அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

இரா முருகன்


சுப்பிரமணிய அய்யர் வாசல் திண்ணைக்கு வந்தார்.

உள்ளே ஒரே புழுக்கம். வியர்வையும் மஞ்சளும் சந்தனமும் சிரிப்பும் கும்மாளமும் பாட்டுச் சத்தமுமாக இருக்கிறது.

பெண்டுகள். வீடு முழுக்க அவர்கள் தான்.

வீட்டில் விசேஷம் என்பதால் அல்லூர் அயலூரிரிலிருந்து உறவுக் காரப் பெண்களும் வந்திருக்கிறார்கள். எல்லா வயதிலும் பிராமண ஸ்திரிகள்.

அய்யர் மாடியை நிமிர்ந்து பார்த்தார். உள்ளே இருபது சிப்பம் புகையிலை அடைத்து வைத்திருக்கிறது. தனுஷ்கோடிக்கு காளை வண்டியில் எடுத்துப்போய் அங்கே இருந்து படகில் அனுப்ப வேண்டும். போன வாரமே சபேசய்யர் யாழ்ப்பாணத்திலிருந்து லிகிதம் அனுப்பி இருந்தார்.

ஒரு அறை தவிர மாடி முழுவதையும் காலையிலேயே பூட்டி மறைப்பாக பவானி ஜமுக்காளத்தையும் தொங்கவிட்டாகி விட்டது. இருந்தாலும் இழை போல் புகையிவை வாடை அதையும் கடந்து இறங்கி வருகிறது போல் சுப்பிரமணிய அய்யருக்குத் தோன்றியது.

பிராமணனுக்கு விதிக்கப்பட்ட தொழில் இல்லைதான் புகையிலை விற்பது. தர்ப்பைக் கட்டை நீர்க்காவி ஏறிய அங்கவஸ்திரத்தில் இடுக்கிக் கொண்டு அவன் வைதீகனாகத் வேகு வேகு என்று ஊரெல்லாம் நடந்து கணபதி ஹோமமும், அமாவாசை தர்ப்பணமும், ஆயுட்ஷேம ஹோமமும், ஹிரண்ய திவசமும் செய்துவைக்கக் கடமைப் பட்டவன். அதன்மூலம் லெளகீகர்களான கிரகஸ்தர்களை ஆசாரமாக ஜீவிக்கவும் அப்புறம் ரெளராவாதி நரகங்களில் போய் அடையாமல், வைதாரணி நதி வழியே பித்ருலோகம் பத்திரமாகப் போய்ச்சேர ஒத்தாசை பண்ண வேண்டியவன். இதற்கு என்று விதிக்கப்பட்ட தட்சணையை வைத்துத் தானும் கிரகஸ்தனாக ஜீவித்து, வம்சவிருத்தி பண்ணி, பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து இவனும் வைதாரணிக் கரைக்கு ஒதுங்க வேண்டியவன்.

ஒரு சின்னக் குடும்பத்தைச் சம்ரட்சிக்கத் தோதாக வைதீகத்துக்குத் தட்சணை வரும். குடுமியில் எள் இரைபட்டு மிச்சம் இருக்கும். திவசம் முடிந்து இடுப்புத் துண்டைத் தரையில் விரித்து கிரகஸ்தன் கும்பிட அந்தத் துண்டில் கால்பதித்து அசதியோடு நடக்கலாம். உங்களுக்கு ரொம்ப சிரமம் என்று அவன் உபசாரமாகச் சொல்வதை அப்பம் வடை அதிகம் சாப்பிட்ட ஏப்பத்தோடு ஏற்றுக் கொள்ளலாம். வாழைக்காயையும் பூசணிக்காயையும் தலையிலும், தானமாக வந்த அரிசியை மேல்துண்டில் தர்ப்பையோடு கட்டித் தோளிலும் தொங்கவிட்டுக் கொண்டு மத்தியானத் தூக்கத்துக்கு வீட்டுக்கு நடக்கலாம்.

அரிசியைக் கலைத்துப் பரத்தி எள்ளை எடுத்து விட்டோ, குழந்தைகள் பசியென்றால் அப்படியே எள் மணக்கவோ சாதம் வட்டித்து ரசத்தோடு இலை இலையாக வார்க்க சோனியான ஒரு பிராமண ஸ்திரி நூல் புடவையும் எண்ணெய் ஏறிய மூக்குத்தியுமாக அகத்தில் காத்திருப்பாள்.

அரிசியும் வாழைக்காயும் சுமக்கிற காரியம் ஜன்மத்துக்குத் தொடரும் புரோகித ஜீவிதம் தான் உனக்கு விதிக்கப்பட்டது என்று சுப்பிரமணிய அய்யரிடம் பித்ருக்கள் கூடச் சொன்னது கிடையாது. வாசித்த கிரந்தங்களில் இருந்து மேலோட்டமாகக் கிரகித்துக் கொண்டது அது.

பித்ருக்கள் கூட மூன்று தலைமுறையாகத் தர்ப்பைக் கட்டைப் பிடிக்கவில்லை. அவர்கள் சத்திரத்தில் சமையல் கரண்டி பிடித்து பெரிய கோடியடுப்புக்களில் சாதம் வட்டித்தார்கள். கிராமக் கணக்கு வழக்கை நிர்வகித்தார்கள். சிலர் படிக்கப் போனார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் தகப்பனார் சஙகர அய்யர் புகையிலை விற்கப் போனார்.

படகேறி யாழ்ப்பாணத்துக்கும் அப்புறம் அங்கே இருந்து தேயிலைத் தோட்டங்கள் இருந்த மலைப்பகுதிக்கும்.

தர்ப்பைக் கட்டில் வராத பணம் புகையிலையில் கொட்டியது. எண்ணெய் காயவைத்த இருப்புச் சட்டிப் பக்கம் வியர்த்து விறுத்துக் கரண்டி பிடிப்பதில் இருக்கும் சிரமம் இல்லை. இலை போட நேரமாச்சு என்று கத்தரிக்காய் வதக்கும்போது யாரும் உக்கிராணத் தரைப் பிசுபிசுப்பில் கால் மாற்றியபடி பின்னாலேயே நின்று கழுத்தறுக்க மாட்டார்கள். கை தளராமல் திரட்டுப்பால் கிண்டி எடுத்து ஓலைப்பாயில் பரத்தி சுடச்சுட இலையில் வார்க்க ஓட வேண்டியதில்லை.

காறுபாறு வேலையின் ஜாக்கிரதையும் பயமும் கூட இல்லை தான். மூணே முக்கால் பணம் கிஸ்தி பாக்கி என்று யார் வீட்டு முன்னாலும் விடிகாலையில் போய் நிற்க வேண்டாம். கண்மாய்க் கரையில் குந்தி இருந்து வெளிக்குப் போகிறவனின் பக்கத்தில் போய் சகஜமாக வரிபபாக்கி கேட்க வேண்டாம். அய்யரே சொம்பைப் பிடிச்சு அப்படியே தூக்கினாப்பலே விடும். கழுவிக்கிட்டு வந்து எடுத்துத் தரேன் என்று மேற்படியான் கேட்டுக்கொண்டபடி குண்டி கழுவ ஒத்தாசை செய்து கஜானாவுக்குக் காசு சேர்க்க வேண்டாம்.

மூக்கில் ஏறி வயிற்றைப் புரட்டும் புகையிலை வாசத்துக்கு நடுவே நாள் முழுக்க இருக்கப் பழகி விட்டால் அது பிடித்துப் போகும். காசு கொடுக்கிற தெய்வமாக அந்தக் கருப்புச் சிப்பங்களைத் தலைக்கு மேல் வைத்து ஸ்தோத்திரம் சொல்லி சந்தியாவந்தனம் பண்ணும்போது துதிக்கலாம்.

புகையிலை தங்கம் மாதிரி. லட்சுமி அவதாரம். அது சுபிட்சத்தைக் கொடுக்கிற மங்கள வஸ்து. பெரிய வீடு. வீட்டுக்காரி காதில் வைரத்தோடு. ஊரூராகச் சிப்பம் அனுப்பவும், ரெண்டு காசுக்கும் மூணு காசுக்கும் கிள்ளி எடுத்து வாழைமட்டைய்ில் பொதிந்து கொடுத்து விற்கவும் கடை. எல்லாம் அந்தப் புண்ணிய சமாச்சாரம் கொடுத்ததுதான்.

அது துர்தேவதையும் கூட.

மாடியில் ஓர் அறையில் சாமிநாதனைப் பூட்டி வைத்திருக்கிறது. சுப்பிரமணிய அய்யரின் சீமந்த புத்திரன். அதிபுத்திசாலி. சித்தப்பிரமை என்று எல்லோரும் சொல்வதால் அவன் மாடியை விட்டு இறங்குவதே இல்லை. பிராமணன் புகையிலை விற்பதால் பிரம்மசாபம் இது என்று ஊரில் சொல்வது சுப்பிரமணிய அய்யர் காதில் விழுந்திருக்கிறது.

பனியன் சகோதரர்கள், அங்கவஸ்திரமாக இல்லாமல் அதிலும் கால்வாசித் தரத்தில் ரத்தச் சிவப்பில் துண்டு போட்டவர்கள், புரியாத மொழியில் பேசுகிற கறுப்பர்கள் என்று யாரெல்லாமோ மாடிக்குச் சாமிநாதனைத் தேடி வருகிறார்கள். அய்யருக்கு ரொம்பக் காலத்தால் பின்னால் இருக்கப்பட்டவர்கள் அவர்கள் என்று பித்ருக்கள் சொன்னார்கள்.

அவர்கள் வராத நேரத்தில் காளான் போலக் குடைவிரித்தபடி இருக்கும் ஒரு விநோதப் பெட்டியில் உண்டியல்கடை சொக்கநாதன் செட்டியார் வீட்டுப் பழுக்காத்தட்டு போல் எதையோ சுழல விட்டு சங்கீதம் என்று சாமிநாதன் கேட்டுக் கொண்டு இருக்கிறான். உலகத்தில் இருந்தவர்கள். இப்போது மூச்சுவிட்டு நாளைக்கு அடங்கப் போகிறவர்கள், இன்னும் பிறக்காமலே போய்ச்சேர நாள் குறிக்கப் பட்டவர்கள் எல்லோருக்கும் துக்கப்படப் போதுமான சாவோலமும் அழுகையும் அந்தப் பழுக்காத்தட்டுக்களில் இருந்து வெளிப்பட்டு சுப்பிரமணிய அய்யர் மாத்தியானம் செய்யும் போதும், சந்தியாகால ஜபத்தின் போதும் உபத்திரவப்படுத்துகின்றன.

பூணூலைக் காதில் இடுக்கிக் கொண்டு அவர் தோட்டட்த்தில் விசர்ஜனம் செய்ய உட்காரும்போது கிளர்ச்சி ஏற்படுத்தி ஸ்கலிதத்தை உண்டாக்குகிறது அந்த சங்கீதம்.

நாலு வராகன் கொடுத்து அந்தச் சனியன் பிடித்த பெட்டியை அவர்தான் பனியன் சகோதரர்களிடம் வாங்கிக் கொடுத்தார். அவ்வப்போது புதுசுபுதுசாகப் பழுக்காத்தட்டில் இன்னும் சோகத்தைப் பதித்து எடுத்து வந்து அந்தக் களவாணித் தேவடியாள் மகன்கள் காலும் அரையுமாக வெள்ளிப்பணம் கறந்து கொண்டு போய்விடுகிறார்கள். கொடுக்காவிட்டால் சாமிநாதன் மாடியில் இருந்து இறங்கி கிரஹத்தில் செய்கிற களேபரம் சகிக்கக் கூடியதாக இல்லை.

சுப்பிரமணிய அய்யர் மாடிப்பக்கம் தன்னிச்சையாக நிமிர்ந்து பார்த்தார். நல்ல நிசப்தம். சாம்ிநாதன் நித்திரை போயிருப்பான். இல்லாவிட்டால் முன்னோர்களில் யாரையாவது வரவழைத்து அங்குலி யோகம் பற்றியோ முகரதம் பற்றியோ விவாதித்துக் கொண்டிருப்பான்.

அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்றார்கள் பித்ருக்கள். அங்குலி யோகத்தையும் முகரதத்தையும் சம்போக வித்தையையும் விவாதிக்க முன்னோர்களைக் கூப்பிட்டுத் தொல்லைப்படுத்தத் தேவையில்லாமல் பக்கத்திலேயே மடிசாரில் ஒருத்தி இருப்பாள்.

கிறுக்கனுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டோம் என்று சுப்பிரமணிய அய்யரின் மச்சினர்கள் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டார்கள். சின்னப்பிள்ளை சஙகரனுக்கு ஒன்றுக்கு மூன்றாக முறைப்பெண்களைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க அவர்கள் குடுமியை முடிந்து கொண்டு வந்தார்கள். வேண்டாம், வெளியில் பெண் எடுத்துக்கறேன் என்று வைராக்கியமாகச் சொல்லிவிட்டார் அய்யர்.

சங்கரன் சுப்பிரமணிய அய்யரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரப் பொறுப்பை எடுத்துக் கொண்டு நேர்த்தியாக நிர்வகிக்கிறான். கடை முழுக்க அவன் அதிகாரத்தில் தான். பகல் நேரத்தில் தூங்கி எழுந்த அப்புறமோ சாயந்திரம் வெய்யில் தாழ்ந்தபிறகோ சுப்பிரமணிய அய்யரும் கடைக்குப் போய்க் கொஞ்ச நேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்துவிட்டுக் கணக்கு வழக்குகளில் இங்கொரு நறுக்கும் அங்கொன்றுமாகப் பார்த்துவிட்டு ஏதாவது ஆலோசனை சொல்லி விட்டு வருவதுண்டு. சங்கரன் அதையெல்லாம் கேட்டு செயல்படுகிறானா என்று தெரியாவிட்டாலும் வருஷாவருஷம் தனம் வர்த்தித்துக் கொண்டுதான் போகிறது என்பதில் அய்யருக்கு சந்தோஷம்தான்.

கடைக்குப் போக வேண்டும். வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை என்பதால் இன்னும் கடை திறக்கவில்லை. சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லித் தடுத்து விட்டார்கள் பெண்டுகள்.

சுமங்கலிப் பிரார்த்தனை என்பதால் பெண்டுகள் முழுக்கச் சாப்பிட்டு முடிந்த பிறகுதான் புருஷர்கள் சாப்பிடுவது.

அவர்கள் மிச்சம் வைத்த வடையும், தணுத்த சாதமும், புளிக்குழம்பும், அவியலும், பருப்புக் கரைசலான ரசமும், நமத்துப் போய்க் கொண்டிருக்கும் பப்படமும், உப்பேறியுமாக ஈரம் உலராத தரையில் பரிமாறக் காத்திருக்க வேண்டும்.

சுப்பிரமணிய அய்யர் காத்திருக்கிறார்.

சங்கரா ஏய் சங்கரா

அவர் குறிப்பில்லாமல் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

சங்கரனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. அம்பலப்புழையில் பெண் எடுக்கிறார்கள். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம். அதற்கு முன் வீட்டில் செளபாக்கியம் செழிக்க சுமங்கலிப் பிரார்த்தனை வைக்கவேண்டும் என்று சொன்னாள் கல்யாணியம்மா. அய்யரின் அகத்துக்காரி.

சங்கரன் எங்கே ? கடைக்குப் புறப்பட்டுப் போயிருப்பானோ ?

தனுஷ்கோடிக்குப் புகையிலைச் சிப்பம் அனுப்பி வைக்கவேண்டும் என்பது நினைவு வந்திருக்கும். தாக்கோலை எடுத்துக்கொண்டு கடை திறக்க ஓடியிருப்பான்.

உள்ளே பெருங்குரல் எடுத்த்து பாடுகிற சத்தம். சுப்பம்மாக் கிழவிதான்.

சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குடும்பத்தில் மஞ்சளும் குங்குமமுமாகப் போய்ச் சேர்ந்த முந்திய தலைமுறைப் பெண்டுகளைக் கூப்பிட்டு வாழ்த்தச் சொல்லிக் கேட்கிற வழக்கம். சுப்பம்மாக் கிழவி கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் இறங்கி வருவார்கள்.

அவளுக்கு நாலு தலைமுறைப் பெண்டுகளைத் தெரியும். அவர்களோடு சதா சம்பந்தம் இருப்பதாலோ என்னமோ அவர்கள் ஆசீர்வாதத்தில், நினைத்த மாத்திரத்தில் பாட்டுக் கட்டிப் பாட வரும். அது பக்தி கானமாகவோ, சிரிப்பை வரவழைக்கும் விஷயம் பற்றியதாகவோ, பெண்டுகள் மட்டும் பகிர்ந்து கொள்ளும் பரிபாஷை ரகசியங்களாகவோ இருக்கும்.

சுப்பம்மாள் பாடிக்கொண்டிருக்கிறாள். பழைய சரித்திரங்களை.

போகிற இடத்தில் என்ன பாஷை புழக்கத்தில் இருக்கிறதோ அதை உடனே கிரகித்துப் பேசவும் அவளுக்கு மூத்தகுடிப் பெண்டுகள் வரம் கொடுத்திருக்கிறார்கள்.

இருபது வருடம் முன்னால் கூட்டமாகப் புறப்பட்டு அய்யரின் மாமனாரும் இன்னும் பத்துக் குடும்பமுமாகக் காசிக்குப் புறப்பட்டார்கள். காளை வண்டிகளில் பிரயாணம். அங்கங்கே மாட்டையும் வண்டியையும் விற்றுவிட்டு வேறே வாங்கிக் கொண்டு தொடந்து போய் ஆறேழு மாதம் கழித்து வாரணாசி போய்ச் சேர்ந்தார்கள்.

திரும்பி வரவும் அதேபோல் மாசக்கணக்கில் ஆனது. வழியில் வைத்து சிவலோகப் பிராப்தி அடைந்தவர்கள் ஏழெட்டுப் பேர் தவிர மற்ற எல்லோரும் பத்திரமாகத் திரும்பினாலும் கழுத்தெலும்பு தெரிய இளைத்துப் போய் முகத்திலும் தளர்ச்சி அப்பியிருந்தது. சுப்பம்மாக் கிழவி முகம் மட்டும் தெளிவாக இருந்தது மட்டுமில்லாமல் முன்னைக்கிப்போது ஒரு சுற்றுப் பெருத்தும் இருந்தாள்.

சுப்பம்மா காசியில் விசுவநாதசாமி தரிசனத்தை உத்தேசித்தோ கங்காஸ்நானத்தால் கடையேறவோ கிளம்பவில்லை. கல்யாணமான மறுவருஷமே அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு வேதாந்தப் பித்தோடு வடக்கே ஓடிய புருஷனையும் தேடித்தான் போனாள்.

காசியில் கோசாயிகளின் கூட்டத்தில் அவன் இருக்கிறானாம். ஒற்றைக் காலையும் நீண்டு தரையைத் தொடும் ஆண்குறியையும் ஊன்றியபடி வளைந்த நகங்களோடு நாள்க்கணக்கில் அசையாமல் அவன் தீர்த்தக்கட்டத்தில் நிற்பதைக் கண்டதாக முன்னால் காசி போய்த் திரும்பி வந்த யாரோ சொன்னார்கள்.

பக்கத்து மாயானத்தில் பாதி எரித்து வாயில் கொள்ளியோடு கங்கையில் மிதக்கும் பிணங்களைத் தடுத்து எடுத்து நடுராத்திரியில் சிதைச்சூட்டில் வாட்டிச் சாப்பிடுவதாகவும் தகவல் வந்த மணியமாக இருந்தது.

பிராமணன் மாமிசம் சாப்பிட மாட்டான். கோசாயியாகப் போனாலும் தான்.

சுப்பிரமணிய அய்யரின் தகப்பனார் தீர்மானமாக அறிவித்தாலும் அவருக்கும் காசிக்கே நேரே போய் இப்படிப் பிணம் தின்னும் பிராமணர்கள் இருக்கிறார்களா என்று தெரிந்து கொண்டுவர ஆர்வமாக இருந்தது.

ஆனாலும் புகையிலைக் கடை அவரைக் கட்டிப்போட்டு விட்டது. போதாக்குறைக்கு ஷயரோகமும்.

அவர் ரோகத்தில் இறந்த அடுத்த மாதம் சுப்பிரமணிய அய்யரின் மாமனாரும் பத்துக் குடும்பமும் காசிக்குக் கிளம்பியபோது சுப்பம்மாக் கிழவியும் சேர்ந்து கொண்டாள்.

நெற்றி நிறையக் குங்குமமும் சதா சுமங்கலி என்ற பெயருமாக அவள் காசிக்குக் கிளம்பியபோது மூத்தகுடி முன்னோரான பெண்டுகள் ஊர் எல்லை வரை பட்சிகளாகப் பறந்தும், சர்ப்பமாக ஊர்ந்தும் வார்த்தை சொல்லிக் கொண்டு கூடவே வந்தார்கள்.

அவர்கள் சுப்பம்மாள் வாயில் இருந்து எல்லாக் குரலிலும் பாடினார்கள். அவளுக்குக் களைப்பானபோது மற்றவர்கள் குரலில் ஏறிக்கொண்டு தொடர்ந்தார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் மாமனார் பெண்குரலில் நலுங்குப் பாடல் பாடும்போது, அய்யரின் அகத்துக்காரி கல்யாணியம்மா சொன்னாள்.

இது எங்க அத்தைப்பாட்டி. நன்னிலத்திலே வாக்கப்பட்டுப் போனா. சாலாட்சின்னு பேரு.

மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பம்மாள் கூடவே இருந்ததால் அவள் போகிற வழியில் தெலுங்கு, கன்னடம் என்று எல்லா பாஷையையும் பேசி அங்கங்கே ஜனங்களிடம் பழகி வழி விசாரிக்கவும், சத்திரம் சாவடியில் ஒதுங்கிச் சாப்பாடு வாங்கவும், காளைவண்டி பேரம் பேசவும் ரொம்பவே ஒத்தாசையாக இருந்ததாகச் சுப்பிரமணிய அய்யரின் மாமனார் சொன்னார்.

காசியில் அவள் இந்துஸ்தானியில் கடல்மடை திறந்ததுபோல் பொழிய ஆரம்பித்தது மட்டுமில்லாமல் அந்த பாஷையிலேயே பாடவும் ஆரம்பித்து விட்டாளாம்.

கங்கைக் கரையில் ஏதேதோ தீர்த்தக் கட்டங்களில் அவள் நிலாக்கால ராத்திரிகளில் குரலெடுத்துப் பாடியபோது சன்னியாசிகளும் கிரகஸ்தர்களும் கூட்டமாகக் கூடிப்போனதாகச் சொன்னார் ஐயரின் மாமனார். சங்கீத சாம்ராட்டான அந்த ஊர்த் துருக்கர் ஒருத்தர் வந்து கேட்டு இது ஆண்டவனுக்கு உரிமையான சங்கீதம் என்றாராம். அதையும் சுப்பம்மாள் தான் மொழிபெயர்த்தாள்.

சுப்பம்மாக் கிழவி காசியில் புருஷன் எங்கும் தட்டுப்படாமலே போக அவனை விட்டுவிட்டு வர, மற்றவர்கள் புடலங்காய், கொத்தவரங்காய், பலாப்பழம் என்று விட்டுவிட்டு வீடு வந்தார்கள்.

இனி ஆயுசுக்கும் அந்தந்தக் காய்கறி சாப்பிடக் கூடாது என்ற வருத்தம் அவர்களுக்கு என்றாலும் சுப்பம்மாக் கிழவிக்கு ஒரு வருத்தமும் இல்லை. அவள் புருஷன் அவள் முலைகளைக் கவ்விச் சுகித்தது ஏதோ கனவில் நடந்த சமாச்சாரமாகத் தோன்ற அவை சுருங்கி மார்க்கூட்டோடு ஒட்டிப் பல காலம் ஆகிவிட்டன.

உடல் தளர்ந்தாலும் குரல் தளராத வரத்தை அவளுக்கு மூத்தகுடிப் பெண்டுகள் கொடுத்திருக்கும் காரணத்தால் சுப்பம்மாக் கிழவி தொங்கத் தொங்க வளர்ந்த காதில் எண்ணெய் ஏறிய தோடும், வியர்வையில் கலைந்த குங்குமமும், வற்றிப்போன ஸ்தனங்களை மூடிய பருத்திப் புடவையுமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள்.

பெண்டுகள் சாப்பிட்டு முடியும்போது சுப்பம்மாக் கிழவியின் பாட்டு முடியும். அவர்களும் நிதானமாகத் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாலு தலைமுறையில் பூவோடும் பொட்டோடும் போன பெண்டுகள் பத்திருபது பேராவது தேறுவார்கள். ஒவ்வொருத்தரைப் பற்றிச் சுப்பம்மா பாடும்போதும் அவர்கள் தங்களுக்கு முந்திய யாரையோ பற்றிய நினைவுகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வருவதால் பாட்டு முடியாமல் போய்க் கொண்டிருந்தது.

நாம சித்தெ சீக்கிரம் முடிச்சு எடத்தைக் காலி பண்ணினா புருஷா சாப்பிடலாம். பாவம். காலம்பற இருந்து அவாளும் மடியா பட்டினியா இருக்கா. அவாவா சாப்பிட்டு ஸ்வகாரியத்தைக் கவனிக்கப் போக வேண்டாமா ?

சுப்பிரமணிய அய்யரின் மாமியார் தான் சொன்னது.

அய்யர் அவள் இருந்த திசைக்கு நமஸ்காரம் செய்து கொண்டார்.

மாடியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம்.

சங்கரன் தான்.

கடைக்குப் போயிருப்பேன்னு நினைச்சேன்.

அய்யர் அவனிடம் சொன்னார். சங்கரன் வெறுமனே சிரித்தான்.

அள்ளிச் செருகிய குடுமியும், பெரிய மீசையும் கருகருவென்று முகத்தை ஒட்டி வளரும் தாடியுமாக அவன் ஷத்திரியன் போல் இருந்ததாக அய்யருக்குத் தோன்றியது.

மீசையையும் தாடியையும் மழித்துவிட்டுக் குடுமி மட்டும் வைத்துக் கொண்டு பிராமணனாக லட்சணமாக இருக்கலாம் அவன்.

பிராமணன் புகையிலை விற்கும்போது அவன் தாடி மீசையோடு இருந்தால் என்ன தப்பு ?

கேளுங்கோ எல்லோரும்.

சுப்பம்மாக் கிழவி திடாரென்று சத்தமாகச் சொன்னாள். அதுவரை அவள் பாடியதை நடுவில் நிறுத்தி அவள் குரலில் ஏறிய மூத்தகுடிப் பெண்டு அலறினாள்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

வாயில் சாதத்தோடு எல்லாப் பெண்களும் பாட ஆரம்பித்தார்கள். மஞ்சளும் குங்குமமும் ஸ்நாநப்பொடி வாசனையுமாக மூத்தகுடிப் பெண்டுகள் எல்லோர் குரலிலும் ஏறியிருந்தார்கள்.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts