அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

இரா முருகன்


பனியன் சகோதரர்கள் புது மோஸ்தரில் குப்பாயம் உடுத்தி இருந்தார்கள். அரையில் நாலு முழ வேட்டி.

அது மட்டும் ராஜாவுக்குப் பழக்கமான ஒன்று. எல்லாப் பிரஜைகளும் வேட்டி தான் உடுத்தி இருக்கிறார்கள். அதாவது ஆண்கள். மலையாளக் கரையில் பெண்களும் அந்த வண்ணமே உடுத்தி நடந்து போவதாகப் பயணம் போய் வந்த காரியஸ்தன் ஒருதடவை சொன்னான்.

அதுமட்டுமில்லை. அவர்கள் மேலேயும் ஒன்றும் அணிவதில்லையாம். அதாவது பெரும்பான்மையான பெண் பிரஜைகள். உடுத்தினால் வரி கட்ட வேண்டுமாம்.

அநியாயம் என்று ராணி சொன்னபோது ராஜா உரக்க ஆமோதித்தாலும் மலையாளக் கரைக்கு ஒரு தடவையாவது போய்ப் பார்த்துவிட்டு வர உத்தேசித்திருந்தார்.

ஆனால் அவரால் நகர முடியாதபடிக்கு இடது கால் கொஞ்சம் பாரிச வாயு பாதித்துக் கிடக்கிறது.

ரதங்கள் எல்லாம் ராஜாவுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்னரே இல்லாமல் போய்விட்டன. குதிரை பூட்டிய வண்டிகளும் மாடு பூட்டிய வண்டிகளும் நிறையப் புழக்கத்தில் வந்திருக்கின்றன.

அதெல்லாம் சாமானியப் பிரஜைகள் போக வர. ராஜா மரியாதை நிமித்தம் அதிலெல்லாம் பிரயாணம் செய்ய முடியாது.

பல்லக்கில் போகலாம் தான். ஆனால் தொடர்ந்து தூக்கிக் கொண்டு போக வலுவாக நாலு பேர் வேண்டும். அவர்கள் களைப்பு அடைந்தால் நகரச் சொல்லி விட்டுச் சுமக்க இன்னம் கொஞ்சம் ஆள்படை கூடவே வரவேண்டும்.

எல்லாவற்றுக்கும் காசு செலவாகும். துரைத்தனத்தார் அனுமதித்த மானியத் தொகையில் ஊருக்குள் வேண்டுமானல் மாதத்துக்கு ஒருமுறை நவமிநாள் பகலிலோ பவுர்ணமி ராத்திரியிலோ பல்லக்கில் ஊர்வலம் போய்வரலாம்.

போயிருக்கிறார் ராஜா.

போனமாதம் நண்டுக் குழம்பும் வான்கோழிக் கறியும் வரகரிசியுமாகச் சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்த திருப்தியோடு பல்லக்கில் ஏறினார். பகலில் பவனி வருவதை விட இது வசதியாக இருந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் கிடையாது. உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து ஊற வைத்தபடி திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பிரஜைகள் கண்ணில் பட மாட்டார்கள் ராத்திரியில்.

பந்தம் கொளுத்திப் பிடித்துக் கொண்டு நாலு பேர் முன்னால் நடக்க, தண்டோராவோடு ஒருவன் ஓட்டமும் நடையுமாக அறிவித்துக் கொண்டே போக, நாலு மல்லர்கள் பல்லக்கைச் சுமந்து கொண்டு தடார் தடார் என்று அடி வைத்து நடந்தபோது ராஜாவுக்கு உண்மையிலேயே பெருமையாகத் தான் இருந்தது.

பக்கத்து வீட்டு கிராமபோனில் யாரோ உரக்க ஒப்பாரிப் பாடல் வைத்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை கேட்காத புது பாஷையில் இருந்தாலும் அந்த துக்கம் ராஜா மனதுக்கு இதமாக இருந்தது. நண்டுக் கறியோடு இதை ரசித்திருக்க வேண்டும். முடியாமல் போய்விட்டது.

எல்லாவற்றுக்கும் யோகம் வேணும். கிராமபோன் வாங்கக் கூடக் கஜானாவில் கூடுதல் பணம் இல்லை. துரைத்தனம் கொடுக்கும் பணத்தில் ஆட்களை வேண்டுமானால் அமர்த்தி ஒரு நாள் முழுக்க ஒப்பாரி வைக்கச் சொல்லலாம்.

என்ன இருந்தாலும் இயந்திரம் எத்தனை தடவை இயக்கினாலும் ஒரே தரத்தில் சோகத்தைப் பொழிவது போல், சொற்பமான காசும் வெற்றிலை பாக்கும் வைத்து அழைத்து வந்த ஒப்பாரிக்காரர்கள் செய்ய முடியாது. நடுவில் குரல் தளர்ந்து போகும். இருமுவார்கள். புகையிலை போட நிறுத்துவார்கள். ஒண்ணுக்குப் போய்விட்டு வந்து இடுப்பில் சொரிந்தபடி, விட்ட இடத்தில் தொடரும் போது உசிரில்லாத குரலாக வரும்.

மலையாளக் கரைபோல் மேல் துணி உடுத்த வரி போட்டால் என்ன என்று ராஜா யோசித்தார். எல்லோருக்கும் முன்னால் ராணியே மேல் துணியைக் களைந்துவிட்டு மேல் மாடியில் போய் நின்று வரியை ரத்து செய்யச் சொல்லிக் குரல் கொடுத்துப் போராட்டம் நடத்தலாம்.

அவள் துரைத்தனத்துக்கு எப்போதும் எதிரிடையான பாளையக்கார இனத்திலிருந்து வந்தவள் என்பதால் செய்யக்கூடியவள் தான்.

ராஜா இதையெல்லாம் யோசித்துப் பல்லக்கில் போகும்போது சாப்பாடும், கேட்ட சுகமான ஒப்பாரிப் பாட்டும், சாப்பிட்ட கடல் நண்டுமாக தூங்கு தூங்கு என்று கண்ணைச் சுழற்ற, அங்கங்கே கூடி நின்று சிறுநீர் கழித்துக் கொண்டும் ஊர் வம்பு பேசிக் கொண்டும் வறுத்த கடலை கொறித்துக் கொண்டும் இருந்த பிரஜைகளுக்குக் கைகாட்டக் கூட முடியாமல் அசதி ஏற்பட்டு, பல்லக்கிலேயே படுத்து நித்திரை போய்விட்டார்.

நாலு பேர் சுமக்க மல்லக்கப் படுத்தபடி ராஜாவை ஊர்வலமாகத் தொடர்ந்து கூட்டிப் போவது உசிதமானதில்லை என்று பட, காரியஸ்தன் பல்லக்குத் தூக்கிகளை விளித்து உடனே அரண்மனைக்கு ஓடச் சொன்னான்.

தீப்பந்தங்கள் பேயாட்டம் ஆடி அணைய, இருட்டில் இலுப்பெண்ணெய்ப் புகை வாடையும், பாதையில் மகிழம்பூ பூத்த வாசனையுமாக ராஜா அரண்மனைக்குத் திரும்பியபோது ராணி உரக்கக் கோபப்பட்டது இன்னமும் ராஜாவுக்கு நினைவு இருக்கிறது.

மலையாளக் கரைக்குப் பல்லக்கில் போய்வர முடியாவிட்டால் பரவாயில்லை. ஆஸ்டின் காரில் போய்வரலாம் என்று பனியன் சகோதரர்கள் தொடர்ந்து ஆசை காட்டுகிறார்கள்.

ராஜாவுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வருடம் பிற்பட்டவர்கள். ராஜா காலத்திலேயே துரைத்தனத்தார் தேசத்தில் இந்தக் கார் என்ற நூதன வாகனம் வந்தாலும் அது இந்தப் பக்கம் புழக்கத்தில் வந்தது ராஜா காலத்துக்குப் பிறகுதான்.

யானை மாதிரிப் பிளிறிக் கொண்டு நாலு சக்கரத்தில் நகர்ந்து கொண்டு ஒரு ராட்சச இரும்பு யந்திரம். பக்கத்து வீட்டு ஒப்பாரிப் பாட்டுப் பெட்டியும் இது போல் தான் இருக்கும் என்று ராஜாவுக்குப் பட்டது.

அதன் பெயர் கிராமபோன் என்று சொன்னதும் பனியன் சகோதரர்கள் தான்.

கிராமபோனும் ராஜா காலத்துக்கு அப்புறம் தான் புழக்கத்தில் வந்தது. பனியன் சகோதரர்கள் தான் அதைப் பக்கத்து வீட்டுப் புகையிலைக் கடைக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

ஆஸ்டின் காரில் எட்டில் ஒரு பங்கு இடத்தைக் கூட அடைத்துக் கொள்ளாத சாது யந்திரம் அது என்ற பனியன் சகோதரர்கள் ராஜாவுக்கும் ஒரு கிராமபோனும் கூடவே ஆஸ்டின் காரும் வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்.

பணம் ? பணம் இருந்தால் காலத்தில் முன்னாலும் பின்னாலும் போய் நினைத்ததை வாங்கி உபயோகித்துச் சுகித்து இருக்கலாம்.

பணத்துக்கு என்ன செய்யலாம் என்று முன்னோரை அழைத்துக் கேட்டபோது அவர்கள் அரண்மனை முற்றத்தில் ஒரு உச்சிவேளை நேரத்தில் புகைபோல் வந்து நிறைந்தார்கள்.

அது அவர்களுக்குத் திவசம் தரப் புரோகிதரை அழைத்து மந்திரம் ஓதவைத்த நேரம்.

அய்யரே நீர் தட்சிணை வாங்கிப் போய் அப்புறம் வாரும். நாங்கள் எங்கள் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரனோடு பேசிக் கொண்டிருக்கிறோம்.

முன்னோர்கள் சொல்ல, அவர்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் பிண்டம் உருட்டி ராஜா கையில் கொடுத்து எள்ளோடு கலந்து முன்னோர்களுக்குப் போடச் சொன்னார் புரோகிதர்.

எள்ளு எல்லாம் ஒத்துக் கொள்கிறதில்லை. கோழியடித்து வைத்துக் கூப்பிட்டால் வேண்டாம் என்றா சொல்வோம் என்று முன்னோர்களில் ஒருத்தர் சொல்ல, அய்யருக்குக் கோபம் வந்து விட்டது.

நீங்கள் கடைத்தேற இதுதான் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேண்டுமானால் வீட்டில் இருந்து புத்தகம் எடுத்து வந்து நிரூபிக்கிறேன்.

அய்யர் உணர்ச்சிவசப்பட, முன்னோர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, நாலு பூசணிக்காயும், வெங்காயமும், முட்டைக் கோஸும் உருளைக்கிழங்கும், புதுக் காய்கறியென்று பனியன் சகோதரகள் பின்னால் வரும் காலத்தில் இருந்து கொண்டு வந்து கொடுத்த நூர்க்கோலும் கூடவே நாலு பெரிய பணமுமாகக் கொடுத்து அனுப்பி வைக்கச் சொன்னார்கள் ராஜாவிடம்.

அய்யர் எள்ளும் தண்ணீரும் இரைத்துத் தருப்பையில் வைத்துப் பிண்டம் தருவதே முன்னோர்கள் கடைத்தேற உகந்தது என்று இன்னொரு முறை உரக்க அறிவித்துவிட்டு யாரும் ஏதும் பேசாமல் போகக் காய்கறிகளைச் சுமந்து கொண்டு போனதும் முன்னோர்கள் ராஜாவிடம் காசு விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியதின் அவசியம் குறித்துப் பொறுமையாக எடுத்துச் சொன்னார்க்ள்.

கிராமபோனும் ஆஸ்டின் காரும் உனக்குத் தேவையில்லாத விஷயம். மலையாளக் கரையில் போய் முலை தெரியக் காட்டி நடக்கிற சுந்தரிகளைப் பார்ப்பதும் தான். அவர்கள் எல்லோருக்கும் கண்ணுக்குள்ளும் மனதிலும் உறைந்து கிடக்கும் அவமானமும் ஆத்திரமும் உனக்குத் தெரியாது. அது உன்னைச் சுட்டுப் போடும். உடம்பு பஸ்பமாகிப் போவாய்.

முன்னோர்கள் எச்சரிக்கை செய்தபோது பனியன் சகோதர்கள் பற்றி ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியும் எச்சரிக்கை செய்தார்கள்.

அவர்கள் பின்னால் வரும் காலத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவர்கள் நம்ப வேண்டாம்.

எனக்கு முன்னால் ஏகப்பட்ட வருடம் முன் சுவாசித்து இருந்து இப்போது இல்லாமல் போன உங்களை நம்புகிறேனே. அதே போல் அவர்களையும் நம்பினால் என்ன ?

ராஜா எதிர்க் கேள்வி கேட்டார்.

கலி பெருகிக் கொண்டு போகிறது.

ஒற்றை வரியில் பதில் சொன்ன முன்னோர்கள் கலைந்து போனார்கள் அப்போது.

முன்னோர்களிடம் ரதம் கேட்கலாமா என்று ராஜா யோசித்தார். மலையாளக் கரைக்கே போகாதே என்று உத்தரவு போட்டவர்கள் ரதம் மட்டும் கொடுத்து விடுவார்களா என்ன என்று தோன்ற அந்த எண்ணத்தைக் கைவிட்டபோது பனியன் சகோதர்கள் மேல் திரும்ப நம்பிக்கை வந்தது.

அவர்களை அப்போதே அழைத்தார்.

அது எளிதான செயல். மனதில் நினைத்தால் போதும். செய்தி போய்ச் சேர்ந்து விடும் அவர்களுக்கு.

தூரம் தொலைவிலிருந்து கம்பி மூலம் சேதி அறிவிக்க ஒரு சாதனம் தங்கள் காலத்தில் இருப்பதாகவும் பனியன் சகோதரர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் ஊரெல்லாம் தோண்டி இரும்புக் கம்பம் நாட்ட வேண்டும் அது செயல்பட என்பதால் ராஜா அது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பணப் பற்றாக்குறைதான். வரிசையாகக் கம்பம் நாட்டிக் கம்பி இழுக்கப் பணம் கிடையாது. பிரஜைகளுக்கும் பணப் பற்றாக்குறை என்பதால் அப்படியே செய்து வைத்தாலும் கம்பத்தைப் பிடுங்கி விற்று அரிசி வாங்கி விடுவார்கள்.

அப்புறம்தான் பனியன் சகோதரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழைத்துப் பேச வழி சொன்னார்கள்.

ராஜா அழைத்தபோது அவர்கள் பூத்திருவிழாவுக்கு வசூல் செய்து கொண்டிருப்பதால் உடனே வரமுடியாது என்றார்கள்.

உள்ளூர் அம்மன் கோவிலில் ராஜா தான் பூத்திருவிழா வருடா வருடம் கொண்டாட ஏற்பாடு செய்கிறார். காளை வண்டிகளில் பெரிய மண் பானைகளில் மல்லிகைப் பூவும், சாமந்திப் பூவும், தாழம்பூவுமாக நிறைத்து எடுத்துப் போய் அம்மன் சிலைக்கு மேல் பூசாரி சொரியும் போது, ராஜாவும் ராணியும் சன்னிதானத்துக்கு வெளியே சேவித்தபடி நிற்க, வெளியே வேலிகாத்தான் செடிகளை வெட்டிக் களைந்த செம்மண் பொட்டலில் பிரஜைகள் கொண்டாட்டம் ஆரம்பமாக நிற்பார்கள்.

பூக் கொட்டிப் பூசை முடிந்த பிறகு ராஜா செலவில் பெரிய மண் குடங்களில் கள்ளு வந்து சேரும். ஒவ்வொரு பிரஜைக்கும் நாலு குவளைக்குக் குறையாமல் கிடைக்கும் அந்தக் கள்ளுக்கும் அதைத் தொடரும் ஆட்ட பாட்டத்துக்கும் கூட்டம் காத்துக் கிடக்கும்.

ராஜாவுக்கு அப்புறம் இன்னொரு ராஜா இல்லாமல் போனதால், தாங்கள் இரண்டு பேரும் ஊரில் முழுக்கத் திரிந்து பணம் வசூலித்துப் பூத்திருவிழா நடத்தி வருவதாகப் பனியன் சகோதரர்கள் சொன்னபோது ராஜாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

நாலு குடம் கள்ளு வேண்டுமானால் அனுப்பி வைக்கலாமா என்று கேட்டபோது அது நடக்கக் கூடிய காரியமில்லை என்று சொல்லி விட்டார்கள் பனியன் சகோதரகள்.

பனியன் சகோதரர்களை நம்பாதே என்று யாரும் கூப்பிடாமலே வந்து, ராணியோடு மதியம் பல்லாங்குழி விளையாடும்போது சோழியில் புகுந்துகொண்டு முன்னோர்கள் சொன்னதை ராணி ஆமோதித்தாள்.

இவர்கள் சூதுவாது மிகுந்த மனுஷர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

அவளும் தான் சொன்னாள்.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் சொல்லியிருக்கிறார்கள். ராஜாவை மலையாளக் கரைக்கு ஆஸ்டின் கார் வாகனத்தில் அழைத்துப் போவதாக.

அதைப் பற்றிப் பேச இப்போது வந்திருக்கிறார்கள்.

ராஜா இடுப்பில் ஜரிகை வேட்டியை இறுக்கிக் கொண்டு எழுந்து முன்னறையைப் பார்த்தார்.

ராணி தூங்கிக் கொண்டிருக்க சேடிப்பெண் விசிறிக் கொண்டிருந்தாள்.

பனியன் சகோதரர்களோடு கதைத்து விட்டு சேடியோடு விளையாடலாம் என்று எண்ணம் வந்தது ராஜாவுக்கு.

இன்னும் கொஞ்ச நேரம் விசிறி ராணி சீக்கிரம் எழுந்துவிடாதபடி உறங்க வைக்கட்டும் அவள்.

அதற்குள் பனியன் சகோதரர்களோடு பேசி முடித்து விடலாம்.

ராஜா திருப்தியோடு வாயில் பாக்கை இட்டு மென்று கொண்டு வாசலுக்குப் போனார்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts