முகக்களை

0 minutes, 15 seconds Read
This entry is part [part not set] of 2 in the series 20000410_Issue

ku alagirisamy


2

கல்யாணம் நடந்தது. தேவகியும் தனக்கு முகக்களையும், ஏதோ ஒரு வகையில் ஒரு அழகும், பார்த்த பார்வையிலேயே ஒருவன் மனத்தைப் பறி கொடுக்கும்படி செய்யக்கூடிய கவர்ச்சியும் இருப்பதாக திடமாக நம்பிவிட்டாள். உயிரை விட்டுவிட நினைத்திருந்தவளுக்குப் பாண்டுரங்கம் உயிர்ப்பிச்சை கொடுத்ததோடு, முகக்களையையுமே கொடுத்துவிட்டார். கணவனே கண்கண்ட தெய்வம் என்று அவள் பாண்டுரங்கத்துக்குப் பணிவிடை செய்தாள்; அவள் தம்மை மணந்து கொண்டதால்தான் தாமும் ஒரு சம்சாரியாக வாழ முடிகிறது என்றும், இல்லையென்றால் வெள்ளை வேட்டிப் பண்டாரமாக வாழ்நாளைக் கழிக்க நேர்ந்திருக்கும் என்றும் நினைத்த பாண்டுரங்கம் மனைவியைத் தலைக்குமேல் தூக்கிச் சுமக்கத் தயாராக இருந்தார்.

தாம்பத்தியத்தில் அன்பு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் பெற்றோர் உயிரோடு இருக்கும்வரையில் அந்த வெள்ளத்தை அவ்வப்போது அணைபோட்டுத் தடுப்பது என்பது நெடுங்கால மரபாக இருந்து வருவதால், சிறிது காலத்திற்குள்ளாகவே, மாமியார் மருமகள் சண்டைகளும், சில சமயங்களில் மாமனார் மருமகள் சண்டைகளுமே மூண்டுவிட்டன. ஒவ்வொரு சண்டைக்கும் மூலகாரணமாகவே இருந்தது, வீட்டு வேலைகளைச் செய்யாமல் தேவகி எப்போது பார்த்தாலும் நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வதிலேயே நேரத்தைப் போக்குகிறாள் என்ற புகார்தான். ‘காலையில் ஒரு அலங்காரம், மாலையில் ஒரு அலங்காரமா ? அவள் பூசுகிற செந் நெடி தாங்கவே முடியவில்லை. குமட்டல் எடுக்கிறது. வீட்டு நடுக்கூடத்தின் வழியாக குடித்தனக்காரர்கள்- ஆடவர்கள் நடந்து சென்றால் வெட்கம் தாங்காமல் ஓடிவந்து கண்ணாடி இருக்கும் அறையினுள் புகுந்து கொள்கிறாள்; அப்புறம் நாள் முழுவதும் வெளியே வர மறுக்கிறாள் ‘ இப்படி எல்லாம் பெற்றோர் புகார் செய்தும் பாண்டுரங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்புறம் அவர்கள் எத்தனை நீதி நியாயங்கள் எடுத்துக் கூறியும், ஒவ்வொரு சமயத்தில் கண்ணீர்விட்டு அழுதும் மகனைத் தன்பக்கம் இழுக்க முயன்றார்கள். ஆனால் பாண்டுரங்கமோ ஒவ்வொரு சண்டையிலும் மனைவியின் பக்கமே தோளோடு தோளாக நின்றாரே ஒழிய, கட்சி மாறுவதற்கு சிறிதும் இசையவில்லை. இதைக்கண்டு பெரிதும் கவலைக்குள்ளான பெற்றோர் இந்தக்கவலையினால்தானோ, அல்லது வேறு காரணங்களினாலோ ஒருவர் பின் ஒருவராக நான்கு மாத இடைவெளி விட்டுப் பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த வருஷத்திலேயே பாண்டுரங்கத்தின் மூத்த மகள் லல்லு (லலிதா) பிறந்தாள்

(2)

கோடிக்கு ஒரு வெள்ளை; குமரிக்கு ஒரு பிள்ளை என்பார்கள். ஒரு தடவை வெளுக்கப் போட்டுவிட்டால் கோடி வேஷ்டி பழைய வேஷ்டிதான்; குமரிப்பெண்ணின் கதையும் அதுதான். ஒரு குழந்தை பெற்றதோடு குமரிப்பட்டமும் போய்விடும். ஆனால் தேவகியம்மாள், லல்லுவைப் பெற்றெடுத்த் பிறகும் தன் அலங்காரத்தையோ சங்கோஜத்தையோ நிறுத்திக் கொள்ள – குறைத்துக் கொள்ளக்கூட – தயாராக இல்லை. முகக்களை இருக்கிறது. ஏதோ ஒரு கவர்ச்சி தனக்கு இருக்கிறது என்பது தெரிந்து விட்டதால், அதைக்கொண்டு தன்னுடைய அழகின்மையை ஈடு கட்டிவிட வேண்டும் என்பதில் விடாமுயற்சியோடு இருந்தாள். இப்படி முயற்சி செய்து வந்த தேவகியின் அபார நம்பிக்கையைச் சோதிக்ககூடியவாறு ஒரு சம்பவம் நடந்தது. அபோது தேவகி மிகுந்த ஆக்ரோஷத்துடன் புலிப்பாய்ச்சல் பாயவே ஆரம்பித்துவிட்டாள்.

பாண்டுரங்கம் தம் வீட்டு மொட்டை மாடியில் புதிதாகக் கட்டிமுடித்த ஓர் அறையை முதன் முதலாக இரண்டு பிரம்மச்சாரிகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்து மூன்று மாத அட்வான்சும் வாங்கிவிட்டார். வீட்டின் ‘பின்போர்ஷ ‘னில் அப்போது ஒரு குடும்பம் வாடகை கொடுத்துக் குடியிருந்து வந்தது. அந்தக் குடும்பத்தலைவியையும் தன்னையும் மனத்தில் வைத்துக் கொண்டு தேவகி கணவனைக் கேட்டாள்: ‘குடியும் குடித்தனமுமா இருக்கிற வூட்லே மொட்டைப் பசங்களை வைக்கலாமா! ‘

பாண்டுரங்கம் சிரித்துக் கொண்டே, ‘நீ இன்னா சொல்றே தேவு ? அந்த ரூம்பிலே மொட்டைப் பசங்க தானே இருக்க முடியும் ? அங்க என்ன சமயக்கட்டா, அம்மியா, ஆட்டுக்கல்லா, இன்னா இருக்குது ? ‘ என்று கேட்டார்.

‘கடனோட கடனா இன்னும் கொஞ்சம் வாங்கிப்போட்டு ஒரு கொட்டா போடுறதுதானே சமயக்கட்டுக்கு ? ‘

‘தேவு, தோ பாரு! உனக்கு இன்னா தெரியும் ? குடும்பக்காரன் இன்னிக்கெல்லாம் குடுத்தாலும் இருபத்தஞ்சு ரூபாக்கு மேல குடுக்க மாட்டான். இந்தப் பசங்க ஒண்டிக்கட்டங்களா இருந்தாலும் ஆளுக்கு இருபது ரூபா தரப்போறாங்க! சொளையா நாற்பது ரூபா! கரண்டுக் காசு வேற! இன்னா சொல்றே நீ ? ‘

தேவகியம்மாளால் பதில் பேசமுடியவில்லை. ரூபாய் நாற்பது என்ற சொல், கோடையிலே சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரி உள்ளுக்குள்ளே ஜிலுஜிலுத்துக் கொண்டே கரைந்து நிறைந்தது. இருந்தாலும், தோல்வியடைந்த மாதிரி காட்டிக்கொள்ள விரும்பாமல், ‘உனக்கு ரொம்பத்தான் துணிச்சல்! உன்னைத் தவுத்து வேறே யாரும் இப்படி மொட்டைப்பசங்களை இட்டாந்து கொடக்கூலிக்கு வுடமாட்டாங்க. எனக்கு இதெல்லாம் புடிக்கலே. அவ்வளோதான் சொல்லுவேன் ‘ என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

அப்போது அவளுடைய கவலையைப் போக்க விரும்பிய பாண்டுரங்கம், ‘தேவு, நீ ஒண்ணுத்துக்கும் பயப்படாதே. உன்னை இவங்க திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க. ரொம்ப நல்ல புள்ளையாண்டான்க… ‘ என்று சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னாரோ இல்லையோ, நடுத்தெருவில் மானபங்கப்படுத்தப்பட்டவள் போல் பெருங்கூச்சல் போட்டாள் தேவகி. ‘என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்களா ? நான் என்ன அப்படியா அவலட்சணமா இருக்கிறேன் ? இதைக்கேட்டுக்கினு நான் உசிரோட இருக்கணுமா! நான் அவலட்சணமா இருக்குறேன்னா என்னை எதுக்காக நீ கண்ணாலம் பண்ணிக்கினே ? ‘ என்று கேட்டு விட்டு தலையிலும் அடித்துக் கொண்டு, ‘கடவுளே! நான் இன்னும் உசிரோட இருக்கிறேனே! கட்டின புருஷனே என்னைக் குரங்குன்னு பேசுறானே! என் அம்மாக்காரி- அந்தச் சண்டாளி- பேச்சைக் கேட்டு இந்த மனுஷனுக்குக் கயுத்தைச் சாச்சேனே! .. ‘ என்று ஓலமிட்டாள்.

பாண்டுரங்கம் ‘தேவு! தேவு! ‘ என்று பதற்றத்துடன் அவளைச் சுற்றிச்சுற்றி வந்தார். அவளும் அவரைப் பார்க்க விரும்பாமல் ராட்டினமாகச் சுற்றினாள். அவளுடைய கையைப் பிடித்து அவர் சமாதானப்படுத்த முயன்றபோது, அடச் சீ! என்று உதறிவிட்டு, இன்னிக்கே நான் சமுத்திரத்திலே போய் வுயல்லே, என் பேரு தேவகி இல்லே ‘ என்று சொல்லிக் கொண்டே போய்க் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். பாண்டுரங்கம் அதிர்ச்சியால் விதிர்விதிர்த்து, விழிகள் பிதுங்க முரண்டு, அந்தக் காலத்து நட்டுவனார்கள் போல் குடுகுடு என்று அவளைப் பின் தொடர்ந்து ஓடினார். ‘தேவு! தேவு! தேவு! …. ‘ – இந்த ஒரு சொல்லைத் தான் அவர் வாய் உச்சரித்துக் கொண்டே இருந்தது. லல்லு- அந்த மூன்று வயதுப் பெண் – பயந்து போய் அழுததும், அவர் வேஷ்டியை ஆதரவாகப் பிடித்ததும் அவருடைய கவனத்தில் விழவே இல்லை.

‘நான் ஒண்ணும் தப்பாச் சொல்லல்லியே, தேவு! ஏன் இப்படிக் கூச்சல் போடுறே ? வேணாம், நான் உன்னை இன்னா சொன்னேன் ? ஒண்ணுமே சொல்லல்லியே! ‘ என்றபடியே பாண்டுரங்கம் கட்டிலில் அமர்ந்தார். உடனே அவள் அவரைக் கீழே தள்ளினாள். அவர் தரையில் உட்கார்ந்து கொண்டார். ஆயிரம் சொல்லிக் கெஞ்சினார். அவளோ குப்புறப் படுத்த நிலையிலிருந்து அணுவளவும் புரளவில்லை; ஆக்ரோஷமான பெருமூச்சும், அழுகையை அடக்கும்போது பற்களைக் கடிக்கும் நறநறப்பும் நிற்கவில்லை. பாண்டுரங்கம் சோர்ந்து போய் ஆயாசத்தோடு தலையில் கையை வைத்துக் கொண்டு யோசித்தார். திடாரென்று மார்வாடிக் கடை ஞாபகம் வந்துவிட்டது. ‘வேலைக்குப் போகவேண்டுமே! ‘ என்ற பயத்தில் வெளியே வந்து விட்டார்; கடைக்கும் போய்விட்டார்.

இரவு அவர் திரும்பி வந்த போது தேவகியம்மாள் அதே நிலையில் கட்டிலில் கிடந்தாள். ஆனால் உடைமாறியிருந்தது. தலையில் பூவும் பிடரியில் பவுடரும் இருந்தன. அவர் உள்ளே நுழையவும் அவள் பற்களைக் கடிக்கவும் சரியாக இருந்தது. அன்றிரவு அவர் தாமாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டார். அதைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை; அவசியமானால் தாமே சமையல் செய்யவும், அவளுக்கு ஊட்டவும் கூட, அவர் தயாராக இருந்தார். அவருடைய கவலை வேறு; துன்பமும் வேறு. அந்த ஓர் இரவு அவர் மனைவியை பிரிந்திருக்கும்படி நேர்ந்தது. ஓர் இரவு ஓர் யுகமாகக் கழிந்தது. மனம் கலங்கி, புத்தியும் பேதலித்து, ‘இப்படியே தான் இனி வாழ வேண்டுமா ? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா ? கடவுளே! ‘ என்று மறுகி, அன்று கடைக்கு லீவு போட்டுவிட்டு வந்து தாமே சமையல் பண்ணிணார். பிறகு மனைவியைச் சமாதானப்படுத்துவதில் ஈடுபட்டார்.

தேவகியம்மாளோ அன்றே ஒரு முடிவைப் பார்த்து விடுவது, ஒரு தெளிவைக் கண்டு விடுவது என்று வைராக்கியமாக இருந்தாள். மணிக்கணக்கில் முறையிட்ட பாண்டுரங்கம் கடைசியில் அழமாட்டாத குறையாகச் சொன்னார் ‘ கண்ணு! என் மனசு உனக்குத் தெரியாது. எத்தினியோ பணக்காரப் பொண்ணுங்களையெல்லாம் வேணாம்னுட்டு உன்னைக் கண்ணாலம் பண்ணிக்கினேன். எனக்கு சொந்த வூடு இருக்குதுன்னு தெரிஞ்சி எவன் எவனோ பொண்ணைப் பெத்தவன் வந்து காலைப் புடிச்சான். ரெண்டொரு பெண்ணையும் பார்த்தேன். ஒண்ணொண்ணும் ரதம் மாதிரி அலங்காரமாத்தான் இருந்திச்சி. ஆனா, நான் ஒப்புத்துக்கல்லே. ஏன் ? அயகு இருந்தால் போதுமா ? மூஞ்சியிலே லெச்சுமி இருக்க வேணாம் ? அப்பாலே, அப்பாலே ? அதுவும் உன்கிட்ட மறைப்பானேன் ?- காலேஜிலே படிக்கிற ரெண்டு மொட்டைங்க என்னைச் சுத்திச் சுத்தி வந்துச்சு. நானும் அதுகளோட அதுகளோட சிநேகிதமா இருந்தேன்னு வச்சிக்கோயேன். அது ஒரு ரெண்டுவருஷம். கண்ணாலம் கட்டிக்கச் சொல்லிப் பார்த்திச்சு. நான் ஒரே முட்டா முடியாதுன்னுட்டேன்… ‘

பாண்டுரங்கத்தின் குரலில் துயரம் குறைந்து, உற்சாகம் மேலோங்கியது. அவருடைய கட்டுக்கதைகல் அவருக்கு கிளுகிளுப்பை ஊட்டியது போல, அவளுக்கும் ஊட்டின. அவள் பெருமூச்சு விடுவதை நிறுத்தி கணவனின் ராஸ கிரீடைகளைப்பற்றிய விவரங்களை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘தேவு! உன்னைப் பார்த்தேன். உன் மூஞ்சியைப் பார்த்தேன். லெச்சுமி தாண்டவமாடினா. அப்படியே காலிலே வுயுந்த மாதிரி வுயுந்துட்டேன். எனக்கு நீதான் லெச்சுமி. நீ என் வூட்டுக்கு வந்தே… ‘

‘என் அப்பனும் ஆத்தாளும் செத்தாங்க ‘ என்று பாண்டுரங்கம் சொல்லப்போகிறாரோ என்று அப்போது காரணமில்லாமலே பயந்தாள் தேவகியம்மாள்.

‘நீ என்வூட்டுக்கு வந்தே, அன்னியிலேருந்து எனக்கு நல்லகாலம் தான். இப்போ மாடியும் கட்டிட்டேன். மொதல் மாசக் கொடக்கூலியிலே உனக்குப் பட்டு பொடவை வாங்குறதாயும் இருக்கேன். தேவு, ஏந்திரு, வா, சாப்பிடு. கோவிச்சுக்காதே ‘ என்று சொல்லிக் கையை தொட்டார் பாண்டுரங்கம். அப்போது அவள் உதறவில்லை. சாகஸமாக சிறிது மறுத்தாள்; சற்றுத் திமிறினாள்; கடைசியில் எழுந்துவிட்டாள்.

தேவகியம்மாள் சாப்பிட்டாளே ஒழிய, அவளுடைய பிணக்கு முற்றாக தீரவில்லை. அவர் மேலும் பல கட்டுக்கதைகளையும், பாராட்டுரைகளையும் சொல்லி ஒரு தமிழ்ப்படத்துக்கும் அவளை அழைத்துக்கொண்டு போனார்; பத்துக்காசுக்கு மல்லிகைப்பூவும், பத்துக்காசுக்குப் பக்கவடாப் பொட்டலமும், பத்துக்காசுக்கு பூவன் பழங்களும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகுதான் அவளுடைய ஆத்திரம் தணிந்தது. ஆனந்தமும் திரும்பியது. பாண்டுரங்கத்தின் ஒரு நாளைய கட்டாயப் பிரம்மச்சரியமும் அந்த ஒரு நாளோடு போய்விட்டது. அதன் பின் தம்பதிக்கிடையில் எந்தவிதமான தகராறும் ஏற்படவில்லை. அவ்வப்போது கணவனின் உள்ளத்தை சோதித்தறிவதற்காகம் தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவள் ஏதேனும் ஒரு சிறு பரீட்சை வைப்பாள். அலங்கரித்துக் கொண்டு அவர் எதிரே போய் நிற்பாள். அவருடைய முகம் மலர்கிறதா என்று பார்ப்பாள். அவர் வாயிலிருந்து பாராட்டும் பரவச மொழிகளும் வரும்வரையில் அங்கேயே நிற்பாள். முன்னும் பின்னும் நடை பயில்வாள். கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிடால் வரமாட்டாள்; கூப்பிடாமலேயே வருவாள். கடைசியில் வெற்றியோடுதான் அன்றிரவில் படுக்கைக்குச் செல்லுவாள்.

இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இந்த தாம்பத்திய ஐக்கியத்தை அன்பு வெள்ளத்தை, பின் போர்ஷனில் வாழையடி வாழையாக வசித்து வந்த குடித்தனக்காரர்களும், மாடி அறை ஒண்டிக்கட்டைகளும் நிரந்தரமாக பார்த்துப்பார்த்து தமக்குள் சிரித்திருக்கிறார்கள்.

(தொடரும்)

Series Navigation

author

ku alagirisamy

ku alagirisamy

Similar Posts