வடிகால்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

துரைசாமி


காரணம் தெரியும் முன்பே சிலரை பிடித்து போய்விடுகிறது, அறிவிற்கு எட்டாத ஏதோ ஒன்று. அவர்களுடைய அண்மை, நெருக்கம், மோனம் எல்லாமே இனிமையாய் ஆகிவிடுகிறது. மனதின் ஏதோ ஒரு முலையில் அவர்களுடைய நினைவு விகசித்துக்கொண்டேயிருக்கிறது. ரவிக்கும் மணியை பற்றி நினைக்கும் பொழொதெல்லாம் அப்படித்தான். இந்த நான்கைந்து வருட பழக்கத்தில் அவனுடைய அண்மை இனிமையாய் சந்தோசமாய் தானிருந்திருக்கிறது, மணி செல்லும்மிடமெல்லாம் உடன் சென்று குடிபுகுந்து கொள்ளும் கலகலப்பு, சந்தோசம், ஒரு சிலருக்குத்தான் அப்படி.

சென்னையில் தங்கி வேலைபார்க்கும் பிரம்மசாரிகளுக்கு அடைக்கலம் தரும் திருவல்லிகேணி மேன்சன்களை தவிர்த்து தனியே வாடைக்கு வீடு எடுப்பதில் ஆரம்பத்தில் மணிக்கு அத்தனை விருப்பமில்லையென்றாலும், அதன் இனிமை நாட்களை ரம்யமாக்கிக்கொண்டிருந்தது. நல்ல மழை நாட்களில் போர்டிகோவின் அந்த சிமிண்ட்திண்டில் அமர்ந்திருக்கும் அந்த கணங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்காகவே பிறந்துகொண்டிருப்பதாக தோன்றும். சிமிண்ட்திண்டு வரை மெல்லிதாகபரவும் மழைசாரல், தென்னைமரத்தின் ஓலையிலிருந்து சரசரவென்று மண்ணில் விழுந்து கொண்டிருக்கும் மழைதுளிகள், பொத்தல் குடையை பிடித்துக்கொண்டு நிற்பதுபோல் நிற்கும் மாமரம், தெருவோரம் மழைநீரில் ஓடும் காகித கப்பல்கள், மழை சாரலில் புடவையும் வேட்டியும் சரசரக்க வேகமாக போய்கொண்டிருக்கும் மனிதர்கள்…. இந்த ஒவ்வொரு கணங்களும், வாழ்க்கையே மூன்று எட்டு மணிநேரங்களாக சிதைந்து ஓடிக்கொண்டிருப்பதை மறக்க அடித்துவிட கூடியதாய் இருந்தது.

எட்டு மணிநேர தொழிற்சாலை வாழ்க்கை ? … பேசிபேசியே தங்களது பொருமலையும், ஆதங்கத்தையும் தீர்த்துகொள்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசபட்டு கொண்டிருக்கும் பேச்சுக்களும், வாரத்தில் நான்கு நாட்களே கிட்டும் – நீர்த்து போய்விட்ட இரவின் சுகமான தூக்கமும், தன்மேல் வேர்பாவி ஆலவிருட்மாக வளர்ந்துவிட்ட புகைக்கும், கெமிக்கல் வாடைக்கும் மத்தியில், சுண்டுவிரலை அழுத்திக்கொண்டிருக்கும் ஷுக்களுடனும், நசநசவென்று தோலோடு ஒட்டிக்கொண்டு பாதத்தை அன்னிய படுத்திக்கொண்டிருக்கும் காலுறைகளுடனும் கண்சிமிட்டாது…. இன்னும்….இன்னும்……போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கம் எட்டு மணி நேரங்கள்….

எட்டு மணி நேரமே சிரமமென்றால், ரிலிவர் வரவில்லையென்றால் அடுத்த எட்டு மணி நேரத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். தொழிற்சாலை விதிமுறைபடி மறுப்பு கூற இயலாது. மணி தனக்கு ரிலிவராக அமைந்ததில் ரவிக்கு மிகவும் செளகரியமாகயிருந்தது. முன்அறிவிப்பின்றி அவன் விடுப்பு எடுப்பதில்லை. மணியை பற்றி நினைக்கும் பொழுத்தெல்லாம் ரவிக்கு பெருமையாயிருந்தது. எந்த நேரத்திலும் தான் தானகவும் அவன் அவனாகவும் தங்காளால் கலந்திருக்க முடிந்ததில் அவனுக்கு சந்தோசம்தான். தன்னுடைய உலகத்தில் தானும், அவனுடைய உலகத்தில் அவனும், இருவரும் தங்கள் சொந்த முகங்களுடன் பொய்யின்றி சங்கோசமின்றி எப்பொழுதும் உலவிக்கொண்டிருக்க முடிந்திருக்கிறது.

அன்று உலக கால்பந்து இறுதி போட்டி, மதிய ஷிப்டில் இருப்பவர்களுக்கு ஒருமித்த கருத்துதான், மரோடான ரசிகர்கள் விளையாட்டை தியாகம் செய்துவிட்டு எட்டு மணி நேரம் இங்கு வந்து கண்விழித்துக் கொண்டிருப்பார்களாக என்று.

‘ ‘இன்னைக்கு உன்னை ரீலிவ் பண்ண மணி வந்துடுவானா ? ‘ ‘

‘ ‘….ம்…கண்டிப்பா….. ‘ ‘

இரவு பத்து மணிக்கு வந்து ரவியை விடுதலை( ?) செய்ய வேண்டிய மணி வரவில்லை. ரவியின் நடையிலும், முகத்திலும் பத்து வயது கூடிவிட்டது. ஒரு சில முகங்களை தவிர மற்றவையெல்லாம் எட்டுமணி நேரமாக பார்த்துக்கொண்டிருந்த முகங்கள், இன்னும் முழுதாக எட்டு மணி நேரம்…..ரவி அசுவாசமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

‘ ‘ஹேய்…உனக்கும் ஆள் வரலையா ? ‘ ‘

நமட்டு சிரிப்புடன் நகர்ந்தவனின் வார்த்தைகள் ரவிக்கு மொசமொசவென்று உள்ளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. அவன் தலைமயிறை கொத்தாகபடித்து அவனுடைய குண்டு முக்கு சிதறிவிடும்படி ஒரு குத்துவிட வேண்டும் என்று தோன்றிய எண்ணங்களை மிகவும் சிரமப்பட்டு அடக்கிகொண்டு, முகத்தை திருப்பிக்கொண்டான். ரவிக்கு தன்னுடைய முகத்தை பார்க்கவே எரிச்சலாயிருந்தது, இனிமையும் சந்தோசமாகவும் வளையவந்துகொண்டிருந்த தன்னுடைய முகம் – மனம் எப்பொழது என்று உணர்ந்து கொள்ளும்முன்னே தன்னிடமிருந்து கழன்று போய்விட்டதை ஜீரணிப்பது சிரமமாய்யிருந்தது.

தன்னுடன் ஒன்றாய் தங்கியிருக்கும் மணி, மற்றவர்களைவிட தன்னை அதிகம் நேசிக்கும் மணி, இப்படி நம்பிக்கை சிதைய நடந்துக்கொண்டதை ஜீரணிக்க எட்டு மணி நேரம் போதுமானதாக தோன்றவில்லை. ஜிவுஜிவென்று எரிச்சலுடன் கரிக்க ஆரம்பித்துவிட்ட கண்கள், நேரம் தெரியாமல் சம்பாசனைக்கு வரும் தூக்கம், காற்றாடியை போட்டவுடன் சுளீர் என்று பனியன் போடாத மார்பை தாக்கும் குளீர், காற்று நின்றால் துணியை இலட்சியம் செய்யாமால் வந்து உடலெங்கும் அப்பிக்கொள்ளும் கொசுக்கள், மிதித்துக்கொண்டு மேலேறதுடிக்கும் மனிதர்கள், பனிமுட்டத்தில் மெலிதாக படர்ந்து நெடியை பரப்பிக்கொண்டிருக்கும் குளோரின் – இவற்றிக்கிடையே திறந்திருந்த சட்டர் கதவின் வழியே மினுங்கி கொண்டிருந்த மெர்க்குரி விளக்கையும், அதற்கு மேலே…மேலே…சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பார்த்தபடி அசைவற்று அசையமறந்து ரவி உட்கார்ந்திருந்தான்.

காலையில் இவன் அறைக்கு சென்றபொழுது மணி இவன் வரவை எதிர்பார்த்து வாசலிலே உட்கார்ந்துக்கொண்டிருந்தான். மணியின் அண்மை, நெருக்கம் நிறைய நேரங்களில் ரவியை சந்தோசபடுத்தியிருக்கிறது. ரவி எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

‘ ‘ டேய் நேத்து ரமேஷ் மேரேஜ் பார்ட்டி கொடுத்தான்ல, அதுக்கு போயிருந்தேன் நேரமாயிட்டு….அவசரமா கிளம்பினேன்…பஸ் மிஸ் பண்ணிட்டேன்….. ‘ ‘

‘ ‘உன் லீவு எதுக்காவது போடுவே என்கிட்ட எதுக்கு சொல்ற……. ‘ ‘

மணிக்கு முகம் சுண்டிவிட்டது. எதுவும் பேசாமல் லுங்கி மாற்றிக்கொண்டு சமையலறைக்குள் சென்ற ரவியின் பின்னே சென்றான். இருவருக்குமிடையே சகஜமான மவுனம் இன்று மிக பெரிதாய், மூர்க்கமாய் கத்தியபடியே இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் சமயல்காரம்மாள் காற்றுபடாத சமையலறை அலங்கோலமாய், புளிச்சபாலின் வீச்சமும், கழுவபடாத பாத்திரங்களும், சமையலறை தொட்டியில் குழம்பாக தேங்கியிருந்த தண்ணீரின் குமட்டல் வாடையும் – இது எதற்கும் ஒவவ்வாமல் அன்று காலையில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பாலும், முடிகள் அடர்ந்த வெற்று மார்புடன் நின்று கொண்டிருக்கும் மணியும் – ரவி எதுவும் பேசாமல் வெறுமனே நின்றுகொண்டிருந்தான்.

சமையலறை மேடையில் பரவிகிடந்த எச்சில் தட்டுகளையும், ஊசிபோன குழம்பிருந்த சட்டியையும், இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்த அவரைக்காய் பொரியல் இருந்த கிண்ணத்தையும் – தன் பலம் அத்தனையும் பிரயோகித்து இடது கையால் ஒரே தள்ளு, அத்தனை பாத்திரங்களும் தடதட வென்று சப்தத்துடன் தொட்டியில் போய்விழுந்தன. சப்தம் அடங்கும் முன் உறை கூற்றாது திரிந்து போயிருந்த பாலை அதே வேகத்துடன் திறந்திருந்த ஜன்னல் வழியே விசிரியடிக்க குப்பென்று புளிச்சவாடை சமையலறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. ரவியின் முகத்தில் ரெளத்திரம் பொங்கிற்று. அங்கிருந்து மறைந்து விட்ட மணியை கவனியாது போல் ரவி பால் பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தான். துருபிடித்திருந்த கம்பியில் திப்பிதிப்பியாக ஒட்டியிருந்த பால், முகம் முழுதும் பற்கள் முளைத்துவிட்ட கோரத்துடன் – மேலிருந்து சொட்டு சொட்டாக வழிந்துக்கொண்டிருக்கும் புளிச்ச பாலை ஜீரணிக்க இயலாது நின்று கொண்டிருந்தது.

பளீரென்று மின்னிக்கொண்டிருந்த பால்பாத்திரத்தையும், புளிச்ச வாடையுடன் அழுதுகொண்டிருந்த ஜன்னலையும் ரவி சிறுது நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் அசுவாசமாய், வேதனையாய் இருந்தது. ஒருபாவமும் அறியாத இந்த ஜன்னலை தான் இத்தனை கோரப்படுத்தியது அவனை பெரிதாக நிலைகுலைய அடித்ததுக்கொண்டிருந்தது. சமையலறையின் புழுக்கத்தையும், அலுப்பையும், மறக்ககூடிய ரம்மியமான தோட்டத்தை தான் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்க உதவிய இந்த ஜன்னலை – பெரிதாக கம்பியின் நிழல் விழுந்தாலும் அறை முழுவதும் பளீரென்று வெளிச்சமயமாக ஆக்கிவிடகூடிய ஒளியை தன் இடைவெளி வழியே அனுமதித்துக்கொண்டிருந்த

ஜன்னலை – மணியை தான் இத்தனை காயப்படுத்தியது….

ரவி சிறிது நேரம் அப்படியே அடுப்படி மேடையில் சாய்ந்து கொண்டான். மணியை இயல்பாக கண்கள் தேடியது. அவன் முகத்தை எதிர்கொள்ள சஞ்சலாமாகயிருந்தது. ஊர் இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை, மணி போர்க்கோவின் சிமின்ட்திண்டில் உட்கார்ந்திருந்தான். மாமரத்தில் குருவிகளின் சலசலப்பை தவிர சப்தம் எதுவுமில்லை. ரவி மணியின் அருகே அமர்ந்துக்கொண்டான்.

‘ ‘ பாலு சஸ்பெண்ட் விசயமா வக்கிலை பாக்கனுமுனு சொன்னியே எப்பபோர ? ‘ ‘ மணியிடமிருந்து வார்த்தைகள் மட்டும் வந்தன, இமைகள் மூடியேயிந்தது.

ரவி மணியின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக்கொண்டான்.

‘ ‘இப்ப கிளம்பிதான் அவர் கோர்ட்டுக்கு போரத்துக்கு முன்னால வீட்டல பார்கலாம்… ‘ ‘

மணி கைகளின் வெதுவெதுப்பு, மெல்ல பரவிய இதமான அழுத்தம்….. ரவி அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டான். விடியலின் அறிவிப்பாய் சாலையில் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.

******

ttpoondi@emirates.net.ae

Series Navigation

author

துரைசாமி

துரைசாமி

Similar Posts