!?!?! மொழி:

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

அவனி அரவிந்தன்சருகுகளை உதறித் தள்ளும்
சில விருட்சங்களின் கீழமர்ந்து
ஆழஞ்சென்ற அதன் அடிவேர்களை
கவனத்துடன் கீறி பிய்த்துக் கொண்டிருப்பார்கள்

கூரைகள் சிதைந்திருக்கும்
அரவமற்ற பேருந்து நிறுத்தங்களில்
யாருக்காகவும் இல்லாமல்
எதையோ யோசித்தபடி காத்துக் கொண்டிருப்பார்கள்

விட்டில்கள் வட்டமிடும்
ஒற்றை மின்கம்பங்களை
என்றேனும் கிளைவிட்டுக் காய்க்குமாவென
அண்ணாந்து வெறித்துக் கொண்டிருப்பார்கள்

ஊருக்கு விலக்கான
புதர் மண்டிய இடுகாடுகளில்
புழுக்கள் மொய்த்த சடலங்களைத் தோண்டி
மண்டையோட்டில் மந்திரங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்

மலைப் பிரதேசங்களின் மர்மப் பாறைகளில்
விரல்களை ஒவ்வொன்றாக மடித்து
கூடு திரும்பும் பறவைகளை
கூட்டிக் கூட்டி எண்ணிக் கொண்டிருப்பார்கள்

நெடுந்தூர பயணத்தின் பாதி வழியில்,
அவசரமாக அவளை நெருங்கிய பேருந்தில்,
இரவை விரட்டி வாகனத்தில் விரைகையில்,
சூடம் கொளுத்திய சுடலைமாடன் கோவிலில்,
கோடையைக் கழித்த குளிர்பனிச் சிகரங்களில்,
எவரேனும் எதேச்சையாக அவர்களை கவனிக்க நேரிட்டால்
தயவு செய்து பேசிவிடாதீர்கள்
நமக்கு அந்த மொழி விளங்காது…!

Series Navigation

'அவனி அரவிந்தன்

'அவனி அரவிந்தன்