மா. சிவஞானம்.
கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், ப்பதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எதிர்பக்கம் ருந்த சோபாவில் உட்கார்ந்து அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கும்போது,
‘ஒவ்வொரு முறையும் தொலைபேசியில வருவது நீங்கதானே ‘ என ஆரம்பித்தேன்.
‘ஆமா, நாந்தான். அவங்கெல்லாம் வேலைக்குப் போயிடறாங்க, பிள்ளைங்க பள்ளிக் கூடத்துக்குப் போயிடறாங்க. நாந்தான் ஒண்டியா வீட்ல இருக்கேன் ‘
இவ்வளவுதான், எனக்கு முப்பது வருஷங்கள் நெருக்கமானவர் போல் திடாரென இங்கிருந்து மளமளவெனப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியொரு பேச்சு. அம்மாடி எவ்வளவு காலம் இப்படியே கழிஞ்சிடுச்சி. இன்னும் பல வருஷங்களுக்கு யாரும் என்னோடு பேசவேண்டியதில்லை. வெகு காலம் தாங்கும்.
ஏனோ தெரியவில்லை. அவங்க பேசப்பேச வசப்பட்டு கவனிக்கையில் எனக்கு மனசு லேசாகிப்போய் அந்த அம்மாவோட மனசு செரம்பான் தோட்டத்துப் பக்கங்களிலும் என்னோட மனசு தமிழ்நாட்டுக் கிராமத்திலும் திரிவது போன்ற உணர்வு.
சோபாவில் வசதியான போக்கில் உட்கார்ந்து கொண்டு சொன்னார்,
‘இப்படித்தான் அன்னிக்கி முருகன் சன்னதியில உட்கார்ந்திருந்தேன். ஒன்ன மாதிரிதான் அவனும் இருந்தான். எளவயசு பையன். மொகமெல்லாம் வேர்த்துப் போயி, ஒடம்பெல்லாம் வெலவெலத்து ஆடி, முருகனையே பாத்துக்கிட்டு உட்கார்ந்திருந்த எம்பக்கத்தில வந்து விழுந்தான். பசி, பயம் ரெண்டுமே அவன நல்லா இறுக்கிப் பிடிச்சிருந்தது. எம்மவன் ஞாபகத்தக் கெளப்பிவிட்டுட்டானே, பாவி நானென்ன பண்ணுவேன் ? ‘
என் பாட்டி பொலம்பிக்கிட்டிருந்தா. ‘ஆள கொல்ற சாராயத்தக் குடிச்சி நெஞ்சு வெடிச்சி அவனக்கொன்னுட்டு போயிடுச்சி. அந்த துக்கந்தாங்காம எலும்ப உருக்கி அவளயும் கொன்னுட்டு போயிடுச்சி. வெரல் சூப்பிக்கிட்டிருந்த பிள்ளைங்கள உருப்படி பண்ணிவிடறதுக்குள்ளார என்னோட பாதி உயிரும் போயிடுச்சி. இவன் என்னாடான்னா இருக்கறத உட்டுட்டு பறக்கறத புடிக்கப் பாக்கறான். பாவி நானென்ன பண்ணுவேன் ? ‘
காவேரிப்பட்டணத்தில எல்லா காரியத்தையும் முடிச்சாச்சி. பாட்டி காதுல தொங்கின கம்மலும், கழுத்தில தொங்கின செயினயும் பணம் பண்ணியாச்சு. பஸ்ஸ பிடிக்கிறதுக்கு முன்னால பாட்டி ரொம்ப விரும்பும் காவேரிப்பட்டிணம் கொடி வெத்தலை கூட ஒரு கட்டு வாங்கியாச்சு.
வெத்திலைக் கட்டை வாங்கி மடியில வைச்சிட்டு பக்கத்தில உட்கார்ந்திருந்த என்னைப் பச்ச குழந்தையை முதமுதல்ல பார்க்கறமாதிரி என் தலையை கோதிக்கிட்டுருந்து சொன்னா, ‘ கையக் கழுவிட்டு போயி சாப்பிடு கண்ணு ‘
வாடாத கொழுந்து வெத்திலை மாதிரி கண்ணுக்கு முன்னால இப்பவுந்தெரியுது, சாப்பாட்டு ருசியுந்தான். வாரதுக்குச் சில வாரங்களுக்கு முன்னமே எப்பவும் உம்முன்னு மூஞ்சிய வச்சிக்கிட்டுருந்தா கமலா. ‘அவ கல்யாணத்தப் பாக்காம என் உசிரு போகாது ‘ன்னு சொல்லுவா பாட்டி.
‘அதோ அந்த முருகனப் பாத்து வைராக்கியமாச் சொன்னேன் – அந்த சிறுசுங்கள ஈடேத்தாம என் உசிரு போகாதுன்னு. பதைக்க பதைக்க எம்மவன அங்கதான் கொண்டாந்து போட்டாங்க. மலையுச்சியிலிருந்து உருண்டு போற கல்லு மாதிரி எங்கள விட்டுப் போனான் எம்மவன்.
நெல்லெல்லாம் பதரா வெளஞ்ச காலத்தில, சொக்கலிங்கந்தான் எங்கப்பன கூட்டி வந்தாராம். ‘நீங்க போங்க, இன்னும் ஆளுங்கள கூட்டி வரனும் ‘ன்னு சொல்லி அப்பாவ ஏத்திவிட்டாராம். சொந்தக் காரனுக்குத்தான் கரை ஏத்திவிட மனசு வரும்ன்னு நெஞ்சு நெறஞ்சி காலெடுத்து மொத அடி வச்சாராம். காசு பணம் பாத்து காவேரிப்பட்டணம் திரும்பிடலாமென்ற நெனப்போட ரெண்டாவது அடி வச்சாராம். அதுக்கப்புறம் வுழுந்ததெல்லாம் மலை நாட்டில பெய்யற மழையும் இடியும் போல அடிகள்தாம்ன்னு அடிக்கடி பொலம்புவார். அதென்னமோ அவருக்குத்தான் அப்படியிருந்துச்சு. எங்களுக்கெல்லாம் பழகிப் போயிடுச்சு.
‘வெளச்சல் பூச்சியடிச்சாலென்ன புழு தின்னாலென்ன, நிரம்பி நீர் வழியும் கெணறு ஏராளம். ஒதுங்கி ஓரமா நின்னு ஒரு வீசு வீசிட்டாலே சீலைத் துணி பிடிச்சுடுமே மீனு ஒரு வள்ளம். இருக்கறத விட்டுட்டு பறக்கறத புடிக்கறதும் ஒரு பொழப்போ ‘ன்னு அடிக்கடி சொல்வார். ‘
‘இரு வரேன் ‘ன்னுட்டு போய் வெத்தலையக் கொண்டுவந்து புடவையில் துடைத்துவிட்டு, ‘ காவேரிப் பட்டணத்துக் கொடி வெத்தலை மாதிரி மணம் வருமா! ‘ன்னு சொல்லிக்கொண்டே வாயில் போட்டு அதக்கிக்கொண்டார்.
‘பிடுங்கி நட்ட மரமாயிருந்துவிட்டுப் போயிட்டார் எங்கப்பா. தானா மொளச்சதப் போல நாங்க வளந்தோம். லயம் லயமாவே இருந்திச்சி, நாங்க நாங்களாவே இருந்தோம்.
நீயும் என்னோட ஒட்டனவனா ஆயிட்டே. அதனால என்னுள்ளேயே குமைஞ்சிக்கிட்டிருந்த இந்த ரகசியத்த உங்கிட்ட சொல்லுறதல தப்பில்லை.
ஹே, ஹே.. எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுட்டிருக்கானுங்க, மடப் பசங்க. அப்பதான் எனக்கு ஒன்னும் தெரியல, பாவி, சொன்னதை நம்பிட்டேன். இப்பவுமா எனக்குத்தெரியாது ?
‘பள்ளிக்கூடங்க அஞ்சாறு மைல் தள்ளிக் கெடக்கு. பஸ்ஸுக்குக் குடுத்தே மாளல. குடுக்குற கூலி கட்டுப் படியாகாது, கூட்டிக் குடுக்கனும் ‘ன்னு கேட்டவன நாலு தடிப் பசங்கள வச்சு அடிச்சுக் கொன்னுபுட்டு வாயில சம்சு (சாராயம்) ஊத்தி, போதையில உம்மவன் ஓடற பஸ்ஸிலிருந்து இறங்கும் போது மல்லாக்க உளுந்துட்டான் ‘னு சொல்லி நம்பவச்சானுங்க. ஏற்பாடு பண்ணதே அந்த சொக்கலிங்கந்தான் ஒன்னுந்தெரியாததப் போல வந்து துக்கம் விசாரித்தான் பாவி. ‘
எனக்குள்ளே ‘பளிச் ‘சுன்னு ஏதோ தெறிச்சது. சோபாவில சாஞ்சு கண்ண மூடினேன். அர்த்தஜாமத்தில கலை நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிகிட்ட இருந்து சன்ன இழையில் பாட்டுக்கும் பேச்சுக்கும் இடைப்பட்ட குரல் வந்துகிட்டேயிருந்தது. அரைத்தூக்கத்திலிருந்த எனக்கு எப்படியோ இருந்தது. பயங்கலந்த அமைதியை மெல்லிசா அக்குரல் கிழித்தவிதம், என்னால சொல்லத்தெரியாத சோகம் என்னை நிரப்பியது. சுவத்தப் பார்த்து பாட்டி சொல்லிக்கிட்டிருந்தா :
‘நெஞ்சுதான் வெடிச்சதோ இல்ல
நெடுங்கெணத்துல தள்ளினானோ
மண்டித்தான் கெடக்குது துக்கம்
மாளாத பாரம் நெஞ்சுக்குள்ள
அள்ளி வெளியே கொட்டிடுவே
நீ இருந்தா என்னருகே
அமுங்கித்தான் கெடக்குது என் நெஞ்சு
ஆர் இனி வருவானோ, கண்ணு
நீ தூரதேசம் போயிட்டா ?
……………………………………………. ‘
உடம்பெல்லாம் வெலவெலத்து ஆடியது. கொஞ்ச நேரம் மனச அமைதியாக்க முயன்றேன். கண்ணுல இருந்து பொல பொலன்னு நீர் எறங்குறத மட்டும் கட்டுப் படுத்த முடியல.
என் தலையக் கோதிவிட்டுட்டுச் சொன்னாங்க, அந்த அம்மா,
‘கையக் கழுவிட்டு வா கண்ணு சாப்பிடுவ, பசியால உடம்பு ஆடுது. ‘
நான் சாப்பிடுவதையே பார்த்துக்கிட்டு இருந்தவங்க சொன்னாங்க,
‘ கண்ணு கலங்கக் கூடாது. பல்லைக் கடிச்சுகிட்டு இன்னுங்கொஞ்ச நாள் ருந்தாத்தான் ஊர்ல பட்ட கடனையெல்லாம் அடைக்கமுடியும். தங்கச்சி கல்யாணத்தையும் நல்லபடி நடத்திக் கொடுக்க முடியும்.
தைர்யமா இருக்கனும். அதோ அந்த வாழைக் கன்னுங்க ருக்கே அங்கதான் வெளயாடிக்கிட்டிருந்தானுங்க. பொடிசுங்க. எம்மவன் பொணத்தாண்ட வாழை இலையில பிக்கி பண்ணி ஊதிக்கிட்டு வெளையாடிக்கிட்டிருந்தானுங்க. இப்ப உருப்படியாயிடலியா ? அப்பல்லாம் என் வீட்டுக்காரர் கூட இல்லை. ஜப்பான்காரன் இழுத்துக்கிட்டு போனதக்குப்புறம் வரவேயில்லை. தனியாத்தான் கெடந்தேன். முக்கால்வாசி நேரம் சுவத்துக்கிட்டதான் பேசிக்கிட்டிருக்கேன் – சொந்தக்காரங்களவிட நல்லது, சொல்ல சொல்ல அமைதியா கேட்டுக்கிட்டேயிருக்கும். நீ பேசியிருக்கியா எப்பவாவது ?
அந்த ரப்பர் காடுங்கூட சுவத்தப் போலதான், நம்மல சுத்தி எழுப்பின மதில் மாதிரி. சுத்தி சுத்தி இங்கதான் அலைஞ்சாகனும்.
அந்தப் பையனும் அப்படித்தான். உன்னை அச்சில் வார்த்தது போல. இங்கேதான் பக்கத்துல ஏதோ தோட்டத்துல வச்சிருக்காங்களாம், போலீஸ் கண்ணுல படாதபடி. வேலை செய்யற இடமும் தூங்கற இடமும் ஒன்னுதான். ராத்திரில பண்ணிரண்டு மணிநேரம் தச்சவேலை. பகல் முழுக்கத் தூக்கம் ‘
சிறுகச் சிறுக அணு அணுவாய் என்னுள் பரவி நானேயாகி அவர் பேசுவதாக ஒரு பிரமிப்பு. அப்படியோர் ஈர்ப்போடு பேசிக் கொண்டிருந்தார். நான் என் நிலையிலில்லை.
‘ஆமாம், இவ்வளவு தூரம் வந்திருக்கியே, பாஸ்போர்ட் கையில வைச்சிருக்கியா ? ‘
நான் வெறுமனே விழி பிதுங்க முழித்தேன்.
‘அட நான் ஒரு யோசனையும் இல்லாதவ. இருக்குதோ இல்ல மெரட்டிப் பிடுங்கிக்கிட்டாங்களோ. ரெண்டு மாசமா சம்பளமே தரலியாம். பாஸ்போர்ட்ட விட்டுவச்சா ஓடிடுவாங்கன்னு அடிச்சி பிடுங்கிக்கிட்டானாம். டிப்ளமோ படிச்சுட்டு பேக்டரியில நல்ல வேலையிலிருந்த பையங்கிட்ட ஆச காட்டி காச வாங்கிகிட்டு இங்க வந்துவிட்டுட்டானாம் ஏஜண்ட் சொக்கலிங்கம். குரலே வரல அவன் சொல்லும்போது. ‘
எனக்கு மறுபடியும் வேர்த்தது. ஏதும் பேசாமலிருந்தேன். புரிந்தது போல ஜில்லுன்னு பெரிய டம்ளரில் மாம்பழச் சாறு கொண்டு வந்து என் முன் வைத்து விட்டுச் சொன்னார்,
‘குமரேசன் ரொம்ப நல்லவன். போன மாசம் ஊருக்கு அனுப்ப நீ கொடுத்த பணத்துல அம்பது வெள்ளி செலவு பண்ணிட்டாந்தான். ஆனா கொடுத்துடுவான் பாரு. அவனோட ரெண்டு கொழந்தைங்களுக்கும் ஜொரம், நிக்கவேயில்லை. உன் பணத்துலதான் அவங்கள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனான் ‘னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே கூச்சலும் கும்மாளமுமாய் ஒரு குட்டிப் பெண் ஓடிவந்து அந்த அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். பின் சாய்ந்து பாட்டியின் கழுத்தைக் கைகளால் பிணைத்துக் கொண்டாள். அந்தக் குட்டிப் பெண்ணின் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டுச் சொன்னார்கள்,
‘என் பேத்தி வ. வந்துட்டாள்னா பொழுது போவதே தெரியாது. இதுக்காகவாவது சொந்தம்ன்னு சொல்லிக்க யாராவது வேணும், ஆமா, உனக்கு யாராச்சும் சொந்தக்காரங்க உண்டா இங்க ? ‘
‘நீங்கதான் எங்களுக்கு சொந்தக்காரங்க ‘
‘அப்படித்தான் ஆகட்டும். நாம எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தக்காரங்கதான். ‘
நான் தீண்டப்பட்டவிதமும் என் பதிலால் அந்த அம்மா ஆட்பட்டவிதமும் ஒரேமாதிரியாக இருந்தது.
நான் திரும்பவும் சோபாவில் சாய்ந்து கொண்டேன்.
என் தோளில் குமரேசனின் கைபட்டு நான் நிமிர்ந்தபோது சுவற்றைப் பார்த்துவிட்டுப் பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்,
‘வந்து ரொம்ப நேரமாச்சா ? ‘
‘இல்லை, உங்கம்மாகிட்ட பேசிக்கிட்டருந்ததில் நேரம் போனதேத் தெரியலை. எனக்குச் சொந்தக்காரங்க யாராவது இங்க இருக்காங்களான்னு கேட்டாங்க. அவங்கதான் எனக்குச் சொந்தம்ன்னு சொல்லிட்டிருந்தேன்.
குமரேசன் சொன்னார், ‘அது எங்க அம்மா இல்ல, எங்க பாட்டி. கொஞ்ச நேரங் கழிச்சி போஸ்டாபிஸ் போய் ஊருக்கு உன் பணத்தை அனுப்பலாம். ஊர்ல, காவேரிப் பட்டணத்திலேந்து தெரிஞ்சவர் ஒருத்தர் வரார். அவருக்காகக் காத்திருக்கேன். நாளைக்கு பாட்டிக்கு திதி. பாட்டிக்கு ரொம்ப பிடிச்ச காவேரிப் பட்டணத்துக் கொடி வெத்தலை கொண்டு வரார். ‘
சுவரைப் பார்ப்பது போல வெறுமனே குமரேசனைப் பார்த்தேன் நான்.
***
msgnanam@tm.net.my
- சொந்தம்.
- வெள்ளைக் காகிதம்
- அழகிப்போட்டி
- சூரிய குடும்பத்தின் புதிய புறக்கோள்கள் யுரேனஸ், நெப்டியூன்
- ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன
- மதிப்புரை – மகாராஜாவின் ரயில் வண்டி – அ. முத்துலிங்கம்
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- எனக்குப் பிடித்த கதைகள் – 16 – அளக்க முடியாத கடல் – மக்சீம் கோர்க்கியின் ‘சிறுவனின் தியாகம் ‘
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- பழைய பொன்மொழிகள்
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- சிறுத்த இருத்தல்
- எதை நிறுத்த ?
- வைகுண்டக் குடும்பம்
- சதுரம்.
- காலத்தின் கணக்கு
- கடவுளின் கடந்த காலம்
- ’20ஆம் நூற்றாண்டில் சீனா-இந்தியா போட்டி ‘ : ஜான் டபிள்யூ கார்வர் எழுதிய புத்தகத் திறனாய்வு
- இன்று நடிகர் சங்க கட்டிட நிதி – நாளை வருமான வாி பாக்கி… தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்கள் புறக்கண
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- ‘தனிமைப்படுத்திக்கொண்டால் தேங்கித் தான் போவீர்கள் ‘
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது
- இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)
- கனவு
- சொல்லமுடியாதது..
- புலன்களின் சுகம்
- ஆலவிருட்சம்
- சில கேள்விகள்