கு – அழகிரிசாமி
(3)
லல்லுவுக்கு இப்பொழுது வயது பதினெட்டு. எஸ்.எஸ்.எல்.ஸியில் பெயிலாகி வீட்டோடு இருக்கிறாள். அவளுக்கு பதினான்கு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள்.
மாடி அறையில் விநாயகம் என்ற இருபத்து நான்கு வயது பிரம்மச்சாரி ஒருவன் தன் இருபத்தொன்றாம் வயதிலிருந்தே வாடகைக்கு இருந்து வருகிறான்; அவனோடு ஒரு வருஷமாக வசிப்பவர் நாற்பது வயது துரை. அவர் குடும்பஸ்தர். குடும்பத்தை இதற்கு முன் அவர் உத்தியோகம் பார்த்த ஊரில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். திரும்பவும் அங்கேயே போய்விடுவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டு மாற்றுதல் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் அவர்.
விநாயகத்துக்கு எப்போதுமே பிரம்மச்சாரியாக இருந்து விடவேண்டும் என்று உத்தேசம் எதுவும் கிடையாது. நேரம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும் என்று இருப்பவன் தான் அவன்.
வீட்டின் பின் போர்ஷனில் இரண்டுமாத காலமாகக் குடியிருப்பவர்கள் மாணிக்கம் என்ற ஒரு ஆசாமியும், அவருடைய மனைவி விஷாலாஷியும். அந்த தம்பதிகளுக்குப் பிள்ளைக் குட்டிகள் இல்லை. அதனால்தான் பாண்டுரங்கமும் அவர்களுக்கு அந்த வீட்டை விட்டார். ஒரு பிள்ளை பிறந்தால் காலி பண்ணச் சொல்லிவிடலாம் என்பது அவர் உத்தேசம். பிள்ளைக்குட்டிகள் இருந்தால் – அதாவது குடித்தனக்காரர்களுக்கு இருந்தால்- வீட்டில் அமைதி நிலவாதே!
மாணிக்கமும் விசாலாஷியும் தங்கள் போர்ஷனை விட்டு வெளியே வரவேண்டுமென்றால், தேவகியம்மாளின்!அறையைத்தாண்டித்தான் வரவேண்டும். அப்போது வலதுபுறம் உள்ள ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால் தேவகியம்மாள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். கண்ணாடியில் மாணிக்கத்தின் நிழல் விழுந்துவிட்டால் போதும், அவள் அப்படியே வெட்கத்தினால் ஓடி ஒளிந்து கொள்வாள். அவர் எப்போதாவது எதிரே வந்துவிட்டாலோ, உடம்பில் ஐஸ் தண்ணீர் கொட்டிவிட்டதுபோல் நடுங்கி வெட்கத்தினால் முகம் கோணி, கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே உள்ளே போய் விடுவாள்.
‘இவளுக்கு என் தாயார் வயசு இருக்கும்போலிருக்கு!என்னைப்பார்த்து இப்படி ஏன் வெட்கப்படுகிறாள் ? ‘ – இதுதான் முதன்முதலாக ஆச்சரியத்தோடு மாணிக்கம் தன் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள்.
‘அது வெட்கமோ ? பயமோ ? ‘ என்றாள் விசாலாட்சி.
‘பயமா ? என்னைப் பார்த்து பயப்படுவானேன் ? இவளைப்பார்த்தால்தான் எமனே பயப்படணும்போலே இருக்கு. இவளுக்கு எதுக்கு பயம் ? பார்த்தால் அப்படியே தூக்கிட்டுப்போயிடுற மாதிரி அழகு சுந்தரியா இருக்கிறா பாரு, பயப்படவேண்டியதான்! ‘
‘நீங்க அப்படி சொல்றீங்க. அவளுக்கோ அவள் அழகு சுந்தரியா இருக்கிறாளே!ரம்பையாத்தான் தோன்றாளே! அதுதெரிஞ்சிதானே அவள் இந்த பயம் பயப்படுறா, ஆம்பிளைங்களைக் கண்டதும் ? அந்த அம்மாள் தன்னை விட அழகி இந்த பூலோகத்திலேயே கிடையாதுண்ணு நிஜமாவே நினைக்கிறா! தெரியுமா ? ‘
‘நிலைக்கண்ணாடியையும் வீட்டிலே வெச்சிக்கிட்டு அவளுக்கு இப்படியும் நினைக்கதோணுதே, அதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! ‘
‘நிலைக்கண்ணாடி ஒரு கண்ணாடியா ? முகத்துக்கு முகம்தான் கண்ணாடி. அவர் முகம் கண்ணாடி. அம்மா அதிலேதான் அழகைப்பார்க்கிறா! ‘
வரவர தேவகியம்மாளின் தளுக்கும் மினுக்கும், நாணமும் ஓட்டமும் மாணிக்கத்தின் பொறுமையைச் சோதித்துவிட்டன. அவர் பாண்டுரங்கத்தை ஒரு நாள் சந்தித்தபோது தனது எரிச்சலை பரிகாசமாக மாற்றி, ‘சார்… ‘ என்று பேச்சைத் தொடங்கி, ஊரில் தன் தம்பி ஒரு பணக்காரப் பெண்ணை அழகில்லை என்று சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மறுப்பதாக ஒரு பொய்க்கதையைப் பேச்சின் நடுவிலேயே திரித்து, உள்ளே இருக்கும் தேவகி அம்மாளுக்கும் கேட்கும்படியாக, ‘பாருங்க, சார். அழகில்லை அழகில்லைன்னு அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறானாம். அழகில் என்னசார் இருக்கு ? முகக்களைதானே சார் முக்கியம் ? குரங்கா இருந்தாலும் களையா இருந்தா, எடுத்துக் கொஞ்சத் தோணுமே, சார்! முகத்திலே மகாலட்சுமி மாதிரி ஒரு களை இருந்தா, அப்புறம் அழகை லட்சியம் பண்ணுவானேன்! தெருவுக்கு ஆயிரம் அழகிகளை பார்க்கலாம்; ஆனால் முகக்களையொட ஊருக்கு ஒண்ணு கூட பார்க்க முடியாதே, சார் ‘
என்றார்.
‘வாஸ்தவம் ‘ என்றார் பாண்டுரங்கம்.
‘அந்தப் பொண்ணை நானும் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். ஏறக்குறைய உங்க மிஸஸ் ஜாடைதான். முகத்திலே இதே லட்சுமிகரம்! இந்தக்களையே தான் ‘ என்று மாணிக்கம் துணிந்து சொல்லிவிட்டார்.
தேவகியம்மாளுக்கு உள்ளே நிலை கொள்ளவில்லை. இங்கே பாண்டுரங்கமும் சந்தோஷத்தினால் திறந்த வாய் மூடமுடியாமல் நின்றார். மனைவியின் முகத்தில் அபாரக் களை சொட்டுவதாகப் பலவருஷங்களுக்கு முன் உபசாரமாகவும் உபாயமாகவும் சொன்ன பொய்யுரையை அவரே இப்போது மெய்யுரை என்று நம்பத் தொடங்கிவிட்டார்.
தேவகியம்மாளுக்குத் தன் முகக்களையில் இருந்த நம்பிக்கை நூறு மடங்கு பெருகிவிட்டது. அதன் பலனாக மாணிக்கத்தையும் மாடியறை ஆசாமிகளையும் பார்த்து அதிகமாக நாணவும், அதிகமாக ஓடி ஒளியவும் ஆரம்பித்தாள்.
வயது ஏற ஏற, தலை நரைக்க நரைக்க, அந்த அம்மாளுக்கு மேன்மேலும் இளமை திரும்புவதை கண்டு வினாயகமும் அதிசயித்தான். அவன் மாடியில் நின்று கீழே முற்றத்தில் நடமாடும் தேவகியம்மாளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசிப்பதுண்டு. துரையிடம் சொல்லி தலையில் அடித்துக் கொள்வதும் உண்டு. அவன் தன்னை அடிக்கடி திரும்பிப்பார்க்கிறான் என்பதைத் தேவகியம்மாளும் கவனித்து விட்டாள். தன்னை யாரும் திரும்பியே பார்க்க மாட்டார்கள் என்று சொன்ன கணவனின் முகத்தில் கரி பூசியாகிவிட்டது என்று எக்களிப்புக் கொண்ட தேவகியம்மாள், வினாயகத்திடம் அலாதியான வாத்ஸல்யமே கொண்டுவிட்டாள்.
அவன் வந்த மறுமாதத்திலிருந்தே சிறுவர்கள் அவனுடைய அறைக்குப் போய் மிட்டாய் வாங்கித் தின்பதும், அங்கேயே விளையாடுவதும் சகஜமாகிவிட்டது. லல்லுவுக்கும் பரீட்சையின்போது அவன் பாடம் சொல்லிக்கொடுத்தும் இருக்கிறான். ‘அசோக் எங்கே ? ரவி எங்கே ‘ அவன் பாண்டுரங்கத்த்தின் பிள்ளைகளைத் தேடிக்கொண்டு கீழே இறங்கிவந்தால், அவன் தன்னைச் சரச சல்லாபத்துக்கு அழைப்பது போல் தேவகியம்மாள் பார்த்துக் கொண்டு நாணம் மேலிடத் தலை குனிந்து, கடைக்கண்ணால் கொஞ்சமும், புன்னகையால் கொஞ்சமும், அப்புறம் வாய்ச்சொற்களால் கொஞ்சமும் பேசிப் பதில் சொல்வாள். இந்தக் காட்சியை எல்லோருமே பலமுறை பார்த்திருக்கிறார்கள். மாணிக்கத்துக்கு சந்தேகம் கூட ஏற்பட்டு, ‘இவள் வலை வீசுறாளா ? அவன் வலை வீசுறானா ? தெரியல்லே. ரொம்ப ரொம்ப இழையறாங்க! ‘ என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டார். தனக்கும் அந்த சந்தேகம் உண்டு என்றும், இன்னும் தெளிவு ஏற்படாமல் தான் தவித்துக் கொண்டிருப்பதாகவும் விசாலாட்சி சொன்னாள்.
‘அவன் மூணுவருஷமா மெத்தை மேலே குடியிருக்கிறானாம். அதனாலே ஒரு வேளை நெருங்கிப் பழகலாம். எந்த நேரமும் இந்த பையன்களும், ஒவ்வொரு சமயத்திலே பொண்ணும்கூட அங்கே போய் ‘கேரம் போர்டு ‘ விளையாடுதுகள் ‘ என்றார் மாணிக்கம்.
‘பொண்ணு மாடிக்குப் போறா. அவன் கீழே வந்தாலும், பொண்ணு அவனோட நிமிர்ந்து நின்னு பேசறா. ஆனா அம்மாக்காரிக்கு அவனைக் கண்டால் வெட்கம்! இதைப்போல ஒரு அதிசயம் வேறே எங்கேயும் பார்க்க முடியாது ‘ என்றாள் அவள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு துரை உத்யோக மாற்றுதலாகி அறையைக் காலி செய்துவிட்டு, சென்னையை விட்டே போய்விட்டார். அவருக்கு பதிலாக ஒரு நல்ல ஆசாமி வந்து சேரட்டும் என்று காத்திருந்த பாண்டுரங்கம் வீட்டு புரோக்கர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். மாடி அறையில் ஒரு ஆள் குறைந்துவிடவே, அந்த இடம் விளையாடுவதற்கு வசதியாக இருந்தது. நவராத்திரி விடுமுறையில், லல்லு, அசோக், ரவி ஆகிய மூவரும் மாலையிலும் முன்னிரவிலும் வினாயகத்தோடு அமர்க்களமாகக் ‘கேரம் ‘ ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள் வினாயகம் அந்த மூவருடனும் கீழே இறங்கிவந்தபோது எதிரே நின்ற தேவகியம்மாள் வாரிச் சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடினாள். ஓடிய ஓட்டத்தில் அங்கே சட்டை போட்டுக்கொண்டு நின்ற பாண்டுரங்கத்தின்மேல் போய் விழுந்து விட்டாள். அவர் அப்படியே கட்டிலில் போய் விழுந்தார். முழங்கை கட்டில் சட்டத்தில் மோதிவிடவே தாங்க முடியாத வலி ஏற்பட்டு அவருக்கு ஒரு கணம் கண் இருட்டியும் விட்டது. மீண்டும் கண்ணுக்கு வெளிச்சம் தெரிந்த பிறகு முழங்கை வேதனை பொறுக்க மாட்டாமல் மனைவியைப் பார்த்து முதன்முதலாகச் சீறி விழுந்தார்.
‘ஏன் இப்படி மாடாட்டம் வந்து வுயுற ? கண்ணு தெரியல்லியா ? ‘ என்று பாய்ந்தார் பாண்டுரங்கம். அடிப்பதற்கு கையை ஓங்கி இருப்பார். ஆனால் அடிக்கும் கையில்தான் அடி. தூக்க முடியவில்லை. அதனால் ஆத்திரம் மிகுதியாகி விட்டது. ‘நீ பொம்மனாட்டி தானா ? ‘ என்றும் கேட்டுவிட்டார்.
அவள் தன் குற்றத்தை உணர்ந்து, ‘ நான் பார்க்கல்லே. மெத்தை மெல் இருக்கிறவர் எதிரே வந்துட்டார்… ‘ என்று சமாதானம் சொல்ல முயன்றாள்.
‘வந்துட்டா இன்னா ? அவருக்கு வயசு இருவது; உனக்கு வயசு நாற்பது. சின்னபொண்ணாட்டம் பயந்து சாவுறியே. எதுக்கு ? எதுக்கும்மா இந்த வெட்கம் ? கேக்கறேன். ‘
பாண்டுரங்கமா இப்படி துணிந்து பேசுகிறார் என்று வீட்டில் அத்தனை பேரும் – வினாயகம், மாணிக்கம், விசாலாட்சி உட்பட – வியப்பில் ஆழ்ந்தார்கள். அவருடைய குரல் வீடெல்லாம் கேட்டது. அவளை அவர் எவ்வளவு மட்டம் தட்டினாலும் தகும் என்று தத்தம் இடங்களில் இருந்து கொண்டே மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். ஆனால் அப்படி துணிந்து பேசியது அவருடைய முழங்கை வேதனையே தவிர அவரல்ல என்பது யாருக்கும் தெரியாது.
‘நாற்பது வயசுக்கு மேலே அம்மாளுக்கு இன்னா வெக்கம்டா, இன்னா வெக்கம்! உன் பல்லைப்பார்த்தாலே பத்து நாளைக்குச் சாப்பிடமாட்டாங்களேடி ‘ என்று பயங்கரமாக ஒரு போடு போட்டுவிட்டு, ‘டேய் அஷோக்! போய் ஒரு ரிக்ஸா இட்டாடா. டாக்டர்கிட்டே போவணும். நோவு பிராணன் போவுது ‘ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தார் பாண்டுரங்கம்.
தன் தப்பை உணர்ந்து பதில் பேச முடியாமல் தேவகியம்மாள் நின்ற பரிதாபம் போதாதென்று, அவளுடைய பற்களைப் பற்றிக் கணவன் சொன்ன வார்த்தைகள் வேறு ஈட்டி போல் பாய்ந்தன. அவமானம் தாங்காமல் குப்புறப் படுத்து முகத்தை தலையனையில் புதைத்துக் கொண்டாள் அவள். இனி அவள் பிழைத்தால் மறு ஜன்மம்தான் என்று உள்ளே விசாலாட்சி சொல்லிக் கொண்டாள்.
டாக்டர் வீட்டுக்குப் போன பாண்டுரங்கம், எலும்புக்குச் சேதமில்லை என்று அறிந்து, ஒரு களிம்புப் பூச்சோடு மார்வாடி கடைக்குப் போய்விட்டார்.
மாலை வந்தது. அப்புறம் இரவும் வந்தது. இரவு வந்ததுமே, மனைவியைக் கடுஞ்சொற்களால் திட்டியது தவறென்று பாண்டுரங்கத்துக்குத் தோன்றிவிட்டது. அவளைச் சமாதானப்படுத்தவும், அவளுடைய அன்பை மீட்கவும் பத்துக்காசு மல்லிகைப்பூ, பத்துக்காசு பக்கவடாப்பொட்டலம், பத்துக்காசு பூவன்பழம் ஆகிய காணிக்கைகளோடு வீடு திரும்பினார். தன்னுடைய தவறுக்காகவும், தான் அடைந்த அவமானத்துக்காகவும் வெளியே தலைகாட்டப் பயந்து மூலையில் கிடந்த தேவகியம்மாள் கணவர் கொண்டுவந்த காணிக்கைகளைக் கண்டாள்; மாண்டவள் மீண்டாள் என்னும்படி புத்துயிர் பெற்றாள். கணவன் தன் பற்களைப் பற்றிச் சொன்னது கோபத்திலே சொன்ன வார்த்தைகளே ஒழிய பழிப்புரையோ, மெய்யுரையோ அல்ல என்று உணர்ந்தாள். மறுநாள் வழக்கம்போல் அலங்கரித்துக் கொள்ளவும், ஆடவர்களைக் கண்டு அஞ்சி கூசவும் தனக்குக் கணவன் சுதந்திரம் கொடுத்துவிட்டார் என்பதையும் உணர்ந்து கொண்டாள். சற்றே அசைவுகண்ட அவளுடைய நம்பிக்கை தன் முகக்களையில் இருந்த நம்பிக்கை பழையபடி உரம் பெற்றுவிட்டது.
(இறுதிப்பகுதி அடுத்த வாரம்)