுது சாய ஆதிச்சநல்லூரில் இருக்க வேண்டும் அவன்.
சோமா, இருப்புச் சட்டியொண்ணையும் காணலை. பின்கட்டில் போய்ப்பார்
சத்தமாக வீட்டுக்குள் பார்த்துக் குரல் எறிந்தபடி வெங்கலப் பானைகளை ஒவ்வொன்றாகக் காளை வண்டியில் ஏற்றினான் கிட்டாவய்யன்.
இருப்புச் சட்டியெல்லாம் ராமேந்திரன் எடுத்துப் போயாச்சு அண்ணா. பூந்தி தேய்க்கும் ஜாரிணிக் கரண்டியும் கூட அவன் நேற்று உச்சைக்கே கொண்டு போனானே.
சோமநாதன் ஆள்காட்டி விரலில் எச்சில் படாமல் சக்கரைப் புகையிலையைக் கடைவாயில் திணித்தபடி உள்ளே இருந்து ஓடி வந்தான்.
ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணனுண்ணி நாயரின் புடமுறி நாளைக்கு. ராஜாங்க சேவகனாக இருந்த ராஜசேகரக் கைமளின் இரண்டாமத்துப் பெண்ணை, ஒன்பது கஜச் சேலை கொடுத்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணம் செய்து கொள்கிறான் கிருஷ்ணனுண்ணி.
கைமளிடம் பெரிசாகக் கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மகள் சீதேவியே அவனுக்கு எதேஷ்டம். நல்ல வலுவும் தரக்கேடில்லாத தேக வனப்பும் மிக்கவள். பரம்பில் கூடமாட வேலை பார்க்கவும், தொழுத்தில் பசுக்களைப் பராமரித்துப் பால் கறக்கவும், ஒரு மெழுக்குப் புரட்டியும், சோறும் ஆக்கிப் போடவும், சாயந்திரம் நிலவிளக்கேற்றி வைத்து நாமஜபம் செய்யவும் பழக்கமான பெண்குட்டி.
கைமளிடம் கிருஷ்ணன் நாயர் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் வைத்தான். அது கல்யாணச் சமையல் பற்றியதாக இருந்தது.
அம்பலப்புழை அய்யர் குடும்பத்திலிருந்து தேஹண்டத்துக்கு வரணும். எரிசேரியும், அவியலும், பிரதமனும் மற்றதும் எல்லாம் அய்யனும் கூட்டரும் ஆக்கியாலே தனியான ருசியும் ஸ்வாதுமாயிருக்கும்.
கிட்டாவய்யன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். கைமள் குடும்பக் கல்யாணம். அப்புறம் புனலூரில் ஒரு திரண்டுகுளி. கருநாகப்பள்ளியில் சாமவேத பூஷணமான ருத்தாத்திரி ஓய்க்கனின் சஷ்டி அப்த பூர்த்தி. அது கழிந்து கொல்லத்தில் கருணாகர மேனோனின் நூதன கிரஹப் பிரவேசம்.
எல்லாம் கிட்டாவய்யனோ அவன் சகோதரர்மாரோ வந்து நடத்திக் கொடுக்கவேண்டும். எரிசேரியும், புளிசேரியும், மிளகூட்டானும், சாம்பாரும், பூந்தி லட்டும், ஜாங்கிரியும், பருப்பு வடையும் அவர்கள் செய்தாலே சாப்பிடக் கழியும்.
பசியோடு காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
(தொடரும்)
eramurug@yahoo.com
- அன்புள்ள அப்பாவுக்கு
- நினைவலைகள்
- சாதனங்கள்
- சாமியும் பூதமும்
- 2 ஹைக்கூக்கள்
- போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi
- அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்
- அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று
- அறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்
- கோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்
- இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)
- தமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6
- நீராகிப் போன கடிதங்கள்
- நிகழ் காலம்
- பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்
- யாதுமாகி …
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- மனிதாபிமானம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு
- பறவைப்பாதம் – அத்தியாயம் 1
- களவு
- தொடர்ந்து அறுக்கப்படும் வேர்கள்
- சில நிகழ்வுகள், சில பார்வைகள்
- கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்
- கடிதங்கள்
- வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி
- ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]
- ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3
- அரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை
- உன் போலத்தானோ ?
- நான் பதித்த மலர் கன்றுகள்
- உன் முயற்சி தொடரட்டும்