அவள்

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

பூரணி


இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது, ஒரு முறைகூடத் தப்பாமல் கொல்லையில் போய் உட்கார்ந்து விடுகிறாள். அவனுடைய ந்ண்பர்கள் தங்கள் குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு அவனோடு பேசும்போது அவன் மனம் ஏக்கமடைகிறது. கேட்கவும் செய்கிறார்கள். இது பற்றி அவளிடம் சொன்னால், “ அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? எப்பொழுது கிடைக்குமோ அது வரை காத்திருக்க வேண்டியதுதான்.” என்று அலக்ஷியமாகச் சொல்லி விடுகிறாள். “ எனக்கு இப்போதுதான் பதினேழு வயது ஆகிறது. தன்னாலே கிடைக்கும்” என்று பேச்சைத் துண்டித்து விடுகிறாள். அதன் பிறகு மேல்கொண்டு அவளிடம் பேச முடிவதில்லை.

“திருச்செந்தூரில் ஒரு ஜோஸியர் இருக்கிறாராம்; அவர் நன்றாக ஜோஸியம் பார்ப்பாராம். என் ந்ண்பர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள்.அவரும் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்

எனவே, நாளை அவர்களோடு திருச்செந்தூர் போய்வரப் போகிறேன்” என்று அவன் சொன்னதும் அவள் “சரி” என்று சொன்னாள்.

திருச்செந்தூர் சென்றுவிட்டு அவள் கணவன் மிகமிக சந்தோஷமாக வந்தான். “ நமக்குக் குழந்தை பாக்கியம் இருக்கிறதாம். உன் பதினெட்டு வயது முடிந்தபின் நீ கருவுறுவாயாம்; அந்த ஜோஸியர் சொன்னர்” என்றவன் அத்துடன் நிறுத்தாமல் அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் தனக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கவும் தன் நண்பன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் சொன்னதும் அவளுக்கு வயிற்றில் அம்பு பாய்ந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவள் தீனமாக, ”உங்களுக்கும் அது சரி என்று பட்டதா ?” என்று கேட்டாள்.

அது முதற்கொண்டு மாதவிலக்கு நாள் வந்தால் மனம் நடுங்கவாரம்பித்தது. அஸ்தியில் ஜுரம் கண்டுவிட்டது.

நல்லவேளையாக சோதனை தொடரவில்லை. இரண்டொரு மாதங்களிலேயே அவள் கருவுற்றுவிட்டாள்.வளைகாப்பு, சீமந்தம் முடிந்து பிரசவத்துக்குப் பிறந்தவீடு போய்ச் செர்ந்தாள்; ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். அதே ஊரிலிருந்த பார்வதி என்னும் ஒரு பெண்னுக்கும் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் பார்வதி சில நாட்களிலேயே மரணமடைந்துவிட்டாள். தாயை இழந்த குழந்தை பாலுக்குத் தவித்தது. குடியானவத் தெருவில் குழந்தை பெற்றிருந்த ஒரு பெண்ணை இந்தக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுப்பதற்காக சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தார்கள். அவள் ஒரு கணக்காக வந்து பால் கொடுத்துவிட்டுப் போவாள். பற்றாகுறைக்குப் பசும்பால் கொடுப்பார்கள். ஒருவேளை அவள் தன் குழந்தைக்குக் கொடுத்தபிறகே இங்கு வந்து கொடுப்பாளோ என்னமோ, குழந்தை பால் பற்றாமல் அழ ஆரம்பித்துவிடும். பார்வதியின் வீட்டில் அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு தவியாய்த் தவித்தனர்.

பார்க்க ஒடிசலான தேகவாக்கு உடையவளானாலும் அவள் மிகுந்த பால் பாக்கியம் கொண்டவளாக இருந்தாள். அந்தக் குழந்தையின் நிலை கேட்டுப் பரிதவித்தாள். அந்தக் குழந்தையைத் தன்னிடம் இரண்டொரு முறை எடுத்துவர முடியுமானால் அதற்கும் தன்னால் பால் புகட்ட முடியும் என்பதைத் தன் தாய் மூலம் அவர்களுக்குச் சொல்லிஅனுப்பினாள்.

மட்டற்ற மகிழ்ச்சியோடு குழந்தையின் பாட்டி குழந்தையைப் போர்த்தி எடுத்து வருவாள். குழந்தை தங்கச்சிலை போல் மிக அழகாக மடிநிறைந்து இருக்கும். பறந்து பறந்து பால் குடிக்கும். இவளுக்கு அதன் மேல் அனுதாபம் கலந்த தாய்பாசம் சுரக்கும். பால் கொடுப்பதில் ஒரு தெய்வீக ஆனந்தம் ஏற்படும். இது நாளொன்றுக்கு இரண்டு முறை நிகழும்.

எப்பொழுதாவது சிலசமயங்களில் அந்தக் குழந்தை குடித்துவிட்டு சென்ற சிறிது நேரதிலேயே சொந்தக் குழந்தை பால் பற்றாமல் அழ ஆரம்பித்துவிடும். அப்போது அவளது தாய் அவளைக் கண்டிப்பாள், “ எதற்கும் ஒரு அளவு வேண்டும். அந்தக் குழந்தை சலித்துப்போகும் வரை பால் புகட்டுகிறாய். இப்போது பார், உன் குழந்தை பசித்து அழுகிறது. “ ஆனால் அவள், “ சரி சரி, போ! சற்று பொறுத்துக் கொடுத்தால் போச்சு” என்று பதில் சொல்லிவிடுவாள்.

அந்த அழகிய ஆண் குழந்தை ஐந்து வயது வளர்ந்த பிறகு மரணமடைந்தது. தான் பெற்ற குழந்தையே இறந்ததுபோல் அவள் துக்கித்தாள்.

***

nagarajan62@hotmail.com

Series Navigation

author

பூரணி

பூரணி

Similar Posts