லாவண்யா
பளபளவென்று எல்லா பக்கமும் விளக்குகள் எாிந்துகொண்டிருந்தபோதும், அந்த விமானநிலையம் முழுதும் இருளில் இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஏனோ, மனது தனிமையை இருட்டுக்கு சம்பந்தப்படுத்திவிடுகிறது. ஆனால் தனிமை என்பதும் சாியில்லை, சுற்றிப்பார்த்தபோது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கங்கே கொத்துக்கொத்தாய் உட்கார்ந்தும், சாிந்தும், படுத்துக்கொண்டும். இத்தனைபேர் மத்தியில் இருந்துகொண்டு எப்படித் தனிமை என்று சொல்வது ? இவர்களில் யாரும் பேசுமளவு பழக்கமில்லை என்பதாலா ?
ஏன் இப்படியெல்லாம் உபயோகமில்லாமல் யோசிக்கத்தோன்றுகிறது என்று அவனுக்குப் புாியவில்லை, எப்போதும் இல்லாமல் என்ன இது புதுப்பழக்கம் ? தூக்கம் வருகிறது, ஆனால் தூங்கமுடியாத நிலைமை – மனசு ஏதேதோ புலம்ப ஆரம்பித்துவிட்டது.
இமைகளின்மேல் கனமாக உட்கார்ந்திருக்கிற தூக்கத்தை விரட்டுவதற்கென்று சுற்றியிருந்தவர்களை மெல்லமாய் இன்னொருதரம் நோட்டமிட்டான் – அநேகமாய் எல்லா வயதுக்காரர்களும் இருந்தார்கள். ஏழோ, எட்டோ வயதுப்பிஞ்சு ஒன்று நீலஜீன்ஸ் அணிந்து அம்மா மடியில் படுத்தபடி ஆங்கில காமிக்ஸ் வாசித்துக்கொண்டிருந்தது. இரண்டு பையன்கள் எதிரெதிர் சோில் உட்கார்ந்து ஒருவர் மாற்றி ஒருவர், ‘ஒன் அப் ‘, ‘டூ அப் ‘ என்று நெஞ்சைத்தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரே மாதிாியாய் கறுப்பு ஜெர்கின் அணிந்த இரு பெண்கள் சுற்றிப்பார்த்தபடி ரகசியம் பேசிக்கொண்டிருக்க, எதிர்சீட் வாலிபன் அவர்களில் ஒருத்தியை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி கையிலிருந்த புத்தகத்தில் கவனம் செலுத்த முயன்றான். வயதான ஒரு தம்பதி நடுவில் சூட்கேஸைத் திறந்துவைத்து சட்டை, பேன்ட் எண்ணி சாிபார்த்துக்கொண்டிருந்தது. இறுதி வாிசையில் ஒரு கோட்-சூட் ஆசாமி வேகமாய் சான்ட்விச் மென்று நிறைய கோக்குடித்தார்.
இரண்டு நிமிடத்துக்குள் அவனுக்கு அந்த விமான நிலையம் சலித்துப்போனது. எல்லோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அனைவர் முகத்திலும் பொதுவான ஒரு களைப்பு தொிந்தது. நிறைய பயணித்துவந்த அலுப்பாக இருக்கலாம், அல்லது அடுத்த விமானத்தில் அரைமணி நேரமே பயணிப்பதற்காக இங்கே எட்டுமணி நேரம் காத்திருக்க நேர்வதின் அபத்தத்தை நினைத்து சலிப்புற்றிருக்கலாம்.
மறுபடி தூக்கம் வரப்பார்த்தது. தலையை உலுக்கிக் கொண்டான். அங்கங்கே சிலர் நடைபழகிக்கொண்டிருப்பதை கவனித்ததும், கொஞ்சநேரம் நடந்தால் என்ன என்று தோன்றியது, அப்போது தூக்கம் குறையுமோ என்னவோ, யார் கண்டது ?
பொிய பெட்டி இருந்த ட்ராலியின்கீழே இருந்த சின்னப் பெட்டியைத் தூக்கி காலியாய் இருந்த பக்கத்து நாற்காலியில் வைத்தான். அது கண்ணில்படும் உயரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டபிறகு இரண்டு கைகளையும் பான்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தான். மொசைக் தரை லேசாய் வழுக்குவதுபோல் இருந்தது. சற்றுதூரம் நடந்தபிறகு திரும்பிப்பார்த்தபோது இரண்டு பெட்டிகளும் நன்றாகத் தொிந்தது. திருப்தியானான்.
அந்த ஹாலின் நடுவில் நாற்காலிகள் ஏதும் இல்லாத ஒரு விசாலபரப்பு இருந்தது. ஏற்கெனவே அங்கே சுற்றிச்சுற்றி நடந்துகொண்டிருந்தவர்கள் – பெரும்பாலும் இளைஞர்கள் – இவனைப் பார்த்ததும் ஒதுங்கி வழிவிட்டார்கள். அவனுக்கு அது அநாவசியமாகத் தோன்றியது, பெட்டிகள் இருந்த இடத்திலிருந்து அதிகதூரம் போய்விடாமல் அவற்றையே மையமாகக் கொண்டு ஒரு சிறிய வட்டத்தில் சுற்றவே அவன் விரும்பினான்.
இலக்கில்லாமல் சும்மா நடப்பது சுகமாகவே இருந்தது. அவ்வப்போது கவனமாய் பெட்டிகளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டான். அப்படி அடிக்கடி பார்ப்பதாலேயே யாருக்காவது சந்தேகம்வந்து பெட்டிகளைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்றும் தோன்றியது. பதட்டத்தில் இன்னொரு தடவை திரும்பிப்பார்த்தான். பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தால், திருடுபவர்களாகத் தொியவில்லை. திருட்டுக்கொடுக்கவந்தவர்களாகவே தோன்றியது. அதனால் அவன் சற்றே நிம்மதி அடைந்தான்.
ஆனால், வெளியிலிருந்து யாராவது வந்துவிட்டால் என்ன செய்வது ? சுற்றிப் பார்த்தபோது ஒரேஒரு மூலையில் மூன்று கதவுகள் இருப்பது தொிந்தது. வேறு கதவுகளைக் காணோம். பெட்டிகளின்மேல் ஓரக்கண் வைத்துக்கொண்டே அவன் அந்தக் கதவுகளை நெருங்கி இழுத்துப்பார்த்தான். பயணிகளைச் சிறைவைத்ததுபோல மூன்றுமே வலுவாக பூட்டப்பட்டிருந்தது. கதவின் மறுபுறம் இரவுக்காவலர்கள் அரைத்தூக்கத்தில் இருந்தனர். அவன் மூன்றாவது கதவை இழுத்துப்பார்த்து திருப்தி அடைந்தபோது வெளியே படுத்திருந்த ஒருவர் எழுந்துகொண்டு அவசரமாய் கதவைத் திறக்க வந்தார்.
‘வேண்டாம் ‘ என்று அவன் உடனடியாகக் கையசைத்து மறுத்தான். அவர் சலித்துக்கொண்டு திரும்பவும் படுக்கப்போனார். அவர் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதற்கான வருத்தமும், இப்படி விச்ராந்தியாய்த் தூங்குகிறவர்கள்மேல் பொறாமையும் ஒருசேர எழுந்தது. சட்டென்று நினைவு வந்து திரும்பிப் பார்த்தான். பெட்டிகள் பத்திரமாய் இருந்தது.
அங்கிருந்து வேறு திசையில் நான்கைந்து அடிகள் நடந்ததும் ஒரு சுவர்ஷோகேஸ் வந்தது. அதில் வைத்திருந்த பிள்ளையார் சிலைகளை நோட்டமிட்டான். அலுமினியத்திலும், இரும்பிலும், வெள்ளியிலும், காகிதத்தில் ஓவியமுமாய் விதவிதமான கணபதிகள். தரையில் அமர்ந்துகொண்டு, மெத்தைபோல் திண்டின்மேல் ஒய்யாரமாய் சாய்ந்துகொண்டு, வில்லும் கையுமாக போர்க்கோலத்தில் நின்றவாறு, காளிங்க நர்த்தனம் போலொரு பொிய பாம்பை காலடியில் பாதியும், கையில் மீதியுமாய் வைத்துச் சுழற்றினபடி இன்னும் என்னென்னவோ வடிவங்களில் பிள்ளையார் மட்டும் அங்கே மெர்க்குாி விளக்கு வெளிச்சத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். ஓரத்தில் அந்த ஓவியங்களையும், சிற்பங்களையும் செய்த பெண்மணி நீலச்சேலை அணிந்து புகைப்படமாய் அமர்ந்திருக்க, பக்கத்தில் ஆங்கிலத்தில் மூன்றுபக்கத்துக்கு ஏதோ அச்சிட்டு ஒட்டியிருந்ததைப் படித்துப்பார்த்தான்.
நீலச்சேலை சிற்பி ஐந்து வயதிலோ, மூன்று வயதிலோ பிள்ளையார்மேல் தனிஆர்வம் கொண்டுவிட்டதாகவும், அதன்பிறகு பிள்ளையார் மட்டுமே செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. என்னென்ன காரணங்களுக்காக எல்லோரும் பிள்ளையாரை வணங்க / வாங்க வேண்டும் என்பதும் புராண உதாரணங்களோடு அழகாக விவாிக்கப்பட்டிருந்தது. சற்றே ஆர்வம் மிகுந்து விலைப்பட்டியலைப் பார்த்தான். யானைவிலை என்பது சாியாகவே இருந்தது. ஒன்றேனும் அவன் வாங்கக்கூடிய விலையில் இல்லை. வேண்டுமானால் அலுவலகத்தில் ஒன்றிரண்டை வாங்கி வைக்கச்சொல்லலாம். அவர்களுக்குக் கட்டுப்படியாகும், ஆஃபீசில் இருக்கிறவர்களும் கொஞ்சம் பயபக்தியோடு வேலை செய்வார்கள்.
ஆனால் அவனுக்கு ஒரு பிள்ளையாராவது வாங்கிப்போக வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. விலை ஜாஸ்தியாக இருந்தாலும் பரவாயில்லை, அவனுக்கு பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும். பிள்ளையாரை தெய்வமாகவே எப்போதும் நினைக்க முடிவதில்லை. மனித உடலும், யானைத் தலையும் அவரை ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம்போலக் காட்டும். எப்போதும் சிாித்துக்கொண்டு, கூடவே இருந்து காாியம் யாவிலும் தெம்பூட்டுகிற ஒரு அத்யந்த சிநேகிதனாகவே அவர் அவனுக்குப் பாிச்சயமாகியிருந்தார். ஆனால் இந்த அர்த்தராத்திாியில் யார் இங்கே வந்து விநாயகர் விற்கப் போகிறார்கள் ? இந்த நினைப்புவந்ததும் அவன் தனக்குள் சிாித்துக்கொண்டான், அப்படியே வந்தாலும் அவனிடம் போதுமான அளவு இந்திய ரூபாய் இருக்கவில்லை, கிரெடிட் கார்ட் வாங்கிக் கொள்வார்களா என்று நினைத்தபோது இன்னும் சிாிப்பு வந்தது,
கடவுள் சிலை
வாங்க
கிரெடிட் கார்ட்
என்று மனதுக்குள் ஹைக்கூ எழுதிப்பார்த்தான். திரும்பிப்பார்த்து பெட்டிகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.
தொடர்ந்து சுவரோரமாய் நடந்தான். பெரும்பாலும் கடைகள்தான். எஸ் டி டி பூத், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகங்கள், அதிவிரைவு இன்டர்நெட் நிலையம், ஐந்து நட்சத்திர( ?) சிற்றுண்டி சாலை, சாக்லெட்களும், பஞ்சுமெத்தை பொம்மைகளும், இதர பாிசுப்பொருட்களும் விற்கிற கடை – இன்னும் எல்லாமும் விதிவிலக்கில்லாமல் கண்ணாடிக்கதவுகொண்டு பூட்டப்பட்டு உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளே ஏதோ மங்கலாய்த் தொிந்ததால், இருந்தும் இல்லாததுபோல அந்தக்கடைகள் தோன்றின. அங்கங்கே இருந்த டிவிக்களைக்கூட அணைத்திருந்தார்கள்.
இதே விமானநிலையத்துக்கு அவன் பகலில் வந்திருக்கிறான். பறந்தவர்களும், பறக்கிறவர்களும், பறக்க வந்தவர்களும், இவர்களையெல்லாம் பார்க்க வந்தவர்களும், வாக்கி டாக்கி சகிதம் மிடுக்கான போலீசாரும், சீருடை மினிஸ்கர்ட்டில் கவர்ச்சியாய் விமானப் பணிப்பெண்களும், கோட் அணிந்து வியர்க்கிற வெளிநாட்டவர்களுமாய் திருவிழாக்கூட்டம்போல ஏககளேபரமும், பரபரப்புமாய் இருக்கும். திசை தொியாதவர்கள்போல ஆளாளுக்கு அங்கங்கே அலைந்துகொண்டிருக்க, எங்கும் சுறுசுறுப்பாய் இருக்கிற அந்தக்கூடம் இன்றைக்கு வெறிச்சோடிக்கிடந்ததைப்பார்க்க,
இளைத்துப்போன யானைபோல அழகற்றிருந்தது.
அத்தனை பேருக்காக இயக்கப்படுகிற குளிர்சாதனம் வெறும் இருபது பேருக்காக இப்போது ஓடிக்கொண்டிருப்பதால் மிகஅதிகமாகக் குளிர்ந்தது. இதை யாரேனும் நிறுத்தினால் தேவலை என்று தோன்றியது. மின்சாரமாவது மிச்சப்படும். மின்சாரம் என்றதும் அந்த இரவிலும் மின்னி அணைந்துகொண்டிருந்த நியான் விளம்பரப்பலகைகளைப் பார்த்தான். இவையும் அநாவசியம்., ராத்திாி நேரத்தில் யாருக்கு வேண்டும் கம்ப்யூட்டர் விளம்பரமும், வாஷிங் மெஷின் விலைக்குறைப்பும் ? ஒரு விளம்பரம், ‘எங்கள் ஹோட்டலில் தங்குங்கள், நீங்கள் கேட்கிற வசதிகள் எதுவானாலும் கிடைக்கும் ‘ என்று பரபரத்தது. காலை ஆறுமணி விமானத்துக்கு எழுப்பி விடுவார்களா என்கிற விவரம் இல்லை.
கண்களை மீண்டும் உறக்கம் அழுத்தியது, சிரமப்பட்டு விழிகளைத் திறந்து மணி பார்த்தான். பன்னிரண்டுகூட ஆகவில்லை, இன்னும் ஆறு மணிநேரத்துக்குமேல் இருக்கிறது. திரும்பி நேர்கோட்டில் நடந்து பெட்டிகளை நெருங்கினான். பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து சூட்கேஸின்மேல் கைவைத்துக்கொண்டான். பெரும் ஆயாசமாய் இருந்தது. இந்தத் தூக்கத்தை ஜெயித்து இன்னும் ஆறுமணிநேரம் எப்படிக் காத்திருப்பது ? உடனடியாக ஒரு ஃப்ளைட்டை ஏற்பாடு செய்யாமல் இப்படிப் படுத்துகிறார்களே, ஏழுமணிநேரம் விமானம் ஏதும் வராமல்,
போகாமல் ஒரு விமானநிலையம் வீணாய் இருக்குமோ ?!
அவன் லேசாய் தூக்கத்தினுள் விழஇருந்தபோது அந்தக்குரல் அவனை எழுப்பிற்று.
‘எக்ஸ்கியூஸ்மீ ‘. திடுக்கிட்டு எழுந்தபோது முதலில் பார்த்த அந்த கறுப்பு ஜெர்கின் பெண் எதிாில் நின்றிருந்தாள், என்ன விஷயமாக இருக்கும் ? புாியாமல் ‘யெஸ் ‘ என்றான்.
‘ஒரு விஷயம் கேட்டால் தவறாய் நினைக்கமாட்டார்களே ‘ – பணிவான ஆங்கிலம்.
என்ன கேட்கப் போகிறாள் ? ‘இரண்டு பெட்டி நிறைய சிங்கப்பூர் பாிசுப்பொருட்களும், விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுமாய் நிரப்பி வைத்துக்கொண்டு இப்படி அசட்டுத்தனமாய்த் தூங்குகிறாயே, எவனாவது (அல்லது நானே) லவுட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய் ? ‘ என்று அவள் கேட்டுவிட்டால் என்னபதில் சொல்வதென்று அவனுக்குத் தொியவில்லை. கவனக்குறைவுக்காக தன்னையே திட்டிக்கொண்டான். ஓரப்பார்வைபார்த்து, ‘யெ – யெஸ் ‘ என்றபோது குரல் நடுங்கியது குளிராலா தொியவில்லை.
அவள் சற்றும் தாமதிக்காமல் ‘நீங்க சுந்தரமூர்த்திதானே ? ‘ என்று விரல்நீட்டிக் கேட்டாள். அப்போது அவளுடைய கண்களில் மின்னல்போல ஒரு ஒளிக்கீற்று தோன்றி மறைந்தது. இழந்துபோன பிள்ளைப்பருவம் மறுபடி கிடைத்துவிட்ட குழந்தைபோல் அவள் முகபாவம் இருந்தது. அவன் பதிலுக்காக மிக ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவன் ஏமாற்றம் கலந்த வெறுமையோடு, ‘ஸாாி, என்பேர் ஆனந்த் ‘ என்றான். யார் அந்த சுந்தரமூர்த்தி ? இவளுடைய காதலனாய் இருப்பானோ.
அவன் குரலில் தொிந்த ஏமாற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது. வாடின முகபாவத்தோடு, ‘ஐயாம் ஸாாி, கிட்டத்தட்ட உங்களைமாதிாியே என் காலேஜ்மேட் ஒருத்தன், சுந்தர்-ன்னு பேரு, அவனைப்பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு, உங்களைப்பார்த்ததும் அவன்தானோ-ன்னு நினைச்சு ‘ என்று வாக்கியத்தை முடிக்கமுடியாமல் திணறி, ‘ஐயாம் ஸாாி ‘ என்றாள் மறுபடி. முன்பு எத்தனை சந்தோஷமாய்த் தொிந்தாளோ, அத்தனைக்கத்தனை வருத்தமாய் இருந்தாள் இப்போது.
‘இட்ஸ் ஓகே ‘ என்றான் அவன். கொஞ்சநேரம் பொதுவாய் ஒன்றிரண்டு விஷயங்கள் பேசிவிட்டு அவள் போய்விட்டாள். அவளைப்பார்க்க பாவமாய் இருந்தது. கதைகளிலும், சினிமாக்களிலும் எத்தனையோ பிாிந்த நண்பர்கள் சேர்கிறார்கள், பல வருடங்களைப் பேசிக் குதூகலிக்கிறார்கள், ஹோட்டலுக்குப்போய் ஒன்றாய் காபி, ஸ்வீட் சாப்பிடுகிறார்கள். இந்த சந்திப்பு அதுபோல் இல்லாமல் இருவருக்கும் ஏமாற்றத்தோடுபோய்விட்டதே என்று அவன் ரொம்ப நேரத்துக்குப்பிறகும் யோசித்துக்கொண்டிருந்தான். பாவம் அந்தப்பெண், நிஜமாகவே அவளை எங்கேயாவது பார்த்திருக்கிறேனா ? அவளுக்காக ஒரு பொய்யாவது சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.
இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே திடுதிப்பென்று இன்னொரு எண்ணமும் வந்தது. இது எல்லாமே ஒருவித செட்டப்பாக இருக்குமோ, அவனை வேவுபார்ப்பதற்காக யாரோ திருட்டு கும்பல் ஒன்று இந்தப்பெண்ணை அனுப்பிவைத்திருக்குமோ என்று தோன்றியது. சட்டென்று வலதுபக்கம் திரும்பி பெட்டிகளைப்பார்த்துக்கொண்டான், எல்லாம் சாியாகவே இருந்தது. ஆனாலும் அவனுடைய சந்தேகம் தீரவில்லை. திருடுவதும்கூட இப்போதெல்லாம் சுலபமில்லை, சத்தமில்லாமல் வந்து கையிலிருப்பதைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டமாய் ஓடுகிற திருடர்கள் வழக்கொழிந்துவிட்டார்கள். நவீன காலத்திற்கேற்ப திருடுவதற்கு புதுப்புது முறைகள் கையாள்கிறார்கள் என்று பேப்பர்களில் வருகிறதே.
அதெப்படி அவளுடைய சிநேகிதன் அவனைப்போலவே இருக்கமுடியும் ? ஒரே மாதிாி உலகத்தில் ஏழு பேரோ, ஒன்பது பேரோ இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறானேதவிர, அப்படி யாரையும் அவன் நோில் பார்த்ததில்லை என்பதால் அந்தப்பெண் மேலான அவன் நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. நிச்சயம் அவள் வேறு ஏதோ நோக்கத்தோடுதான் வந்திருக்கிறாள்.
பின்னந்தலையில் ஒருமுறை தட்டிக்கொண்டான், முட்டாள்தனத்தின் உச்சமாய், அவளிடம் விசிட்டிங் கார்ட் கொடுக்காதகுறையாய் பெயர், கம்பெனி விவரம், சிங்கப்பூாில் ஆறு மாதமாய் செய்த வேலை, திரும்பி வந்த ஃப்ளைட், நாளை காலை பயணிக்கப்போகிற பெங்களூர் ஃப்ளைட் என்று ஜாதகத்தையே எழுதிக் கொடுத்திருந்தான் அவன். வசதியான பார்ட்டிதான் என்று ஊகித்து போட்டிருக்கிற பேன்ட்-சட்டையைத் தவிர்த்து மீதம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவனுக்கு பயமாய் இருந்தது. சூட்கேஸின் மேல் தளத்தைத் திறந்து
அதிலிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். ஐம்பதுமீட்டர் தள்ளி ஒரு சோில் தன் சிநேகிதியுடன் பேசிக்கொண்டிருந்த அவளைக் கலவரத்தோடு பார்த்தான், என்னைப்பற்றிதான் சொல்கிறாளோ, என்ன செய்வாளோ தொியவில்லையே.
இந்த சம்பவத்துக்குப்பிறகு அவனுக்கு சுத்தமாய் தூக்கம் போய்விட்டது. எதை எதிர்பார்க்கிறோம் என்றே தொியாமல் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருந்தான். இரண்டு கால்களையும் பக்கத்து நாற்காலிமேல் வைத்துக்கொண்டு முதுகுக்கு ஒரு சூட்கேஸை முட்டுக்கொடுத்தபடி கொஞ்சநேரம் ஸிட்னி ஷெல்டன் வாசித்துக்கொண்டிருந்தான். பிறகு வாக்மேனில் பாட்டுக்கேட்டான், ‘கண்ணே கலைமானே ‘ என்று இளையராஜாவும், யேசுதாசும் பிடிவாதமாய் தட்டிக்கொடுத்துத் தாலாட்டியபோதுகூட அவனுக்குத் தூக்கம் வரவில்லை. கறுப்பு ஜெர்கின் வில்லிகூட கொஞ்ச நேரத்தில் தலைசாய்த்து வாய்பிளந்து தூங்கிப்போயிருந்தாள். அந்த பொிய கூடத்தில் அவன் மட்டும் தனியாக கடிகாரத்தில் நேரம் மாறுவதை எண்ணிக்கொண்டு விழித்திருந்தான்.
தூங்காமல் இருப்பதற்கான காரணங்களை அவன் தத்துவவிசாரம்போல யோசித்துப்பார்த்தான். பெட்டிதான் காரணம் என்றால், எல்லோரும்தான் பெட்டி வைத்திருக்கிறார்கள், பெட்டியில்லாமல் விமானத்தில் பயணிப்பவர்கள் யார் ? சிலர் ஒற்றைப்பெட்டியைத் தலைக்கும், இன்னொன்று இருந்தால் – அதைக் கால்களுக்கும் கொடுத்தபடி நான்கைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்து சுகமாய்த் தூங்கியபடி இருக்கிறார்கள். துணையோடு வந்தவர்கள் கும்பலாய் அமர்ந்து, பக்கத்தில் பெட்டிகளை குவியலாய் வைத்துவிட்டு ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடி தூங்குகிறார்கள், ப்ாீஃப்கேஸை மடியில் வைத்துக்கொண்டு அதிலேயே தலையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி ஒருவர் தூங்குகிறார். எல்லோரும் தூங்கும்போது நான் மட்டும் ஏன் விழித்திருக்க வேண்டும் ?
தூங்கலாமா என்று அவன் இப்படி அரைமனதோடு நினைத்துக்கொண்டிருக்கும்போதே அந்த கறுப்புஜெர்கின்பெண் யாரோ உலுக்கியதுபோல சட்டென்று எழுந்தாள். கொஞ்சநேரம் திருதிருவென்று முழித்துவிட்டு இவனைப் பார்த்ததும் சிநேகமாய் ஒரு புன்னகை செய்து, ‘இன்னும் தூங்கலையா ? ‘ என்றாள். அவன் பதறிப்போய் வேகமாய்த் தலையாட்டிவிட்டு இன்னும் கவலைப்பட ஆரம்பித்தான். ‘ஏன் இப்படிக் கேட்கிறாள், நான் தூங்கவில்லை என்று இவளுக்கு என்ன அக்கறை, நான் தூங்கவேண்டும் என்று எதற்காக எதிர்பார்க்கிறாள் ? ‘ – இப்படிப் பலவாறாய்
குழம்பிக்கொண்டான் அவன். அவள் தூரத்தில் இருந்த டாய்லெட்டுக்கு அன்னநடை நடந்து போய்த் திரும்பிவந்து, செல்லக் கொட்டாவிகளோடு மீண்டும் தூங்கியும்விட்டாள். அவனுக்கு மறுபடி தூக்கம் போய்விட்டது, விமானநிலையத்தை இன்னொரு சுற்று வந்தான். கால் வலித்தது, உட்கார்ந்துகொண்டான்.
அதன்பிறகு எப்போது தூங்கினான் என்று அவனுக்கே நினைவில்லை. கனவில் ஒரு வெள்ளையுடை தேவதை விமானத்தில் பறந்துவந்து, ‘மிஸ்டர்
சுந்தர மூர்த்திக்கு ஒரு நல்ல சேதி வந்திருக்கு, நீங்க சுந்தரமூர்த்தியா ? ‘ என்று சந்தேகமாய்க் கேட்டது. அவன் பதில் சொல்வதற்குள், ‘உங்க
பெங்களூர் ஃப்ளைட் ஏழு மணி நேரம் லேட் ‘ என்றது. அதுதான் நல்ல சேதியா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ‘தூங்குங்க
இன்னும் ஏழு மணி நேரம் ‘ என்று அவனை அலாக்காகத் தூக்கி வந்து ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் படுக்கையில் போட்டு முதுகில் தட்டித்
தூங்கவைத்தது. தேவதை சாியான நேரத்துக்கு எழுப்பிவிடுமா என்று சந்தேகப்பட்டபடி அவன் தூங்கினான்.
*******
‘மிஸ்டர் ஆனந்த், ஆனந்த் ‘ அவன் கண்ணுக்குமுன்னால் யாரோ கைதட்டினார்கள். அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். கனலாய்க் கொதித்த கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவள்தான். ஜெர்கினைக் கழற்றி மடித்துக் கையில் வைத்திருந்தாள். இன்னொரு கையில் இன்டியன் எக்ஸ்பிரஸ். அப்போதுதான் முகம் கழுவியிருக்கவேண்டும். சின்ன டி-சட்டையில் கவர்ச்சியாய் இருந்தாள்.
அவன் அப்பொதுதான் முழுதாய் தூக்கம் கலைந்து திரும்பிப்பார்த்தான். எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது. நிம்மதிக்கு பதிலாக வெட்கமும், சங்கடமும் கலந்த ஒரு புன்னகை பரவியது அவன் முகத்தில்.
‘ஆறு மணிக்கு ஃப்ளைட்-ன்னு சொன்னீங்க மிஸ்டர். ஆனந்த். மணி இப்போ அஞ்சரை, அதான் யோசிக்காம டக்குன்னு எழுப்பிட்டேன் ‘ என்று புன்னகைத்தாள். அவன் ‘தேங்க்ஸ் ‘ என்றான் மனமாற.
‘டைம் ஆச்சு, போய் ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு வந்துடுங்க ‘ என்றாள் காிசனமாய்.
‘பரவாயில்லை ‘ அவன் தயங்கினான். அவள் பெயர்கூட ஞாபகமில்லை. ‘இட்ஸ் ஓகே, போய்ட்டு வாங்க, உங்க திங்க்ஸை நான் பத்திரமா பார்த்துக்கறேன் ‘ என்று புாிந்துகொண்ட பார்வையோடுசொல்லி எதிர்ஸீட்டில் அமர்ந்தாள், பேப்பர் விாித்து கார்ட்டூன் பார்க்கலானாள். அவன் அதன்பிறகும் கொஞ்சநேரம் அங்கேயே திகைத்து நின்றுகொண்டிருந்தான். பிறகு வேறுவழியில்லாமல் பேகிலிருந்து டவல் எடுத்துக்கொண்டு ஓரத்திலிருந்த பாத்ரூம் நோக்கி நடந்தான். பேஸ்ட், பிரஷ் இருந்தது. எடுத்துக்கொள்ளவில்லை.
பளீரென்று முகத்தில் குளிர்நீர் பட்டபோது கண்கள் பொிதாய் எாிந்தது. வேகவேகமாய் மூன்றுமுறை முகம்கழுவிவிட்டு அழுந்தத் துடைத்துக்கொண்டான். அதற்குள் வாசலுக்கு வந்துபார்க்கிற ஆவலை சிரமப்பட்டு அடக்கவேண்டியிருந்தது. அவன் கைவிரல்களால் பல்தேய்ப்பதை ஒரு வெளிநாட்டுக்காரர் அதிசயமாய்ப் பார்த்தார்.
நான்குநிமிடம் அந்த பாத்ரூமுக்குள் அவன் இருந்திருப்பான், அதற்குள் ஆயிரம் கற்பனைகள் ஓடியது, புலியின் காவலில்விட்ட ஆட்டுக்குட்டிகள்போல பெட்டிகளை விட்டுவந்திருக்கிறான். இரண்டும் பத்திரமாய் இருக்குமா ? காலை நேரமாதலால் அந்த ஹாலில் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. அதற்குநடுவில் யாராலும் திருட்டுச்செய்யமுடியாது என்று ஒருபக்கம் நினைக்க, மறுபக்கம் அப்படியே திருடினாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்றும் தோன்றியது. யாருக்கும் நேரமிருக்காது.
அவன் திரும்பிவந்தபோது அவள் அதேஇடத்தில் உட்கார்ந்திருந்தாள். அவன் டவலை உள்ளே வைத்ததும், ‘ஓக்கே மிஸ்டர். ஆனந்த், நைஸ் மீட்டிங் யூ ‘ என்று கைகுலுக்கினாள், அவள் கை சில்லிட்டிருந்தது.
‘உங்க ஃப்ளைட் ? ‘ என்று விசாாித்தான்.
‘அதுக்கு இன்னும் ஒன் ஹவர் இருக்கு ‘ என்று புன்னகைபதில் வந்தது.
‘ஓகே ‘ அவன் பையைத் தோளில்மாட்டிக்கொண்டான், பெட்டிகள் இருந்த ட்ராலியை நகர்த்தினபடி அவளிடம் விடைபெற்றான்.
*******
பெங்களூர் விமானத்துக்கான வாிசையில் சேர்ந்துகொண்டு மெல்ல நகர்ந்தபோது பொிதாய் கொட்டாவி வந்தது. ‘வீட்டுக்குப்போனதும் இரண்டுநாள் தொடர்ந்து தூங்கமட்டும்போகிறேன் ‘ என்று சொல்லிக்கொண்டான். சம்பந்தமில்லாமல் அந்தப்பெண்ணின் ஞாபகம் வந்தது. அவளை ஏன் சந்தேகப்பட்டேன், ஒருபக்கம் சிாிப்பாகவும், இன்னொருபக்கம் வெட்கமாகவும் இருந்தது.
சோர்ந்து தளர்ந்த நடையோடு பெட்டிகளை கவனமாய்த் தள்ளியபடி நேற்றைய இரவை மங்கலான நினைவுகளோடு யோசித்தபோது, அவனுக்கு ஒருகணம் சந்தேகமாகவே இருந்தது – பெட்டிகளை அவன் இழுத்துவருகிறானா, அல்லது பெட்டிகள் அவனை இழுத்துப்போகிறதா ? இன்னொரு கொட்டாவி வந்து அவன் யோசனையைக் கலைத்தது.
‘ஹாவ் … ‘
***
- கொட்டாவி
- பேரரசிற்கொரு வேண்டுகோள்!
- பாரதி மன்னிக்கவும்!
- கிறுக்கல்கள்
- கணினி வலையம் (Computer Network)
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)
- ஆப்பம்
- வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘.- ஒரு பார்வை.
- ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை
- இன்னொரு முற்றுப்புள்ளி….
- குழப்பக் கோட்பாடு
- சொந்தக்காரன்
- சேவல் கூவிய நாட்கள் – 5 – குறுநாவல்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)
- அமெரிக்கப் பொருளாதாரத்தில் கிரீன்ஸ்பான் அவர்களின் பங்கு. (டாக்டர் காஞ்சனா தாமோதரனுக்கு ஒரு பதில்)
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)
- வரையாத ஓவியம்
- குயிலே..குயிலே…
- காளியாய்க் கீழிறங்கி,கன்னிபோல் நெளிந்து ஆடி…..
- முத்தம்