வே.சபாநாயகம்
கடிதம் – 3
திருப்பத்தூர்.வ.ஆ.
18- 3 – 68
பிரிய நண்பருக்கு,
நான் எந்தச் சமாதானம் சொல்வதும் நியாயமில்லை. நீண்ட கடிதங்களாக
யாருக்குமே எழுத முடியவில்லை. உங்களுக்கென்று எழுதும்போது, சுருக்கமான ‘நலம், நலமறிய அவா’ என்று எழுதுவதும் எப்படியோ போல் இருக்கிறது.
நிறைய படிக்கிறீர்களா? இங்கிருந்து கொண்டு சென்ற புத்தகங்களில் எவ்வெவற்றைப் படித்தீர்கள்? புதியதாக எழுதினீர்களா? அனைத்தையும் தெரிவியுங்கள்.
நான் தொடர்ந்து எழுதாமலிருந்து விட்டதற்குச் சோர்வோ சினமோ கொள்ள
வேண்டாம். விறுவிறுப்பாக எழுத முடியாவிட்டால், எழுதாமல் இருந்து விடுவது மேல் என்று இருந்து விட்டேன்.
சில நாட்களாக நிறையப் படிக்கிறேன். ரதுலன் என்பவர் மொழிபெயர்த்த மாபஸானின் நாவல்கள் சில படித்தேன். வெள்ளக்குட்டை ஹைஸ்கூல் லைப்ரரிக்கு பல அருமையான Penguin புத்தகங்கள் வந்துள்ளன. Turgenevன் Hunter’s sketches இப்பொழுது கைவசம் இருக்கிறது. மாபஸானின் சிறுகதைத் தொகுப்பாக, ஒரு பெரிய இங்கிலீஷ் புத்தகத்தையும்
இங்கே லோகல் லைப்ரரியிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன். இது ஏழாவது முறையோ, எட்டாவது முறையோ – அந்தப் புத்தகத்தைக் கொணர்வது!
மாபஸானிடம் ஒரு விசேஷம் – நாம் ஒரு பொருளைப் பற்றி, ஒரு சம்பவத்தைப்
பற்றி, ஒரு நிகழ்ச்சியைப் பற்றி – வாழ்வின் ஒரு திருப்பத்தைப் பற்றி – எதைப் பற்றியும் –
என்னென்ன விதமாக உணர்கிறோமோ, அவ்வவ்விதமெல்லாம் அவனும் உணர்ந்திருக்கிறான்.
சொல்லப் போனால் – இன்னும் விரிவாக, இன்னும் ஆழமாக! மாபஸான் என்கிற திரவக் கரைசைலில், நம் மனம் என்கிற பிலிமையே அலசி எடுத்துப் பார்த்துக் கொள்ள முடிகிறது!
– ரஸானுபவம் என்கிற முறையிலும் அவன் எழுத்து ஒரு நல்ல விருந்து.
உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். 31-3-68 ஞாயிறன்று காலை, திருப்பத்தூரில்
ஜெயகாந்தன் பேசுகிறார். “மெல்ல தமிழ் இனி சாகும்” என்னும் தலைப்பில் இலக்கியக்
கூட்டம் ஒன்று. எங்கள் ஏற்பாடுதான். சனி இரவு அவர் திருப்பத்தூர் வந்து விடுகிறார்.
தாங்கள் அவசியம் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். “இப்பொழுது தானே
திருப்பத்தூர் போய் வந்தோம்?” என்கிற சம்பிரதாயமான மனிதர்களின் தயக்கமும், “நிறைய
வேலை!” என்கிற ‘உண்மையான ஹெட்மாஸ்டர்’களின் தட்டிக் கழித்தலும் வேண்டாம்.
அவசியம் – அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள். இந்தப் பயணம் உங்களுக்கு முந்தையப்
பயணத்தைவிட லாபகரமாயிருக்கும்.
போக, இன்னொரு விஷயம்.
‘ராமநாதனின் கடிதங்கள்” என்று ஒரு கதை எழுதப் போகிறேன். அதற்கு சில மூலப் பொருள்கள் தேவை. நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களில் – குடும்ப வாழ்க்கையைப்
பற்றி, மனைவியைப் பற்றி, மணவாழ்க்கையைப் பற்றி ஏதேனும் அவ்வப்போது எழுதியிருப்பேனா? அந்தப் பகுதிகள் இப்பொழுது தேவை. தயவுசெய்து எனக்காக எல்லாக்
கடிதங்களையும் எடுத்துப் பார்த்து, அப்படிப் பட்ட பகுதிகளை எனக்குக் கொஞ்சம் திருப்பி
அனுப்பி வையுங்கள். அல்லது அந்தப் பகுதிகளை நகல் செய்தாவது (தேதிவாரியாக)
அனுப்பி வையுங்கள். (ஆனால், நகல் செய்கிற சிரமம் தங்களுக்கு வேண்டாம். கடிதங் களையே அப்படியே அனுப்புங்கள். அந்தக் கடிதங்கள் உங்களுக்குச் சொந்தமானவை.
அவற்றைத் திருப்பி உங்களுக்கு நான் அனுப்பி விடுவேன்!)
– எனது அடுத்த கதை இதுதான். உங்களிடமிருந்து ‘கச்சாப் பொருள்கள்’ வந்த
பிறகே நான் கதையை ஆரம்பிக்கவிருக்கிறேன். (வையவனிடமிருந்தும் சில கடிதங்களைக் கேட்டிருக்கிறேன்.)
திருச்சி வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளர் வேலைக்கு மனுச் செய்துள்ளேன்.
வையவன் மூலமாக இதை அறிந்திருப்பீர்கள்.
தாங்கள் வந்து போன பிறகு, மன உணர்ச்சிகளுக்குப் பலப்பல படிமங்கள் விழுந்து அழிந்து, பிறகு மறுபடியும் விழுந்து அழிந்து, நாட்கள் வளர வளர விதவிதமான மனப்
பாங்குகள் மாறிமாறி வருகின்றன; போகின்றன!
‘ஆச்சாள்புரத்து செண்பக மரங்கள்’ என்று, வையவன் ஒரு கதை எழுதுவதாகச் சொன்னார். எழுதுவாரோ என்னவோ? இந்த வாரம் JK கதை எப்படி?
31-3-68 அன்று அவசியம் வாருங்கள். சனி மத்தியானம் புறபட்டால், இரவு இங்கு
வந்து சேரலாம். S.S.L.C பரீ¨க்ஷ சம்பந்தமாகக் கூட, தங்கள் பயணம் தவிர்க்கப்படக்
கூடாது.
இத்தனை நாட்கள் கடிதம் எழுதாததை மன்னித்து விடுங்கள். சித்தம் போக்கு சிவன் போக்காக இருந்தது.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
——- 0 ——-
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கண்டதும் காதல்
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- கடித இலக்கியம் – 3
- யாத்ரா பிறந்த கதை
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- ‘இருதய சூத்திரம்’
- வளர்ந்த குதிரை – 2
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- கடிதம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- ஒற்றைப் பனைமரம்
- அப்பாவின் அறுவடை
- விருந்தோம்பின் பாடல்
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- எடின்பரோ குறிப்புகள் – 14
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19
- உண்மையைத் தேடியலைந்தபோது
- பிரமோத் மகாஜனின் மறைவு
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- கால மாற்றம்
- தோணி
- கற்பதை விட்டொழி