அலைவரிசை

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


சோலையை ஊடுருவிய காலை வெய்யில் வாசலில் வந்து நின்ற வீணாவின் முகத்தைச் சுட்டது. ராஜாவை இன்னமும் காணவில்லை. ஒரே பிள்ளை அஜித்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று. எல்லாமே புதிதாக அணிந்து பனியில் குளித்த மலராய் பிள்ளை ஜொலித்தான். எப்போதும் போல வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிராமல் அன்றையப் பொழுதை வெளியே போய் குடும்பத்தோடு கழிக்க விரும்பினாள் வீணா. நாட்டு நிலவரம் சீராயில்லை என்றான் ராஜா. அம்மாவின் விருப்பத்தை பிள்ளையும் ஆமோதித்து நச்சரிக்க சாம்பல்தீவுக் கடற்கரைக்குப் போவதென்று முடிவாயிற்று. முந்தின இரவு ஒரு மணி வரை விழித்திருந்து தயாரித்த வகை வகையான நொறுக்குத் தீன்கள் உள்ளிட்ட எல்லா ஆயத்தங்களோடும் வீணா காத்திருந்தாள்.

நகரத்தோடு மிகவும் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் இருந்தது அவர்களின் வீடு. ஒரே மகள் வீணாவிற்கென்று குமாரசுவாமி பார்த்துப் பார்த்துக் கட்டியது அது. வீடு கட்டிய கையோடு வீணாவிற்கு மாப்பிள்ளையும் பார்த்து கட்டி வைத்து விட்டார் அவர். ராஜாவிற்கு அவர்கள் அளவிற்கு செல்வச் செழிப்பு இல்லாவிட்டாலும் உத்தியோக லட்சணம் மிகுந்த குடும்பப் பின்னணி இருந்தது. அரச திணைக்களமொன்றின் பொறியியலாளர் அவன்.

வீணா தொலைபேசியில் அலுவலகத்திற்குக் கதைத்தாள். அவர் லீவு போட்டு விட்டுப் போய் அரை மணித்தியாலமிருக்கும் என்று கணக்காளர் சொன்னார். பத்து நிமிடங்களில் வந்து விடக்கூடிய தூரந்தான். எங்கே போனார் ? சரியாக நாற்பது நிமிடங்களின் பின் வந்து சேர்ந்தான் ராஜா. வழியில் கொஞ்சம் பிந்திப் போச்சு வீணா என்றான்.

வீணா கணவனுக்குப் பக்கத்தில் ஏறிக் கொண்டாள். அஜித் பின் சீற்றில் துள்ளி ஏறி அப்பாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.

வழியில் அரச படைகளின் மூன்று சோதனை மறிப்புகள். தமிழ்ப் பிரதேசமாயிருந்தும் தமிழர்கள் என்பதால் கார் கடும் சோதனைக் குள்ளாகியது. முறுக்கு சான்விச் வைத்த பாத்திரங்கள் கூடத் தப்பவில்லை. அவர்களைத் தாண்டிப் போவதற்குள் ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது. கடற்கரையை நோக்கிய குறுகிய பாதையில் கார் திரும்பிய போது ராஜா சொன்னான்.

“சொன்னாக் கேட்டாத்தானே .. நினைச்சதைச் செய்ய வேனும் உனக்கு”

அவள் தலையை நிமிர்த்தினாள். “பிள்ளை ஆசைப்பட்ட படியாத்தான் கேட்டனான்”

“அவன் சின்னப்பிள்ளை .. நாங்கள் தான் யோசிக்க வேனும்.”

“நீங்க பிந்தி வந்ததுக்கு நான் என்ன செய்யிறது.”

அவனது மெளனம் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று.

“நீங்க முந்தியே வெளிக்கிட்டாங்களாமே ? ”

“வருகிற வழியில் அண்ணன் வீட்டிற்குப் போயிருந்தேன்.”

அவள் ஏன்; என்று பார்வையால் கேட்டாள்.

“சுரேசும் வந்தா பிள்ளைக்கு விளையாட ஆளிருக்கும் என்று பார்த்தேன். அவன் பள்ளிக்குப் போயிற்றான்.”

“நாங்க மட்டும் போறது என்றுதானே நேற்று யோசிச்சது பிறகெதுக்கு மற்றாக்கள் ? ”

ராஜா சடுதியாக பேச்சை நிறுத்திக் கொண்டான். கேள்வியும் பதிலும் இப்படியே தொடர்ந்தால் பிறந்த நாள் – பிரச்னை நாளாக மாறும் அபாயம் தெரிந்தது.

“அப்பா நண்டு பிடிச்சா இதுக்குள்ள போட்டு மூடலாமாப்பா” .. .. என்று சிறிய பிளாஸ்டிக் பெட்டியைக் காட்டி அஜித் கேட்டான். வெறுமனே தலையாட்டினான் ராஜா. மூடியை மூடக் கூடாது மகனே என்று வீணாதான் பிள்ளைக்குப் பதில் சொன்னாள். கடற்கரை வந்தது. பீச் ஹோட்டல் சந்தடியில்லாமல் மொட்டை மரமாயிருந்தது. காரை அங்கே தான் நிற்பாட்ட வேண்டும். ஒரு மரியாதைக்காக மூன்று கூல் ரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான் ராஜா.

ஆழ்ந்த துயிலில் இருக்கும் குழந்தையின் மிருதுவோடு கடல் பட்டுப் போல இருந்தது. நீண்ட நாட்களாய் மனிதக் கறை படாத மணல் திட்டுகள் வெண்ணெய் நிறத்தில் தொலை தூரத்திற்கு நீண்டிருந்தன. அஜித்திற்கு புதிய சஸ்பெண்டர் போட்டு விட்டாள் வீணா. ராஜா மகனைத் தூக்கிக் கொண்டு போய் நீரில் இறக்கி விட கால்களைத் தொட்டுச் செல்லும் சின்ன அலைகளுக்குப் பயந்து பின்வாங்குவதும் திரும்ப வருவதுமாக அவன் துள்ளினான். வீணா கடலில் இறங்கினாள்.

வீணா தூரத்துக்குப் போகாதே அந்தப் பக்கம் ஆழம் என்றபடியே அவளது கையைப் பிடித்து ராஜா இழுக்க அவள் சிரித்தாள். சிரிப்பைக் கண்டதும் அவனுக்கு ஆறுதலாயிற்று.

“அங்க பாத்தியா – தட்டத்தனிய பிள்ளை விளையாடுறான்… சுரேஷ் வந்திருந்தால் பிள்ளைக்குப் பிராக்காய் இருந்திருக்கும்.”

“சரி சரி விடுங்க….அவங்களைக் கூட்டிக் கொண்டு வராவிட்டால் உங்களுக்குப் பத்தியப் படாது.”

“இப்ப நான் என்ன சொல்லீற்றன் என்று கோவிக்கிறாய்.”

“ஆர் கோவிச்சது – நீங்க தான் தேவையில்லாம இன்;றைக்கு இந்தப் பிரச்னையைக் கிளப்பிறீங்க.”

“இதில் என்ன பிரச்னை ? ”

“அவனைக் கூட்டி வரப் போறனென்று என்னிடம் சொன்னீங்களா ? ”

“வருகிற வழியில்தான் யோசனை வந்தது”

“சுரேஷ் இல்லாவிட்டால் எங்க மாமா மகனைக் கூட்டி வந்திருக்கலாமே”

“ஆர் முரளியா .. அவனுக்குப் பதினைஞ்சு வயசு அவன் எப்படி பிள்ளையோடு விளையாடுவது ? ”

“அவனும் சின்னப்பிள்ளைதான். எங்கட ஆக்களென்றால் உங்களுக்கு ஒரு நாளும் சரி வராது.”

“பிறந்த நாள் அதுவுமா ஏன் தேவையில்லாம வாக்குவாதம் வீணா”

“நீங்கதானே துவங்கினது”

“ஏன் உங்கட எங்கட என்று பிரிச்சுப் பிரிச்சுப் பேசுகிறாய் வீணா”

“தேவையில்லாமல் என் வாயைக் கிளறாதீர்கள் ”

“எனக்குக் காது செவிடில்லை மெதுவாக் கதை .. .. பிள்ளைக்குக் கேட்கப் போகுது.”

“உங்கட ஆக்களைச் சொன்னா பொத்துக் கொண்டு வருகுது உங்களுக்கு”

“வீணா .. .. தேவையில்லாமக் கதைக்காதை”

“நான் தேவையோடுதான் கதைக்கிறேன்”

“இப்ப வாயைப் பொத்தப் போகிறாயா இல்லையா ? ”

அவள் முறைத்துப் பார்த்தாள்.

“என்னடி முறைப்பு. பொத்தடி வாயை” .. .. அவளது முகத்தில் தண்ணீரினால் விசிறினான் ராஜா.

குழிக்குள் மறைந்து கொண்ட நண்டுக் குஞ்சொன்றை பிடிப்பதில் தீவிரமாயிருந்த அஜித் சப்தம் கேட்டு நிமிர்ந்தான். நண்டைப் பிடிச்சிற்றியா மகனே என்று கேட்டுச் சமாளித்துக் கொண்டே தலை குனிந்தான் ராஜா.

ஆழமான பகுதிக்கு வீணா தனியாக நகர்ந்தாள். அவனுக்குப் பயமாக இருந்தது. எனினும் கவனிக்காதது போல மற்றப் பக்கம் திரும்பி நின்றான். அவளையே தலை முழுகுவது போல் ஒரு தரம் நீருக்குள் மூழ்கி எழுந்தான். அவள் இன்னும் தூரமாக நகர்ந்தாள். கடலில் ஒரே சீரான மெல்லிய அலை இப்போது உருவாகி நகர்ந்து கொண்டிருந்தது. தங்கள் இருவரின் மன அலைகள் ஏன் ஒரே கோட்டில் பிரயாணம் செய்ய முடியவில்லை என்பது புரியாமல் அவன் குழம்பினான். தன் கணவன் தன் பிள்ளை என்ற பிடிப்போடு எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் வீணா இந்தச் சின்ன விசயத்தில் மட்டும் முரண்படுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த முரண்பாடு மட்டும் இல்லாமலிருந்தால்!

அவன் பெருமூச்சு விட்டான்.

எல்லோரையும் புரிந்து கொள்ளக்கூடிய தன் புருசனால் தன் உணர்ச்சிகளை மட்டும் ப+ரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே என வீணா கவலையில் ஆழ்ந்தாள்.

சூரியன் இப்போது உச்சிக்கு வந்து விட்டது. கரைக்கு வந்து மகனோடு மணல் வீடு கட்டினான் ராஜா. அவசரத்தில் புறப்பட்டதால் காலை சாப்பிடவுமில்லை.

வீணா குளித்துக் கொண்டேயிருந்தாள்.

“அப்பாவுக்குப் பசிக்குது அம்மாவிடம் சொல்லு அஜித்.”

“அம்மா அப்பாவுக்குப் பசிக்குதாம் வாங்கோ.”

அவளிடமிருந்து பதிலில்லை.

“அம்மா எனக்கும் பசிக்குதும்மா.”

“பசிச்சா போய்ச் சாப்பிடுங்க.”

அவன் அஜித்தைக் கூட்டிக் கொண்டு துணி விரிக்கைக்கு நடந்தான். வீணா இல்லாமல் அவனால் சாப்பிட முடியாது. ராத்திரி முழுக்க புருசனுக்கு இது பிள்ளைக்கு இது என்று கண் விழித்து எல்லாம் செய்தவளை விட்டு எப்படி உண்பது! வழமையில் புருசனும் பிள்ளையும் சாப்பிட்ட மிச்சந்தான் அவளுக்கு. அப்படியான வீணா இல்லாமல்!

அஜித் அம்மாவிடம் போனான். கொஞ்ச நேரம் கழித்து அம்மாவும் பிள்ளையும் கரைக்கு வந்தார்கள். அவள் தலையைத் துவட்டி உடுப்பை மாற்றிக் கொண்டு பிள்ளைக்குச் சான்விச் கொடுத்தாள். இன்னொரு தட்டில் சான்ட்விச் எடுத்து ஓரமாய் வைத்தாள். அம்மாவைச் சாப்பிடச் சொல்லும்படி மகனிடம் கண் காட்டினான் ராஜா. கட்லட்ஸ் முறுக்கு அடுக்கி இன்னொரு கோப்பையில் வைத்தாள். கூல்ரிங்ஸ் இரண்டு கிளாஸ்களில் ஊற்றி வைத்தாள். அவள் எதையும் வாயில் வைக்கவில்லை.

சூரியன் நடுஉச்சிக்கு வர> நிழல்கள் சின்னதாக முன்னுக்கு விழுந்தன. அவள் மணலைக் கோதி கையில் இறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் நகர> தான் ஆரம்பத்தில் சினக்காமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான் ராஜா. தான் கொஞ்சம் பணிந்து போயிருந்தால் பிரச்னை நீண்டிருக்காது என்று எண்ணினாள் வீணா.

“சாப்பிடு வீணா” .. .. ராஜா தலை குனிந்தபடி சொன்னான். அவள் சும்மாயிருந்தாள்.

“சாப்பிடம்மா” .. .. என்றான் பிள்ளை. பிள்ளை கேட்டதற்காகச் சாப்பிடுவது போல ஒரு சான்;ட்விச்சை எடுத்துக் கடித்தாள் வீணா. அந்த ஆறுதலில் ராஜா விரிக்கையில் சரிந்தான்.

மணல் கூடுதலாகச் சுடத் தொடங்க> அவர்கள் புறப்படத் தயாரானார்கள். வீணா மகனோடு பின் சீற்றில் ஏறிக் கொள்ள கார் வீட்டை நோக்கிப் புறப்பட்டது. அம்மாவும் அப்பாவும் ஏன் உம்மென்று இருக்கிறார்கள் என்று புரியாமல் தான் பிடித்து வைத்திருந்த நண்டுக் குஞ்சின் மிருதுவான ஓட்டை தடவிக்கொண்டிருந்தான் பிள்ளை.

Series Navigation

author

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Similar Posts