அறிமுகம்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

நீல பத்மநாபன்


இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன் ‘ நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார்.

உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன் மனம் அடித்துக் கொண்டது.

பாவம் சங்கரன்….

அவனுக்கு இப்படி வந்திருக்கக் கூடாது.

காரியாலயத்தை விட்டு ஒருமணி நேரம் முன்னாடி வெளியில் போக அனுமதிக்காக கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில், மீண்டும் மீண்டும் உள்ளே மின்வெட்டும் அந்த முகம்.

நிர்மலமான முகம் என்றெல்லாம் வர்ணிக்கமுடியாது. காந்த கவர்ச்சி இருப்பதாகவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கண்களுக்குள் உள்ளடங்கி நிற்கும் ஒரு தயனீய பாவம்… நீயாவது இரங்கமாட்டாயா என்று கேட்காமல் கேட்கும் நோவை மென்று தின்னும் மோனப்பார்வை. எந்தக் கோணத்தில் அந்த முகத்தையும், அவன் இந்நாள் வரையுள்ள வாழ்க்கையையும் பார்த்தாலும் அவனை துஷ்டன் என்று யாருக்காவது சொல்ல முடியுமா ?

ஆனால்…

இப்பொ கொஞ்ச நாட்களாக ஏன் இந்த விச் ஹன்டிங்… ? சாதா நாயை வெறிநாயாக்கி விரட்டுவதுபோல்…

தன் வேலைத் தொந்தரவுகள், உள்ளூர் வெளியூர் பயணங்களின் இடையில் வாசிக்க நேரம் கிடைப்பதே ரொம்ப அரிது. அப்படியிருந்தும் இந்த சங்கரன் எழுத்துக்கள் மீது என்னவோ தெரியாத ஒரு மயக்கம். படித்தவை மிகச் சொற்பமே.. ஆனால் அவன் பெயரில் வெளியாகிறவை எல்லாவற்றையும் உடனுக்குடன் வாங்கி வைத்துவிடுவதுண்டு.. சாவகாசம் கிடைக்கும்போது புத்தகம் கையில் இல்லாமல் இருந்துவிடக்கூடாதல்லவா…

உத்தமன் கேலி செய்தான் — ஏண்டா மாணிக்கம் உனக்கேன் இந்த அசட்டுத்தனம்… ‘ அந்த சங்கரனை எனக்கு பேர்ஸனலா தெரியும். வெறும் சென்டிமெண்டல் டைப்… சொந்த வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் ரொமாண்டிக்கா எழுதறான். இதைப் போய் தலையில் தூக்கி வச்சுகிட்டு…

அவனிடம் தர்க்கிப்பதில்லை. ஒன்றை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதற்கு காரணங்கள் சொல்லி நிரூபித்தே தீரவேண்டும் என்பது நியதியா ? உத்தமனுக்கு பிடிக்காமல் போனதற்கு அவன் வெறுப்பிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல இருக்கலாம், தனக்கு பிடிக்கக் காரணம் இதுவென்று சுட்டிக்காட்ட ஒன்றுகூட இல்லாதிருக்கலாம். ஆனால்.. பாவி மனசுக்கு பிடிச்சுப்போய் விட்டதே..

உத்தமன் சிநேகிதன் என்பதால், அவனுக்கு பிடிக்காது – தனக்குப் பிடிச்சதெல்லாம் அவனுக்காக விட்டுக் கொடுத்துவிடுவதா ?

டேய் நீ மக்களாட்சி மன்றங்கள் அமுலுக்கு வந்து விட்ட இந்த யுகத்தில் பிறந்திருக்க கூடாதுடா…. ‘ ஏதாவது பழைய புராணகாலத்திலோ மன்னர் காலத்திலோ வசதியா பிறந்திருக்கலாம். அந்தக் காலங்களிலும் நெற்றிக்கண் திறக்கிறவங்க இருந்திருக்காங்களே.. மறந்துட்டியா ? சரி..சரி… அதெல்லாம் இருக்கட்டும், எவ்வளவு நாளா உங்கிட்டெ சொல்லிக்கிட்டிருக்கேன் என்னிக்கு சங்கரன் கிட்டெ என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் அறிமுகம் செஞ்சுவைக்கப் போறே ? அவர்தான் உன் பிரண்டாச்சே…

சரி இனியும் நீடிச்சுக்கிட்டுப் போகவேணாம். இந்த ஞாயிற்றுக்கிழமை காலம்பர பத்துமணிக்கு என் ரூமுக்கு அவனை வரச் சொல்லியிருக்கேன். நீயும் தவறாமல் வந்துவிடு. ஏதாவது மாற்றம் இருந்தால் போனில் தெரிவிப்பேன், சரிதானே…

சரி ‘ ரொம்ப ரொம்ப நன்றி…

அந்த ஞாயிற்றுக்கிழமை…

காலை பத்துமணிக்கு அவன் அறையின் முன் சென்றபோது…

வரவேற்றது அடைத்திருந்த கதவில் தொங்கிய பூட்டு.

அடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தபோது யாருக்கும் தெரியாது.

எங்கே போயிருப்பான் ?

சற்று நேரத்தில் அங்கே வந்து பூட்டைப் பார்த்து ஏமாந்து நிற்கிறவர்.. ?

இவர்தான் சங்கரனா ?

கேட்டபோது..

ஆமா ‘ நீங்க யாரு தெரியல்லயே…

நான் மாணிக்கம்.. புட் கார்ப்பரேஷனில் வேலை பார்க்கிறேன்… நான் உங்களுடைய ஒரு வாசகன். உத்தமன் என்னைப் பற்றி சொல்லியிருப்பாரே.

இல்லையே.. அவன் பத்திரிக்கையில் ஏதோ ஒரு புது அம்சம் தொடங்கப் போவது பற்றி என்கிட்டெ டிஸ்கஸ் பண்ணணும் பத்து மணிக்கு ரூமுக்கு வரமுடியுமாண்ணு கேட்டிருந்தான். அதுதான் வந்தேன்.. உங்களையும் வரச் சொல்லியிருந்தானா ?

இதற்கு முன் புகைப்படத்தில் மட்டும் பார்த்திருக்கும் அந்த முகத்தை, கண்களை நேரில் பார்க்கையில் உள்ளே நிறையும் மகிழ்ச்சி.. அவன் படைப்பில், தான் படித்த சொற்பம் சிலவற்றிலிருந்து தான் அடைந்த இனிய அனுபவத்தை விளக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது..

அவர் விடைபெற்றார்.

அவர் போனபின் மனதில் உறுத்தல்கள்…சே….

உத்தமன் போனால் போகட்டும், உங்களைச் சந்திக்கத்தான் நான் வந்ததே … வாங்க.. ஒரு டா சாப்பிட்டவாறு கொஞ்சம் பேசிவிட்டுப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கலாம்.. புகழெனும் மகுடியோசையில் மயங்கி ஆடாதவர்கள் உண்டா ? ஆனால் மகுடி வாசிக்க தனக்கு தெரியவேணுமே…

அதன் பின், இந்த மூன்றுமாச காலமாய் உத்தமனிடமிருந்து எந்த தகவலும் இல்லை… நானும் அவனை தொடர்புகொள்ளவில்லை…

இந்த வாரம், அவன் ஆசிரியர் குழுவில் வேலை பார்க்கும் பிரபல பத்திரிகையில் சங்கரனின் புதிய நூலைப் பற்றி ஒரு காரமான விமர்சனம் வெளியாகியிருந்தது.

புத்தகத்தை வெளியான அன்றே வாங்கிவிட்டிருந்தும் இன்னும் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை… புரட்டிப் பார்த்ததில் சிற்பக் கலையைப் பகைப் புலனாய்க் கொண்ட நாவல் என்று மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.

‘இந்நாவல் சிற்பக்கலை சம்பந்தப்பட்டது என்பதால் மட்டும் உயர்ந்துவிடாது. புனிதமான கங்கையில் எச்சமிட்டுவிட்டு பறந்து சென்ற காக்கையின் சம்பந்தமே சங்கரனுக்கு இந்நாவலுடன் உண்டு ‘ என்று முடித்திருந்த உத்தமனின் விமர்சன கட்டுரையை வாசித்தபோது தன் நெஞ்சில் நிறைந்த, அன்று கண்ட சங்கரனின் முகபாவம்…

சென்ற சில நாட்களாகப் பித்துப் பிடித்தவன் போலிருந்த சங்கரன் இன்று அவன் வேலை பார்த்த ஆபீஸ் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்ட செய்தி, சற்று முன் உத்தமன் தானே போனில் சொன்னான்… ‘

வெளியில் உத்தமனின் கார் ஹார்ன் ஒலி கேட்டது… பெர்மிஷனுக்கான கடிதத்தை ஆபீசரிடம் கொடுத்துவிட்டு வெளியில் இறங்கும்போது, அன்று சங்கரனைப் பார்த்த நாள் அவன் படைப்பின் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை வெளியிடாமல் இருந்துவிட்டது இவன் மனதை குடைந்து கொண்டிருந்தது.

Series Navigation

author

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்

Similar Posts