The Elephant and Tree (யானையும், மரமும்)

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

கே ஆர் மணி


‘வேணாம் போகாதே ‘ தடுத்தாள் சோனியா.

யானைக்கு களைப்பாய் இருந்திருக்க வேண்டும்.

அவன் உடை அணிந்து கொண்டான். ஒரிரு நிமிடங்களுக்கு முன்னிருந்த அறையின் சொர்க்கத்தன்மை இப்போதில்லை. என்ன பேச.
ஏதாவது பேசியிருக்கலாம். உயிர்ச்சக்தியிழந்த வெறுமை, முடிக்கமுடியாத பயம், அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலமாய். ஆனாலும் அமைதியாய், அருகில் படுத்து தலை கோதிவிட்டிருக்கலாம். சர்தார்ஜி ஜோக் சொல்லியிருக்கலாம். அவன் சர்தார்ஜி அசைவ ஜோக்குகளில் கெட்டி. அவனுக்கு நாக்கும் கெட்டி. பேசிப்பேசிப் பேசியே உடம்பில் சர்க்கரை தடவுவான். அவளின் உடம்பில் ஒரு தடவை உண்மையில் சாக்லெட் தடவியிருக்கிறான். சுவைத்தபின் சொன்னான், ” கேட்பரிசிக்கு இது புதிய பார்முலா.. எனக்கே எனக்கான தனிச்சுவை ”

அவர்களது முதல்சந்திப்பு கொஞ்சம் வித்தியாசமானதுதான். அவன் கர்வமான யானை. அவள் வீழ்த்தப்பட காத்திருக்கும் ஈரமான யானை.

‘கம்பியூட்டர் தெரியாம எதுக்கு விக்க வந்தே.. மடிப்பு வைத்த பிராக்களின் மார்க்கெட் பற்றி நீ என்ன நினைக்கிறாய்’ முதல் சந்திப்பு இப்படித்தானிருந்தது. கோபம் கொண்டாள். இந்த சீற்றம் அவனுக்கு பிடித்திருந்தது. அவனது பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. என்ன பேச்சு, மயக்கும் பேச்சு, ஆழமான அறிவு, சரளமான ஆங்கிலம், என்ன கொஞ்சம் மதராசிக்கலர்.. கருப்பு.. எப்படித்தான் இந்த மதராசிக்கள் இந்த கருப்பாயிருக்கிறார்களோ.. ஆனாலும் அவனை அவளுக்கு அவனை பிடித்திருந்தது.

அவனுக்கும் அவளது மார்பு பிடித்திருந்தது. குறிப்பாய் மேல் மார்பு பிடித்திருந்தது. அவளுக்கு எல்லாயிடமும் கோதுமை இயற்கையான வெள்ளையாயிருந்தது. இடை அளவுக்கு மீறி பெருத்திருந்தது. தொடை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அவனுக்கு பிடிக்கும். அம்மாவின் தொடை போல. பஞ்சாபிக்கலர், வெட்டி ஒட்டிய மும்பை கட்டிங் – காய்கிற பிரம்மச்சரிய வேளையில் பன்னிகள் கூடஅழகாயிருக்கவேண்டிய பருவத்தில், இவள் நிச்சியமாய் பன்னியில்லை. அவள் உண்மையில் அழகாயிருந்தாள் அவனுக்கு. குழிவிழிந்த மோவாய், ஆழமாய் இறங்கும் தோள்கள், கருப்பான கணுக்கால்கள், அடிக்கடி வியர்க்கும் மூக்கு, தன் தோல் ஸ்பரிசம் தேடும் விரல்கள் – இவள் அதி ஈரமானவள். அவன் கணக்கில் கொண்டான்.

கம்புயூட்டர், அறிவு பகிர்தல், சின்னமாய் உரசல், ஈகோவாய் காட்டிக்கொள்ளல், அவள் இடைகுறைக்க ஆலோசனை, சேர்ந்தே அழகுநிலையம் செல்லல் – என அவன் இடைவெளியை குறைக்க முயற்சித்தான். அவன் சித்தன். அவன் மூளை கணணி. சிப்பாய்களை கொண்டே ஏராளமான காய்களை வெட்டினான். யானையால் ராணியை சாய்க்கவேண்டும். ராணிக்கும் இது தெரியாத என்ன.. வீழ்த்தப்படுவதற்காகவேயான மாய ஆட்டமது. முகமூடி கிழியாமல் கவனமாய் ஆடவேண்டும். அவளுக்கும் நெருங்குவதற்கான நிறைய காரணமிருந்தது. இடுப்பு பெரிதாயிருந்தால் வந்த தாழ்வுமனப்பான்மை, தங்கையின் ஒல்லியான தேகத்தால்
வந்த தற்பெருமை, பெற்றோர்களின் மெல்லிய புறகணிப்பு..ஆணுடன் நெருங்க ஏதோ ஒன்று கிடைத்துவிடுகிறது. ராணியும் நெருங்கிற்று.

“யாரு சொன்னது. உனக்கு இடுப்பு பெரிசுன்னு.. யூ நோ ஒன் திங்க்.. எனக்கு உன்கிட்ட பிடிச்சதே அது தான் ” அங்குதான் முதல் முத்தத்தை தொடங்கினான். மெல்லிமாய் அவனுக்கு பிடித்த மேல்மார்புக்கு வந்தான். அதோடு அவனுக்கு பிடித்த தொடையும் ஊறுகாயாய் தொட்டுக்கொண்டான். யானை மரம் மேய்ந்தது. யானை மரம் மேயுமா என்ன? அவன் யானைதான். வித்தியாசமான யானை. அவள் அவனை வேகமான யானையாய் எதிர்பார்த்தாள். கொஞ்சம், கொஞ்சமாய் தனது காய்களை தானே ஒதுக்கிக் கொண்டு யானைக்கு எதிரே அவளே போய் நின்றாள். தன் தோலுரித்து பாலில் விழவிரும்பினாள்.

‘யாருமில்லை. எனக்கு பயமாயிருக்கு. சத்தம் போடாமா வந்திரு என்ன.. ‘ அவன் உறையோடு போனான். அவனுக்கு ராணிக்களை நெருங்குவதிலிருந்த அநுபவம், சுகம் வீழ்த்துவதில்லை. இரண்டுமே வேறு விளையாட்டுக்கள். அவன் விக்கெட் எடுக்கதெரிந்த நல்ல பவுலர் மட்டுமே. ரன் எடுக்க அதிகமான வாய்ப்புகளில்லாததால், நல்ல பேட்ஸ்மேனில்லை. அவன் யானைதான். வித்தியாசமான பவுலர் யானை. அவனுக்கும் பேட்டிங் செய்யும் படபடப்பு இருக்கத்தான் செய்தது.

அவள் ஒரு நீண்ட காதலான, குறும்பான, ஆண்மையான, ஆளுமையான இரவை எதிர்பார்த்திருந்தாள். தன்னிலிருந்து தன்னை
பிய்ப்பான் என கனவு கொண்டிருந்தாள். கொஞ்சம் வெட்கம், லேசான முனகல், கபளிகரமான முழு ஆக்கிரமிப்பு என்பதான
படக்கோர்வையாத்தான் அவள் பார்த்த சில நீலப்படங்கள் அவளுக்கு சொல்லியிருந்தன. யானையிடம் வெட்டி வீழ்த்தப்பட
ராணிக்காய் காத்துக்கொண்டு ஈரமாய் காத்திருந்தது. அவள் கோதுமை ராணி.

படக்கென பறக்கும் பட்டாம்பூச்சியின் ஆதார சுருதியில், வீணை நரம்புகளின் முறுக்கலில், சிவகணம் தாண்டி, நட்சத்திரங்களற்ற
மனப்பால்வெளியில் பயக்கோள உருண்டைகளுடன் முட்டிமோதி அதன் வழிதவிர்த்து, எவையோ ஒன்று வெடித்து, சிதறி பஞ்சாய் உதிர்ந்து, துரியத்தில் இரத்தம் சேர்ந்து, சுழல் அதிகமாக்கி – வெறுமையாய் வெடித்து, குழம்பு சிதற – ஏதோ ஒன்று முற்றுப்பெறாத கவிதை போல
யானைக்கு பட்டது. அவன் ஈரமாகி களைப்பானான். அவள் இன்னும் ஈரத்தோடும், முடியா தவிப்போடுமிருந்தாள். தன்னிலிருந்து
தன்னை பிய்ப்பான் எனக்கனவுகளிருந்து தரைக்குவர விரும்பாத அவள், அவன் உடை அணிந்து கிளம்புவதை தடுத்தாள்.

‘வேணாம் போகாதே ‘ தடுத்தாள் சோனியா. அவளின் வெறுமை உக்கிரமாயிற்று. தன்னிலிருந்து தன்னையே எப்படி பிய்ப்பது, தெரிந்தாலும் அவளுக்கு பிய்ப்பதில் இஷ்டப்பட்டாளில்லை. அவன் விக்கெட் இழந்ததுபற்றி கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அப்படிச்சொல்வது வார்த்தையின் வறுமை. முடியாத தாபம், ஆண்மை அவசரம், ஷ்ரித கலிதம், அரைகுறை தீயணைப்பு இப்படியெல்லாம் சொல்வது ஏதோ மலையாளப்படத்தின் தலைப்புபோலாகிவிடுகிறது. நமது எண்ணத்தளத்தின் தர்க்கத்தை மலினப்படுத்திவிடும். இது வார்த்தைகளால் சொல்லமுடியாது தோற்றுபோகிற உணர்வு. பசி போல.

இந்த உணர்வு வெறுமே காமம் மட்டுமா. யானையை பொறுத்தவரை பயம், குற்ற உணர்ச்சி, உயிர்ச்சக்தி போனதாலான உடனடி வெறுமை, ராணியை பொறுத்தவரை தன் மாய உலகு தன் கண்முன்னே கலைந்துபோய்விட்டதான ஏமாற்றம், அதுவும் அவன் உடனே கிளம்பியது அவளது பய,குற்ற,எதிர்பார்ப்பு உலகங்களை நொடியில் பிடிங்கிவிட்டதான ஏக்கம்.

தன்னுலகம் மற்றும் தான் கனவுகண்ட உலகங்களுக்கான மோட்சயாத்திரை மற்றும் மேல்நோக்கிய பயணமாய்த்தான் காமம் அமைதல்வேண்டும். அவன்/அவள் இங்கோ அல்லது அங்கோ போய்விடின் பிரச்சனையில்லை. திரிசங்குவாய் அசைக்கப்படும்போதுதான் வயிற்றைப்பற்றியிழுக்கிறது ஏதோ ஒன்று. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ஏதோ ஒன்று. பூச்சியமில்லாது, ஒன்றுமில்லாத நடுவில் ஏதோ ஒன்று. அதற்குப்பிறகு அவர்களுக்குள் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. நெருங்குவதை போல் பிரிவதற்கும் அவர்களுக்குள் ஏராளமான காரணங்கள் இருந்தது. அதனாலா, வேறிதினாலா தெரியவில்லை..

ரொம்பநாள் கழித்து, கிட்டத்தட்ட உறவின் முடிவில் தீடீரென அவள் சொன்னாளாம், ” நீ அன்னிக்கு அப்படி போயிருக்க கூடாது.
எனக்கு ரொம்ப கஸ்டமாயிருந்தது..”

அவன் அந்தக்கதையை காமம், மசாலா கலந்து அறைத்தோழனான என்னிடம் சொன்னாலும், அவளின் வலியை என்னால்
உணரமுடிந்தது. அவன் வாழ்க்கையில் அதை உணரவே மாட்டான். அதற்குபிறகு நல்லபடியாக நெட்பிராக்டிஸ் எடுத்துகொள்வதற்காக
சில பயிற்சிமையங்களை அணுகியதாக கேள்விப்பட்டேன். அவன் யானை. வித்தியசமான யானை. அவன் வலி அவனுக்கு. மரம்
வலியை எதற்கு யோசிப்பானேன் என்கிற எண்ணம். மரத்தின் வலியை அப்புறம் எந்த பஞ்சாபி யானையாவது பிய்ச்சிப்போட்டிருக்கும்.

ஆனாலும், அந்த மரத்தின் வலி, எனக்கு வலித்தது. பாவம் பெண்மை. பாதி பிய்ந்து, பாதி தொங்கி.. சிரிக்கிறார்
ஆலந்தூர் கிழார். பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ

“சார், ரொம்ப சூப்பர் சார்.. ” நான் வியந்து சொன்னேன்.
“அந்த தோழி போல எனக்கும் வலிக்கிறது சார்..பாவமில்லையா சார். இரண்டுபேரும்..”
மெல்லியதாய் புன்னகைத்தார், நான் கொடுத்த சாயை(Tea) பருக்கிக்கொண்டே சொன்னார்.
“எனக்கும்தான். என்ன செய்ய.. அது வெறும்காமம் மட்டுமில்லை. தன்னிலிருந்து பிய்த்துக்கொண்டு போவது. அதுதான்
மானுடகுலத்தின் அடுத்தகட்ட பிரமாண்டம். அதற்கு காமம் அவனுக்குக்காட்டப்பட்ட சாம்பிள். ”

எனக்கு யானையின், மரத்தின் வலி புரிந்த அளவுக்கு ஆலந்தூரின் தத்துவம் புரியவில்லை. உங்களுக்கு..?

தயக்கமாய், யோசிப்பாய் கேட்டேன்.
” காமத்தின் போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உண்மைக்கு பக்கத்தில் தன்னிலை மறந்து
தள்ளப்படுகிறோமே… ”
” ஒசோ படித்தீர்களா..” குறுக்கிட்டேன்.
” மனிதனை மட்டும்தான் படித்தேன். அதெல்லாம் நீயே படி.. காமத்திற்கும், மனிதனுக்குமான தொடர்பை எந்த எழுத்தாளனாலும் உண்மையாய் தொடமுடியாது. ஓரளவு முயற்சிக்கலாம். அவ்வளவுதான்.. உண்மையை ஒரளவு நெருங்கிவிட்ட எந்த எழுத்தையும் நீ தலையில் வைத்துக்கொண்டு ஆடலாம்..”
“அதனால் தான் நீங்கள் இன்னமும் நிற்கீறிர்கள் உங்களை இண்டர்நெட்டில் எவ்வளவு கஸ்டப்பட்டு தேடினேன் தெரியுமா. ..” வேகமாய் சிரித்தார்.
” நல்லவேளை ஏ.கே.ராமனுஜம் ஆங்கிலத்தில் சொன்னதால் நாம் சந்தித்துக்கொண்டோம்..” நான்.
“நவீன இலக்கியத்தில் எப்படி.. இந்த தவிப்பை, திரிசங்கை.. சொல்வதில் இன்னும் உண்மைக்குப்
பக்கத்தில் போயிருக்கீறீர்களா.. யோனி, ஆணுறுப்பு என்றெல்லாம் கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்.. போல..”
“வார்த்தைகளில் சுகந்திரமிருக்கிறது. இன்னும் உணர்தல்களில்தான் போகவேண்டியதூரம் அதிகம் போல..” – நான்.
“அது சரி.. அதுதானே ஒவ்வொரு மானுட இலக்கியத்திற்கும் சவால்..ஏதாவது கிடைத்தால் சொல்..” விடைபெற்று
சென்றார்.

காமம் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். யானையும், ராணியும் என்னுள் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். அந்த
முறிந்த மரத்தின் கிளை இருவரையும் ஆட்டிவைத்துக்கொண்டிருந்தது. பிய்ந்தும், பிய்யாமலும் காமம் மானுடகுலத்தின்மீது
தொங்கிக்கொண்டேயிருக்கும்போல..

“கெளவை யஞ்சிற் காமம் எய்க்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உடை என் நலனே ”
[Thanks Mr. A.K Ramanujam, i could able to trace these from Net, from your english translation only ]

படுக்கையும், படுக்கை சார்ந்த கதைகள்/எழுத்துக்கள் எழுத்தாளனுக்கு ஒரு சவால். எவ்வளவு தூரம் அவனால் உண்மைக்கருகில் போகமுடிகிறது மற்றும் எவ்வளவு தூரம் அதை எழுதமுடிகிறது என்பவை அவனே அவனை கேள்விக்குள்ளாக்கும். அவன் சமூகம் அவனுக்கிட்டிருக்கும் பொன்விலங்குகள் மற்றும் அவனே அவனுக்குபோட்டிருக்கும் மாயக்கயிறுகள், சந்தோச கலர்கனவுகள் இவைகள் வழியாகத்தான்
அவன் எழுத்துவரவேண்டும். வரும்.

எழுத்தாளனுக்கு மட்டுமா, மனிதனுக்கே அது ஒரு தனிசவால். காலம் காலமாய் அவன் அதோடு போராடிக்கொண்டேயிருக்கிறான். பசி, அன்பு போல் காமமும் ஒர் உணர்வு. உடலும், மனமும் பின்னும் காற்றுக்கோலங்கள். காமம் வெறும் உடம்பின் ஹார்மோன்கள் மட்டுமல்ல, வெறும் உயிர்சக்திமட்டுமல்ல. வெறும் எரிக்கும் எண்ணமட்டுமல்ல. அவன் ஒரணுவாய் உயிர்த்தலிருந்து அவனை பின் தொடரும் நிழல்.
சொல்லப்போனால் பசி, அன்பு இவெற்றுக்கெல்லாம் சீனியர். அதை எதிர்க்கவா, அணைக்கவா ? வெறும் அதை எதிர்கொள்ளுதலில் எத்தனை வேறுபாடுகள், சவால்கள், ஏமாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகள்.

காமத்திற்கு முந்திய கணம், காமக்கணம், காமத்திற்குப்பின்னான கணங்கள், மறுபடியும் இந்தச்சுழற்சி. இதை ஒழுங்குப்
படுத்தத்தான் பால்ய விவாகம், விவாகம், வெறுமனே சேர்ந்துவாழ், தாலி, பதிவுத்திருமணம், உடல் வியாபாரம் – எப்படி, எப்படியோ
மனிதயினம் சட்டங்களை வகுக்கிறது. உடைக்கிறது. மறுபடியும் வரைகிறது. வளரும் மனிதயினத்தோடு காமமும் மேம்படுகிறது என்று
சொன்னால் தப்பில்லைதான். நாகரீகத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று மனிதகாமத்தின் வெளிப்பாடு. ஓசோ காமத்தின் உச்ச
கணங்களில் கடவுளின் ஆத்மதரிசனம் கிடைக்குமென சொன்னது, காமத்தை அணைத்து அதைதாண்டி செல்வது. மதங்கள்
அதனை எரித்து அதனை கடந்து போகச்சொல்கின்றன.

அவசரமான நாம் நகரவாழ்க்கையில் காமம் ‘வாரந்தர பசி’ யாகிவிட்டது.[ நன்றி: அன்பாதவன், மும்பாய் சிறுகதைகள்.
அன்பாதவன், மதியழகன் – இருவரின் பாரட்டபடவேண்டிய நல்லமுயற்சியால் மும்பை சார்ந்தகதைகளின் தொகுப்பு வெளிவந்தது. என்ன அருமையான முயற்சி. நாஞ்சில் நாடன், புதியமாதவி,அம்பை – எழுத்தாளர்களின் மும்பை சார்ந்த கதைகள் காணக்கிடைக்கிறது. கே.ஸீரினிவாசனின் கதை எனக்குப்பிடித்த கதை.] வாரா,வாரம் தேவையாகிவிட்ட உடம்புதேவையாக காமம் சுருங்கிவிட்டதான சுட்டல்,
அன்பாதவனின் எழுத்தின் ஆழம்காட்டுகிறது. என்னவொரு சொல், என்ன அற்புதமான கையாளல். என் தாத்தா ஆபிசுக்கு நாலுசெட்டு
டிபன் காரியரில் சாப்பிட்டிருப்பார். நான் அவசர,அவசரமாய் வடாபாவும், பர்கரும், கொஞ்சம் தயிர்சாதமும் முழுங்குகிறேன். வாராந்திரபசி
காமத்தின் வளர்ச்சியா, வீழ்ச்சியா ?

நவீனயிலக்கியத்தில் அவ்வளவாயில்லையெனில், ஆலந்தூரார் சிரிப்பார். ‘என்ன இழவு இலக்கியமோ, அழகியல், பின்நவினத்துவம்,
சர்ரியிலிசம் – நல்ல ஜல்லியடிக்கீறிங்க.. சரக்கில்லையே.. ‘ சாய் குடித்துக்கொண்டே குத்துவார்.

என் தேடலில், ரொம்ப நாளைக்குப்பிறகு கிடைத்தது இரண்டு கதைகள். படுக்கை தளம். காமத்தடம். மனிதப்புரிதல்.திரிசங்கின் வலி. மேன்மை நோக்கிய பயணத்தில் அவசர வாழ்க்கையின் இழப்புகள். படுக்கையும், படுக்கைசார்ந்த எழுத்துகளும் எழுத்தாளனின் சவால்.
பசியை பற்றி வெளிப்படையாய் பேசுவதுபோல காமம்பற்றி பேசமுடியுமா, எழுதத்தான் முடியுமா. வார்த்தை, எழுத்து கட்டுப்பாடுகளிக்கிடையே
அவன் எழுத்துசிலுவையை எவ்வளவு அழகாய் சுமந்து, அறையப்பட்டு உயிர்த்தெழுந்து, காலம் கடந்தும் வாழ்கிறான் என்பது சவாலான ஒன்று. ஆலந்தூரார் இன்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

கிடைத்த அந்த இரண்டு கதைகள் .
ஒன்று: அரவிந்தனின் பொறி
மற்றொன்று: ஜி.நாகராசனின் நாளை மற்றொரு நாளேயின் ஒரு பகுதி.

===========================================
ஆசிரியர் : ஜி.நாகராசன் (1929-1981)
தலைப்பு: நாளை மற்றொரு நாளே
ஜி.நாகராசனின் படைப்புகள் முழுமையான தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும்.
மின்னஞ்சல்: kalachuvadu@vsnl.com

முதலில் ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே கதை பார்ப்போம். இந்த நூற்றாண்டு நாவல்களில் படிக்கப்படவேண்டிய
ஒரு நாவலாக பலரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.நாகராஜன் வாழ்க்கையும், எழுத்தும் ஒன்றாய் வாழ்ந்தவர் என்று
சொல்வர்கள். இதுவும் ஒரு விளிம்புநிலை மாந்தர்கள்பற்றிய கதைதான். (70’களின் ஆரம்பங்களில் அது ஒரு பேஷனாகாயிருந்ததுபோல)

கந்தன் – பச்சையாக சொல்லப்போனால் மாமா. ஒரு அற்புதமான சேரி (அது என்ன அற்புதமான சேரி.. கதையைபடித்தால்
நீங்களே உணர்வீர்கள்) அவனுக்கு வாசஸ்தலம் மற்றும் தொழிற்பேட்டை. அவனது மூலதனம் அவனது மனைவி. அவன் செய்யும்
தொழிலுக்கும் காமத்திற்கும் ரொம்பதொடர்பு. மற்றாரின் காமம்தான் அவனுக்கு கடவுள், கரன்சி. மீனா அவனின் தொழில்முதலீடு.
அப்புறம் மனைவியும் கூட. இரு குழந்தைகளுக்கு தாயும் கூட. கந்தனின் மீது காதல் கொள்ளும் மீனா அப்புறம் அவனின் முதலீடாய் உடல்வியாபாரத்தில் இறங்குகிறாள்.

கீழே கொடுக்கப்பட்ட பகுதி, நாகராசனின் ஆடம்பரமில்லாத எழுத்தை இயற்கையாய் படிக்கிறது. இப்படியெல்லாம் எழுதமுடியுமா.. என நம்மைவியக்கவைக்கும் இயல்பு, உண்மை, காமிராவால் பதிவுசெய்தால் போல நடை. பேசிக்கொண்டே தொடரும் காமம், காமத்தின் உச்சத்தை நோக்கிய பேச்சுக்கள், இடைவெளியற்ற மனங்களின் நிர்வாண பேச்சுக்கள், தலையணை சரிசெய்தல், முடிபின் தள்ளல், ஆணின் மற்றவரின் வசதிபற்றி விசாரிப்பு, நிசம்பதமான பிரம்ம நிமிடங்கள், காமத்திற்குப்பின்னான உணர்வற்ற நிமிடங்கள், அது முடிந்து உலகம் திரும்பல், காமத்தால் எழும் குற்றணர்வு மற்றும் நிம்மதியால் எழும் பெண்ணின் கேவல், அதற்குப்பின் மற்ற பாலிடம் ( Opposite Sex) எழுகிற லேசான அதிருப்தி உணர்வு நல்ல காப்பியின் கடைசிக் கசப்பைபோல, தனது இழப்புகளை பற்றிய அந்தரங்கமான பேச்சு-

WoW ! நாகராசனின் பேனா உண்மைக்கு ரொம்ப பக்கத்தில் சென்றிருக்கிறது இந்த காட்சி. தன்னிலிருந்து தன்னை பிய்க்க உதவும் காமம் மிளிரும் காட்சி. பிய்ந்தும், பிய்யாமலும் காமம் மானுடகுலத்தின்மீது தொங்கிக்கொண்டேயிருக்கும் ஒரு காட்சி. யானையும், ராணிக்காயும் தங்களை பிய்த்துக்கொண்டு மற்றவர்களின் பிய்த்தெடுக்க உதவுக்காட்சி. யானை கிளையை பிய்த்ததா? பிய்த்ததுதான். ஆனாலும்
நிறைய கிளைகள் உடல்தாண்டி, பிய்க்கப்படவேண்டியிருக்கின்றன. இதுமுடிவற்றது – என்பதே நான் வாசகனாய் உணர்ந்துகொள்வது.

நீங்களே, கீழே படியுங்கள் :

========

குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு
மெழுகப்பட்டிருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்த குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது
சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரையளவுக்குத் தண்ணீர்
இருந்தது.

கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.
..
அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின்சென்று அவளைப்போலவே வளைந்து அவளைப் பின்
புறத்திலிருந்து அணைத்தான்.

‘உம். விடுங்க.. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே ?” கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின்புறமாகக்
கட்டிக்கொண்டான்.

“அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு ” என்று தொடர்ந்தாள் மீனா.

“கதவே வேணா அடச்சிடறேன்..” என்று சொல்லிக்கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான்.

“ஆனா வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு ” என்று சொல்லிக் கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து
இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்றுமொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான்.
ஒரு ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிருவென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியும் சரி செய்து
கொண்டிருந்த மீனா, “பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்..?” என்றாள்.

‘உண்மையை சொல்லட்டுமா ? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிடு
போச்சி.. ” என்று சொல்லிவிட்டு கந்தன் சிரித்தான்.

“ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்..? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க.. ” என்று சொல்லிக்கொண்டே
மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணையும் தட்டி போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி
அணைந்துவிட்டது. அதைப் பற்றவைத்துகொண்டிருந்த கந்தன், “அன்னைக்கு அந்த அணில்க எப்படி ? நாம் எவ்வளவு பக்கல்லே
போய் வேடிக்கை பார்த்தோம். எப்படி இரண்டும் ரொங்கிகி கிடந்திச்சு.. ?” என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே
சென்று உட்காரவும் அவள். ” நாமும்தான் ரொங்க்கிக் கிடந்திருக்கோம்..” என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை.
அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர்.

“நாய்க செய்யறது அசிங்கமில்லையா.. ” என்றாள் அவள்.
“அபூர்வம். ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல..” என்றான் கந்தன்.
“யானைங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா..” என்று கேட்டாள் மீனா.
“ஆமா.. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்துலே வேலை பார்த்தான். சுத்து
வட்டாரத்திலே யானைங்க வருமாம். போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். ….
ஒரு பெண்யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிகிடு இருந்த்திருக்கு.. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே
பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி
அடிச்சிதாம்.. கொஞ்சம் தலையைத் தூக்கிக்க.. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.. ”

“அப்புறம்.. ?” என்று கேட்டாள் மீனா.
“ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க.. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை
அலறவுமா இருந்திருக்கு..”
“அய்யோ.. மெள்ள..” என்றாள் மீனா.
“சரி. மெள்ளத்தான். கதையை முளுக்க கேக்கலேயே ? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க
என்னேண்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. .பெண் யானை செத்துகிடந்தது. ஆண் யானையைக் காணேம்.”
“கண்றாவி.. ” என்றாள் மீனா.
“அப்ப மறந்திடு.. ” என்றான் கந்தன்.
“எதெ. ”
“யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க..”
கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.
“ஆமா.. ஒண்ணு கேக்கணூம்ண்ட்டு தோணுது.. ” என்றான் கந்தன்.
“என்ன..?”
“நைட்லே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே. அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா..?”
“அக்கா.. வூட்டுக்கு கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும்
காலேஜு ஸ்டூட்ண்ட்ஸ் வந்தா குஸியா இருக்கும்..”
“எப்படி குஸியா இருக்கும்..?”
அய்யோ கடிக்காதீங்க.. வலிக்குது..” என்று இலேசாய் அலறினாள் மீனா.
“சரி.. சரி. கடிக்கலே.. எப்படி குஷியா இருக்கும்.. ” என்று திரும்பிக் கேட்டான் கந்தன்.
“பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்..” என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.
“உம்.” என்றான் கந்தன்.
“பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே. இந்த சினிமாக்காரி மாதிரி இருக்க எம்பாங்க..”
“உம்.”
“நாம இரண்டுபேரும் எங்காச்சும் ஒடிலாம்பாங்க செலர், போனவாரம்னு நெனக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?
“உம்.. என்ன சொல்லிச்சு..”
“என்னெப் பொம்பளேன்னுட்டு நெனச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு..” என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.
“உஹ¤ம்..”
“ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப்
போட்டுக் களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அளுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான்.
இருந்திட்டுப் போங்கன்னேன்.. ‘பைத்தியக்காரத்தனம்’னு சொல்லிட்டு போயிட்டான்.”
‘அப்படியா..? சரி நல்லாப் படுத்துக்க..” என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.
“சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடுவோனானு தோனுது.. ஆனா. ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்.”
என்றான்.
“அவர் சொந்தத்துல கார் வச்சிருக்காராமே..? ”
……
……
“நீங்க் அப்போ வெவரம் தெரியாதவரு..”
“அம்மாவும் போயிட்டாங்க..”
“சரியா இருக்கா..?”
அவள் தலையை அசைத்தாள்.
“தலையணை வச்சிட்டிருக்கியா ?”
“இல்லே. வேணுமா..?”
“வேண்டாம். சரியாத்தான் இருக்கு..”

சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயித்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஷ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாக பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது.

கொஞ்சமும் ஒசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடி படுத்துக்கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக்கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிடமிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது.

“என்னங்க சந்திரனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா ?” என்று உளறுவதைப்போல் அவள் கேட்கிறாள்.
“நாம் தேடாத இடமா..? ” என்கிறான் அவன். “நாலு வருஷமாயிரிச்சே..! ”
“உம்..”
“ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா..?” [சந்திரன் அவர்களின் தொலைந்த குழந்தை ]
கந்தன் பதிலளிக்காது கதவை திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து
முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது.

=====================
சிறுகதை தொகுப்பின் பெயர் : குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது [ரொம்ப சின்ன தலைப்பு :)- ]
அரவிந்தன் : பத்திரிக்கையாளர். எழுத்தாளர். விமர்சகர்.
மற்ற படைப்புகள்: வானப்பிரஸ்தம், சுட்டிமகாபாரதம்
மின்னஞ்சல் : aravindanmail@gmail.com
காலச்சுவடு வெளியீடு, விலை :60/ ரூ.

பொறி (நீண்ட ஆய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த கதைகளுக்கு போவோம். )
நாகதோசம் (பாம்பிற்கும் மனிதமனத்திற்கான தொடர்பு, பயம் பற்றிய நீளக்கதை), நிழல் (நாய் பயம் பற்றியது. படிக்கும்போது
உங்களுக்குள்ளே மெல்ல எழும் பயம் விஸ்வரூபமாய் திடுக்கிடவைக்கும். தாழ்ப்பாள் போடாத கதவுகள் ( ஏதோ பற்றி சிந்தித்துக்கொண்டு
நிகழ்காலம் மறக்கும் நாயகன் பற்றி..தொடர்ச்சியான நினைவலைகளின் நனைவாய் நிகழ்காலம்) – இந்த மூன்றும் உலகத்தரம்
வாய்ந்த ஒன்றாய் என் வாசகனுபவத்திற்கு இப்போது படுகிறது. அரவிந்தன் இவற்றை நல்ல மொழிபெயர்ப்பாளர் கொண்டு ஆங்கிலத்திலோ
மற்ற மொழிகளிலொ மொழிபெயர்ப்பது நல்லது எனப்படுகிறது.

‘வலி, கு.வெ.ச.கே, இழப்பு’ போன்ற கதைகள் தனிமனிதனின் அகவயத்தை சேர்ந்தவை. சலனங்கள் – தனியாக போகும் காதலர்களின் ஒருநாளைய வாழ்க்கை. ஊடல், சின்ன வெறுப்பு, படக்கென வெளிவரும் வார்த்தை சாட்டைகள், அடிக்கடி மாறும் மனங்களின் சலனம் – ஒரு அருமையான அப்பட்டமான பதிவு. இந்ததொகுப்பின் ‘மழைதீர்ந்த மரம்’ மட்டுமே மற்றகதைகளை ஒப்பீட சாதாரணமான கதை.

ரொம்ப நாளைக்குப்பிறகு, மாலன், சுப்ரமண்ய ராஜுவின் கதைதொகுப்பிற்கு பிறகு எல்லாக்கதைகளும் வித்தியாசமாகவும், அருமையாகவும் வந்த கதைத்தொகுப்பு. ஒரு புத்தகத்தில் நல்ல கதைகளை தேடவேண்டிய நிர்பந்தத்தில் எல்லாக்கதைகளும் கிட்டத்தட்ட நல்ல கதைகளாக அமைந்துவிட்டது பற்றி, நான் உண்மையில் அதிர்ச்சிதான் அடைந்தேன். அவசர, அவசரமாய் காலம், பக்கம் போன்ற கட்டாயங்களுக்கு கட்டுப்படாமல் எழுதப்பட்ட கதைகள். பன்முகத்தன்மையான தளம், வேறுபட்ட கதைக்குத்தேவையான நடை, பொதுத்தன்மை கொண்ட கருக்கள், சித்தாந்த கட்டுப்பாடற்ற தன்மை, தெரியாத உணராத தளத்தில் காற்றுப்புள்ளியாய கதை எழுதாத உண்மைத்தன்மை, எந்த வாசகனையும் அதீத தொந்திரவிற்கு ஆளாக்காமல் கதையோடு கலக்கவைக்கிற இயல்பு மற்றும் நாடகத்தன்மையற்ற நெகிழ்வுகள் – அட.. யாரப்பூ.. இந்த அரவிந்து.. !! திகைக்கவைக்கிறார்.
என் ரேட்டிங்கில் எல்லாகதைகளும் 45/100 க்கு மேலே ( மிகநல்ல) என்ற அடைப்புக்குள் வருகிற கதைகள். நல்ல வித்தியாசமான
கதைகளை தேடிப்படிப்பவர்களின் புத்தகஅலமாரியில் இடம்பெறவேண்டிய கட்டாயப்புத்தகம். அரவிந்தனின் கதைத்தொகுப்பில் சில கதைகளாவது இந்த நூற்றாண்டின், வெயிட், நான் கொஞ்சம் அதிகமாக பாராட்டுவதாக பட்டால், அட்லிஸ்ட்.. ! கடந்த பத்தாண்டின்
சிறந்த கதைகளாவதற்கு தகுதியானது என்று என்னால் எந்த கூரையிலும் ஏறி கூவமுடியும்.

அரவிந்தனின் பொறி :
சுதாகர் – கதாநாயகன் : கணனி கம்பெனியின் துரும்பு. அதன் ராட்சச பற்களிக்கிடையே அவன் தலை. அவனது நேரம், காலம், காமம்
எல்லாம் அந்தக்கம்பெனியின் போட்டிகள்தான் முடிவுசெய்யும். அவனது மனைவி, அவனைத்தவிர அவளுக்கு எல்லாமேயிருந்தது.
காமம் வெறும் உடலசைவு மட்டுமில்லை. தனது படுக்கைத்துணையில் அங்கீகாரம், அரவணைப்பு, உடலின் சொல்லமுடியாத
அசதியின் நிவாரணம். மனச்சிலேட்டை தூய்மையாக்கும் அந்த காமஎச்சில். மறுபடி அழுக்கு, அழி, எழுத. அழிக்கமால் துருப்பிடிக்க
கலையும் அதனழகு. அவனால் இதை உணரமுடியாதவாறு கார்ப்பரேட் மாயவலைகள், பயங்கள். தன்னை முழுமையாய் ஆக்கிரமித்த
அலுவலக எண்ணங்களோடு அவனது ஹார்மோன்களின் ஒன் – டே மேட்ச். ஜெயிப்பதென்னவோ ஆபிஸ்தான். காமத்தின் நடுவே தடைபடும் லாப்டாப் அவனுக்கு அலுவலக எண்ணங்களை இடுப்புக்கீழே அனுப்பி, மனதை எங்கோ பறக்கவிடுகிறது. மனமின்றி, உடலுறுப்பு
காற்று அறுத்த பட்டமாய் பூமி பாய்கிறது. அவள் தன்னிலிருந்த தன்னை பிய்க்க யானை வருமென காத்திருந்து கால் அகற்ற,
யானை அலுவலகக்குளச்சகதியில் மாட்டிக்கொள்கிறது. அவள் பாதி பிய்ந்து, பிய்யாமல் அவஸ்தையில் நெளிகிறாள்.
இங்கு தோழியில்லை, பிய்ந்து போன கிளைபற்றி, பிலாக்கனம் படிக்க. தனிமையில் சப்தஸ்வரங்கள், மெளனமாய். அவள் ருத்ரனாகிறாள். என்ன நடக்கிறது. கீழே படியுங்கள் :

=============================
……..
அவனால் மேலே பேச முடியவில்லை. அவன் மெதுவாகக் கீழே குனிந்து அவள் உதட்டின் மேல் முத்தமிட்டான். “வெட்டிங் டே
கி·ப்ட் ” என்றான். நந்தினி சிரித்தாள். அவன் கழுத்தைப் பிடித்து இழுத்தாள். பேச்சின் சாரமும் மறந்தது. வெகு சீக்கரமே அவர்கள்
வெறும் உடல்களாக மாறினார்கள். உடல்கள் தங்களது பிரத்யேக மொழியில் பேசிக்கொண்டன. தன் மன இறுக்கமெல்லாம்
வெளிப்பட்டு உடல் முழுவதும் பரவியிருப்பதை சுதாகர் உணர்ந்தான். உடலின் இறுக்கம் – வில்லில் ஏற்பட்ட நாண்போல்
விண்ணென்று முறுக்கேறி நிற்கும் அதன் தன்மை – கூடக்கூட மனம் லேசாவதை உணர்ந்தான். மனம், புத்தி எல்லாவற்றையும்
துறந்து உடல் மட்டுமேயாக மாறி நிற்கும் இந்தத் தருணம் அவனுக்குப் பேரானந்த அனுபவமாகத் தோன்றியது.

[காமத்தடங்கல் ]
உடலின் தன்னிச்சையான செயல்பாட்டில் நிகழ்ந்த வேகமான அசைவொன்றின்போது தன் கால் எதன் மீதோ பலமாகத் தட்டியதை உணர்ந்தான். அதை உணர்ந்த மாத்திரத்தில் மனமும் மூளையும் விழித்துக்கொண்டன. காலில்பட்டது லேப்-டாப் கம்பியூட்டர் என்பது மூளைக்கு உறைத்தது. வான்வெளியில் தீடீரென்று சிறகுகள் வேரொடு அறுக்கப்பட்ட பறவை போல சுதாகர் வேகமாகத் தரையில் மோதி விழுந்தான். உடல் குளிர்ந்து தளர்ந்தது.

…..[காமத்தின் நடுவிலான சிந்தனை ]

இன்னும் மூன்று நாட்களில் முடித்தாகவேண்டிய வேலையின் கணிசமான பகுதியை இன்று இரவு முடிக்கவேண்டும் என்று மேற்கொண்ட
உறுதி அதன் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தது. நாளை பகலில் வேறொரு கூட்டம் இருக்கிறது. இதில் உட்காரமுடியாது.
கூட்டம் இருக்கிறது என்று எம்.டியிடம் சொல்லமுடியாது. ..
மறுபடியும் தோல்வி. மறுபடியும் அவமானம். தலைக்குனிவு. அற்ப ஜந்துவை பார்ப்பது போன்ற எம்.டியின் பார்வையைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் தீபக் மேத்தாவின் இளக்காரமான சிரிப்பைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. மூன்று நாளில் வேலை முடியாவிட்டால்
இந்தப் பொறுப்பு அவனுக்குப் போகும். அவன் ஒண்டிக்கட்டை. இராப்பகலாக உட்கார்ந்து முடித்துவிடுவான். அதன்பிறகு அடுத்த
ஏப்ரலில் அவன் எனக்கு சமமாக வந்துவிடுவான். சமமாக வந்துவிட்டால் பிறகு தாண்டி செல்வது சாத்தியமாகிவிடும். அந்த அவமானத்தை
தாங்கிக் கொள்ளவே முடியாது.

[அலுவலக சிந்தனையின் செயல் பாதிப்பு ]

திடீரென்று அவன் உடலும் அதன் இயக்கமும் தளர்வதைக் கண்டு நந்தினி குழப்பமடைந்தாள். தன் மேல் படுத்திருந்த அவனை
இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் உடலை மறுபடியும் பேசவைக்க முயன்றாள். ஆனால் அவன் உடல்மொழி மாறிவிட்டிருந்ததை
தெளிவாக உணர்ந்தாள். ஆயினும் இழப்பின் வலியை தாங்க்கிகொள்ளமுடியாமல் அந்த இழப்பை எப்படியாவது தவிர்க்க, பரிதவிப்போடு
சில முயற்சிகள் செய்து பார்த்தாள். அந்த முயற்சிகளின் வியர்த்தத்தை உணர்ந்தபோது மனத்தில் கசப்பும், வெறுப்பும் பொங்கி
எழ ஆரம்பித்தன. அவள் கை சுதாகரைத் தன் மேலிருந்து சரித்தது.

தன் உடல் விடுபட்டதும் சுதாகர் லேப்-டாப்பைப் பத்திரமாக எடுத்து வைக்க யத்தனித்தான். அவன் கை லேப்-டாப்பை நாடுவதைக் கண்ட நந்தினியின் மனத்தில் புயல் மூண்டது. அவளது ஆவேசம் கால் வழியாக வெளிப்பட்டது. அவள் கால் வேகமாக லேப்-டாப்பை நோக்கிச் சீறுவதைப்பார்த்த சுதாகர் தாவி எழுந்து லேப்-டாப்பை வாரி எடுத்துக்கொண்டான். உதை அவன் இடுப்பில் விழுந்தது. உடலில் பொட்டுத் துணி இல்லாமல் லேப்-டாப் கம்ப்யூட்டரை அணைத்தபடி, தன் மனைவியின் ஆடையற்ற காலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

=========================================

இருகதை மாந்தர்கள் சமூதாயத்தின் வெவ்வெறு தட்டுக்களை சார்ந்தவர்கள். ஆனாலும் படுக்கையும் அது சார்ந்த முன்,பின்
நிகழ்வுகள் எல்லாம் எல்லாருக்கு பொதுதான் போலும். ஆலந்தூராருக்கு இந்த இரண்டு கதைகளையும் கொடுக்கவேண்டும்.
‘சார். சங்ககாலமென்ன என்ன பெரிய பருப்பா.. நாங்களும் பண்ணிருக்கோம்ல.. ‘ மெதுவாக சொல்லவேண்டும்.
வரட்டும். பார்க்கலாம்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி