இரவி ஸ்ரீகுமார்.
இந்த கதைக்கு ஹீரோ சரவணன்.
சென்னையில் மிகவும் புகழ் பெற்ற காப்பி கொட்டை அரவை கடையில்
மேனேஜர்,சேல்ஸ்மேன், பியூன் எல்லாம்.
அது ஒரு செயின் ஸ்டோர்.
சென்னையில் மட்டுமல்ல பாண்டிச்சேரி, மற்றும் தமிழகத்தில் கிட்டத்தட்ட
எல்லா டவுன்களிலும் கிளைகள் உள்ள ஒரு ‘காஃபி கிரைண்டிங் ஸ்டோர்ஸ்’.
சரவணன் அந்தக் கடையில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.
மிக ஏழைக் குடும்பம். இவன் சம்பாதித்து ஏதாவது அனுப்பினால் தான், அவன் தாயாரும்,தம்பியும் சாப்பிடமுடியும்.தம்பி படிக்க முடியும்.
அப்பா- இருக்கிறார், அவ்வளவு தான்.
உள்ளூர் ஸ்பின்னிங் மில்லில் சூப்ரவைஸர் வேலை.நல்ல சம்பளம்.
சம்பளத்தை வீட்டுக்குத் தராத எத்தனையோ இந்திய குடிமகன்களில் ஒருவர்.
‘ஆறிலிருந்து அறுபதுவரை ‘ சினிமாவில் வரும் சின்ன வயசு ரஜினி மாதிரி தான் சரவணனும். கட்டாயத் தியாகி.
பன்னிரெண்டாம் வகுப்பு முதல் வகுப்பில் பாஸ்.
காலேஜ் சேரக் குடும்ப சூழ்நிலை சரியில்லை.
மாமாவின் கட்சிக்காரர் சென்னையில், குரோம்பேட்டையில்
வைத்துள்ள காஃபிப் பொடி அரவைக் கடையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேவையாம்.
சரவணன், பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அன்றே பண்ருட்டியிலிருந்து பஸ் ஏறினான்.இதோ, கடையைப் பார்த்துக் கொள்கிறான்.
மாதச் சம்பளம் 1000 ரூபாய்.
சாப்பாடுப் பேட்டா ஒரு நாளைக்கு 10 ரூபாய்.
பத்து ரூபாய் மூன்று வேளை சாப்பாட்டிற்கும் சேர்த்து. தங்கும் இடம் சரவணன் பொறுப்பு.
அதற்கு முதலாளி உதவ மாட்டார்-பணமாகவோ, இடமாகவோ.
‘ஊர் உலகத்தில பெரிய படிப்பு படிச்சவங்களுக்கே வேலை கிடைக்கறது குதிரை
கொம்பா இருக்குது. வேலையை ஒத்துகோடா ‘ – அம்மா மூக்கை சிந்தினாள்.
தம்பி, வழி அனுப்ப பஸ் ஸ்டாப் வரை வந்தான்.
‘மாமா, நானும் அண்ணன் கூட மெட்ராஸ் போறேன்.
அங்க ஏதுனாச்சும் வேலை தேடிக்கறேன்.
எனக்கு படிப்பு வேணாம். ‘-அழுதான்.
குமரன் மூன்றாம் வகுப்பு படிக்கும் சின்னப்பையன்.
சரவணன் அவனை சமாதனம் செய்தான்.
புத்தி சொன்னான்-
தான் படிக்க முடியாததை, அவனை தான் நன்றாக சம்பாதித்து படிக்க வைக்க இருப்பதை.
சென்னையில் இருந்து ஊர் வரும்போது, ஒவ்வொரு தடவையும்
அவனுக்கு ஏதாவது பொருள் வாங்கி வருவதாகச் சத்தியம் செய்தான்.
இதோ ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.
இது வரை ஊருக்கு போகவில்லை.
மாதாமாதம் அவனுக்கே குறைந்தப் பட்சம் 500 ரூபாய் செலவாகி விடுகிறது.
மீதி 500 ரூபாயை அம்மாவிற்கு அனுப்புகிறான்.
இத்தனைக்கும் அவன், இன்னும் இரண்டுப் பேரோடு சேர்ந்து ஒரு அறையை
வாடகைக்கு ஊரின் ஒதுக்குப் புறமான இடத்தில் எடுத்து இருக்கிறான்.
வாடகையில் அவன் பங்கு 150 ரூபாய்.
350 ரூபாயில் அவன் மதியச் சாப்படுப் போக
காலை நாஷ்டாவிற்கு, இரவிற்கு ஏதாவது என இரண்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரவணன் எப்போதாவது தான் GST ரோடில் இருக்கும் கடைக்கு நடந்து வருவான்.
அதற்கு அவனுக்கு அரை மணி நேரம் ஆகிறது.
ஊரிலிருந்து, அவன் சைக்கிளை எடுத்து வந்திருந்தான்.
‘இப்படி எல்லாம் ஆவும் ‘- எடைப் போட்டது சரியானதில் அவனுக்குத் திருப்தி.
எங்கேயும் சைக்கிள் பவனி தான்-
கடை வேலையாக இருந்தாலும் சரி.சொந்த வேலையாக இருந்தாலும் சரி.
நண்பன் கூட சொன்னான் –
‘சைக்கிள் மெய்டெனன்ஸ்கு முதலாளிக் கிட்டே காசு கேளு சரவணா ‘.
சரவணனுக்குத் தெரியும், இங்கு இருப்பது பொம்மை முதலாளி.பினாமி.
கேட்டால் தாவா கேட்பார்.இல்லாவிட்டால், சாக்கு சொல்வார்.
நிஜ முதலாளி, பக்கத்து மாநிலத்தில், தேசிய கட்சியில் பலம் வாய்ந்த அரசியல்வாதி.
அந்த மனிதரிடம் ஒரு காசுப் பெயராது.
‘வேண்டாம் மணி.நானே பார்த்துக்கறேன் ‘
மணி, இவனை பிழைக்கத் தெரியாதவன் என்று சொன்னான்.
சொல்லிவிட்டு போகட்டும்.
சைக்கிளை பராமாரிக்க அவனுக்குத் தெரியும்.
அம்மாவைப் போலவே, அவன் சைக்கிளும்.
வெய்யிலோ,மழையோ,பந்த்தோ இல்லை கலாட்டாவோ-
அவன் போகவேண்டிய இடத்திற்கு சமர்த்தாக அழைத்துச்செல்லும்.
சரவணன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டான்.
இத்தனை நாட்கள் அம்மாவைப் பிரிந்து இருந்ததில்லை.
‘இந்த ஞாயித்துக் கிழமை பண்ரூட்டி போகணும் ‘
முடிவு செய்தான்.
மணி எட்டு அம்பது.
இரவு ஒன்பது மணியோடு கடையின் அன்றைய வியாபாரத்தை
ஏறக்கட்டி விடலாம்.
சரவணன், கடையை மூடுவதற்கு தயார் செய்தான்.
அப்போது தான் கவனித்தான்.
கடைக்கு எதிர்தாற் போல் இருந்த காம்பெளண்டினினை ஒட்டி ஒரு கிழ மனிதர் சாய்ந்து சரிந்து உட்கார்ந்திருந்தார்.
எழுபது வயது இருக்கும்.
சரவணனுக்கு அவர் உட்கார்ந்திருந்த விதம் கலக்கத்தை கொடுத்தது.
கடையை வேகமாக மூடினான்.
வலதுப் பேண்ட் பாக்கட்டினுள் சாவியைத் திணித்துக் கொண்டான்.
கடையின் அன்றைக்கு வசூலான கேஷ்ஷோடு இருந்தப் பேக்கை சைக்கிளில் அவசரமாக மாட்டினான்.
கிழவரிடம் ஓடினான்.
‘தாத்தா…தாத்தா.. ‘-அவரை தொட்டு எழுப்பினான்.
கிழவர் அரைக் கண்களைத் திறந்தார்.
‘ம்.. ‘-முணகல்.
ஷேவ் செய்யப்படாத முகம், வெள்ளை முடிக் களைகளோடு.
பல சுருக்கங்களோடு நெற்றி.
விரிசல் விழுந்த ஆடிகளோடு கண்ணாடி.
லாரி நிறைய உணவினைக் கொண்டு நிரப்பினாலும் பள்ளம் விழுக்ககூடிய, ஒட்டிய வயிறு.
இப்படியாகக் கிழவர்.
சரவணனின் பதற்றம் கூடியது.
‘தாத்தா… ‘-அவருடைய கூன் விழுந்த தோள்களை உலுக்கினான்.
கிழவரிடமிருந்து எந்த விளைவும் இல்லை.
சரவணன், கடந்துச் சென்ற கார்களை நிறுத்தப் பார்த்தான்.
ஒரு வெள்ளை அம்பாசிடர் நின்றது.
******
‘சரி தம்பி தாத்தாவை ஜாக்கிரதையா பாத்துக்க..சரியா..நான் வரட்டா ? ‘-
வெள்ளை அம்பாசிடர் மனிதர் கிளம்பினார்.
சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
யாருக்கு யார் தாத்தா ?
வயசுக்கு மரியாதைக் கொடுத்து தாத்தா என்று சொன்னால்
இது என்ன வம்பு ?
‘தம்பி உன் பேரு என்ன ? உன்னை சீஃப் டாக்டர் கூப்பிடறாரு.. ‘-நடு வயது நர்ஸ் சொன்னாள்.
சீஃப் டாக்டரிடம் போனான்.
‘வாப்பா..இவருக்கு இமீடியட்டா டிரீட்மெண்ட் கொடுக்கணும். அதுக்கு உடனடியா ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்டிடு. பணம் கட்டின உடனே டிரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுடலாம் ‘- இவனின் பதிலை எதிர்பார்க்காமல் கண்ணாடியை துடைத்துப் போட்டப்படி சீஃப் டாக்டர் போனார்.
கடைக்கு வந்தான்.மணி பத்திருக்கும்.
நல்ல காலம் சைக்கிள் சமர்த்தாக இருந்தது.கேஷ் பையும் தான்.
எடுத்துக் கொண்டான்.
நர்ஸிங்ஹோமில் பணத்தைக் கட்டினான்.
இரண்டாயிரம் ரூபாயைத் தவிர இன்னும் ஒரு நூறு இருந்தது.
அன்னிக்கு நல்ல வியாபாரம்.
‘இதுக்கு தான் போல. ‘-சரவணனுக்குத் தோன்றியது.
நிமிடங்கள் கரைந்தன.
இரவு இரண்டு இருக்கலாம்.
இன்னும் இவன் இருப்பிடம் போகவில்லை.
நண்பர்கள் கவலைப்படுவார்கள்.
வெளியில் வந்து ‘டா ‘ குடித்தான்.
திரும்பி வந்தப் போது, வேறு ஒரு நர்ஸ் இவனை எதிர்ப்பார்த்து நின்றிருந்தாள்.
கூடவே டாக்டர் ஒருவர்.
‘இதப் பாருப்பா. உன் தாத்தா..டிரீட்மெண்ட்டுக்கு ரெஸ்பண்ட் பண்ணாம்மா இறந்துட்டாரு.
இன்னும் ஒரு ஐந்நூறு ரூபாய் ஹாஸ்பிடல் சார்ஜ் பாக்கி இருக்கு.
அதைக் கட்டிட்டு பாடியை எடுத்துக்க. ‘- சொல்லிவிட்டு தன் கடமையை செவ்வனே செய்த திருப்தியில் டாக்டர் தன்னுடைய அறையை நோக்கி.
‘என்னது…தாத்தா இறந்துட்டாரா ? ‘- சரவணன் திகைத்தான்.
‘இன்னும் ஐநூறு ரூபாக்கு எங்க போறது ? ‘
அவனுக்கு ஹாஸ்பிடல் ஏசி யிலேயும் வியர்த்தது.
‘செத்துப்போய்ட்டப் பெரீவரு யாரோ எவரோ…எனக்கு என்ன வந்தது..
பணம் கட்டாம போயிடலமா ? ‘-நினைத்தப் படி நடந்தான்.
சைக்கிளிடம் வந்தான்.
அங்கிருந்த ஹாஸ்பிடல் பெஞ்சில் உட்கார்ந்தான்.
யோசிக்க ஆரம்பித்தான்.
‘கார்த்தால மொத காரியமா சைக்கிளை வித்து பணமாக்கனும். இறுதி சடங்கு வேற இருக்கே.அவ்வளவுக்கு சைக்கிள் போவுமா ? ‘
அவனின் யோஜனைத் தொடர்ந்தது.
******
ravi_srikumar@hotmail.com
- ர்ர்.. கீச்..கீச்…
- சுகம்
- நினைவுகள்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- வழி மாறிய தென்றல்
- விந்தைதான்
- மீளத்துடிக்கும் மனம்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- தேடுதல்
- வேதம்
- அறிவியல் துளிகள்-21
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- உணவு அருந்தும் நாகரிகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- மாடன் மோட்சம்
- ரசிகன்
- சைக்கிள் முனி
- சைக்கிள்-
- கு ை க ர யி ல்
- அலைவரிசை
- கடிதங்கள்
- மானசரோவர் டாட்காம்
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- Tamil children song cassettes
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003