தெளிவு

This entry is part [part not set] of 8 in the series 20000806_Issue

கே ஆர் அய்யங்கார்இந்தக் கால இளைஞர்காள் இசைவாய்ச் சொல்வேன் கதைகேளும்
எந்தக் காலத் திலுமேதான் எழிலாய் மனதில் நிலைத்திருக்கும்
அந்தக் காலத் திலேயோர்நாள் மனிதன் ஒருவன் இருந்திருந்தான்
சொந்தம் எதையும் நோக்காமல் சுயமாய்த் தேனீர் விற்றிருந்தான்

கடையும் சிறிதாய் இருந்தாலும் சுவையும் நன்றாய் இருந்ததனால்
தடைகள் எல்லாம் தகர்ந்துவிட நன்றாய் வாழ்க்கை ஓடியது
படைகள் போாில் சென்றிருந்தால் தோல்வி வெற்றி வருவதுபோல்
கடையை வைத்த அவனுக்கும் காலம் ஓர்நாள் மாறியது

மனத்தைக் கெடுக்கும் மதுவிற்கு அவனும் சற்று இடங்கொடுக்க
மனத்தை முற்றும் மயங்கவைத்து மதுவும் அவனுள் புகுந்ததுவே
கனவில் வாழ நினைத்ததனால் நனவும் நகர்ந்து போனதுவே
பணமும் காற்றாய்க் கரைந்துவிட பாவி மகனும் நிலைகுலைந்தான்

குடியில் மயங்கி ஒருநாள் அவனும் நடந்து செல்ல
மடியில் பூனை போலே விதியும் சதியைச் செய்ய
கடிதாய் வந்த காவலன் மேலே காலும் படவே
தடியாய் வாளை யுருவி யவனும் சண்டைக் கழைத்தான்

ஆளைப் பார்த்து யாரும் அன்று சண்டைக் கழைத்தால்
காலை தலையை வைத்தும் கூட போட வேண்டும்
மாலைப் பொழுதும் மதுவும் தந்த மயக்கத் தாலே
வாளைப் பிடிக்கத் தொியா யிவனும் ஒத்துக் கொண்டான்

மயக்கந் தெளிய மனமும் குழம்பித் தவிக்கத் தவிக்க
தயக்கத் துடனே தக்க குருவைத் தேடிச் சென்றான்
இயக்க வைத்தே என்னை நீரும் வெல்லச் செய்வீர்
முயக்கங் கொண்டு நானும் சற்றே முயல்வே னென்றான்

தெள்ளிய வானம் போலத் தெளிந்த குருவும் சிாித்தே
அள்ளித் தருவேன் எனது வித்தை உனக்கே என்றார்
பள்ளி சேரும் நாளை நானும் உனக்குச் சொல்வேன்
துள்ளி நீயும் தேனீர் போட்டுப் பழகு என்றார்

வாரஞ் செல்ல மாதம் வரவும் சேதி வராமல்
கார மிளகாய் கடித்தாற் போலக் கலங்கி விட்டான்
நேரஞ் சொல்வீர் என்றே நினைத்தேன் ஒன்றும் இல்லை
ஓரம் நின்றே நானும் வித்தை உணர்வேன் என்றான்

கடையில் தேனீர் போடும் முறையும் ஏது என்க
மடையும் திறந்து விட்டாற் போலப் பத்து என்றான்
விடையை நானும் விரைந்து சொல்வேன் கவலைப் படாதே
கடையில் சென்று மேலும் ஐந்து முறைகள் செய்வாய்

குருவை நம்பி மேலும் பலவாய்த் தேனீர் கலந்தே
இருளும் நீங்கும் என்றே நினைந்து தவமாய் இருந்தான்
வருமே அழைப்பு என்றே இருந்த அவனும் மெல்லக்
கருமை முகத்தில் சேரக் கலங்கி குருவிடம் சென்றான்

என்று எனக்கு வித்தை எல்லாம் சொல்லித் தருவீர்
அன்று மயங்கி அலைந்தே நானும் வாக்குக் கொடுத்தேன்
இன்று நீரும் எனக்கோர் வார்த்தை சொல்ல வேண்டும்
நன்றாய் நாளை வாட்போர் உண்டு மறந்தீர் போலும்

மெல்லக் குருவும் சிாித்துவிட்டு மென்மை யாகக் கூறிவிட்டார்
நல்ல தனமாய் வீரனிடம் போாின் முன்னால் சொல்லிடுவாய்
சற்றே கொஞ்சம் தேனீரும் சற்று அருந்து எனச்சொல்லு
பற்றுடன் என்னை நம்பிவிடு பாங்காய்ப் போருக்குச் சென்றுவிடு

களைப்பைப் போக்கும் தேனீரைப் அருந்தச் சொன்ன அவனுடைய
அழைப்பை ஏற்ற வீரனும்தான் அயர்ந்து போயே நின்றுவிட்டான்
சற்றுப் பொழுதில் உயிர்போகும் சற்றும் அதையும் எண்ணாமல்
சற்றுத் துளியும் சிந்தாமல் தேனீர் கலப்பதைப் பார்த்துவிட்டான்

எந்த குருதான் உனக்கு வித்தை சொல்லித் தந்தார்
அந்த குருவா அவரை நானும் நன்கு அறிவேன்
மந்த புத்தி கொண்டே அழைத்தேன் மன்னி என்றே
நந்த வனத்தில் நடந்தே வீரன் சென்று விட்டான்

விரைந்து செல்லும் வீரனையே விழிகள் நிறைந்து பார்த்திருக்க
கரையும் மனது குரல்கொடுக்க குருவை மனதில் வணங்கிவிட்டான்
எளிதாய் இருக்கும் இக்கதையின் அர்த்தம் உணர்வீர் இப்போது
தெளிவாய்த் தொழிலும் தொிந்திருந்தால் பயமும் எதற்கும் வேண்டாமே.

**********

பின்னுரை: இது ஒரு ஜென் கதை. ஜப்பானில் தேனீர்கலை வல்லுனனை தேனீர் முதுநிலையாளன் என(டா மாஸ்டர்) அழைப்பார்கள்.அப்படிப் பட்ட ஒருவன் குடிபோதையில் ஒரு சமுராய் வீரன் உறங்கும் போது அவனை மிதித்துவிட சமுராய் வீரன் கோபம் கொண்டு அவனைப் போருக்கு அழைக்கிறான். யாராவது வாட்போருக்கு அழைத்தால் அன்று போாிட வேண்டுமாம். இல்லையெனில் ஹரகிாி எனச் சொல்லப்படும்

தற்கொலை செய்து கொள்ளவேண்டும். எனவே இவன் ஒத்துக் கொண்டு குருவிடம் கற்கச் செல்லுகிறான். குரு அவனை எத்தனை தடவை தேனீர் போடுவாய் எனக் கேட்க ஐந்து முறை என்கிறான். குரு அதை பத்தாக்கு,மறுவாரம் வா என்கிறார். மறுவாரம் சென்றால் அதை பதினைந்து தடவை ஒரு நாள் செய்து பார் எனச் சொல்கிறார். இப்படி போருக்கு முதல் நாள் குருவிடம், குருவே எனக்கு வாள் வித்தை எதுவும் சொல்லித் தரவில்லையே எனக் கவலைப் பட்டுக் கேட்க குரு போருக்கு முன்னால் அந்த வீரனைத் தேனீருக்கு அழை என்கிறார்.

இவனும் அந்த வீரனைத் தேனீருக்கு அழைக்கிறான். சற்றுத் துளிகூட கீழே சிந்தாமல், நிதானம் எதுவும் குலையாமல், நல்ல சுவையுடன் தேனீர் கொடுக்கும் அவனைப் பார்த்து வீரனுக்குச் சந்தேகம் வருகிறது.இவ்வளவு நிதானத்துடன் தேனீர் கொடுக்கிறானே. வாட்போர் நன்றாய்க் கற்றிருப்பானோ என நினைத்து யார் உனது குரு எனக் கேட்கிறான். குருவின் பெயர் கேட்டதும் வீரனின் சந்தேகம் உறுதிப்பட அழைத்த போரை திரும்பிப் பெற்று விடுகிறான்..

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

Series Navigation

author

கே.ஆர். அய்யங்கார்

கே.ஆர். அய்யங்கார்

Similar Posts