நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ஜெயமோகன்


அத்தியாயம் : இரண்டு

வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ‘ யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ‘ என்றான் .

துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன் மந்தமாக புன்னகை செய்து ‘ பாத்ரூம் எங்கே ? ‘ என்று நேராக போய் பீரோ கதவை திறந்து , மீண்டும் மந்தஹாசம் புரிந்து தடுமாற , இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா ‘ யார் சார் இது ? உங்க குமாஸ்தாவா ? ‘

‘இல்லீங்க . இவரு பெரிய …..பாஸ் எப்பிடி சொல்றது ? ‘

கூட்டத்திலிருந்து எண்ணை படிந்த பேசரியும் , இறுக இழுத்து கட்டிய கூந்தலில் மல்லிகையும், மடிசாருமாக ஒரு அம்மாள் இடையில் குழந்தையுடன் வழி பிளந்துவந்து ‘ அய்யோ , ஏன்னா இங்கேல்லாம் வரேள் ? உங்களுக்குத்தான் ரத்தத்த பாத்தாலே அல்பசங்கை வந்துடுமே . ஏன் தடுமாறரேள் , பாத்ரூமுக்கு அந்தப்பக்கமா போங்கோ. வாசனை வரது பாத்தேளா , அத வச்சு கண்டுபிடிச்சா என்ன ? ‘ என்றாள்.

‘பாஸ் இவங்கதான் வேம்பு மாமியா ? அங்கமுத்து மாதிரி இருக்காங்க ‘

‘ பின்ன , மும்தாஜ் ரேஞ்சுக்கு நினைச்சிருந்தியா ? ‘

சாம்பு ‘ இவ்ளோ கம்மியா வாசனயெ வச்சிருந்தா எப்பிடி கண்டுபிடிக்கிறதாம் ? ‘ என்று முணுமுணுத்தபடி உரிய கதவை கண்டுபிடித்துவிட்டார் .

‘அப்பா நேக்கும் மூச்சா வரது ‘ என்றது சுந்து .

புறந்தலையை கிட்டத்தட்ட ஷேவ் செய்திருந்த ஒரு மோட்டா ஆசாமி பழங்கால லாங்கிளாத் சட்டையும் கரிய ஷூக்களும் விடைப்புமாக ஆறரையடி உயரத்தில் வந்து இன்ஸ்பெக்டருக்கு ஒரு சல்யூட அடித்து ‘ நான் இன்ஸ்பெக்டர் கோபாலன் . மதறாஸ் மாகாண போலீஸ் ‘ என்றார்

ஃபல்குனன் பிள்ள அரண்டுபோய் அண்ணாந்து பார்த்து , ‘ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் . நீங்க எந்த கதையிலே.. . ‘ என்று தடுமாற கோபாலன் ‘ உள்ளே போயிருக்கிறது தான் சாட்சாத் துப்பறியும் சாம்பு . ரொம்ப பெரிய மூளை .பாக்கத்தான் வாழைப்பழம் மாதிரி இருப்பார் ‘

‘மாமா நேக்கு வாழைப்பழம் ? ‘

கோபாலன் கணேஷிடம் ‘ அவர் எப்ப என்ன செய்றார் என்ன நினைக்கிறார்னு நாம நம்ம புத்திய வச்சுண்டு கண்டுபிடிக்க முடியாது சார். பெரிய மேதை . படிச்சிருப்பேளே , ஆனந்தவிகடன்லே தொடரா வந்துட்டிருந்தார் . நீங்க என்ன பண்றேள் ? ‘

‘லாயர் . எம் பேரு கணேஷ் .இது என் அசிஸ்டெண்ட் வசந்த் ‘

‘ஹைக்கோர்ட்டில இருக்கேளா ? ‘

‘இல்லீங்க நாங்களும் தொடர்கதை, சீரியல்னு வரோம் … ‘

‘ வாழப்பழம் தரமாட்டியா , அப்பன்னா நீ கோங்கு ‘

‘நீங்கதான் கொலயை முதல் முதலா பாத்ததா ? ‘ என்றார் கோபாலன்

‘இல்லீங்க நாங்க பாத்தது பொணத்த ‘ வசந்த் அவர் சட்டையை பார்த்து ‘ அப்பல்லாம் எவ்வளவு பொத்தான் பாருங்க . எஸ் வி சகஸ்ரநாமம் மாதிரி இருக்கீங்கசார் ‘ என்று வியந்தான்.

‘அப்ப கொலையை யாரு பாத்தது ? ‘

‘தெரியலீங்க ‘

‘ கோங்கு !கோங்கு !வவ்வவ்வே! ‘

‘என்னப்பா ஒரே குழப்பமா இருக்கு ? சரி நீங்க என்ன பாத்தீங்க ? ‘ ‘

‘ இந்தாள் பெயர் ராமசாமி . செல்ஃபோனிலே சொன்னார் . ‘ என்றான் கணேஷ் .

‘பாஸ் இந்தாளுக்கு செல்ஃபோன்னா புரியுமா ? ஆப்செட்டுக்கு முந்தின காலத்து ஆள்…. ‘ ‘

‘அத கதை எழுதறவன் யோசிச்சுக்குவான், பாருங்க மிஸ்டர் கோபாலன் கொலைன்னு உடனடியா முடிவுக்கு வந்திட வேணாம் .எதுக்கும் முழுக்க விசாரியுங்க ‘

‘கொலைதாங்க .தற்கொலைக் கதையிலேயெல்லாம் துப்பறியும் சாம்பு வரதில்லை . அப்படி வந்தாக்கூட கடைசியிலதான் அது தற்கொலையா மாறும் ‘ கோபாலன் பென்சிலை எச்சில் தொட்டு குறிப்புகள் எடுத்தபடி ‘ நீங்க வரச்சே அவருக்கு உசிர் இருந்ததா ? ‘

‘பொணம்ங்க ‘ என்றான் வசந்த் ‘ முழுப்பொணம் ‘

‘ அத அப்பவே சொல்லிட்டாங்க . உங்க கிட்டே என்ன சொன்னார் ? ‘

‘எங்களைப்பத்தி என்னமோ அவசரமா பேசணும்னு சொன்னார் . ‘

‘இன்ஸ்பெக்டர் சார் , சித்த உள்ள போயி பாக்கிறேளா ,இவர் போயி ரொம்ப நாழியாயிடுத்தே , உள்ள எங்கியோ மாட்டிண்டு தவிக்கிறார்னு நெனைக்கிறேன் ‘ என்றாள் வேம்பு

கோபாலன் போய் பாத்ரூம் வாசலை திறக்க உள்ளே சாம்பு வாஷ் பேசின் அருகே பக்கெட்டை கவிழ்த்துப் போட்டு ஏறி நிற்பது தெரிந்தது . ‘சாம்பு சார் என்ன பண்றேள் ? கண்ணாடியிலே அப்படி சிரமப்பட்டு என்னதான் தேடறேள் ? ‘ என்றபடி கோபாலன் ஓடிப்போய் சாம்புவை இறக்கிவிட்டு கண்னாடியை கூர்ந்து பார்த்தார் .

‘ஹை அப்பா ! அப்பா , நானும் மூச்சா வரேன் ‘

கோபாலன் உள்ளே நுழைந்து கண்ணாடியை கூர்ந்து பார்த்து ‘ அடாடா ! அற்புதம்1 ‘ என்று சாம்புவை கட்டிக் கொண்டார் ‘ சாம்புசார் , எப்படி உங்களுக்கு இந்தக் கோணத்திலே யோசிக்க தோணித்து ? ‘

கணேஷும் இன்ஸ்பெக்டரும் உள்ளே எட்டிப் பார்த்தபோது கோபாலன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டை மெல்ல கத்தியால் கிண்டி பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார் . ‘பாத்தேளா சார் . இது எவ்வளவு பெரிய ஆதாரம் ?நம்ம கண்ணிலே இது படுமா ? ‘ என்றபடி அதை ஒரு பிளாஸ்டிக் பையில் பதனமாக வைத்தார் .

‘இது சாதாரண ஸ்டிக்கர்பொட்டு தானே ‘ என்றார் ஃபல்குனன் பிள்ளா .

‘ இல்லை . இங்க கொஞ்சம் லாட்டரல் திங்கிங் பண்ணிபாக்கணும் . ஸ்டிக்கர் பொட்ட பாத்தா நாம வழக்கமா பொண்ணுன்னு நினைப்போம் .ஏன் ஆம்பிளைங்க ஸ்டிக்கர் பொட்டு வைச்சுக்கக் கூடாது ? ‘ கணேஷ் அதை கூர்ந்து பார்த்தான் .

‘பிரில்லியண்ட் பாஸ் . இந்த ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிற உயரத்த பாத்தா அந்தாளு ஆறரையடிக்குமேலே உயரம் . பொட்டு ஒட்டியிருக்கிற விதத்த வச்சு வலது கைக்காரன்னு தெரியுது . கொலைக்கு பிறகு அவன் கை கழுவியிருக்கான் . அதுக்கு இந்த லைபாய் சோப்பை பயன்படுத்தியிருக்கான் . இங்க துண்டு இல்லை .அதனாலே அவன் கண்டிப்பா பாண்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டுத்தான் துடைச்சிருக்கணும் ‘

‘பரவாயில்லை உனக்கு கூட மூளை வேலை செய்றதுடா .. ‘

‘என்ன பாஸ் , என்னையே வார்றீங்க . இதெல்லாம் சும்மா . ஒரு ஸ்மிர்னாஃப் ஃபுல் அடிச்சேன்னா அப்டியே லெனின் டிராட்ஸ்கி லைனுக்கு போயிடுவேன் . அப்ப இப்ப நாம ஸ்டிக்கர் பொட்டைப்பத்தி விலாவாரியா தேடப் போறோமா ? ‘

கணேஷ் அந்த பாத்ரூமை கூர்ந்து பார்த்து , ‘ கொலைகாரன் இந்த பாத்ரூமிலேதான் இருந்திருக்கான். பின்னாலே ரொம்ப கிட்டத்தில இருந்து சுட்டிருக்கான் . தலையணை மாதிரி எதுவோ வச்சு முகத்தை அழுத்திக்கிட்டு சுட்டிருக்கலாம் . ‘

‘அந்த தலையணை எங்கே ? ‘ ‘ என்றார் கோபாலன் . ‘சாம்பு சார் நீங்க என்ன நினைக்கிறீங்க ? ‘

‘ சாம்பார் தானே ? ‘ என்றார் சாம்பு .

‘பாஸ் இந்தாளுக்கு காது மந்தம்னு நெனைக்கிறேன் . ‘

கோபாலன் தீவிரமாக ‘ சாம்பார் ? சாம்பார் ? ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மோட்டுவளையை பார்த்தார் .

‘பத்ரூமிலே கொலைக்காரன் எப்படி வந்தான் ? ஒண்ணு இவருக்கு முன்னாடி தெரிஞ்சவனா இருக்கணும் .இல்லாட்டி பாத்ரூமுக்குள்ளே முன்னாடியே ஒளிஞ்சிருக்கணும். ‘

‘பாஸ் , நாம சக்கைப்பிரதமன் சேத்து ஒரு கேரளாச் சாப்பாடு அடிச்சாத்தான் மேற்கொண்டு புத்தி வேலை செய்யும்னு நினைக்கிறேன் . ‘

இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும்போது வசந்த் ‘ பாஸ் , பேசாம காரே பூரேன்னு கலர்ல பூ போட்ட சட்டை எதுனா போட்டுட்டு தென்னைமர நிழல்ல பங்கியடிக்கிறது உத்தமம்னு படுது . நீங்க என்ன கஜகர்ணம் போட்டாலும் கடசீல சாம்புதான் ஜெயிக்கணும் ,அதான் கதையோட லாஜிக். அந்தாள் எவனாவது மொட்டையன் மேல முட்டிக்குவான் , கடைசி பத்தியில அவன்தான் கொலைகாரன்னு கோபாலன் கண்டுபிடிப்பார். எவ்வளவு பழைய கதை . ‘

‘இல்லடா , இங்க வேற விஷயம் இருக்கு . இந்தக் கதையை எழுதறவன் அதிகமா படிச்ச துப்பறியும் எழுத்தாளர்னா நம்மாளுதான் . மத்ததெல்லாம் சும்மா ஞாபகத்திலேருந்து எடுத்து உடறது . அப்ப நமக்கு ஒரு சான்ஸ் இருக்குண்ணு படுது பார்ப்போம் ‘

‘பாஸ் அது என்ன எஸ்பராண்டோ ? மூளையப் போட்டு பிராண்டோ பண்ணுது .. ‘

‘அது இண்டர்நாஷனல் செயற்கை மொழிடா . டாக்டர் லுட்விக் எல் சேமநேஃப் னு ஒரு போலிஷ் ஃபிசிஷியன் 1887 லே லத்தீன் ஜெர்மன் போலீஷ் எல்லாம் போட்டு செஞ்ச அவியல் .இப்ப சில பிரத்யேக சைண்டிஸ்டுகள் மட்டும்தான் அதை பேசறாங்கன்னு நினைக்கிறேன் . இந்த அம்மாஞ்சி அதை எங்க கேள்விப்பட்டுதுன்னு தெரியலை ‘

‘ஏன்பாஸ் இதெல்லாம் இங்க எங்க வருது இதிலே ? ‘

‘இது துப்பறியறதிலே முதல் பொன்விதிடா . சம்பந்தமிலாம கண்டபடி என்சைக்ளோபீடியால புடிச்ச விஷயங்களை எடுத்துவிட்டுட்டிருக்கிறது ‘

அவர்கள் படியிறங்கியதும் கோபாலன் சாம்புவிடம் ‘எனக்கு என்னமோ இவங்க மேலேயும் ஒரு சந்தேகம் இருக்கு. அந்த சின்னவக்கீல் முகரையே சரியில்லை . தஞ்சாவூர் மைனர் மாதிரி ஒரு சிருங்கார சிரிப்பு அவன்கிட்டே இருக்கு பாத்தேளா ? ‘

சாம்பு தலையை சொறிந்து ‘ அதானே ‘ என்றார் . ‘என் கையிலே ஒரு புஸ்தகம் வச்சிருந்தேனே , எங்க அது ? ‘

‘என்ன புஸ்தகம் ‘

‘இங்கதான் ரோட்டிலே வாங்கினது . முப்பது நாளிலே எஸ்பராண்டோ கற்பது எப்படான்னு ‘ . வேம்பு தன் அருகேவந்ததும் சாம்பு ‘என்னடி கிள்றாய் ? ‘ என்றார் .

‘எதுக்கு பக்கெட்டை கவுத்துபோட்டேள் ? ‘

‘அவன்தான் அவ்வளவு உயரமா வச்சிருக்கான் , எட்டவேயில்லை . பின்ன எப்படி போறதாம் ? ‘

‘அய்யோ ராமாராமா , அது கை முகம் கழுவற பீங்கான்னா . ‘

‘கை கழுவுறதா ? அதிலே நான்…. ‘

‘அப்பா மூச்சா வரது ‘

‘கத்தாம வாங்கோ .யாராச்சும் கேட்டா பிடிச்சு ஃபைன் போட்டுடப் போறா . என் தலையெழுத்து . பொண்ணுபாக்க குடும்பத்தோட வந்து பக்கத்தாத்து வாசலைத் தட்டினேளே அப்பவே மாங்காமாமி சொன்னா , வேம்பூ இது எங்கியோ ஒதைக்குதேடான்னு ‘

சாம்பு காற்று வெளியிடை காதலை எண்ணி களித்து , ‘ ஒதைக்குதா ? கள்ளி ,சொல்லவே இல்லியே ‘ என்று கன்னத்தை கிள்ளபோனார் .

‘ பேசாம வரீங்களா , அப்படியே கீழே குதிச்சுடுவேன். எனக்கு பைத்தியம்தான் புடிக்கபோறது உங்களோட ‘

‘அப்பா மூச்சா வரது ‘

சாம்பு கவனமில்லாமல் ‘ வந்தா போயிட்டு அப்புறமா வரச் சொல்லுடா ‘ என்றார் .

‘ இப்ப என்ன , கோவளம் பாக்கிற உத்தேசம் உண்டா இல்லியா ? பத்மனாபசாமி கோயில் , மிருககாட்சி சாலை ஒண்ணும் இதுவரைக்கும் பார்க்கலை . கொட்டாங்கச்சீல நல்ல அகப்பை செஞ்சு விக்கிறாங்களாம். ரெண்டு டஜன் வாங்கிண்டு வான்னு பக்கத்தாத்திலே சொல்லியனுப்பிச்சாங்க . இங்க அப்டி என்னதான் பாக்கிறாப்ல இருக்கோ . வெள்ளைகொரங்குமாதிரி பொண்ணுகள் வேகா வெயிலிலே ஒலரப் போட்ட கூழ் வடாம் மாதிரி மல்லாந்து படுத்துக்கிட்டு ,கண்ராவி …. ‘

‘சுந்து எங்கே ? ‘

‘ எங்க போச்சோ . அது உங்க ரத்தம்தானே ? எங்கியாச்சும் வேடிக்கைபாத்து வழிஞ்சுண்டு நிக்கப்போறது. அய்யோ அங்க பாருங்கோ , அசடு வராண்டாவிலேயே போயிட்டுது. ஏண்டா .. ‘

‘அப்பாதானெ போன்னு சொன்னா ‘

‘அப்பனுக்கு தப்பாம இரு .என் பிராணனை வாங்குங்கோ .ஏன்னா அங்க என்ன முழிச்சுண்டு இருக்கேள். வாங்கோ எஸ்கேப் ஆயிடலாம் .முன்னாடி இவனாலே குருவாயூர்லே ஐநூறு செலவு, ஞாபகமிருக்கோன்னோ.. ‘

‘ சாம்பாருக்கும் தலைகாணிக்கும் என்ன சம்பந்தம் மிஸ்டர் சாம்பு ? ‘

‘புஸ்தகம்தான் , வண்டால வச்சு தள்ளிண்டுபோனான் . பத்துரூபா சொன்னான்….. ‘

‘அப்பா அங்க பார் , சுந்து மூச்சாவெ ரெண்டு வெள்ளைக்கோங்கு மோந்து பாக்குது .. ‘

கோபாலன் முகவாயை தட்டியபடி யோசிக்க , சாம்பு ‘எஸ்பரான்டோ ‘ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்

‘அப்பா வெள்ளைக்கோங்குக்கு வால் உண்டா ? ‘

***

‘ வெல் வெல் மை டியர் வாட்சன் .. ‘ என்றார் ஹோம்ஸ் . ‘ லண்டனில் 221, பி .பேக்கர் ஸ்ட்ரீட்டிலிருந்து இந்த இந்திய கோடை வாசஸ்தலத்துக்கு நாம் வந்தது இப்படி ஒரு சிக்கலான கேசில் மாட்டிக் கொள்வதற்காக அல்ல என்று எண்ணுகிறேன் ‘

‘ஷ்யூர் மிஸ்டர் ஹோம்ஸ் ‘என்றார் வாட்சன் . ‘ஆனால் நாம் எப்போதுமே துப்பறிந்தபடித்தான் இருந்தாகவேண்டும் .ஏனெனில் நீங்கள் ஹோம்ஸ் .நான் வாட்சன் , இந்த வெயில் தேசத்தில்கூட டார் ஸ்டாக்கர் தொப்பி , கிரேட் கோட் , கனத்த பூட்ஸ் ,புகையும் பைப் எதையுமே நீங்கள் விட்டுவிடவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது ‘

‘கிரேட் ஸ்காட்! ‘ என்று ஹோம்ஸ் அவரது வழக்கப்படி சாதாரணமாக வியந்தார் ‘ உண்மை .நீங்கள் கூட உங்களுக்கு அளிக்கப்பட்ட வேடத்திலேயே இருக்கிறீர்கள் . இப்போது இந்த திரவம் எந்தவகையானது என்று எண்ணுகிறீர்கள் ? ‘

வாட்சன் தரையில் சிந்திக்கிடந்த அந்த நீரடையாளத்தை மீண்டும் கூர்ந்து பார்த்து , ‘ சோடியம் குளோரைட் கலந்திருப்பது சுவையில் இருந்து தெரிகிறது . அமிலத்தன்மை சிறிது இருக்கலாம் . விஷத் திராவகமாக இருக்க நியாயமில்லை மிஸ்டர் ஹோம்ஸ் .காரணம் எறும்புகள் மொய்க்கின்றன. ‘

‘மேலும் நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்கள் . ‘ என்று ஹோம்ஸ் புகை விட்டார் ‘ மிஸ்டர் வாட்சன் இதை கவனியுங்கள் ,அது ஒரு மிருகத்தின் சிறுநீர் . ‘

‘அடக்கடவுளே , சரிதான் ‘ என்றார் வாட்சன் ‘ எப்படி கண்டுபிடித்தீர்கள் ஹோம்ஸ் ? ‘

‘ஆரம்பப்பாடம் மிஸ்டர் வாட்சன், இந்த வராண்டா இக்கட்டிடத்தின் வடக்கு எல்லை . சில குறிப்பிட்ட வனமிருகங்கள் தங்கள் எல்லையை இவ்வாறு சிறு நீர் மூலம் அடையாளப்படுத்துவதுண்டு . ‘

‘அப்படியானால் இந்த விடுதியில் ஒரு பயங்கர வனமிருகம் உலவுகிறது! ‘ வாட்சன் தொப்பியை சரிசெய்தபடி ‘ இதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை! ‘

‘ஆம் , அது நம்மிடையே வாழ்கிறது ‘ தீர்க்கதரிசிகளுக்கே உரிய ஆழமான குரலில் ஹோம்ஸ் சொன்னார் .

[தொடரும் ]

***

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts