எழுபது ரூபாய்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ஜெயந்தி சங்கர்


சனியன்று பெட்ரோல், டீஸல், எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சிஐடியுவுடன் இணைந்து மாநில அளவில் நடத்தி முடித்திருந்த ஆட்டோ ஸ்டிரைக்கைப் பற்றியே இரவுச் செய்திகளில் ஊடகங்கள் தத்தமது பாணியில் சொல்லிக் கொண்டிருந்தன.
“நாளைக்கு காலையில தான் படிப்பீங்கல்ல, இப்பவும் தேடித்தேடி ந்யூஸையே தான் பார்க்கணுமா? மீடியா’ஸ் கம்பேரிடிவ் ஸ்டடி ஏதும் செய்யப் போறீ£ங்களா, என்ன”, என்ற மாமியை லட்சியம் செய்யாமல் ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி செய்திகளாகவே பார்த்துக் கொண்டிருந்தார் மாமா.
முழுவதும் இருட்டிய பிறகும் வெப்பம் குறையாதிருந்தது. கூடத்தில் உட்கார்ந்திருந்தாலும், நந்தினியால் தன் கவனத்தைத் தொலைக்காட்சியில் குவிக்க முடியாதிருந்தது. காலையில் நடந்த நிகழ்ச்சியிலேயே மீண்டும் மீண்டும் போய் நின்ற மனதைப் பலமுறை அவளும் திருப்ப முயன்றபடியே இருந்தாள். அபத்தம் என்று தெரிந்தாலும் காட்டப்பட்ட காட்சிகளில் எங்கேனும் பெரியவரின் முகம் தெரிகிறதா என்று தான் அவளின் கண்கள் தேடின.
போலிஸ் பாதுகாப்பையும் மீறி கிண்டி, அண்ணா சாலை, சென்டிரல், ஆவடி, அம்பத்தூர் போன்ற இடங்களில் நடந்திருந்த மின்சார ரயில் மறியல்களும் திருவாரூர், கோவை, மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை போன்ற ஊர்களில் நடந்திருந்த பஸ் மறியல்களும் ஊடகங்களின் பரபரப்புப் பசிக்குப் பெரிதும் உதவின. திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் கைதானதும் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் சிவகாசியில் பஸ் மீது கல்வீச்சு நடந்ததில் முன்கண்ணாடி உடைந்ததும் சாத்தூரில் இரண்டு பஸ்கள் மீது கல்லெறியப்பட்டது எல்லாமும் மறியல்களுடன் சேர்ந்து விறுவிறுப்பைக்கூட்டின.
“ப்ரீப்-பேய்ட் ஆட்டோ ஓடாம டிரெயின்ல வந்தவங்க பாடு தான் ரொம்பக் கஷ்டமாகியிருக்கும்னு நெனைக்கிறேன்”, என்று பார்த்த செய்திகளையொட்டியே உற்சாகமாக நந்தினியுடன் பேச முற்பட்ட மாமாவை, “வேற ஏதாச்சும் பேசலாமில்ல. இதையெல்லாம் நாளைக்கி காலையில பேப்பர்ல மறுபடியும் நல்லாவே மேஞ்சுக்கலாம். மொதல்ல டீவி வாய மூடுங்க”, என்று அதட்டும் குரலில் மாமி மீண்டும் கண்டிக்க முயன்றார்.
தொலைகாட்சியை பட்டென்று அணைத்துவிட்டு, “ம், சொல்லு நந்தினி. இன்னும் உன் சின்ன மகன் அந்த ஆட்டோ பொம்மைய வச்சி விளையாடறானா? பெரியவன் பத்தாவது தானே? ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் நீ. லீவுக்குக் கூட வரமுடியாம என்ன படிப்போ என்னவோ”, என்று ஆரம்பித்தார். விஜய் ஒன்பதிலும் வினய் ஏழிலும் படிப்பதைச் சொல்லிவிட்டு, “ப்ரெண்டோட கல்யாணத்துக்காக தானே மாமா நானே நாலு நாளைக்காக வரவேண்டியிருந்திச்சு”, என்றதற்கு மாமா அது சரி என்கிறாற்போல தலையைத் தலையையாட்டிக் கொண்டார்.
வினய்க்கு ஆட்டோவின் மீதிருந்த கவர்ச்சி மறைந்து நான்கைந்தாண்டுகள் கடந்த பிறகும் அவர் அப்படிக் கேட்டது விநோதமாக இருந்தது. சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்திருந்த அவனுக்குச் சின்ன வயதில் இந்தியா வரும் காலங்களில் வேறு எதிலும் விருப்பமற்றிருப்பான். குலுக்கலுடன் போகும் ஆட்டோ சவாரி மட்டும் தான் மிகவும் பிடிக்கும். வெளியில் இறங்கினாலே ‘ஆட்டோல போவோம்’, ‘ஆட்டோல போவோம்’, என்று நச்சரிப்பவனாக இருந்தான். ஆட்டோ சவாரியைப் பெரிய சாகஸமாக நினைத்திருந்தவன், ‘ஆட்டோ பொம்மை வேண்டும்’, என்று பிடிவாதம் பிடித்ததில், ஊரெல்லாம் கடைகடையாக ஏறி அலைந்து திரிந்து கடைசியில், உள்ளடங்கிய ஒரு சிறிய கடையில் இருநூறு ரூபாய்க்குக் கிடைத்த விளையாட்டுச் சாமானை வாங்கிக் கொண்டு தான் விடுமுறை முடிந்து ஊருக்கே கிளம்பியிருந்தார்கள். சாவிகொடுத்தால் ஓடும் கருப்பு மஞ்சள் வண்ணத்திலிருந்த அந்த பொம்மையை வினய் ரொம்ப நாளைக்கு ஆசையாசையாய் வைத்து விளையாடியதையெல்லாம் மறக்காமல் மாமா கேட்டது ஆச்சரியமாகவும் இருந்தது.
மீண்டும் அன்று காலையில் நடந்ததை நினைத்துக் கொண்டு மௌனமாவள், மாமியிடம், “ஏன் மாமி, அந்த ஆட்டோ டிரைவர் அங்க வந்து என்னத் தேடிப் பார்த்திருப்பாரோ?”, என்றதற்கு மாமாவே முந்திக்கொண்டு, “இன்னும் அதையேவா நெனச்சிட்டிருக்க? இதுக்கெல்லாம் போய் நீ இவ்வளவு கவலப்படறதே வேஸ்ட்னு சொன்னதே உனக்குப் புரியல்லியா? இவனுகள்ள பாதி பேருக்கு ஆர்ஸி புக்கோ லைசன்ஸோ கூட இருக்காது. பாதி ஆட்டோக்கள் போலிஸ் பினாமில வேற ஓடுது. அவனுகளும் ரோட்ல பிடிக்கற மாதிரி நிறுத்தி இன்னார்னு தெரிஞ்சிடுச்சின்னா விட்டுடுவானுக”, என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு தூங்க அறைக்குள் போய்விட்டார். மாமி கேட்ட கேள்விகளுக்குச் சுருக்கமாக பதில் சொன்னபடியிருந்தவளுக்கு மீண்டும் மீண்டும் வயதான முகமே மனதிற்குள் மேலெழுந்து வந்தபடியிருந்தது.
ooOoo

ஜூன் ஏழன்று காலையில் அபிராமபுரத்தின் முதல் குறுக்குத் தெருவருகே நான்கு சாலைகள் பிரியுமிடத்தில் சாலையோரமாக நின்று கொண்டிருந்தாள். அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்த போதிலும் காலையிலேயே சுள்ளென்று வெயில் தகித்தது. சிங்கப்பூரிலும் வெயிலுக்குக் குறைவில்லை. இருப்பினும், அந்த வெயிலின் வெம்மை வேறு மாதிரி சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆட்டோ ஸ்டிரைக் என்பது வெறும் கட்டுக்கதையோ என்று நினைக்கும் அளவுக்கு சாரிசாரியாக ஓடிய வாகனங்களுடன் சாலை அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. தூசியைச் சகித்துக்கொள்பவர்களுக்கு சென்னையின் சாலைகள் எல்லையில்லா சுவாரஸியங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. எல்லோருக்கும் எப்போதும் எதற்கேனும் ஒரு அவசரம் இருந்து கொண்டே தான் இருந்தது. சாலையோரப் பழவண்டி வியாபாரிகள் தவிர கண்ணில் பட்ட இரண்டு தெருநாய்கள் மட்டும் பரபரப்பின்றி இயங்கின.
ஆட்டோக்கள் குறைவாகவே தென்பட்டன என்பது தான் சின்ன வேறுபாடு. வந்த ஒன்றிரண்டும் கூட ஆட்களோடு கடந்து போனதால், பத்து நிமிடங்கள் போனபின்பும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை சாலையோரங்களில் ஆட்டோ கிடைக்காமல் நின்றிருந்தவர்களில் நேரமாகும் காரணத்தினால் பதட்டம் இறங்குவது உணரக் கூடியதாக இருந்தது. பேசாமல் மாமா காரில் கூட்டிக்கொண்டு போய் விடுவதாகச் சொன்னபோது ஒத்துக் கொண்டிருக்கலாம். இரண்டு புறமும் மாறிமாறிப் பார்த்ததில் கழுத்து வலித்தது.
அரசு பேருந்து ஒன்று நிறைமாத கர்பிணியாக இடப்பக்கம் சாய்ந்தபடியே வந்து வேகத்தைக் குறைத்து இடப்பக்கம் வளைந்து நீளக்கிடந்த சாலைக்குள் போனது. பேசாமல் ஒரு அனுபவத்திற்கேனும் ஒருமுறை பேருந்தில் போனால் தான் என்னவென்று யோசித்தாள். எந்த இலக்கப் பேருந்தில் ஏறவேண்டும் என்று தெரியாது. எங்கே இறங்கி எப்படிப் போக வேண்டும் என்றும் தெரியாது.
ஆளில்லாமல் வந்த முதல் ஆட்டோவை இருபதடி தூரத்தில் நின்றிருந்த சிறுகுடும்பம் நிறுத்துவதும் பின் அவர்களை ஏற்றாமல் வருவதையும் கண்டு கையசைத்து நிறுத்தினாள். “தி.நகரா? வராதும்மா”, என்று சொல்லிவிட்டு விருட்டென்று திரும்பிப் போனவரிடம் அவசரமாக, “நீங்க மட்டும் தான் அங்க போக மாட்டீங்களா? இல்ல, எந்த ஆட்டோவுமே அங்க போகாதா? அங்க ஏதும் பிரச்சனையா?”, என்று கேட்டாள். “இல்லம்மா, போற ஆட்டோ போவும்”, என்றவரிடம், “ஏதாச்சும் ஆட்டோ காலியா வந்திச்சின்னா கொஞ்சம் இந்தப் பக்கம் அனுப்பிவிடறீங்களா?”, என்று கேட்டாள். அவரும் சரியன்று தலையாட்டிவிட்டுக் கிளம்பிப் போனார். மறக்காமல் கட்டணம் பேசிய பிறகு தான் ஆட்டோவில் ஏறவேண்டும் என்றும் அதிக பட்சம் எழுபது ரூபாய், அதுவும் டீஸல், எரிவாயு விலை கூடியிருப்பதால் கொடுக்கலாம் என்றும் மாமா சொல்லியனுப்பியிருந்ததை தனக்குத் தானே நினைவு படுத்திக் கொண்டாள். மீட்டர் இருப்பதாகவும் அதன் படி கொடுப்பதாகவும் சொன்னாலும் நம்பிவிடவேண்டாம் என்பது மாமாவின் அறிவுரை. சூடு வைத்து மூன்று மடங்கு கரந்து விடுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.
சிங்கப்பூரில் டாக்ஸியில் ஏறி பத்திருபதடி தூரம் வண்டி ஓடிய பிறகு போகுமிடம் சொல்லிப் பழக்கப்பட்டிருந்தாள். அதே பழக்கத்தில் சென்ற ஆண்டு சென்னை வந்திருந்த போது தனியே போய் வந்த பல இடங்களுக்கு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த பிறகு போகுமிடத்தைச் சொல்லிவிட்டு, இறங்கு முன்னர், ‘அடடா, வாகனக்கட்டணம் பேச மறந்தோமே’, என்று நினைத்துக் கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் கேட்டதைக் கொடுப்பவளாக இருந்தாள்.
வந்த ஆட்டோக்களெல்லாம் ஆட்களுடனேயே வந்தன. குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டோக்கள் ஓடியதைத் தவிர அவரவர் இருசக்கர வாகனங்களில் தனியாகவும், இருவராகவும், மூவராகவும், குடும்பமாகவும் போய்க் கொண்டிருந்தனர். பெண்கள் ஓட்டிய ஸ்கூட்டிகளின் பின்னிருக்கைகளில் பயணிக்கும் ஆண்களை முன்பைவிட அதிகம் பார்க்க முடிந்தது. தூசியை சகித்துக் கொள்பவர்களுக்கு சென்னையின் சாலைகள் சுவாரஸியம் தான்.

ooOoo

ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஆளில்லாமல் வந்த ஒரு ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தினாள். ஒட்டுநருக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும் என்று தோன்றியது. கேட்டதுமே, வருவதாக ஒத்துக் கொண்டு எழுபது ரூபாய் கேட்டார். கூடுதலாகக் கேட்டிருந்தாலும் பேரம் பேசவும் தெரிந்திருக்காது என்பது வேறு விஷயம். ஆகவே, நந்தினிக்கு பெரிய நிம்மதி. ஏறிக் கொண்டு உடனே கைப்பையில் எழுபது ரூபாய் சில்லறையாக இருக்கிறதா என்று குடைந்தாள். நாற்பது தவிர நூறு தான் இருந்தது. “சில்லறை இருக்கா?” என்று கேட்டதற்கு, ‘ம்’, என்றார். “நூறு ரூபாய்க்கு தானே?”
நூறு ரூபாய் நோட்டைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டாள். முன்பொரு முறை சென்னை வந்திருந்தபோது நூறு என்று நினைத்து அரையிருட்டில் ஐநூறு ரூபாய்த் தாளை நீட்டி கடைக்காரர் கொடுத்த சில்லறையை வெறித்து, உடனே அவர், ‘ஐநூறு குடுத்தீங்க, தொண்ணுத்தி மூணு போக நாநூத்தி ஏழு ரூபா மிச்சம்’, என்றதும், தலையையாட்டிக் கொண்டு வாங்கிக் கொண்டபோது தான், இருபதாண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் நூறுக்கும் ஐநூறுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிருந்ததையே உணர்ந்தாள். அப்போதிலிருந்து அதிக கவனமெடுக்க ஆரம்பித்திருந்தாள்.
மேம்மாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டதில் முன்பைவிட போக்குவரத்து சீராகியிருப்பதைப் போலத் தோன்றியது. பாதைகளின் பள்ளங்கள் பெரும்பாலும் அடைக்கப்பட்டுவிட்டிருந்ததால், குறுகிய வீதிகளில் கூட ஆட்டோவுக்கேவுரிய குலுக்கல்கள் மிகவும் குறைவாகவே இருந்ததாகத் தோன்றியது. எல்லா இடத்திலும் இயல்பு வாழ்க்கை நடப்பதாகவே தோன்றியது. பதில் வருமா என்றே தெரியாமலே, “ஏங்க, இன்னிக்கி நெஜமாவே ஆட்டோ ஸ்டிரைக் தானா?”, என்று டிரைவரைச் சாதாரணமாகத் தான் கேட்டாள். “முக்கிய புள்ளிகளோட வீடிருக்கற ஏரியாலயெல்லாம் ஒண்ணுமிருக்காதும்மா. ஆனா, ஸ்டிரைக் இருக்குதும்மா. என்னப் போல ஆளுங்க வேற வழியில்லாம தான் பொழப்பப் பாக்குறோம்”, என்று துவங்கி இருமிக் கொண்டே தன் சொந்தக் கதையைப் பேச ஆரம்பித்தார்.
தன் ஒரே மகன் நாலைந்து வருடங்களாக ஆட்டோ ஓட்டிச் சம்பாதித்ததில் அவர் வீட்டில் இருந்தாராம். இரவில் வாச்மேனாக ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மகன் ஒரு விபத்தில் இறந்து போனதும் மனைவி மனநோயில் விழுந்தார். முறைவாசல், வீடுகளின் வீட்டு வேலைசெய்து வந்த மனைவியின் வருமானமும் இல்லாமல் போனது. தான் மீண்டும் ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் சொந்த ஆட்டோ நொறுங்கிப் போனதில் இப்போது ‘நாள் வாடகை’க்கு எடுத்து ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் ஓட்டாவிட்டாலும் அடுத்த நாள் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஓடும் நாட்களிலும் கூட சிலவேளைகளில் நாள் வாடகையை மட்டுமே கொடுக்கப் பணமிருந்தது. அடுத்த நாள் ஆட்டோவுக்கு டீஸல் போடவே யாரிடமேனும் கைமாற்று கேட்கும் நிலை.
யாரிடமாவது ஆற்றாமைப்பட்டுக் கொள்ளக் காத்திருந்தார் போல. இருமிக்கொண்டே பேசியதைக் காண மிகவும் பரிதாபமாக இருந்தது. “காலையிலயிருந்து ஒளிஞ்சி ஒளிஞ்சி தான் இது மூணாவது சவாரி. ரெண்டு வாரமாவே, ஒரே இருமல். இந்த வரட்டு இருமலுக்கு ஒரு நல்ல மருந்து வாங்கிக் குடிக்க நெனைக்கிறேன். நாள் வாடகைக்கும் அடுத்தநாளு டீஸலுக்கும்னே கணக்கு சரியாப்போகுது. இவ மட்டுமே நல்லாயிருந்தா என்னோட தைரியமே வேற”, என்று சொன்னவர் அதிகமாகப் பேசிவிட்டதைச் சட்டென்று உணர்ந்து கூச்சப்பட்டவர் போல தன் பேச்சைப் பட்டென்று நிறுத்திக் கொண்டார்.
இதமான சொற்களைச் சொல்வதே அவரை மேலும் பேசவும் துயர நினைவுகளில் ஆழ்த்திடவும் செய்யலாம் என்று நந்தினி பேசாதிருந்தாள். தவிர, சொற்கள் ஆற்றிவிடவும் முடியுமா? அந்தச் சூழலில், அவளின் அமைதியே ஏராளமான சொற்களை உதிர்த்தாற்போலிருந்து. மீதியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்படியே நூறு ரூபாயை கொடுத்துவிட முடிவு செய்தாள்.
வழக்கம் போல ஒரு கடையின் நெற்றில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இருந்த முகவரியை வைத்து தி.நகர் வந்துவிட்டிருந்ததை அறிந்து கொண்டாள். பர்கிட் ரோட்டிலிருந்து பிரியும் தெற்கு தண்டபாணி தெருவில் போனால் எட்டொம்போது வீடுகள் தாண்டி இருக்கும் சித்தப்பா தன் குடும்பத்துடன் வசித்த அடுக்ககத்தை அவளுக்கு அடையாளம் தெரியும். ‘பர்கிட் ரோட்’டே இன்னும் வந்திருக்கவில்லை. இன்னும் இருநூறடிகளேனும் போக வேண்டியிருந்தது என்று ஓட்டுநர் சொல்லித் தான் அவளுக்குத் தெடிந்தது. சாலை வழக்கத்தைவிட வெறிச்சோடிக்கிடந்தது.

ooOoo

சட்டென்று, வலப்புறம் மூன்று பேரும் இடப்புறம் மூன்று பேருமாக காக்கிச் சடையணிந்த ஆறு ஆட்டோ ஓட்டுநர்கள் வழிமறித்து ஆட்டோவை நிறுத்தினார்கள். முன்னால் நின்ற இருவர் கையிலும் ஆளுக்கொன்றாக மூன்றடியிருக்கும் கம்பு வேறு இருந்தது. கொஞ்சம் குனிந்து கோபத்துடன் மூர்க்க தொனியில் ஓட்டுநரிடம், “இன்னிக்கு ஒரு நாளு ஓட்டல்லைன்னா செத்துப் போயிடுவியா? ம்? என்னா?”, என்று மிரட்டியதைப் பார்த்த நந்தினி வெலவெலத்துப் போனாள். அவ்வழியே இருசக்கர வாகனங்களில் போனவர்கள் வேகத்தைக் குறைத்து நிதானித்துப்பார்த்து விட்டுப்போனார்கள்.
சிலநொடிகளுக்கு மூளை அப்படியே சூன்யமாகிவிட்டது. இயக்கம் பெற்ற மூளையின் முதல் சிந்தனை லேசான கலக்கத்தைத் தான் ஏற்படுத்தியது. அடிப்பார்களோ? யாரை? வயதான ஓட்டுநரையா? இதென்னடா வம்பாகப் போய் விட்டது. கிளம்பியே இருக்கக் கூடாதோ என்றெல்லாம் உள்ளூர பதறியவளின் புலன்கள் அசம்பாவிதத்திற்குத் தயராவதைப் போல பளிச்சென்று விழித்துக் கொண்டன.
“இல்ல, லேடிஸ் ஒடம்பு சரியில்லாதவங்களப் பாக்கப் போவணும்னாங்க, அதான்,..”, என்ற சமாளிக்க முயன்ற பெரியவரைப் பொருட்படுத்தாமல் நந்தினியைப்ப் பார்த்து, “எறங்கும்மா,.. இன்னிக்கி ஆட்டோ ஓடாது”, என்றதும் கீழே இறங்கி கைப்பையைத் திறக்க முயன்றவளைக் கைகாட்டித் தடுத்து, “காசெல்லாம் தராதீங்க, போங்க போங்க”, என்று போகவேண்டிய திசையையில் கையை நீட்டி அதட்டியதைப் பார்த்ததும் நந்தினிக்கு ஒன்றுமே ஓடவில்லை. தூரத்தில் ஆர்வமிகு பாதசாரிகள் சிலர் நின்று கவனிப்பதையும் உணர முடிந்தது.
சொன்ன பிறகும் அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தால் அடிப்பார்களோ. தன்னை அடிப்பார்கள் என்று தோன்றவில்லை. நிச்சயம் அந்த வயதான ஓட்டுநரை ஏன் காசு வாங்குகிறாய் என்று நொறுக்குவார்கள் போலத் தோன்றியது. ஆறு பேர் வேறு இருந்தார்கள். திருதிருவென்று விழித்தபடி நின்றாள். ஏற்கனவே வியர்வையில் மேலும் வியத்திருந்த ஓட்டுநரின் முகத்தைப் பார்த்தாள். அவரும் செய்வதறியாது விழிப்பது புரிந்தது. “ம், திருப்பு, ஆட்டோவத் திருப்புயா”, என்று மிரட்டியதும், அவரும் எதிர்திசைக்கு ஆட்டோவைத் திருப்பினார். நந்தினியைப் பார்த்துக் கொண்டு நின்ற முயன்வரை மீண்டும் அடிக்காத குறையாக விரட்டினர். ஒருவர் குச்சியை வைத்து வாகனத்தின் மீது அடித்தார். சாலையோரம் இருந்த ஒரு மளிகைக் கடைக்காரர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
தயங்கி நின்றவளைப் பார்த்து, “போங்கம்மா, நடந்து போங்க. இல்ல பஸ்ஸ¤ல போங்க”, என்று மீண்டும் துரத்தியதும் நந்தினி நேராக நடக்கத் துவங்கினாள். அவர்கள் பிழைப்பைக் கவனிக்க முடியாமல் ஸ்டிரைக்கின் நிர்பந்தத்தினால் தமக்குள் ஏற்பட்டிருந்த தம் கோபத்தை ஸ்டிரைக் நாளில் பெரியவர் ஓட்டியதால் ஏற்பட்ட கோபத்தினால் மூடிக் கொண்டாற்போலிருந்தது.
வேறொரு வீதியில் புகுந்து மறுபுறம் வந்து தன்னைத் தேடுவாரோ என்று கொஞ்சம் மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்தாள். ஆனால், காணோம். ஒரு கடையில் நின்று முகவரியைக் காட்டி வழியை உறுதிப்படுத்திக் கொண்டாள். மீண்டும் சுற்றிலும் பார்வையை ஓட்டிப்பார்த்தாள்.
வந்த ஓரிரு ஆட்டோவும் ஆட்களுடன் போய்க் கொண்டிருந்தன. அத்துடன், ஓட்டுநர்கள் எல்லோரும் இளவயது ஆட்கள். நடந்த படியே வீட்டை அடைந்து விட்டதை உணர்ந்தாள். வீட்டு வாசலில் சில நிமிடங்கள் நின்று பார்த்தாள். ஒருவேளை, எழுபது ரூபாய்க்காக வந்து எதற்கு அடிவாங்க வேண்டும் என்று நினைத்தாரோ. தன்னை இலவசமாகவே ஓட்டிக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனது போலாகி விட்டதே என்று நினைத்து மிகவும் வருந்தினாள். மெதுவாக மாடியேறி சித்தப்பா வீட்டுக்குப் போனாள்.
ooOoo

சித்தப்பா வீட்டில் குசல விசாரிப்புகள் முடிந்ததுமே ஜன்னலுருகே நின்றுகொண்டு இடையிடையே சாலையைப் பார்த்தவாறு நந்தினி வழியில் நடந்ததையெல்லாம் சித்தி சித்தப்பாவிடம் விவரித்துச் சொன்னாள்.
ஜன்னல் அருகே நின்று சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தவளை, “உக்காரேன். ஏன் ஒரு மாதிரி பதட்டமாவே இருக்க?”, என்று சித்தப்பா சொன்னதும், “அந்த ஆட்டோ டிரைவர் ஒரு வேளை என்னத் தேடி வருவாரோன்னு தான் பார்த்தேன் சித்தப்பா”, என்ற நந்தினியை அவர் பார்த்த வெற்றுப்பார்வையில் இருந்த பொருளைப் புரிந்து கொள்ள முடியாதிருந்தது.
அவளுக்குப் புரியட்டும் என்று நினைத்தவராக விவரிக்க ஆரம்பித்தார். “நீ எதுக்கு இவ்ளோ ·பீல் பண்ற. உன்கிட்ட கிடைக்காத அந்த எழுபது ரூபாய ரெண்டு சவாரில ஈடுகட்டிடுவான். இதுக்குப் போய் நீ,…ஒண்ணு தெரியுமா உனக்கு, ·ப்யூயல் விலை ஏறியிருக்கறது அஞ்சு ரூபா தான். ஆனா, இனிமே ரெண்டு மடங்காவே கேப்பானுக,…படுபாவிக, செய்யற அட்டகாசத்துக்கு அளவேயில்ல, தெரியுமா? வாய்க்கு வரதக் கேக்க வேண்டியது, பேரம் பேசவா முடியும்? பேரம் பேசி ஜெயிக்கவா? கண்ட கண்ட வார்த்தைகள யூஸ் பண்ணுவானுக. வசைங்கள கேக்கவே கூசும். நம்ம குடும்பத்துப் பெண்களையெல்லாம் சொற்களால் இழிவுபடுத்திட்டு தான் மறுவேலை பார்ப்பானுக. அதுக்கு பயந்தே கேட்பதைக் குடுத்துடறவங்க தான் அதிகம்”, என்று சொல்லிவிட்டு, வெளியில் கையைக்காட்டி, “எவ்ளோ டிரபிள் குடுத்தாலும், என்னோட டப்பாக் கார டிஸ்போஸ் பண்ணாம ஏன் வச்சிருக்கேன்? இதுக்கு தான்”, என்ற முடித்தார்.
“எல்லாருமே அப்டியில்லையே சித்தப்பா”, என்று சொன்னவளை நின்று அவர் ஏன் முறைத்தார் என்று அவளுக்கு முதலில் புரியவில்லை. ஒருவேளை, “இவ்ளோ சொல்லியுமா? ஆமா, உனக்கென்ன தெரியும்? விடுமுறைக்கு சிலநாட்கள் மட்டும் வந்திருந்து விட்டுத் திரும்பிவிடும் உனக்கு என்ன பெரிசாத் தெரியும்?”, என்கிறாரோ.
சித்தப்பா சொன்னதற்காக இயல்பாகக் காட்டிக் கொண்டு இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். அவர் இடையில் உள்ளே எழுந்து போய்த் திரும்புவதற்குள் அனிச்சையாக சடாரென்று மீண்டும் ஜன்னலுக்கு வெளியில் பார்த்தாள்.
பிறகு, பின்மாலையில் மாமா வீட்டுக்குத் திரும்பும் வரை மறந்திருந்தவள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுமே காலையில் நடந்ததை மீண்டும் நினைத்துக் கொள்ளவும், தன்னையறியாமல் லேசாகக் குனிந்து சாலையில் கடந்து போகும் வேறு ஆட்டோ ஓட்டுநர்களின் முகத்தையெல்லாம் பார்ப்பவளானாள்.
oo(முற்றும்)oo
நன்றி : வார்த்தை ‍ அக்டோபர் 2008

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்