இரவி ஸ்ரீகுமார்.
ரகு, தன்னுடையக் கம்பெனியின் பிரதிநிதியாக பாக்தாத்திற்கு வந்திருக்கிறான். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொஜக்ட் மேனேஜர்.
பாக்தாத்தில் ஒரு பெட்ரோலியக் கம்பெனிக்கு மென்பொருள் தயார் செய்வதைப்பற்றி பேச வந்திருக்கிறான்.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், அவனுடையக் கம்பெனி புண்ணியத்தால் ஜாகை.
‘பக்தாத் திருடன் ‘ படம் பார்த்திருக்கிறான்- தொலைக் காட்சியில் ஒரு முறை.டூரிங் டாக்கீஸில் ஒரு முறை. இந்த வாரம் பாக்தாத்திற்கு கம்பெனி அவனைப் போகச் சொல்லும் வரை- அந்த அளவிலேயே அவனுக்கு பாக்தாத்தைப்பற்றித் தெரியும்.
ஆரம்பத்தில் அவனுக்கு ‘திக் ‘ என்று இருந்தது. ‘பாக்தாத்தா ‘- என்று ஒரு சின்ன பீதி. பிறகு கொஞ்சம் தெளிந்தான்.
கம்பெனியில், குறிப்பிட்ட மென்பொருளில் அவன் தான் சிறந்த நிபுணன். அதோடு அவனுக்கு அரேபிய மொழியில் கொஞ்சம் பழக்கம் உண்டு. அதுவும் இன்னொருக் காரணமாக- அவனை பாக்தாத்திற்குப் பிளேன் ஏற்றிவிட்டார்கள்.
அவன் கூட வேறு ஒருவரும் பாக்தாத்திற்குக் கிடையாது. அதற்கு, ‘கம்பெனியில் ஃபைனான்ஷியல் கிரஞ்ச் ‘- என்று காரணம் கூறப்பட்டது.
பாக்தாத் வியாபாரம் நல்லப் படியாக முடிந்தால், அவனை, ஒரு இயக்குனர் ஆக்குவதாக, மேனேஜிங் டைரக்டர் ஆசை வார்த்தைச் சொல்லியிருந்தார். அதான், ‘பார்த்துவிடாலாம் ‘ என்று, ரகு கிளம்பிவிட்டான்.
அவனுடைய அலுவலக நண்பன், ‘மோஸே ‘ச் சொன்னான், ‘ஈராக்குல யுத்தம் வரமாதிரி இருக்கு ரகு. நல்ல யோஜனைப் பண்ணு. ‘ அப்பாவும் தயங்கினார். அம்மாவுக்கும் அச்சம். எல்லாருமே ‘மோஸே ‘ச் சொன்னதையேச் சொன்னார்கள்- ‘நல்லா யோஜனைப் பண்ணு ‘.
ரகு நன்கு யோசித்தான். முடிவு செய்தான்.
‘அவன் கம்பெனியில் டைரக்கடராகப் போகிறான் ‘. பாக்தாத் கிளம்பிவிட்டான்.
இதோ இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இல்லை மிஞ்சினால் மேலும் இரண்டு நாட்கள். அவன் சென்னைத் திரும்பிவிடலாம். கம்பெனியில், அடுத்தப் ‘போர்ட் ‘ மீட்டிங்கில் அவன் இயக்குனராக்கப்படுவான்.
நினைக்கவே, ரகுவிற்குச் சந்தோஷமாக இருந்ததது.
ரகு, தன்னுடைய ‘சூட்’டில் இருந்த டிவியினைத் ‘ஆன் ‘ செய்தான்.
***
தீவிரமாக மூன்று நான்குப் பேர் அரேபிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்குக் கொஞ்சம் புரிந்தது.
‘அமெரிக்காவின் போக்குத் தவறு. யூ.என் பல்லில்லாத ஒரு அமைப்பு. அமெரிக்காவை யாரும் எதிர்க்காமல் இப்படியே விட்டால், உலகமே அவர்களுக்கு அடிமையாக வேண்டியது தான் ‘- இப்படியாகப் பேசிக்கொண்டார்கள்.
திடாரென்று டாவித் திரையில் ஒரு அறிவிப்பு. ரகுவிற்கு அந்த அறிவிப்புப் புரியவில்லை. புரியும் மொழி.தெரியாத லிபி.
சில வினாடிகளில் திரையில் அதிசயமாக – சதாம் ஹீசைன்.பேசத் தொடங்கினார்.
ரகுவிற்கு அவர் பேசியதன் சாரம் புரிந்தது. ‘சதாமும் அவருடையப் புதல்வர்களும் தங்கள் நாட்டை விட்டுப் போக வேண்டியதில்லை. போகப் போவதில்லை. ஈராக் போருக்குத் தயார் ‘.
தொடர்ந்து உதய் சதாம் – சதாமின் மகன் பேசினார். ‘புஷ்தான் தன்னுடைய நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஈராக் யுத்தத்திற்குத் தயார் ‘- குரலில் வெறி இருந்தது.
‘யுத்தம் ? ‘ ரகுவிற்குச் சிறிதுக் கவலையாக இருந்தது.
‘மோசே சொன்னது சரியோ. அந்த யோஜனையை ஏத்துண்டிருக்கலாமோ ? ‘- வயிற்றில் கொஞ்சமாகப் பட்டாம் பூச்சிப் பறப்பதுப் போல இருந்தது.
இண்டர்காம் ஒலித்தது.
‘சார்.நான் ஹோட்டல் மேனேஜர் பேசுகிறேன். நீங்கள் இந்தியர் அல்லவா ? போருக்கு முன்பாக வெளியேற வேண்டுமென்றால், நாங்கள் உதவுகிறோம். ‘
தொடர்புத் துண்டிக்கப்பட்டது.
மீண்டும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தான். ஆங்கிலத்தில் செய்தி தகவல் சொன்னது.
இன்னும் சில மணி நேரங்களில் போர். வெளி நாட்டவர்கள் வெளியேறுகின்றனர். ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறினர். மிஞ்சி இருக்கும் வெளி நாட்டவர்களும் தங்களுடையச் சொந்தப் பாதுகாப்புக் கருதி வெளியேறலாம்.
ரகுவிற்கு இப்போது நிதர்சனம் புரிந்தது. ‘ஆட்டம் குளோஸ் ‘- தன்னுடையப் பொருட்களை எடுத்து, ராட்சச சைஸ் பெட்டியில் அடிக்கினான். இண்டர்காமில் ஹோட்டல் ரிஸப்ஷனைக் கூப்பிட்டான்.
‘என் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். எந்த ஏர்லைன்ஸிலாவது டிக்கட் வாங்கிக் கொடுங்கள். உடனே ‘.
‘உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சார். உங்கள் அரசாங்கமே, தனி விமானத்தை பிரத்தியேமாக உங்களை மாதிரி நபர்களை இங்கிருந்து வெளியேற்ற அனுப்புகிறது. நாளை அதிகாலை ஐந்தரை மணி அளவில் அந்த விமானம் கிளம்புகிறது.’
ஹா… God is great. ‘ஆபத்து அதிகமாவதற்குள் ஊருக்கு போய்விடலாம்.’- நிம்மதியாகக் கட்டிலில் படுத்தான்.நல்ல ஃபோம் மெத்தை.
இன்னும் எத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு ஒரு கம்பெனியின் இயக்குனராக வாய்ப்பு வருமோ ? நாட்கள் என்ன, வருஷங்கள் கூட ஆகலாம்.
***
அவனுக்கு புஷ்ஷின் மீதும் சதாமின் மீதும் கோபம் வந்தது. ‘சண்டைப் போடறாங்களாம்.அவங்களுக்கு என்ன போச்சு ? நாட்டிற்கே தலைவர்கள். ‘எங்களை மாதிரி ஆட்களுக்கு, இந்த இளம் வயசுல ஒரு கம்பெனியில டைரக்டர் ஆறது. எவரெஸ்ட் சிகரத்தை ஒரே மூச்சில ஏரற மாதிரி இல்லையா ? வேதனைப்பட்டுக் கொண்டே, தூங்கிப்போனான்.
ஆயிரம் இடிகள் ஒரே சமயத்தில் தன் தலையில் விழுந்ததுப் போன்ற சப்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு முழித்துக்கொண்டான்.
‘என்ன சப்தம் ? ‘ அதிர்ச்சியில் எழுந்து உட்கார்ந்தவனை, இண்டர்காம் அழைத்தது. விபரம் சொல்லவார்கள்.
‘பயப்பட வேண்டாம்.இந்த சத்தம் நில நடுக்கத்த்ினால் அல்ல.யுத்தம் ஆரம்பித்துவிட்டது. இப்போது தான் சற்று நேரத்திற்கு முன்பு அமெரிக்காவின் போர் விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. -என்று ஹோட்டல் உரிமையாளரே சொன்னார்.
வாட்ச்சைப் பார்த்தான்.அதிகாலை மூன்று.
‘சரி கிளம்பிவிடலாம். ‘-ரகு முடிவுசெய்தான்.
அடுத்த கால் மணி நேரத்தில் அவன் பாக்தாத்தின் பிரதான சாலையில் ஒரு ‘கேப்ஸ் ‘ காரில் உட்கார்ந்திருந்தான். டிரைவரிடம், ஏர்போர்ட் போகச் சொன்னான்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து, ஏர்போர்ட் சுமார், 10 கிலோமீட்டர்கள்.
ரகுவிற்கு, தன்னுடைய கேரியரும், அதில் தான் அடைய இருந்த உன்னத நிலையும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
‘என்னுடைய வாழ்க்கையே இந்த யுத்தத்தினால திசை திரும்பிடுத்தே. எப்பேர்பட்ட சந்தர்ப்பம்.ஜஸ்ட் இரண்டு நாட்கள். வேலையை முடித்து விட்டு. ஊர் திரும்பின உடனே…என் வாழ்க்கையின் போக்கே மாறி இருக்குமே.. ‘ வேதனையாக இருந்தது.
முன்பின் அறிமுகம் இல்லாத, அந்த ஈராகிய கார் டிரைவர்மேல், புஷ்ஷின் மேல், சாதாமின் மேல், எல்லார் மேலும், எல்லாவற்றின் மேலும் கோபம் வந்தது.
தீடாரென்று கார் நின்றது. காரின் முன்னால் நிறைய வாகனங்கள் நின்றிருந்தன. ‘டிரஃபிக் ஜாம் ‘- எல்லாப் பாதையும் ரோமை நோக்கி என்பது போல, இங்கே எல்லா வாகனங்களும் ஏர்போர்ட்டை நோக்கி.
எஸ்கேப்.. நம்மை மாதிரி அண்டை நாட்டவர் தப்பி விடலாம்.இந்த நாட்டை சேர்ந்தவர்கள்..
ரகு காருக்கு பின்னால் திரும்பிப் பார்த்தான்.இன்னும் எந்த வாகனமும் வந்து நிற்கவில்லை.
முன்னால் பார்த்தான். அவனுக்கு முந்திய காரில் இருப்பவர்கள் தெரிந்தார்கள். ஒரு பர்தா உருவம். ஒரு ஆண் உருவம். டிரைவர். அவ்வளவுதான்.
தீடாரென்று பின்னால் வரும் வாகனத்தின் முன் விளக்குகளின் ஒளி. முன் காரின் மனிதர்கள் நன்றாகத் தெரிந்தார்கள். அந்த ஆணின் முகத்தில் உச்சப்பட்ச பதற்றம் தெரிந்தது. பர்தா உருவமும் பதற்றத்தில் நெளிவதுப்போல் இருந்தது.
தீடாரென்று தெரு விளக்குகள் மெதுவாக மங்கலாகி, பின் அணைந்தன.பவர்கட். இந்தியாவைப் போல தான். பாக்தாத்தில் இது சகஜம். ரகு வந்ததிலிருந்து கவனித்திருக்கிறான்.
***
‘டமார். ‘ பயங்கர சப்தம்.
ரகுராமனுக்கு ஒரு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று ? மீண்டும் குண்டுப் பொழிகிறார்களா ?
இவனுடைய கேப்ஸ் டிரைவர் கீழே இறங்கி பின்னால் நின்ற வாகனத்திலிருந்தவர்களை பார்த்து, அரேபிக்கில் ஏதோ கத்திக்கொண்டிருந்தார்.
தெரு விளக்குகள் மீண்டும் எரிந்தன. ரகுவும் கீழே இறங்கினான். ‘சில் ‘ என ஏதோ குளுமையாக காலில் இருந்து ஓடியது. வலித்தது. பார்த்தான். கணுக்காலில் ஏதோ வெட்டியதுப் போல காயம். அதிலிருந்து ரத்தம்.
காரின் பின்புறத்தை, அப்போதுதான் கவனித்தான். பின்னால் வந்தா கார் மோதி, சப்பை ஆகியிருந்தது. கடவுளே.இவனுடைய லக்கேஜ் என்னா ஆயிற்றோ ? ரகு ஆக்ஸிடெண்டை கவனிப்பதைப் பார்த்த டிரைவர் இவனிடம் வந்தான்.
பின்னால் வந்த கார் ஆக்ஸிடெண்ட் செய்தததையும், அதன் காரணமாக, தன்னால் அவனை ஏர்போர்ட்டிற்கு கொண்டு செல்ல விடமுடியாத இயலாமையையும் தெரிவித்தான்.
‘ஹலோ இப்போ ஏர்போர்ட் போறதுக்கு முன்னால ஒரு டாக்டர்கிட்டே போகணும்.என் கணுக்காலில் காயம் ‘- சைகை,ஹிந்தி,உருது,அரேபிக் மற்றும் ஆங்கிலம் என பலவற்றையும் கலந்து டிரைவரிடம் சொன்னான்.
டிரைவர் பதறியப்படி, ரகுவின் கணுக்கால் காயத்தைப் பார்த்தான். பிறகு டிராஃபிக் ஜாமில் நின்றிருந்த சில கார் மனிதர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவச் சொன்னான்.
இவர்களின் காருக்கு முன்பாக நின்றுக் கொண்டிருந்தக் கார்க்காரர் உதவ முன் வந்தார். அவர்களும் டாக்டரிடம் தான் போகிறார்களாம்.
‘அடப் பதற்ற மனிதர்களுடன் பயணம்.’- ரகு வியந்தான்.
மெதுவாக டிராஃபிக் சரியானது.
இவனுக்கு உதவுவதாக சொன்னவரின் பெயரைக் கேட்டான்- ஹஷேன் அகமது. மனைவியின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். அந்நியரிடம், அவர்கள் குடும்ப மரபுப்படி, பெண்களின் பெயர்களை சொல்ல மாட்டார்களாம்.
ரகுவிற்கு, இந்தியாவில் பெண் உரிமைப் பேசுபவர்களின் நினைவு வந்தது. ‘வேண்டாத நேரத்தில் வேண்டாத எண்ணம்’- தன்னையேத் திட்டிக்கொண்டான்.
ஆனால் ஒன்று ரகுவிற்குப் புரிந்தது. அந்தப் பெண் கர்ப்பிணி. இன்னும் ஓரிரு மாதங்களில், பிரசவம் ஆகிவிடக்கூடும்.
ரகுத் தன்னுடைய கைப் பையில் வைத்திருந்த, முதல் உதவி மருந்துகளை கொண்டு தன்னுடையக் காயத்தை அதற்குள் அமைதிப்படுத்தியிருந்தான்.
அவன் மனதில், பிரமோஷனைப் பற்றிய நினைவு அவ்வப்போது வந்து தொந்திரவுப் படுத்திக்கொண்டிருந்தது. ஹஷேனே அவனிடம் சொன்னார்- இன்னும் சில மணி நேரங்களில் போர் தீவிரமாகிவிடும்.’பம்பார்ட்மெண்ட்’ அதிகமாக இருக்கும். அவ்வப்பொழுதுப் பேசிக்கொண்டார்கள்.மொத்தத்தில் மெளனமாகவே பயணம் இருந்தது.
பாக்தாத்தில், மருத்துவர்களும்,மருந்துகளும்- வாராது வந்த மாமணிகள். காணாதுக் கண்டக் கண்மணிகள். இதையும் ரகு வந்த அன்றே புரிந்துக் கொண்டான். வந்த அன்று வயிறுத் தகராறு செய்தது. அன்றைய அனுபவம்.
மருத்துவமனை வந்துவிட்டது. எக்கச்சக்கக் கூட்டம்- யுத்தக் காலங்களில் இது சகஜமானதுதான். ஆனால், ஒரு வித்தியாசம். இன்று நிறைய இளம், கர்ப்பிணிப் பெண்கள்.
ரகுராமிற்குக் காரணம் புரியவில்லை. டாக்டரின் அனுமதிக்காக அமர்ந்திருந்தான். கால்வலி உயிர் போயிற்று. இந்தியன் என்ற ஐடெண்டிடா, டாக்டரை சீக்கிரத்தில் பார்க்க முடிந்தது.
‘எஸ்..கம் இன் ‘-டாக்டர் அரேபிக் ஆங்கிலத்தில் அழைத்தார். அப்பாடா, ஆங்கிலத்தில் பேசலாம். ‘குட் ஈவினிங் டாக்டர்.. ‘ ‘நோ. பேட் ஈவினிங்.போர்காலச் சாயங்காலம் ‘-வேதனையான குரலில் சொன்னார். ரகு, மன்னிப்புக் கேட்டு, வேதனையைப் பகிர்ந்துக்கொண்டான்.
தனக்கு மருத்துவம் செய்துக் கொள்ளும் முன்பாக அந்த இளம் பெண்களின் கூட்டத்தைப் பற்றிக் கேட்க விரும்பினான்.
‘ஒண்ணு கேட்டால், தப்பா நினைக்க மாட்டார்களே. ‘ அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் கேட்டான், ‘ ‘இத்தனைப் பெண்கள் அதுவும் கர்ப்பிணி பெண்கள்..ஏன் ? ‘
அவன் முடிக்கும் முன்பாக டாக்டர் சொன்னார், ‘எல்லாருமே- பிரசவ நேரம் இப்போது இருப்பவர்கள், இரண்டு மூன்று மாதங்கள் தள்ளி இருப்பவர்கள்- எல்லாருமே பிரசவத்தை போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்லது யுத்தம் உச்சத்தை அடைவதற்கு முன்னால பிரசவிக்க ஆசைப் படறங்க.. ஏன்னா…யுத்தமும் , அதைத் தொடர்ந்து வர சோகம்… ‘ யாராவது கேட்கமாட்டார்களா என ஏங்கியவரைப் போல டாக்டர் கொட்டித்தீர்த்தார்.
ரகு புரியாமல் கேட்டான், ‘பிரசவ டைம் இப்போ இல்லாதவங்க எப்படி இப்பவே பிரசவிக்க முடியும் ? ‘
‘முடியும்..முடியணும்.பிரசவமும் ஒரு யுத்தம் தான்.நார்மல், சிசேரியன், ஃபோர்சிப்ஸ்.. இப்படி வெவ்வேறப் போர் முறைகள்.வலிதான்.வேதனைதான்…. ‘
டாக்டர் சற்று இடைவெளி விட்டுக் கேட்டார். ‘உங்கள் உடம்புக்கு என்ன மிஸ்டர் ? ‘ ரகு ஒரு வினாடித் தயங்கினான்.பிறகு, ‘எனக்கு வெளிக் காயம் தான் டாக்டர். அது சாதாரண டிரிட்மெண்ட்க்கு சரியாயிடும்.
ஸாரி.உங்க நேரத்தை வீணாக்கியதுக்கு மன்னிச்சுடுங்க .. ‘ டாக்டர் புரியாமல், அவன் வெளியேறுவதைப் பார்த்தார்.
முற்றும்.
ravi_srikumar@hotmail.com
- ஆலமரம்.
- எழுது ஒரு கடுதாசி
- ‘நாளை ‘ வரும்…
- சுடும்வரையில் நெருப்பு…
- கனவாய்…
- நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…
- வஞ்சம்
- முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்
- அறிவியல் துளிகள்-19
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)
- நீ
- லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா
- ‘எல்லாமே கூற்று! ‘
- நம்பு
- பியர் ரிஷார்
- உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘
- வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)
- யுத்தம்
- அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
- The Fifth Annual Cultural Event -WORLD TAMIL ARTS AND CULTURAL ORGANIZATION -JAMAICA, NEW YORK 11432.
- கடிதங்கள்
- போர் நாட்குறிப்பு
- நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி
- அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- பன்முகத் தன்மை (pluralism) பற்றி
- மீண்டும் பசுமை..