முகக்களை

This entry is part [part not set] of 4 in the series 20000402_Issue

கு அழகிரிசாமி


1

பாண்டுரங்கத்திற்கும் தேவகிஅம்மாளுக்கும் கல்யாணமாகி ஏறக்குறைய இருபது வருஷங்கள் ஆகின்றன.

ஏதோ ஒரு வகையில் தான் அழகாக இருப்பதாய் தேவகியம்மாள் நினைக்கத் தொடங்கியது கல்யாணத்திற்குப் பிறகுதானே ஒழிய முன்னால் அல்ல. கன்னிப் பெண்ணாக இருந்தபோது தன்னை அவள் ஒரு அழகியாக கருதவில்லை என்பதோடு, ஒரு கட்டத்தில் தன் முகம் அவலட்சணமாய் இருப்பதாகவும்கூட நினைத்திருக்கிறாள். அதற்குக் காரணம், அவளுக்குப் பேசிய இரண்டு கல்யாணங்களும் நின்றுவிட்டதுதான். இரண்டு இடங்களிலும் மாப்பிள்ளைகளின் பெற்றோர்கள் முகூர்த்தம் வைக்கத் தயாராகவே இருந்தார்கள்; ஆனால் பெண்ணை நேரில் வந்து பார்த்த மாப்பிள்ளைகள்தான் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள்.

இது தெரிந்து அப்போது அக்கம்பக்கத்தார் கை கொட்டிச் சிரித்தார்கள். ‘அதுதானே பார்த்தேன் ?இவளையும் இவள் பல்லையும், இவ மூஞ்சியையும் பார்த்துட்டு ஒருத்தன் இவளைக் கட்டிக்கச் சம்மதிப்பானான்னு கேட்டேன். இவளைப் பார்த்துட்டு மாப்பிள்ளைங்க தப்பினேன், பொழச்சேன்னு ஓடிட்டாங்க! ‘ என்றாள் ஒருத்தி.

‘என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான், என் பொண்ணுக்கு மாப்பிள்ளை வரப்போறான்னு அம்மாக்காரி குதிச்சாளே, இப்போ என்ன ஆச்சு ? இவளை ஒருத்தன் எதிர்க்கே ஒக்காத்தி வச்சிகினு சோறுதுண்ணவே முடியாதேம்மா. கண்ணாலம் எப்படி பண்ணிக்குவான் ? ‘ என்றாள் இன்னொருத்தி. வேறொருத்தியோ, தேவகியின் காதுகள் எலிக்காதுகள் மாதிரி மேலே ஏறிப்போய் உச்சந்தலையில் இருப்பதாகக் குறை சொன்னாள். இவள் இமை கொட்டும்போது, கோழி கண்ணை மூடித் திறப்பதுபோல இருப்பதாகச் சொன்னாள் மற்றொருத்தி. தேவகியின் முகத்தில் பல் இருப்பதுதான் தெரிகிறது என்றும், மூக்கு கண், நெற்றி முதலியவற்றைப் பட்ட பகலிலேகூட விளக்கைப் பக்கத்தில் கொண்டுபோய் வைத்துப் பார்த்தால்தான் தெரியும் என்றும் ஆளுக்கொன்று சொல்ல, எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

அக்கம்பக்கத்துப் பெண்கள் இப்படித் தன்னுடைய முகத்தோற்றத்தைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டது தேவகியின் காதுகளுக்கும் எட்டிவிட்டது. ஆனால் அவர்களில் ஒவ்வொருத்தியுமே தனித்தனியாக வந்து, மற்றவர்கள்தான் அப்படி அநியாயமாகப் பேசிக்கொண்டார்கள் என்றும், ‘இந்தப் பொம்மனாட்டிகளுக்கு வாய் சும்மா இருக்காது, யாரையாவது குத்தம் சொல்லணும், இதே பொழப்பாப் போச்சு ‘ என்றும் சொன்னார்கள்.

என்றாலும் தேவகிக்கு மனம் உடைந்து விட்டது. தான் அவலட்சணமாக இருப்பதாய் அவளே நினைக்கும்படி ஆகிவிட்டது. இப்படி எண்ணிவிட்ட ஒரு பெண்ணால் உயிரோடு இருக்கவே முடியாது என்றும், உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் உயிர் வாழ்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றவே, மூன்றாவதாகத் தன்னைப் பார்க்க வரும் ஒருவன் தன்னைத் தட்டிக் கழித்தால் தன் உயிரைத் தானே போக்கிக் கொள்வது என்று முடிவு கட்டிவிட்டாள். மூன்றாவதாக அவளைப் பார்க்கப்போனவர்தான் பாண்டுரங்கம். பார்த்த மாத்திரத்திலேயே அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் மனப்பூர்வமாகச் சம்மதம் அளித்துவிட்டார்.

‘எத்தனையோ பொண்களை வாண்டாம் வாண்டாம்னு சொன்னவன், உங்க பொண்ணைப் பார்த்ததுமே சரின்னுட்டான். நான்கூட ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். ‘என்னடா சங்கதி ‘ன்னும் அவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா ? ‘இந்தப் பொண்ணோட முகக்களை யாருக்கு இருக்கும் ? ‘ன்னு சொன்னான் ‘…பாண்டுரங்கத்தின் தந்தை தேவகியின் பெற்றோரிடம் இவ்வாறு சொன்னார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையே. தேவகியின் முகக்களையைப் பற்றி பாண்டுரங்கம் அவ்வாறு போற்றிப் புகழ்ந்தது வாஸ்தவந்தான். அப்படிப் புகழ வேண்டிய ஒரு நிலை பாண்டுரங்கத்துக்கும் ஏற்பட்டிருந்ததால், புகழ்ந்தார் – ஒரேயடியாகவும் புகழ்ந்தார்.

பாண்டுரங்கம் பெற்றோருடன் வசித்த வீடு சொந்த வீடாகும். சென்னை நகரில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தெருத்தெருவாக எத்தனையோ பேர் அலைவதைப் பார்த்த அவருக்குச் சிறுவயதிலேயே சொந்த வீடு என்பது குபேர சம்பத்து என்று தோன்றிவிட்டது. எனவே, தாம் கஷ்டப்பட்டு படிப்பது அனாவசியம் என்று எண்ணி, ஆறாம் வகுப்பில் பெயில் ஆகி அதற்குமேல் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இரண்டொரு வேளை சாப்பிடாமல் இருந்து தம் விரதத்தை நிலை நாட்டினார். ஏக புத்திரனை மிகவும் கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று பெற்றோரும் வற்புறுத்தவில்லை. அவ்வாறு ஆறாம் வகுப்பு பெயில் என்ற கல்வித்தகுதியோடு வளர்ந்த அவருக்கு இருபது வயது ஆயிற்று. ‘உத்தியோகம் புருஷ லட்சணம் ‘ என்று அவருக்கு மிகவும் சிரமத்தின் பேரில் ஒரு மார்வாடியின் அடகுக்கடையில் ரசீது போட்டுக் கொடுத்து கணக்கு எழுதும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார் தந்தை. சம்பளம் மாதம் அறுபது ரூபாய்க்கு உயர மூன்றாண்டுகள் ஆயின. அப்படியும் அவருக்குக் கல்யாணம் செய்ய பெற்றோர் தீர்மானித்தனர்.

சொந்த வீடு இருப்பதால், பங்களாவிலேயே பெண் கட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பாண்டுரங்கம். ஆனால் பங்களாப்பெண் கிடக்காமல் போனதோடு, குடிசைப்பெண்ணாவது தனக்குக் கிடப்பாளா என்றும் ஆகிவிட்டது. கால்காசு வேலையாணாலும் கவர்மெண்ட் வேலை பார்ப்பவனுக்குத் தான் – அவன் பியூனாக இருந்தாலும் சரி- பெண்ணைக் கொடுப்போம் என்றும், அறுபது ரூபாய் சம்பாதிக்கும் மார்வாடிக் கடை கணக்குப்பிள்ளைக்குக் கொடுக்கமுடியாது என்றும் ஒவ்வொன்றாக மூன்று இடங்களிலும் ஒரே மாதிரி சொல்லிவிட்டார்கள். இதனால் பாண்டுரங்கம் இடிந்து போய்விட்டார். சொந்த வீடு இருந்தும் தமக்குச் சம்சார பாக்கியம் கிட்டவில்லை என்றால் இந்த உலகத்தில் சந்நியாசியாகத்தானே வாழவேண்டும் என்று எண்ணி மனம் கலங்கினார். அந்நிலையில்தான் தெய்வாதீனமாக ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகியைப் பேசுவதற்குப் போனார்கள். ‘குரங்காக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ‘ என்ற மனப்பக்குவத்துடன் காத்திருந்த பாண்டுரங்கம் உடனே சம்மதித்து, தேவகியின் முகக்களையையும் உயர்த்திப் பேசிவிட்டார்.

-தொடரும்.
      

Series Navigation

author

- கு. அழகிரிசாமி

- கு. அழகிரிசாமி

Similar Posts