அலர்மேல் மங்கை
இன்றும் பூங்காவில் ஒரே கூட்டம்……
இந்த அமெரிக்கர்கள் எங்குதான் கூட்டம் போடவில்லை ? இவ்வளவு பரந்த நாடாக இருந்ததோ, பிழைத்ததோ!
மரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்குப் பகுதி மட்டுமே ஒரு ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. முக்கியமாக வெள்ளைக்காரக் குழைந்தைகள் பத்துப் பதினைந்து, நான்கைந்து கறுப்புக் குழந்தைகள் அங்கிங்கே. அத்தி பூத்தாற் போல ஒன்றிரண்டு இந்தியக் குழந்தைகள். அதில் கங்காவின் மகன் பூபால் ஒருவன்.
மகனைக் குழந்தைகள் அமரும் தடுப்புப் போட்ட ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விட்டாள். பக்கத்து கம்பத்தில் சாய்ந்து நின்று கொண்டாள். எதிரே தெரிந்த கால்ஃப் மைதானத்தில் வேலையில்லாத அமெரிக்கர்கள் கால்ப் விளையாடிக் கொண்டிருந்தனர்.
‘அம்மா நான் ஊஞ்சலில் உட்கார வேண்டும் ‘ ஒரு மூன்று வயதுக் குழந்தை தன் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
‘கொஞ்சம் காத்திரு ரிச்சர்ட். யாராவது இறங்கிய பின்புதான் நீ அமர முடியும்…. ‘ தாய் கண்டிப்பான குரலில் பேசினாள். உடனே அந்தக் குழந்தை ‘சரி ‘ என்று பக்கத்தில் இருந்த மரக் குதிரையில் ஆட ஆரம்பித்தது.
கங்கா அக்குழந்தயை வியப்புடன் பார்த்தாள். ‘தாய் சொன்னவுடன் கேட்டுக் கொண்டதே! ஏன் நம் இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் முரண்டும் பிடிவாதமும் ? இதுவே பூபாலாக இருந்தால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்பான். ‘
நினைத்தவாறே பூபாலைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்த்து கன்னங்குழியச் சிரித்தான். வீட்டில் அழுத அழுகையின் ஈரம் இனூம் லேசாகக் கன்னத்தில் கோடிட்டிருந்தது. துடைத்து விட்டாள்.
‘அம்மா, அப்பா ஆபிஸ் போயிட்டு வருவா.. ‘ என்றான் பூபால் மழலை ஆங்கிலத்தில்.
‘ஆமாண்டா கண்ணா… ‘
கங்காவின் கணவன் சுந்தர் புதிதாக ‘கன்சல்டன்சி ‘ துவங்கியதில் இருந்து, பூபால் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். தகப்பன் ‘பிசினெஸ், க்ளை¢யண்ட், ப்ராஜக்ட் டெட்லைன் ‘ என்று பறந்து ஓடும் நேரம், மனைவியோடும், குழந்தையோடும் சேர்ந்திருக்க முடியாத குற்ற மனப்பான்மையில் குழந்தையைக் கொஞ்சிய வேகத்திலேயே திரும்ப ஆஃபீசுக்கு ஓடுவான். குழந்தை தகப்பன் தன்னோடு விளையாடாத கோபத்தில் ஓர் அரை மணி நேரம் அழும். அப்புறம் அம்மாவைச் சமாதானப் படுத்துவது போல,
‘அம்மா, அப்பா ஆபிஸ் போயிட்டு வருவா ‘ என்று கூறி தன்னையும் சமாதானப் படுத்தி கொள்ளும்.
கணவன் மீது மீண்டும் கோபம் வந்தது கங்காவுக்கு!
‘யாருக்கு வேணும் பணம் ? குப்பையில கொண்டு கொட்டு. ‘
என்று நினைத்துக் கொண்டாள். பூபாலுடைய ஊஞ்சல் நின்று விட்டது. மீண்டும் ஆட்டி விட்டாள். தூரத்தில் அவர்கள் வருவது தெரிந்தது.
அந்த இளஞ் ஜோடி குழந்தையை ஸ்ட்ராலரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர். அந்தப் பெண் கங்காவைக் கண்டதும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.
‘ஹலோ… ‘
‘ஹாய்.. ‘
‘க்யா ஹுவா ? தோ, தீன் தின் ஆப்கோ தேகா நஹி ? ‘ (என்ன இரண்டு, மூன்று நாட்கள் உங்களைக் காணோமே ?) என்றாள்.
‘இவனுக்கு லேசா சளி இருந்தது, அதான்.. ‘
இதற்குள் அவள் கணவன் குழந்தையை ஸ்ட்ராலரில் இருந்து எடுத்து வெறுமையாக இருந்த ஊஞ்சல் ஒன்றில் வைத்து தடுப்பை மாட்டினான். அவர்கள் வட இந்தியத் தம்பதிகள். கங்காவும் ஒரு இந்தியப் பெண் என்ற நேசத்தையும் மீறி, ஒரு தென்னிந்திய ‘மதராஸிப் பெண் ‘ இவ்வளவு இலக்கண சுத்தமாக ஹிந்தி பேசுகிறாளே என்ற வியப்பு!
கணவன் பெயர் அனில் குப்தா. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன். மனைவி பெயர் நீலம். திருமணம் செய்து கொண்ட பின் அமெரிக்காவில் குடியேறியவள். கங்காவுக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் லேசான பொறாமை எழாமல் இல்லை. ‘ நடு இருபது வயதுகளில் நானும் சுந்தரும் இதை விட அன்னியோன்யமாகத்தான் இருந்தோம் ‘. என்று நினைத்துக் கொண்டாள். அந்தத் தோழமை, கருத்துப் பரிமாற்றம், விவாதங்கள் இந்த மூன்று மாதமாக எங்கோ இருட்டில் ஒளிந்து கொண்டன.
‘ நமக்கு அப்படியென்ன வயதாகி விட்டது ? முப்பதெல்லாம் ஒரு வயதா ? ஆனால் முப்பது வயதில் ஐம்பது வயதின் அயர்வு!… ‘
‘கங்கா, உங்கள் கணவரின் பிசினெஸ் எப்படிப் போகிறது ? ‘ – என்றான் அனில் அமெரிக்க ஆங்கிலத்தில்.
‘வெகு நன்றாகப் போகிறது. அவர் இவ்வளவு பிசியாக இருப்பதில் இருந்தே தெரியவில்லையா ? ‘
கங்கா வறட்சியாகச் சிரித்தாள்.
‘அடுத்த வருடம் லெக்ஸஸ் காரில் பார்க்குக்கு வருவீர்கள்… ‘ – கூறிய அனில் புன்னகைத்தான்.
கங்காவுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறியது.
‘இதென்ன பேச்சு ? எந்த இந்தியரைப் பார்த்தாலும், ‘பிசினெஸ் துவங்கி விட்டார்கள். இனி அப்படி பணம் பண்ணி விடுவீர்கள். இப்படிச் செல்வம் கொழிக்கப் போகிறது ‘ என்று ஏன் பேச வேண்டும் ? ‘ – மனதுள் கேள்வி புகைந்தது.
‘என்னத்தை சம்பாதித்தாலும், சாப்பிடப் போறதென்னவோ மூணு வேளைதான்…. ‘
கங்கா மீண்டும் சிரித்தாள். நீலம் பதறியவளாக,
‘தவறாகப் புரிந்து கொண்டார்களா கங்கா ? ‘ – என்றாள்.
‘இல்லையில்லை. நான் உண்மையைத்தானே கூறினேன் ? என்ன பணம் சம்பாதித்தாலும், அடிப்படைப் பழக்கங்கள் என்ன மாறப் போகுது ? நாம் நாமாகத்தான் இருப்போம், இல்லையா ? ‘
‘பில்குல் ‘ (முற்றிலும்)
பூபால் ஊஞ்சலில் இருந்து இறங்கி சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தான். கங்காவும், நீலமும் ஒரு மரப் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் மவுனம் நிலவியது.
‘கங்கா, ஏன் சுரத்தில்லாமல் இருக்கிறீர்கள் ? ‘ என்றாள் நீலம் மெதுவாக.
‘ஒன்றுமில்லயே… ‘
‘இல்லை, ஏதோ உள்ளது. மிகவும் சோர்வு தெரிகிறது உங்களிடம். சொல்ல வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். ‘ – என்றாள் நீலம் மென்மையாக.
கங்கா ஒரு நொடி கண்களை மூடிக் கொண்டாள். கண்களைத் திறந்த போது நீலம் அவளை அதே புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘பணம் மனிதனுக்கு சந்தோஷத்தைத் தந்து விடுங்கறது எவ்வளவு பொய்! ‘
‘உண்மைதான் ‘
நீலம் தூரத்துப் புல் வெளியை வெறித்தாள். பின்பு,
‘ நீங்கள் சொல்வது போல பணமோ, பணத்தால் கிடைக்கக் கூடிய வசதிகளோ மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தந்து விடப் போவதில்லை. அப்படியே தருவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினாலும் அது நிலைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு எதில், எப்படி ஏற்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ? ‘
கங்கா ஒன்றும் கூறாமல் பூபால் இருந்த பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவன் இப்போது அப்பாவை மறந்தவனாக சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.
‘என்ன ஒன்றும் சொல்லவில்லை என்றால் எப்படி ? ‘ என்றாள் நீலம்.
‘சொல்ல என்ன இருக்கிறது நீலம் ? சந்தோஷம் என்பது அவரவர் மனதில்தான் உள்ளது என்று எனக்கும் தெரியும்….ஆனால் மனதில் சந்தோஷம் ஏற்பட மனது மட்டும் போதாது, புறத்தில் இருந்தும் செயல்கள் மனதில் சந்தோஷத்தைத் தூண்ட வேண்டும்… ‘
நீலம் கலகலவெனச் சிரித்தாள்.
‘எத்தனை பேர் உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறார்களோ! அன்பும் பொறுப்பான கணவன், அழகும், அறிவான குழந்தை, நல்ல வேலை….! ‘
‘கரெக்ட்… நான் சந்தோஷமாயில்லை என்று சொன்னால் கேட்பவர்கள் பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள்… ‘
கங்காவும் சிரித்தாள்.
நீலம், ‘சந்தோஷமாயிருக்க முயற்சியுங்கள், கங்கா. எல்லாவற்றையும் விட அது முக்கியமல்லவா ? ‘ என்றாள் புன்னகை மின்ன.
பூபாலை கார் சீட்டில் வைத்துப் பெல்ட்டை மாட்டி வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வரும் வழியில் மீண்டும் மீண்டும் அது ஒலித்தது.
‘சந்தோஷமாயிருங்கள் கங்கா. எல்லாவற்றையும் விட அதுதான் முக்கியம். ‘
தாத்தா கூறும் அதே வார்த்தை…
எங்கோ மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்து பின் இப்போது அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் விந்தையை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
என்ன சந்தோஷமான நாட்கள் அவை!
தாத்தாவின் முன்கோபமும், பாட்டியின் நச்சரிப்பும், அப்பாவின் சிடுசிடுப்பும், அம்மாவின் இயலாமையுமே பெரிய பிரச்னைகளாகத் தோன்றிய பருவம்!
ஷேக்ஸ்பியரும், மில்டனும், வர்ட்ஸ்வர்த்தும், ராபர்ட் ப்ராஸ்ட்டுமே உலகமாய் இருந்த பருவம்!
இப்போது கம்ப்யூட்டருடன் யூனிக்ஸில் போராடும் அவலத்தை என்னவென்பது ?
மீண்டும் கணவன் மேல் கோபம் எழுந்தது.
‘இலக்கியம் படிச்சவளை இயந்திரத்துடன் பேச வச்சுட்டாரே! ‘
‘இலக்கியம் சோறு போடாது, கங்கா…. ‘- சுந்தர் சிரித்துக் கொண்டே கூறினான் ஒரு விவாதத்தின் போது.
‘சோறுதான் வாழ்க்கையா ? ‘- கங்கா ஆத்திரத்துடன் கேட்டாள்.
‘இல்லியா பின்னே ? ஒரு வேள சோத்துக்கே கஷ்டப் படறவன்கிட்ட போய்க் கேளு, உனக்கு இலக்கியம் வேணுமா ? சோறு வேணுமான்னு ? இலக்கியம் மேட்டுக் குடிக்கு. அடுத்த வேள சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கறவனால இலக்கியம் படிக்க முடியாது…… ‘
‘ஓகே…! நான் அடுத்த வேள சாப்பாட்டைப் பத்தி யோசிக்காத மேட்டுகுடியாத்தானே இருக்கேன் ? நா ஏன் கம்ப்யூட்டரைக் கட்டிட்டு அழணும் ? ‘
‘ஏன்னா, அதான் யதார்த்தம்…. ‘
எத்தனை விவாதங்கள்…எத்தனை போர்க்கொடிகள்…!
கடைசியில் யதார்த்தம்தான் அவளைக் கட்டிப் போட்டது. ‘க்ரியேடிவ் ரைட்டிங் ‘ படிக்கப் போகிறேன் என்றவளை அதுதான் கம்ப்யூட்டர் படிக்க வைத்தது….
சுந்தர் உடை மாற்றி வந்தான்.
‘இன்னிக்கு சனிக் கிழமை, ஆஃபீசுக்குப் போகலைன்னுதானே சொன்னீங்க ? ‘ – கங்காவின் குரல் உயர்ந்தது.
‘ஐ ‘ம் ஸாரி. திங்கட்கிழமை ரிப்போர்ட் குடுக்கணும், க்ளையண்ட்டுக்கு… ‘
‘அப்ப ஏன் வீட்ல இருப்பேன்னு நேத்து சொன்னீங்க ? ‘
‘அதான் ஸாரி சொல்றேன் ‘ல ? இப்பதான் ஜிம் ஃபோன் பண்ணினான், திங்கள் ரிபோர்ட் ட்யூன்னு! ‘
கங்கா ஆத்திரத்துடன் பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டாள். சுந்தர் ஏதும் செய்ய இயலாதவனாக நகர்ந்தான்.
அன்றும் பூங்காவுக்கு அனிலும், நீலமும் குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் லேசாகப் பொறாமை பற்றிக் கொண்டது. பொருத்தமான ஜோடியாக மட்டும் அல்லாமல், எப்போதும் உலகையே மறந்து சந்தோஷமாக அலையும் ஜோடி என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் நீலத்தின், அருகாமையும், பேச்சும் அவளுக்கு வேண்டித்தான் இருந்தது.
இவளைக் கண்டதும் நீலம் புன்னகையுடன் அருகில் வந்தாள்.
‘என்ன கங்கா, எப்படி இருக்கிறீர்கள் ? ‘ என்றாள் இனிமையான ஆங்கிலத்தில்.
‘ஏதோ இருக்கேன். ‘
நீலம் கங்காவின் இடுப்பைச் சுற்றி கையை வளைத்து கொண்டாள். வட இந்தியர்கள் தோழமையையும், நேயத்தையும் வெளிப்படுத்தும் விதம் அழகாகத்தான் இருக்கிறது.
‘சொல்லுங்கள், என்ன ப்ரச்னை இன்றைக்கு ? ‘
‘ப்ரச்னை ஏதுமில்லை… ‘
‘ப்ரச்னை இல்லாததுதான் ப்ரச்னையோ ? ‘ – சிரித்தாள் நீலம்
சுந்தர் மீது இன்னும் தீராத கோபத்தில், வார்த்தைகள் கசப்பாகக் கொட்டின.
‘பிசினெஸ் என்று வெறி பிடித்து அலையும் கணவன், ஹைபர் ஆக்டிவ் குழந்தை, மனதுக்குப் பிடிக்காத வேலை, எங்கோ ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் பெற்றவர்கள்….. ‘
– கூறிவிட்டு நிறுத்தினாள் கங்கா.
நீலம் அதே புன்னகையுடன் இவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘யாருடைய வாழ்க்கைதான் எல்லாவிதத்திலும் திருப்திகரமாக அமைகிறது, கங்கா ? ‘
‘எனக்கு ஆயாசமாக இருக்கிறது, நீலம். சில நேரம் இந்த அமெரிக்க வாழ்க்கை எனக்கு மூச்சு முட்டுகிறது…. ‘
‘அப்படியானால், மீதி நேரம் இந்த அமெரிக்க வாழ்க்கை பிடித்துதானே இருக்கிறது ? ‘
புன்னகையுடன் கூறினாள், நீலம்.
‘எதிலுமே திருப்தியாக இல்லை…கணவரின் பிசினஸ் வெறி பிடிக்கவில்லை, செய்யும் வேலையில் ஆத்ம திருப்தி இல்லை… ‘
‘வேலையை விட்டு விடுங்கள். ‘ என்றாள் நீலம், சிரித்துக் கொண்டே.
‘விட்டு விட்டு ?….அப்புறம்… ? ‘
‘உங்கள் ஆசை போல ‘க்ரியேட்டிவ் ரைட்டிங் ‘ படிக்கப் போங்கள் ‘
‘அதற்கப்புறம் ? ‘
‘அப்புறம் பார்த்துக் கொள்கிறது… ‘
நீலம் கூறி விட்டு அழகாகச் சிரித்தாள். கங்காவுக்கும் சிரிப்பு வந்தது.
எவ்வளவு சுலபமாகக் கூறி விட்டாள். ‘அப்புறம் பார்த்துக் கொள்கிறது. ‘
இரண்டு மூன்று மாதங்கள் ஓடி விட்டன. திடாரென்று இரண்டு வாரங்களாக நீலமும், அனிலும் பார்க்குக்கு வருவதை நிறுத்தி விட்டனர். கங்கா அவளுடைய வீட்டுக்கு இரு முறை ஃபோன் செய்து பார்த்தாள். ‘ஆன்ஸரிங் மெஷின் ‘ மட்டுமே வந்தது.
ஒரு நாள் நேரே அவள் வீட்டுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினாள். நீலம்தான் கதவைத் திறந்தாள். இவளைக் கண்டவுடன் கண்களில் ஆச்சர்யம் மின்னச் சிரித்தாள்.
‘கங்கா, ஆயியே…ஆயியே. என்ன அதிசயமாக இருக்கிறது ?. ‘
கங்கா சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த்தாள். தரையில் கால் வைக்க முடியாமல் சிறிதும் பெரிதுமாகப் அட்டைப் பெட்டிகள்…….
‘மன்னித்துக் கொள்ளுங்கள், வீடு ரெம்ப மோசமான நிலயில் இருப்பதற்கு. உட்காருங்கள் ப்ளீஸ். ‘ – கூறி விட்டு சோபாவில் தானும் அமர்ந்து கொண்டாள்.
‘குழந்தை எங்கே ? ‘ – என்றாள் கங்கா.
‘தூங்கறான்….அதுசரி உங்கள் கணவர் எப்படி இருக்கிறார் ? ‘
‘சுகந்தான்..அனில் எங்கே ? ‘
ஒரு கணம் நீலம் மெளனமாக இருந்தாள். பின்பு,
‘ நாங்கள் பிரிந்து விட்டோம், கங்கா. டிவோர்ஸ் ஆகி விட்டது. ‘ என்றாள் மெதுவாக.
‘என்ன ? ‘
கங்கா ஒரு கணம் அதிர்ந்து விட்டாள். நீலம் அப்போதும் மெதுவாகச் சிரித்தாள்.
‘என்ன ஆச்சு, நீலம் ? என்னிடம் நீ ஒன்றுமே கூறலையே ? ‘ – கங்காவுக்குக் குரல் நடுங்கியது.
‘சொல்ல என்ன இருக்கிறது, கங்கா ? இருவருக்கும் ஒத்து வரவில்லை. நிறைய முரண்பாடுகள்….. ‘
‘அதனால் பிரிந்து விடுவதா ? என்ன அனியாயம்! ‘
கங்கா நீலத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டாள். நடுங்கிய கங்காவின் கரங்களை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் நீலம்.
‘என்ன செய்வது கங்கா ? எனக்கும் டிவோர்ஸில் விருப்பம் இல்லைதான். ஆனால் அனில் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் அல்லவா ? வளர்ப்பால் இந்தியனாக இருந்தாலும் எண்ணங்களில் முழுக்க முழுக்க அவன் அமெரிக்கன்தான்….! ‘
கங்கா கண்கள் கலங்க அவளை வெறித்தாள்.
நீலம் புன்னகை மாறாமல்,
‘ரிலாக்ஸ் கங்கா. இப்போது என்ன ஆகி விட்டது ? இப்படி இடிந்து போய் விட்டார்களே ? ‘
‘எப்படி நீலம் ?இவ்வளவு பிரச்னையிலேயும் எப்பவும் சிரிச்சுட்டே இருந்தாயே ? என்னால் நம்பத்தான் முடியவில்லை ‘
‘திருமணமாகி ஒரு வருடத்திலேயே பிரச்னை துவங்கி விட்டது, கங்கா. நான் ரெம்ப இந்தியத் தனத்துடன் இருப்பதாக அனிலுக்கு நினைப்பு. நான் தில்லியில் வளர்ந்தவள்தான். இருந்தாலும் ரெம்ப கட்டுப்பெட்டித்தனமாக இருக்கிறேன் என்று அவனுக்கு ஏமாற்றம். இப்படிச் சிறிதும் பெரிதுமாக எத்தனையோ ஏமாற்றங்கள், அவனுக்கு. நான் தாய்மை அடைந்திருந்ததால் பிரிவைத் தள்ளிப் போட்டோம். மேலும் என் படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைக்கும் வரை ஒன்றாக இருப்பதாக ஒப்பந்தம்…இந்த இடைக் காலத்தில் அவன் மாறலாம், டிவோர்ஸ் எண்ணத்தை விட்டு விடுவான் என்று கூட நினைத்தேன்…. ‘
நீலம் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினாள்.
‘போகட்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? ‘
கங்காவினால் அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. எப்பேர்ப்பட்ட பெண்ணிவள்! இத்தனை பிரச்னைகளையும், சோகத்தையும் மனதில் தாங்கிக் கொண்டு, கங்காவுடைய பிரச்னைகளைப் பற்றிப் பேசி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாளே! நீலம் அவசரமாக கங்கா அருகில் வந்து அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
‘என்ன கங்கா ? என்ன ஆச்சென்று இப்படிக் கலங்குகிறீர்கள் ? ரிலாக்ஸ்.. ‘
‘என்ன அனியாயம் இது… நான் பேசுகிறேன் அனிலிடம்..உன்னைப் போன்ற ஒரு பெண் கிடைக்க அவன் தவம் இருந்திருக்க வேண்டும்..என்ன கல் நெஞ்சுக்காரன்… ‘ என்றாள் கங்கா ஆத்திரத்துடன்.
நீலம் சிரித்தாள்.
‘சிறு பிள்ளை போலப் பேசுகிறீர்கள் கங்கா…அனில் கல் நெஞ்சுக்காரன் அல்ல. ரெம்ப நல்லவன். ஹி இஸ் அ ஜெண்டில் மான். அவன் செய்த ஒரே தவறு, என்னைத் திருமணம் செய்ததுதான். அவனுடைய ரசனைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற பெண்ணைத் தேர்வு செய்திருக்க வேண்டும், பெற்றவர்கள் சொன்னதற்காக என்னைத் திருமணம் செய்தது ஒன்றுதான் அவன் செய்த தவறு. அதற்காக எத்தனையோ முறை என்னிடம் மிக வருந்தி உள்ளான். அவனுடைய விருப்பத்திற்கு உகந்தவளாக நான் இல்லை என்பதால் ஒரு போதும் எனக்குத் தர வேண்டிய மரியாதையை அவன் தராமல் இல்லை. இப்போதும் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழப் போவதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருப்போம். எங்கள் குழந்தைக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் தவறாமல் செய்யத்தான் போகிறான். ஒரு முறை தவ்று செய்து விட்டான் என்பதால், அந்தத் தவறுடனேயே வாழ வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தம் செய்வது நியாயமில்லை…மேலும் இத்துடன் என் வாழ்க்கை முடிந்து விட்டதாக நான் நினைக்கவும் இல்லை. இது என் வாழ்க்கையில் நடந்த ஒரு பெரிய தவறு..இதற்காக வாழ் நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருக்கப் போவதில்லை. இனி என் வாழ்க்கையில் எடுக்கப் படும் முடிவுகள் என் குழந்தையையும், என்னையும் சந்தோஷப் படுத்தும் முடிவுகளாகத்தான் இருக்கும்…. ‘ என்றாள் நீலம் புன்னகையுடன்.
கங்கா ஒன்றும் கூறாமல் அவளை வெறித்தாள். நீலம் விலகி அமர்ந்தவளாக கங்காவைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
‘ஒன்று சொல்லட்டுமா கங்கா ? ‘ என்றாள்.
‘என்ன ? ‘
‘உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அழகான வாழ்க்கையை அனுபவியுங்கள்…. ‘
என்றாள் அதே புன்னகையுடன்.
திரும்ப வரும் போது காரைக் கணவன் ஆபிசுக்கு ஓட்டினாள். எப்போதும் அவன் தான் அவளை டின்னருக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா என்ன ? இனி அவளும் அவனை அழைத்துப் போவாள்.
***
alamu_perumal@yahoo.com
- தெளிவு
- தனிமை வேண்டுகிறேன்
- அறிவியல் மேதைகள் இராமாநுஜம் (Ramanujam)
- புதியன அறிதலின் மகிழ்ச்சி
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டாஃபென் ஹாக்கிங்
- புளூட்டோவைத் தாண்டி இருக்கும் கிரகம் ?
- சுடர் விட்டெரியும் வாழ்வு
- மனசாட்சியின் கதவு (எனக்குப் பிடித்த கதைகள் -32 -மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘மஸுமத்தி ‘)
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002
- அழுக்கும் நானும்
- ஈரம் தொற்றிய இருப்பின் கவிதைகள்
- மழைத்துளியா ?மறுபிறவியா ?
- மருந்து
- பாரதியாக முயன்று….
- சூத்ரதாரியின் மூன்று கவிதைகள்
- முதியவனை நினைவிருக்கிறத ‘ ?
- கண் உறங்கா….!
- அம்மா நீ ரொம்ப மோசம்!
- நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
- பரிசு
- ஒரு பேனா
- கோபம்
- நடந்தாய், வாழி
- பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன
- வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…
- மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்
- சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- இன்னுமா மெளனம் ?
- சில விவாதங்கள்
- குறும்பாக்கள்
- இயலை விஞ்சி விட்ட செயல்
- முல்லை = பாலை
- தொல்லை