நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

ஜெயமோகன்


அத்தியாயம் : மூன்று

கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட ஆங்கிலத்தில் அளித்த பதில்கள் கீழ்க்கண்டவை .

‘பப்பன் . அதாவது பி .அனந்த பதமநாபன் நாயர் ‘ ‘ பி ஃபார் பார்கவன் பிள்ளா , ஆமாசார் பிள்ளா ‘ ‘இல்லை . ஹி ஹி ஹி நாயரும் பிள்ளையும் ஒன்றுதான் செர் ‘ ‘இல்லை செர். ‘ ‘ ஆமாம் செர் ‘ ‘ஆர்டிலரியில் காப்டனா இருந்தேன் செர். ‘. ‘ தாங்க்யூ செர் ‘ ‘

கோபாலன் சந்தேகத்துக்கு அடையாளமாக அடையாளக்குறி போட்டு ‘ மிஸ்டர் நாயர் , உண்மையை சொல்லிவிடுங்கள் . இது இந்த விடுதியில் எத்தனையாவது கொலை ? ‘

‘முதல் கொலை தான் சார் . ‘

‘அப்படியானால் இங்கு மேலும் கொலைகளை எதிர்பார்க்கிறீர்கள் இல்லையா ? ‘ கோபாலன் மனசுக்குள் ‘அப்படிப்போடுடா அரிவாளை, தேவன் வசனம்னா சும்மாவா ‘ என்று துள்ளிக் கொண்டார் .

‘இல்லை சார் .கண்டிப்பாக இல்லை சார் ‘

‘அதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் ? அப்படியானால் கொலை பற்றி மேலும் சில விஷயங்கள் உங்களுக்கு தெரியும் …மிஸ்டர் பத்மனாபன் , மரியாதையாக போலீஸிடம் உண்மையை சொல்லிவிடுவது உங்களுக்கு நல்லது ‘

படிப்படியாக அனந்த பத்மநாபன் நாயர் வம்ச கம்பீரங்களை இழந்து , முற்றாத தேங்காயில் அரைத்த சட்டினி போல ஆகி , ‘அறியாம்பாடில்ல பொன்னு சாரே ‘ என்று விம்மி அழுது மூக்கைசிந்த வைக்கப்பட்ட பின்பு சொல்லிய மொத்த கதையின்படி கொல்லப்பட்ட ராமசாமி அய்யர் அடிக்கடி அங்கு வந்து அறைபோட்டு தங்கி பெரிய மனிதர்களுடன் தொடர்பு கொள்வதுண்டு . நிறையபேர் கார்களில் வந்து சோதிடம் கேட்டுப்போவார்கள் . ‘ ஆமாம் சார் பெரிய இடத்து பெண்கள் கூட வருவதுண்டு ‘ . ‘சோதிடம் கேட்கத்தான் சார் ‘ . ‘ஹிஹி அதெப்படி சார் இந்தமாதிரி இடத்துக்கு அந்தமாதிரி பெண்கள் வராமல் இருக்க முடியுமா ?அவர்களும் வருவார்கள் . ஆனால் ஒரு தப்புதண்டா நடந்தது இல்லை . ‘ . ‘ ‘அய்யொ இல்லை சார் , அது தப்புதான் சார் , அதைத்தவிர வேறு தப்பு நடந்தது இல்லை என்றுதான் சொல்ல வந்தேன் ‘

கோபாலன் திரும்பி கடற்கரைப்பக்கமாக செல்லும்பொருட்டு வாசலுக்கு வந்த போது இரு வெள்ளையர்கள் நீளமான கோட்டும் கட்டம் போட்ட தொப்பியும் அணிந்தவர்களாக கடற்கரை நோக்கி போவது கண்டு ‘பத்மனாபன் , அவர்கள் யார் ? ‘ ‘

‘ அறை எண் அறுபத்தெட்டில் நேற்றுத்தான் வந்தார்கள் சார் . ஆயுர்வேத உழிச்சிலுக்கு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் , அந்த கட்டையான ஆளுக்கு தாடையில் ஏதோ பிரச்சினை ‘

‘ ‘ அதுதான் பிரிட்டிஷ் மேனர்ஸ் . மூக்கை கார்த்திகை மாச நாய்மாதிரி தூக்குவது . எங்கேயோ பார்த்த முகம் . மாயாஜால வித்தைக்காரர்களா ? சர்வேயர்களா ? ‘ ‘

‘அந்த நீள முக ஆசாமி எறும்புகளையெல்லாம் ஒரு லென்சால் கூர்ந்து பார்க்கிறார் சார்… .. ‘

‘ ஆகா மர்மம் ! ‘ என்றார் கோபாலன் , ஆனால் இது சர்வதேச துப்பறியும் கதை போல போகிறதே ஆனந்த விகடனின் வாசக மாமிகளுக்கு புரியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது . சரி அதைப்பற்றி நமக்கென்ன, ஒருவேளை நடுநடுவே அப்பளம், அமிர்தாஞ்சன் பற்றியெல்லாம் வரும் போலும் என்று சமாதானம் செய்துகொண்டார் .

வெள்ளைக்காரர்கள் வெளியேசென்று தெருவோர குப்பைக்கூடை அருகே நின்ற கிழட்டுத் தெருநாயை கூர்ந்து கவனிப்பதை கோபாலன் கவனித்து துப்பறியும் நிபுணர்களுக்கே உரிய லாவகமான அசைவுகளுடன் பின்தொடர்ந்தார் . கிழட்டு நாய் குப்பைக்கூடையில் பலவருட அனுபவம் கொண்டு , கோட்டு போட்ட மனிதர்கள் போட்டிக்கு வரமாட்டார்கள் என அறிந்தது . இருந்தாலும் ஏதோ இரண்டுகால் பிராணி, போகட்டும் என்று வாலை சல்லிசாக ஒரு மூறை ஆட்டிவிட்டு அடிவயிற்றுப் பிராந்தியத்தில் மறைந்த உண்ணி ஒன்றுக்காக தேடுதல்வேட்டையில் ஈடுபட்டது .

****

‘ இது என்னவகை மிருகம் ஹோம்ஸ் ? ‘ வாட்சன் கேட்டார் .

‘இம்மாதிரி மிருகங்கள் பல உள்ளன .நாய், ஓநாய் , நரி ,கழுதைப்புலி . என்ன சிக்கல் என்றால் இதை என்னால் தெளிவாக வகுக்க முடியவில்லை . எல்லா மிருகங்களின் இயல்புகளையும் இது கொண்டிருக்கிறது. அத்துடன் இது வன மிருகமல்ல , மனிதர்களுடன் நன்கு பழகியது ‘

‘அற்புதம் ஹோம்ஸ் !எப்படி கண்டுபிடித்தீர்கள் ? ‘

‘ அடிப்படை விஷயம் வாட்சன் .அதன் பின்பகுதியில் கேள்விக்குறி போல இருப்பது அதன் வால் என எண்ணுகிறேன் . அதை நம்மை கண்டபோது இம்மிருகம் சற்று ஆட்டிக் காட்டியதை நீங்கள் நினைவுகொள்கிறீர்கள் என நம்புகிறேன். ‘

‘ஷ்யூர் ஹோம்ஸ் ‘

‘இந்த வம்சத்தை சேர்ந்த சில வகை மிருகங்கள் இவ்வாறு ஆட்டினால் நட்பான சைகை என்று பொருள் ‘

‘ஆமாம். அதன் கண்களிலும் நட்பு தெரிகிறது . ராணியிடம் மாட்சிமை தங்குவதாக . இது ஒரு வனமிருகமாக இல்லாமல்போனது நல்ல விஷயம்தான் ‘ வாட்சன் சொன்னார். ‘ நாம் இந்த பிராணியை பின்தொடர்ந்து போகப்போகிறோமா என்ன ? ‘

‘கண்டிப்பாக ‘ என்றார் ஹோம்ஸ் , ‘பைப்பிலே புகையிலை தீர்ந்துவிட்டது வாட்சன் , இங்கே புகையிலை வியாபாரி எவராவது இருக்கக் கூடுமா ? ‘

எதிரே வாழைகுலை சுமந்துவந்த கிழவரிடம் வாட்சன் ‘ இங்கே புகையிலை எங்கே கிடைக்குமென நான் அறியக்கூடுமென எண்ணுறீர்களா ? ‘ என்று கேட்கப்போக அவர் சாயிப்பே தன்னிடம் பேசிவிட்ட பரவசத்தில் மெய்மறந்து தன் கரிய பதினேழரை பற்களை காட்டி சிரித்தபடி ‘யெஸ் யெஸ் ‘ என்றார் .

வாட்சன் சிரித்து ‘ புகையிலை ! புகையிலை! ‘ என்றார் . ‘ கிழவர் பரவசத்தின் வீச்சு பெரிதாகியபடியே செல்ல ‘ யேஸ் ! யேஸ் ‘ என்று சொல்லி பின்பு போதாமையை உணர்ந்து ‘குட் மாணிங் சாயிப்பே ‘ என்றார் .

‘விசித்திரமான உலகம் ‘ என்றார் வாட்சன் , ‘ ஆச்சரியம்! அவர்கள் இன்னமும் மொழியையே கற்றுக் கொள்ளவில்லை ! ‘ கிழவர் , ‘ யேஸ் யேஸ் குட் மானிங்! ‘ என்று சிரித்தார் .

‘வாட்சன் அவர்கள் நாகரீகத்தின் குழந்தை நிலையில் இருப்பவர்கள் . மாட்சிமை தங்கிய அரசியாரின் நிலத்தில் கூட மொழியும் நாகரீகமும் தோன்றி வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன என்று நினைவுறுங்கள் .நாகரீகமென்பது டூலிப் மலர்களின் நறுமணம் போன்றது, நம் வீட்டு சாளரத்தைதாண்டி அது எளிதில் வெளியே செல்வதில்லை ‘

‘கவித்துவமான் வசனம் ஹோம்ஸ் .மிஸ்டர் டாயில் எப்போதுமே சிறந்த சொற்களை எழுதுவதில் கவனம் கொள்கிறார் .இப்போது நாம் புகையிலைக்கு எங்கே போவது ? ‘ ‘

‘புகையிலைக் கடைக்கு விளம்பரம் எதற்கு என்று ஒரு பழமொழி இருக்கிறதே . மூக்கை பயன்படுத்துவோம் ‘

‘குட் மார்னிங் சாயிப்பே . ஒன் ,டூ ,த்ரீ ,போர் ,பைவ் … லெஃப்ட் ரைட் எபவுட் டர்ன் .ஏ பி சி டி .. ‘

இருவரும் பெட்டிக்கடைக்கு சென்றபோது ஒருவர் அவர்களை பார்த்தபடி வாயில் ஒரு தழையைச் சுருட்டி திணித்துவிட்டு அருகே நின்ற விளக்குக் கம்பத்தில் ஒரு குழூஉகுறியை தடவுவதை தன் துப்பறியும் கண்களால் ஹோம்ஸ் கவனிக்கத் தவறவில்லை .வாட்சன் புகையிலை வாங்கும்போது ஹோம்ஸ் தன் நுண்நோக்கியின் உதவியால் அதை கூர்ந்து அவதானித்து விட்டார் . இருவரும் புகையுடன் நடக்கையில் ஹோம்ஸ் ‘ நாம் கண் காணிக்கபடுகிறோம் வாட்சன் ‘ என்றார் .

‘ கிறிஸ்து சாட்சியாக ! உண்மையாகவா ? ‘

‘ஆம் . நமது நடவடிக்கைகளை கண்காணிக்க பலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .அவர்கள் குழூகுறி மூலம் செய்திகளைபரிமாறிக் கொள்கிறார்கள் . அது கால்சியம் பை கார்பனேட் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ‘

‘சாயிப்பே கைநீட்டம் தரணும் .. ‘

‘யாரையுமே நம்பக்கூடாது வாட்சன் , மர்மங்கள் நம்மை சுற்றி தங்கள் வலையை மெல்ல இறுக்கிக் கொண்டிருக்கின்றன ‘

‘குட் மார்னிங் சாயிப்பே . எ டிப்ஸ் . ஒன் மணி ‘

‘வாட்சன் அந்த மிருகம் ஒரு வளர்ப்பும்மிருகம் என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் .கொலை நடந்த அறைக்கு வெளியே அது தன் அடையாளத்தை விட்டுவந்திருக்கிறது . .. ‘

‘இல்லேன்னா அதைச் சொல்லு சாயிப்பே , கோட்டு சூட்டு போட்டா போருமா ? என்றெ பழவங்ஙாடி கணபதீ , சாயிப்பிலும் உண்டோ எரப்பாளிகள் ? ‘

‘அது ஏவப்பட்டிருக்கலாம் என்கிறீர்கள் ஹோம்ஸ் ‘ வாட்சன் அந்த நாயை கூர்ந்து கவனித்தபடி சென்றார் .அது தெருக்கோடியில் இருந்த ஒரு இடிந்த கட்டிடத்துக்கு சென்று அங்கே படுத்திருந்த ஒரு கிழவனை கண்டு வாலாட்டிய பிறகு அவனருகே படுத்துக் கொண்டது .

‘வாட்சன் இதிலிருந்து என்ன ஊகிக்கிறீர்கள் ? ‘

‘அது ஒரு கிழவன்! ‘

‘பெரும்பாலும் , மிஸ்டர் வாட்சன் . அவரைச்சுற்றி மர்மத்தின் வலைக்கண்ணி இறுகுகிறது ‘

‘தொடரும் போட்டாக வேண்டிய வேண்டிய சொற்றொடர் ஹோம்ஸ் ‘ என்றார் வாட்சன்.

‘பரநாறி சாயிப்பே ….எரப்பாளீ…… ‘

***

‘பாஸ் , இவங்க பேரு நீலா . மிஸிஸ் நீலா இது எங்க பாஸ் , கணேஷ். அமெரிக்காவிலே எல்லாம் இப்ப எல்லாரும் இவரைப் பத்திதான் பேச்சு … ‘

‘டேய் விடுரா ‘ .

அந்தபெண் [மணி ?] கும்பிட்டு , ‘ரொம்பக் கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப சின்ன வயசா இருக்கீங்க ‘ என்று சொல்ல வசந்த் கணேஷிடம் ‘ நெட்டுலே இலக்கியப்பக்கத்திலே அம்பிகள் அச்சுபிச்சுன்னு டிஸ்கஸ் பண்றத வச்சு சொன்னேன் பாஸ் ‘ ‘ என்று முணுமுணுத்தான் . ‘ இவங்க கூடத்தான் ரொம்ப யங்கா இருக்காங்க .ஏன் பாஸ் , இவங்களை பாத்தா அசப்புலே லைலா சாயல் இல்லை ? ‘

அந்த மாமி வெட்கி ‘சிலபேர் அப்படி சொல்லியிருக்காங்க ‘ என்று கருகமணியை கடித்து மணலில் கோலம் போட்டது .

‘நீங்க எங்க இருக்கீங்க ? ‘ என்றான் கணேஷ் .

‘ ‘ என்ன பாஸ் அக்கம்பக்கத்துல யார் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதில்லையா ?இவங்க பக்கத்துல பாலகுமாரன் தொடர்கதைல இருக்காங்க . வீட்டுக்காரரோட சேந்து படுக்கையிலே படுத்துட்டு பட்டினத்தார் பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி என்னமாதிரி தத்துவம்லாம் எடுத்து விடறாங்க ! இப்பிடி கேட்டுட்டாங்க ‘

‘போங்க ‘ என்றாள் அந்த அம்மாள் மேலும் வெட்கி .

‘சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம் ‘ என்று கணேஷ் கைகூப்பினான் .

‘இவங்களுக்கு பெரிய பிரச்சினை பாஸ். பதினெட்டாம் அத்தியாயத்திலேயிருந்து இவங்க வீட்டுக்காரர் திடார்னு ரொம்ப ஆன்மீகமா உள்ள போயிட்டார் . ஒவ்வொரு வசனத்துக்கும் அந்தக்கால நாகையா மாதிரி கண்ணீர் மல்கறார். மிஸிஸ் நீலா அதென்ன பாட்டு , இருங்க , ஊத்தைகுழியினில்… ‘

‘டேய் ! ‘

‘ பாஸ் ,நெஜமாவே அந்த ஆள் பட்டினத்தார், சத்குரு அப்பிடான்னு போயிட்டான் . கதைக்கு டெம்போவே இல்லைன்னு இவங்க ஃபீல் பண்றாங்க. நாம வேணும்னா ஸ்டிக்கர்பொட்டு மர்மத்தை அங்ககொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணலாம்னு நான் தான் கூப்பிட்டு வந்தேன் ‘

‘தபார்ரா, கதைக்குள்ள என்ன வேணுமானாலும் சரி, இந்தமாதிரி தொடர்கதைகளுக்குள்ள இடியாப்பம் சுத்தறதுக்கு எடிட்டர் ஒத்துக்க மாட்டார் ‘

‘அப்ப இவங்க எதிர்காலம் ? ‘

‘அங்கியே ஒரு தொடரும்போட்டுடசொல்லு . நமக்கு வேற வேல இருக்கு . ‘

‘மிஸிஸ் நீலா , என்னகேட்டா நீங்ககூட மஞ்சள் சேலை மகமாயீன்னு கெளம்புறது பெட்டர் . நான் அப்புறமா உங்களை பாக்கிறேன் ‘ வசந்த் அந்த அம்மாள் போவதை பார்த்து மனமுருகி, ‘கஜ ராஜ விராஜித மந்த கதி! ‘ என்றான்.

‘அதென்னாடாது மந்திரம் ? ‘

‘இது வள்ளத்தோள் பாட்டு , தேசியக் கவிஞர் பாஸ். என்ன சொல்றார்னா, இப்ப யானையை நடக்கிறப்ப பின்னலேருந்து பார்த்தோம்னு வச்சுக்குங்க … ‘

‘வால் தெரியும் , ஆளைவிடு .என்னாச்சுடா ஸ்டிக்கர் பொட்டு ? விசாரிச்சியா ? ‘

‘இந்த ஓட்டலிலே எட்டு பொண்ணுங்க ஸ்டிக்கர் பொட்டு வைக்குது பாஸ். ரெண்டு வெள்ளைகாரிங்ககூட கோணலா வச்சிருக்காங்க . அழகான கவிதை வரிக்கு அப்பாலே முற்றுப்புள்ளி வச்சாப்லே அப்டான்னு ஒருத்தி கிட்டே எடுத்து விட்டேன் ‘

‘என்ன சொன்னா ? ‘

‘ காண்டம் வச்சிருக்கியான்னுட்டா பாஸ் , ஜகா வாங்கிட்டேன் .உங்களுக்கு நம்பூதிரி ஜோக் ஒண்ணு சொல்லவா ? ‘ ‘

‘ரூமுக்கே போயிடலாம் வா. எனக்கென்னவோ இந்த ஸ்டிக்கர் பொட்டுல விஷயம் இருக்குன்னு படுது ‘

‘அஞ்சடிக்குமேல உயரத்திலே எங்கியுமே நான் ஸ்டிக்கர் பொட்ட பாக்கலை பாஸ். இந்த ஜோக்கை வெயிட்டர் பவித்ரன் சொன்னான் ‘

அவர்கள் அறைக்கு திரும்பியபோது அங்கே அவர்களை தேடி ஒருவர் காத்திருந்தார் .

[தொடரும் ]

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts