காதல்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


செருப்படி வாங்கப் போகிறாய். பொம்பிளைப் பேயா பிடித்திருக்கிறது உனக்கு. முப்பது வயது மட்டும் புத்தர் மாதிரி இருந்துவிட்டு இப்ப கெம்பிக் கொண்டு நிற்கிறாய். வாசுகி ரீச்சர் நெருப்பு. நெருங்கினால் சுட்டுவிடுவாள்

சுட்டாப் பரவாயில்லை

டேய் நின்ற நிலையில் தண்ணி போட்டவன் மாதிரிப் பேசாமல் ஒரு பட்டதாரி ஆசிரியர் போலப் பேசு

பட்டதாரி ஆசிரியர் என்றால் காதலிக்கக் கூடாதா ? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உனக்குத்தான் அது என்னவென்றே தெரியாதே

ஏன் சொல்ல மாட்டாய். குலம் கோத்திரம் பார்த்து அயல் அட்டையில் விசாரித்து நல்லது கெட்டது அறிந்து அம்மா அப்பாவின் சொல்லைக் கேட்டு திருமணம் செய்த எங்களுக்கு காதலைப் பற்றி விளங்காது, அப்படித்தானே ?

கோவிக்காதே நண்பா, உனக்கு ஆளும் பேருமாக இனஞ்சனம் இருந்து பார்த்துச் செய்து வைத்தார்கள். எனக்கு அம்மாவை விட்டால் வேறு ஆளில்லை. மனதுக்குப் பிடித்த பெண்ணை விரும்புவது பாவமா ?

நீ சென்ற மாதந்தான் இங்கு இடமாற்றத்தில் வந்தாய். நான் இரண்டு வருடமாக பழந் தின்று கொட்டை போட்டுக் கொண்டு இருக்கிறேன். வாசுகி ரீச்சரின் குணம் எனக்குத் தெரியும். ஆண்களை ஐந்து சல்லிக்கு நம்பாத குணம். நம்பியவர்களை நட்டாற்றில் விடுகிற ஜென்மங்கள் என்று நினைக்கிற குணம். இவளைப் பெற்ற தகப்பன் இன்னொரு பெண்ணுக்குப் பின்னால் போய் விட்டான். அதில் வந்த வைராக்கியம்.

ஒருவர் செய்த துரோகத்துக்கு எல்லோரையும் அப்படி நினைப்பது சரியா ?

பிழையென்று என்னால் சொல்ல முடியாது. குடும்பத்திற்கு தகப்பன் தான் நம்பிக்கை நட்சத்திரம் பாதுகாப்பு, வேலி எல்லாம். அவன் தான் படிப்பிக்கிறான். நல்லது கெட்டது சொல்கிறான். அடிக்கிறான். அணைக்கிறான். பிள்ளைகளின் எதிர்காலத்தை கனவு கண்டு, கஷ்டப்பட்டு ஏணியில் ஏற்றி விடுகிறான். வாசுகி விரல் சூப்புகிற வயதிலேயே குடும்பத்தை விசுக்கி எறிந்து கை கழுவிவிட்டுப் போய் விட்டான் தகப்பன். பிடுங்கிப் போட்ட பிஞ்சுகளாய் பிள்ளைகள் வாடிப் போயின. அந்த வேதனையை பெண் பிள்ளையால எப்பிடித் தாங்க முடியும். அதுதான் ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களிலும் ஒரு வெறுப்பு. கல்யாணம் என்றாலே காரக் கொச்சிக்காயைக் கடித்த மாதிரி ஒரு உறைப்பு. அவளைக் காதலித்து என்ன நண்பா செய்யப் போகிறாய் நீ

என்னுடைய காதல் பூனை மாதிரி பதுங்குகிற காதல் இல்லை. யானை மாதிரி நிமிர்ந்து நிற்கிற காதல். அன்புக்கு வசப்படாத மரக்கட்டையில்லையே வாசுகி ?

ஆண்பிள்ளை வாசம் படாமல் சொந்தக் காலில் நின்று கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததால் மனம் இறுகிப் போய்விட்டது. தன்னைச் சுற்றித் தானே வேலி போட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த வேலிக்குள் உன்னால் இலகுவில் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் தாக்குப் பிடிக்க முடியாது. வயது போன தாயும் கடன்சுமையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய தங்கச்சிமார்களுந்தான் உனக்குச் சீதனமாகக் கிடைப்பார்கள். சல்லிக் காசு பெயராது. உன் அம்மா நல்ல இடமாக சீதனத்தோடு பார்க்கச் சொல்லி என்னிடம் சொல்லியிருக்கிறா. என்னை விடு கிணற்றில் பாய்கிறேன் என்று நிற்கிறாய் நீ

காரண காரியம் பார்த்து காதல் வருவதில்லை. எல்லா சீவராசிகளும் காதல் வயப்படுவது சகஜம். நீ கட்டி விட்டுக் காதலிக்கிறாய். நான் காதலித்து விட்டுக் கட்டப் பாக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். சரியோ பிழையோ மனதில் எண்ணி விட்டேன். அந்த எண்ணத்திற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது

என்னவோ நண்பா, உன் நன்மைக்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். நீ நல்லாயிருந்தால் எனக்கு அது போதும்

இடைவேளையை முடிக்கும் பாடசாலை மணி துடிப்பில்லாமல் ஒலித்தது.

நகரத்தின் இட நெருக்கடிக்குள் அகப்பட்ட பிரபல ஆண்கள் பாடசாலை அது. மண்ணில் பரவ முடியாமல் வானத்தில் வளர்ந்த கட்டிடங்கள். நடுவே நீளப்பாட்டில் விழுந்த குட்டி முற்றத்தில் பத்து நிமிடங்கள் ஓடிக் களைத்த பிள்ளைகள் மீண்டும் வகுப்புகளுக்குள் மனமின்றி முடங்கிப் போனார்கள். அடுத்த வகுப்பு எடுக்க வேண்டிய நண்பன் வாசிகசாலையை விட்டு வெளியேறினான்.

இவனுக்கு இன்னும் ஒரு வகுப்பு நேரம் ஓய்வு இருக்கிறது. வாசிகசாலையில் வேறு ஒருவருமில்லை. அடுத்த மணி அடிக்கும் வரை பேப்பர் வாசிக்கலாம். கிளை பிரிந்து சடைத்து விரியும் வாசுகியின் நினைவுகளில் மிதக்கலாம்.

அவன் அன்றைய பத்திரிகையை விரித்தான். வாசலில் விழுந்திருந்த வெய்யில் அசைந்தது. வாசுகி!

அவனுக்கு அவசரமாய் வியர்த்தது. வாசுகியோடு இப்படி தனித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவரை கிட்டியதில்லை. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன! நெஞ்சு இலேசாக இடித்தது. உள்ளே வந்தவள் நீண்ட மேசையின் தொங்கல் கதிரையில் இருந்து ஏதோ எழுதத் தொடங்கினாள்.

தற்செயலெனத் தெரிகிற மாதிரி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும் பதிலுக்குப் பார்த்தால் மெலிதாகச் சிரிக்கலாமென நினைத்தான். அவனைப் பிடித்திருக்கும் நோயே அவள் தான். நோய்க்கு மருந்தும் அவளேதான். பார்க்கப் பார்க்க மாரி மழைக் கூதல் மனதிற்குள் ஊாவது போலிருந்தது. அவள் பாராத நேரத்தில் பார் பார் என்று நெஞ்சு ஏங்கியது.

நிமிர மாட்டாள் என்ற நம்பிக்கையில் எதையோ தொலைத்தவன் போல் அவளது முகத்தை ஆழம் பார்த்தான். நீதான் என் காதலி நீதான் என் மனைவி என்று முற்றத்தில் போய் நின்று வெட்கத்தை விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது, நண்பன் சொன்னது போல் செருப்பைக் கழட்டி ஊரைக் கூட்டி விடுவாள்! கூட்டட்டுமே. ஊர் பேசப் பேச என் காதல் இன்னும் பெருகுமேயொழியக் குறையாது.

மிஸ் உங்களோட ஒரு விசயம்.. தொண்டையில் சிக்கிக் கொண்ட சோற்றுக் கவளமாய் சொற்கள் வழுக்கின. அவள் நிமிர்ந்தாள்

கொஞ்ச நாளாக உங்களிடம்..

முகத்தைப் பார்த்தான். சலனம் ஏதும் தெரிகிறதா ? என்ன ஏது என்று ஒரு கேள்வி! எதுவுமேயில்லை. எவ்வளவு அழுத்தமான பெண்!

பயமாக இருந்தாலும் அவனே தொடர்ந்தான்.

எனக்கு முப்பது வயது. இவ்வளவு காலமும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வரவில்லை. அதற்குக் காரணமும் தெரியவில்லை. உங்களைச் சந்தித்த பின்தான் அதிலொரு அர்த்தம் இருப்பதாக நினைக்கிறேன்.

அவனுக்கு மூக்கு வியர்த்தது. நண்பன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். இவள் அழுத்தமானவள். தன்னை இம்சித்த அனுபவங்களினால் இறுகிப் போனவள்.

ஏதாவது ஒரு ரூபத்தில் பதில் வரும் என்று காத்திருந்தவன் களைத்துப் போனான். செருப்படி விழுந்திருந்தால் கூடப் பரவாயில்லை என எண்ணினான்.

மிஸ், விளையாட்டாய் தீர்மானித்த விசயமில்லை இது. என் நண்பன் மூலம் உங்கள் பிரச்னையெல்லாம் கேட்டுத் தெரிந்த கொண்ட பிறகு எடுத்த தீர்க்கமான முடிவு. இந்த வயதில் உங்களுக்கு நிறையப் பொறுப்புகள். உங்கள் சுமைகளை இரட்டை மாட்டு வண்டில் மாதிரி நானும் சேர்ந்து சுமக்க விரும்புகிறேன். இது சத்தியமான வார்த்தை. நீங்கள் நம்பினால் நாளைக்கே உங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்கிறேன்.

நெஞ்சுப் பாரத்தை இறக்கி வைத்த வெட்கத்தில் லேஞ்சுத் துணியால் முகம் மறைத்தான்.

அவள் தலை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அடுத்த நிமிடம் எழுந்து, நடந்து மறைந்தாள்.

அடுத்த நாள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. லீவுக் கடிதம் வந்தது.

தானுண்டு தன் வேலையுண்டு என்று நிம்மதியாக இருந்தவளை காதல் கல்லெறிந்து குழப்பி விட்டேனா ? சபலப் பள்ளங்களில் சறுக்கி விடாமலிருந்த கண்ணியமான பெண்னைக் கலக்கி விட்டேனா ?

குற்ற உணர்வு குவிந்து அலைக்கழித்தது. உதட்டளவில் பாடங்கள் நடத்தினான். மனம் வாசுகியை வலம் வந்தது. அவள் பார்த்த பார்வை நெஞ்சிற்குள் எறும்பென ஊர்ந்து உறுத்திற்று.

பகலை விரட்டுவதற்கு இரவு முட்டிக் கொண்டு நின்ற நேரம். மரங்களுக்குள் மறைந்த அந்த சந்தடியற்ற வீட்டின் கதவைத் தட்டினான் அவன். சாங்கத்தில் வாசுகியைப் போலிருந்த தங்கை, அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே ஓடினாள். ஹாலில் தெரிந்த நேர்த்தி யாரையோ வரவேற்கக் காத்திருக்கும் அறிகுறி காட்டி மிளிர்ந்தது.

வாசுகியின் தாயார் வந்து வாங்க தம்பி இருங்க..என்று கதிரையைக் காட்டினார். சட்டையிலிருந்த தங்கைகள் இருவர் அம்மாவில் மறைந்தனர்.

வாசுகி அறைக்குள் கதவுத் திரைக்குப் பின்னால் மறைந்து நிற்பது போல ஒரு ஊகம்.

அவன் வாசுகியின் தாயாரிடம் மென்று விழுங்கி வியர்த்து மனந் திறந்து எல்லாம் சொன்னான். துணிக்கடைக்காரன் பெண்களுக்கு சேலைகளை விரித்துக் காட்டுவது போல் தன் உள்ளத்தை பரத்தி வைத்தான்.

வாசுகி போட்டனுப்பிய காப்பியும் கடலை மிக்சரும் வந்தன.

அறைக்குள் ஓடிப் போன தங்கை, எனக்கு அத்தானைப் பிடிச்சிருக்கு, நல்லவர் என்று அக்காவிடம் சொன்னாள்.

அதற்குள் அத்தானா என்று அதிசயத்தோடு கேட்டாள் வாசுகி.

போய் வருகிறேன் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவன் நடக்க, வாசல் வரை பின்னால் வந்த வாசுகி மெதுவாகக் கேட்டாள்.

வுாசிகசாலையில் நீங்கள் பேசிய போது நான் வாயே திறக்கவில்லை. எதை நம்பி இவ்வளவு தூரம் வந்தீர்கள் ?

அவன் நிலம் பார்த்துச் சிரித்தான்.

உன் கண்கள் சொன்ன காதலை நம்பி!

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

author

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Similar Posts