ODI விளையாடு பாப்பா

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


* * *
வயது அதாகிறது எண்பதுச்சொச்சம். ஆனாலும் அவர் பலவீனராமன் அல்ல. பலராமன். பிள்ளைகள் வெளியூரில். அவர்வீட்டைத் தாண்டிப்போனாலே ஹோவென்று சேனலில் ஆரவாரம் கேட்டது. வாக்கிங் ஸ்டிக் மனுஷன் ஹாக்கி விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அல்லது கால்பந்து. தெருநாய் முகர்ந்தபடி ஓடிக்கொண்டே யிருப்பதைப் போல கால்பந்து வீரர்கள், ஆனால் காலை கோல்போஸ்ட் வந்ததும் தூக்காமல் ஓடிக்கொண்டே யிருந்தார்கள். கிரிக்கெட், வாலிபால், ஹாக்கி, டென்னிஸ் என எல்லா ஆட்டத்திலும் பந்துகள் பாவம், அபாரமாய் உதை வாங்கின. ஓர் ஆட்டத்துக்கு உதைபந்து என்றே பெயர். ஜனங்கள் இரக்கப்படாமல் கைதட்டினார்கள்…

காலையில் செய்தித்தாள் வந்ததும் மாமி கொலைகொள்ளை நிகழ்ச்சிகளை ஊன்றிப் படிப்பாள். நாடு கெட்டுக்கிடக்கிறதாக அவளுக்கு ஒரு பெருமூச்சு வரும். பெண்ணியம் பேசும் பட்டிமன்றப் பெண்ணைப் பார்த்தால் வருத்தப்படுவாள். ”ஏட்டி, இப்பிடித் துடுக்குத்தனமாப் பேசிக்கிட்டு அலஞ்சா ஒன்னிய எவண்டி கட்டிக்குவான்? பொம்பளைக்கு அழகு, இடுப்புல சேலையும் பிள்ளையும்தான்!” என்று தன்னைப்போல எதும் காமென்ட் அடிப்பாள். ”அவளைப்பத்தி என்ன, ஒனக்கு கல்யாணம் ஆயிட்டதா இல்லியா, ஒஞ்சோலி முடிஞ்சிட்டது, பெறவென்ன?” என்று கேட்கமாட்டார். அது மாமியின் உலகம். அதில் அவர் தலையிடார்.

அவள் தலையிடாத அவரது உலகம் உற்சாகமும் பரபரப்பும் நிறைந்தது. எத்தனையோ காப்டன் பார்த்தாச்சி. மன்சூர் அலிகான் பட்டோடி. சுனில் மனோகர் கவாஸ்கர். கபில்தேவ். அசாருதீன். கங்குலி. திராவிட். கும்ளே. தோனி என்று. காலம் மாற மாற விளையாட்டு உத்திகளும் மாறிவிட்டன. அஞ்சுநாள்க் கல்யாணம் ஒரு காலம். இப்ப ஒருநாள்க் கல்யாணம். அதிலும் சிலர் மதியத்தோடு சத்திரத்தைக் காலி செய்து விடுகிறார்கள்… ஓடி விளையாடு பாப்பா என்றான் பாரதி. இப்போது கிரிக்கெட்டிலேயே ஓ டி ஐ விளையாட்டுதான். அது எக்ஸ்பிரஸ் வண்டி என்றால், ட்வென்டி ட்வென்டி சதாப்திதான்… விளையாட்டுதான் சுருங்கிவிட்டது என்று பார்த்தால், காப்டன் பேரே அசாருதீன், கங்குலி, கும்ளே, தோனி – என்று ஒவ்வொரு எழுத்தாகச் சுருங்கி விட்டது. அடுத்த கேப்டன் பேர் என்னவோ. ஒரே எழுத்துதான் இருக்கும்.

மாமிக்கு தொலைக்காட்சித் தொடர்கள் மேல் பிரியம் இருந்தாலும் காது கேட்காது. பெட்டிக்குக் கிட்டத்தில் போய் உட்கார்ந்து கண் இடுக்கிப் பார்த்துவிட்டு பிளவுஸ் மேட்சாவே இல்லை, என்று சொல்வாள். பக்கத்து விட்டு மாமியிடம் போய் ”எங்க ஓரகத்திபொண்ணு முழுகாமயிருக்கா…” என்று செய்தியறிக்கை வாசிக்கப் பிடிக்கும். நியாய தர்ம பயம் உண்டு. எல்லாத்தையும் மேலயிருந்து ஒருத்தன் பாத்துக்கிட்டிருக்கான், என அடிக்கடி வசனம் பேசுவாள். மோட்டில் வெதரிங் கோஸ்ட் போட்டால் கூட அவன் எப்படியோ எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவளுக்கு. லேசாய் மின்னி இடி இடித்தால் கூட வெளியே இறங்கவும் மாட்டாள். அவரையும் வெளியே இறங்க விடமாட்டாள்.. இடி கேட்காது என்றாலும் மின்னலுக்கு இடிக்கும் என்று தெரியும்.

பிள்ளைகள் வைத்துக் கொள்ளவில்லை, என்கிற வருத்தத்தைக் காட்டிக் கொண்டதில்லை இருவரும். ஒனக்கு நானாச்சி, எனக்கு நீயாச்சி, என இதுநாள் வரை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குதிரைவண்டி அல்ல, டொடக் லொடக் மாட்டு வண்டி. வயதான ரெட்டை மாடுகள் – ஒன்று அவர். இன்னொன்று மாமி. கிருஷ்ணவேணி.

பலராமன் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றவர். கையில் முதல்நாள் நீள இரும்புக்குச்சி தந்து தண்டவாளத்தில் ரயில் வந்துநிற்கையில் இதால் தட்டிப்பார், என்றார்கள். எதற்குத் தட்டிப் பார்க்கச் சொன்னார்கள் என்று தெரியாமலேயே பதவிகாலம் முடிந்துவிட்டது…. பதவி ஓய்வு பெற்றும் கையில் குச்சி பிடிப்பதை விடமுடியவில்லை. இப்போது வாக்கிங் ஸ்டிக்கே துணை. சிவபெருமான் முக்கண்ணன் என்றால் இவர் முக்காலன்.

தெருவில் நாய் பயம் இல்லாமல் நடக்க முடிந்தது.

எப்படியோ அவர்கள் வீட்டுக்கு ஒரு பூனை வந்துபோய்க் கொண்டிருந்தது. குப்பென்று வயிறை உள்ளடுக்கி ஒருமாதிரி சோம்பல் முறிக்கும் ஜிம்னாஸ்டிக் பூனை. கிருஷ்ணவேணிக்கு அதன்மேல் பிரியம் உண்டு. அது மியா, என்று கிட்டவந்தால், ”ஏட்டி நானா உனக்கு மாமியா?” என்று தூக்கிக் கொஞ்சுவாள். பட்டுப்போன்ற புசுபுசு உடம்பு. அது உரச மாமிக்கு சிலிர்க்கும். மிருகங்கள்பாசத்தில் பொய் இல்லை. கூப்பிட்டால் நம்பி கிட்டே வருகின்றன. கிருஷ்ணவேணி பால் ஊற்றுவாள். பலராமனைக் கண்டால் அதற்கு பயம். நிறைய விளையாட்டு சேனல் பார்க்கிற மனுசன். கையில் வேறு குச்சி…

ஆனால் பலராமனுக்கு வீட்டுவிளையாட்டுகளில் – இன்டோர் கேம்ஸ் – ஆர்வம் இல்லை. செஸ், சீட்டு விளையாட மாட்டார். தாயம் பல்லாங்குழி என்று கிழவிகளாக ஆடினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார். ஆட்டுக்கிடை போட்டாப்போல கூடாரம் வரைந்து ஆடுபுலி ஆட்டம். மூணு கல்லு. சதுரத்துள் சதுரம் பிரித்து வரிசையாய் ஒரே நேர்கோட்டில் மூணு கல்லும் வைத்துக்காட்ட ஜெயம்! நாலுசோழி, ஜோசியம் பார்க்கிறாப் போல ஒரு விளையாட்டு. நாலும் குப்புற விழுந்தால் பதினாறு. நிமிர்ந்து மல்லாக்க விழுந்தால் நாப்பது! புளிமுத்தாட்டம், ஒத்தையா ரெட்டையா பம்பையா பரட்டையா – என்றெல்லாம் ஆட்டங்கள். விட்டால் படுத்துக்கொண்டே ஆட ஆட்டம் கண்டுபிடித்து விடுவார்கள். பெரிய விஸ்தாரமான களத்தில் நாலு பேர் பார்க்க ஆட வேண்டும். அதுதான் விளையாட்டு. அடிக்கிறான் பார் சிக்ஸர். சேவாக் அடித்தால் மைதானத்துக்கு வெளியே போய்த் தேடுகிறார்கள் பந்தை!

– சீட்டாட்டம் என்றதும் ஞாபகம் வந்தது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அன்னாருக்கு சீட்டு விளையாட்டில் கொள்ளைப் பிரியம். ஓய்வு நேரம்னா சீட்டைக் கையில் எடுத்திருவார் போல. ஒருநாள் அவரும் சகாக்களும் உட்கார்ந்து சுவாரஸ்யமாய்ச் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்த நண்பர் அவரிடம் கேட்டார். ”ஏம்ளா விதின்னா என்ன, மதின்னா என்ன? விதியை மதியால் வெல்லலாம்றாங்களே, அது நிசமாளா…” டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னார். ”நீ கலைச்சிப்போட்டியே சீட்டு எனக்கு. என்கிட்ட வந்த சீட்டு, இது என் விதி. இதை இப்பிடி அப்பிடி மாத்தி அடுக்கி, நான் ஜெயிக்கிறேன் பாரு, அது மதி! நான் ஜெயிச்சாச்!” என்று கடைசிச் சீட்டைக் கவுத்திப் போட்டாராம்!

விளையாட்டு எதுவும் சுவாரஸ்மில்லாத சமயங்களில் தொலைக்காட்சிப் பெட்டியை விட்டுக்கொடுத்து விடுவார். ஜிகினா கிரீடம் வைத்து, அட்டைக்கத்தியுடன் சண்டைபோடும் ராமாயண மகாபாரதக் காட்சிகளை கிருஷ்ணவேணி பார்ப்பாள். உலகையே ரட்சிக்கிற ராமர் பசியுடன் வசனம் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்காலத் திரைப்படங்களில் உட்கார்ந்தா பாட்டு எழுந்தா பாட்டு. போதும் நிப்பாட்டு, என்று கத்தவேண்டும் போலிருக்கும். ஒரு படத்தில் உடலில் ஈ மொய்த்ததைப் பற்றிக் கூட பாட்டு இருந்தது… என்னுடல் தனில் ஒரு ஈ மொய்த்த போது… தட்ட்டி விட்ட்டுப் போய்யா. பாட வந்திட்டான்… ஈயாய் தியாகராஜ பாகவதர் குரலே காதில் ரொய்ங்கென்று சுற்றும். இப்போது தொலைக்காட்சி ராமாயண மகாபாரதங்களில் அந்த வியாதி தொற்றிக் கொண்டிருக்கிறது… ஓயாத பாட்டு. ஒருமுறை சீதை பாடியபோது பின்னணியில் கிதார் சத்தமெல்லாம் கேட்டது…

வீட்டில் பொழுதுபோகாத தாத்தா யாராவதுதான் தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்திருப்பான்.

எதும்விளையாட்டு என்றால் மைதானத்தில் எப்படி கூடி விடுகிறார்கள். பாப்கார்ன் சிப்ஸ் குளிர்பானம் என தின்று தீர்க்கிறார்கள். தொலைக்காட்சிகளிலேயே கூட அதுபற்றிய விளம்பரங்கள்தான். ஆட்டக்காரர்களே இதைத் தின்னு, இதைக்குடி என்று ஆட்ட நடுவில் விளம்பரத்துக்குப் பேசுகிறார்கள். ஒரேயரு சாக்லேட் சாப்பிட்டால் உடனே சிக்ஸர் அடிக்கிறான்! அந்த விளம்பரம் முடிந்து அதில் நடித்த ஆட்டக்காரர் சிக்ஸர் தூக்கப்போய், அவ்ட்!

பலராமன் காலை சற்று வெயிலேற வெளியே உலா போவார். கிருஷ்ணவேணி படிதாண்டாப் பத்தினி. வீடு திரும்புகையில் காய்கறியோ, சிறு சாமான்களோ கையோடு அவர் வாங்கி வருவார். பால், மற்றும் பெரிய பலசரக்கு சாமான்கள் வீட்டில் வந்து இறங்கிவிடும். சரக்கு கொண்டுவரும் ஆளிடம் அவள் ”உனக்குக் கல்யாணம் ஆயிட்டதா? எத்தனை பிள்ளைங்க?” என்று எதாவது கேட்பாள். உலகத்தில் முக்கியமான விஷயம் கல்யாணம் ஆவதும், பிள்ளை பெறுவதும் என்பது அவள் நினைப்பு.

பேரன் பேத்திகள் வந்தால் சுற்றி உட்கார்த்தி வைத்து கல்சட்டியில் தயிர்ச்சோறு மையாய்ப் பிசைந்து கையில் போடலாம்… பிள்ளையும் பெண்ணுமே வர்றதில்லை. பேரன் பேத்திகள்தான் வரப் போறாங்களாக்கும்… அவளது மருமகள் பூனைக்குட்டிதான்!

என்றாலும் தவறாமல் ராசிபலன் படிக்கிறாள். அந்தப் பிள்ளை இந்த ராசி, அவனுக்கு இந்த வாரம் எப்படி இருக்கிறது பார்க்கலாம். அவன் மூல நட்சத்திரம். ஆண்மூலம் அரசாளும் என்பாள் கிழவி. அடிப்போடி ஆண்மூலம் அரசாளாது, வலிக்க வலிக்கப் பேளும், என்பார். குழந்தைகளையிட்டு அவருக்கு ஒரு ஒட்டுதலும் இல்லை. என்னை ஏன் பெத்தே, என்று கேட்கிற பிள்ளையை என்ன செய்ய? ”எலேய் அதைப்பத்திதான் நானே யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்…” என்பார்.

ஐந்து நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அவருக்கு ஈர்ப்பு இல்லை. என்னாவுது, ரெண்டுபேரும் சரி சமமா நல்லா அடிச்சி விளையாண்டா கொள்ளாம். ஒருத்தன் வெச்சி நச்சிட்டான்னு வெய்யி, அடுத்தாள் நாதஸ்வரத்துல ஒத்து ஊதறாப்போல, உம்முனு இழுக்கறான். அந்தாள் எந்த ராகம்னாலும் பாடட்டும். என் வழி ம்ம்ம் என ஒரே இழுவைதான், என்கிற மாதிரி தடுத்து ஆடறான். நீ என்னதான் பந்து போடு, அடிக்க மாட்டேன், மாட்டேன்னா மாட்டேன்… என்று சண்டித்தனம் செய்யும் வண்டிமாடுபோல கிரவுண்டிலேயே படுத்துர்றான்.

கவாஸ்கர் போன்ற ஆட்கள் அதில் கில்லாடி. ஆர்ட் ஃப்லிம் பார்க்கிறதைப் போல இருக்கும். கலைப்படங்களில் அதும் மலையாளத்தில் பார்த்திருக்கிறார், உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பான்கள். அரிசி புடைப்பது, மாட்டு வண்டியில் போவது… ஒரு படத்தில் தூங்குவதையே அத்தனை நேரம் காட்டினான். சிறப்பான நடிப்பு என்று திரும்பிப் படுக்கச் சொன்னார் இயக்குநர்…

விளையாட்டுகள் சிறந்த உடற்பயிற்சிகள், என்ற காலம் எல்லாம் மலையேறிப் போயிற்று. இது துட்டுசார்ந்த உலகம். தோன்றிற் துட்டொடு தோன்றுக, அஃதிலார் கடன் வாங்கிச் சாக – என்று கிள்ளுவர் சொல்கிறார். பையன்காரன் அப்பனிடமே சொத்து என்ன வெச்சிருக்கே, என்று விசாரிக்கிற காலம். எதற்குச் சொல்ல வந்தது, விளையாட்டிலும் இப்ப நல்ல துட்டுப் புழக்கம். ஆடினால் காசு, ட்வெல்த் மேன், 13வது ஆசாமி, என்று ஆடாமல் காலாட்டிட்டு உட்கார்ந்திருந்தாலே காசு. இதுதவிர விளம்பரத்தில் வேறு ஆட்டக்காரர்களையே கூப்பிடுகிறார்கள். அந்த இஷாந்த் சர்மா பிளேடு விளம்பரத்தில் வருகிறான் – அவன் சலூனுக்கே போவானோ என்னமோ, பார்த்தால் போறாள் மாதிரியே இல்லியே…

வெளியே போகிற சந்தர்ப்பங்களில் சில சமயம் தெருப்பிள்ளைகள் ஊய்யென்று விளையாடிக் கொண்டிருக்கும். தொலைக்காட்சி வந்தபின் அவனவனுக்கு எதாவது ஒரு ஆட்டக்கார பாவனை வந்துவிட்டது. தெருவுக்கு ஒரு தோனி. தெருவுக்கு ஒரு தெண்டுல்கர். இவர்கள் சொற்ப ரன் எடுத்து அவ்ட் ஆன நாளில் அவர்கள் முகத்தில் ஒரு சோகம். கொஞ்சம் பாத்து விளையாடக் கூடாதா, ரன் அவ்ட்னாக்கூட பரவாயில்லை, விக்கெட்டே எகிறிட்டுதேய்யா… கைலதான் மட்டை குடுத்துருக்குதே, நேரா கால்ல வாங்கினா எப்பிடி…. அம்பயர் கடங்காரன் பாத்திட்டே இருக்கான். டக்னு கை விரலைத் தூக்கிர்றான்.

அடுத்தவன் அநியாய வீராப்பு. வீதில போற ஓணானை மடில கட்டிட்டு குத்துது கடையுதுன்னானாம், அந்தக் கதை. பந்து எங்கயோ போவுது, அடிக்கிறேன்னு அத உள்ள இழுத்துக்கிட்டான்… பிளேட் இன். விக்கிட் அம்பேல்!

பந்து அவர் காலடியில் வந்து விழுந்தது. நேரே மோதியிருந்தால் தாக்கு பிடித்திருக்க முடியாது. குனிந்து எடுக்கலாமா என நினைத்தார். உடம்பு அங்கங்கே லொடலொடவென்று சத்தம் போட்டு உதிர்ந்துவிடும் போலிருந்தது. எதுக்கு வம்பு. குனியாமல் பந்தைத் தாண்டிப் போனார்.

இந்த ஒரு விளையாட்டில் நாடே கிறக்கிக் கிடக்கிறது என நினைத்துக் கொண்டார். தமிழில் சென்னை ஆறுலட்சத்தி இருபத்தெட்டு, என்று கிரிக்கெட்டைப் பத்தி ஒரு படமே வந்திட்டது…

செய்தித்தாள் எடுத்தால் அவர் முதலில் விளையாட்டு பகுதிதான் பார்ப்பார். முன்பெல்லாம் தமிழ் தினசரிகளில் விளையாட்டு பத்தி செய்தியே இருக்காது. வானொலி வர்ணனை, பிறகு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு, அதும் சிலசமயம் தமிழில் – என்று வந்ததும் எல்லாவனும் தோனிக்கு அறிவுரை சொல்லித் திரிகிறான். ”ஜெயசூர்யா என்னிக்குடா ஸ்பின் வெளையாண்டான்… உடனே தோனி ஸ்பின் மாத்திக் குடுக்கண்டாமா. திருப்பித் திருப்பி பிரவீன்கிட்டியே பௌலிங் குடுக்கறான். அவனும் அடி பின்னிர்றான். ஒரே ஓவரில் ஙோ (ஒரு கெட்ட வார்த்தை.) பதினாறு ரன்னு. ஒங்கப்பன் வீட்டு சொத்தா, தூக்கிக் குடுக்கறே?” இன்னொரு கெட்ட வார்த்தை. இதில் முதல் எழுத்தே ஆபாசம்!

விளையாட்டு மோகம் தலைக்கேறிய காலமாவுல்ல ஆயிட்டுது, என நினைத்துக் கொண்டார். சினிமாவுல நடிச்சி ஆட்சியப் பிடிச்சாப்ல இனி மேட்ச் ஆடி பாரிலிமென்டுக்குப் போயிருவாங்களோ என்று பயமாய் இருந்தது. ரசிகர் மன்றம் கின்றம்னு அவர்களுக்கும் இருக்கா என்ன தெரியாது. இனிமேல் கூட வரும். வராமல் போகாது…

பகலில்தான் என்றில்லை, ராத்திரியெல்லாம் விளையாடுகிறார்கள். எப்ப தூங்குவாங்கன்னே தெரியவில்லை.

வெளிநாட்டில் எங்காவது விளையாடினால், நமக்கு ராத்திரி என்றால் அவர்களுக்குப் பகல், விளையாடுகிறார்கள் என்று சொல்லலாம். இங்கயே உள்ளூரிலேயே பகல்-இரவு ஆட்டம் என்கிறான்கள். அலுவலகத்துக்கு லீவு போடாமல் வந்து துட்டு கொடுத்து பார்த்துவிட்டுப் போக ஏற்பாடு. சினிமாவில், சர்க்கசில் காட்சி போல முதல் ஷோ, ரெண்டாம் ஷோ விரைவில் எதிர்பார்க்கலாம்…

ராத்திரி விளையாட்டு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. தினசரி மாத்திரை இருக்கிறது. கொஞ்சம் தூக்கம் குறைந்தாலும் மறுநாள் படியேற இறங்க கிர்ருங்கும். தூக்கம் முழித்து ஆட்டம் பார்ப்பது சிரமம். உடற்பயிற்சி என ஆரம்பித்த விளையாட்டு துட்டு என்று முகம் மாறிவிட்டது. ஒரு சிக்ஸருக்கு இத்தனை பணம் என்றெல்லாம் அறிவிப்புகள்.

வெள்ளைக்காரன் கண்டுபிடித்த விளையாட்டு கிரிக்கெட். வெயில் உடம்புல விழவேண்டும் என்பதற்காக நாள்பூரா ஆடுகிறா மாதிரி ஐந்துநாள் கிரிக்கெட் என்று அவன் வைத்தான். நம்மாட்கள் அதை இந்தச் சுட்டெரிக்கிற வெயிலில் விளையாடவும் வேணாம். இப்படி அதை ராத்திரிக்கு மாற்றியிருக்கவும் வேணாம் என்றிருந்தது…

நம்மாள் ராத்திரியில் என்ன விளையாடுவான்? வைகுண்ட ஏகாதசி தூக்கம் முழிக்க என்று பரமபத சோபனப் படம்! பாம்பும் ஏணியும். பாம்பு இறக்கும். ஏணி ஏற்றி விடும். ஆனால் பாம்பு கடிச்சால் விஷம் இறங்காது, ஏறும்!

வரவர அவரே ரசனையில் தேறியிருந்தார். யார்க்கர் பந்துவீச்சு கண்டுபிடிக்கத் தெரியும். பீமா, தூஸ்ரா என்றால் தெரியாது. எந்தெந்த பொசிஷன்களில் ஃபீல்டிங் நிறுத்தப் பட்டிருக்கிறது தெரியாது. ஆனால் ஆட்டக்காரன் அடிச்சால் இது சிக்ஸர் நிச்சயம், இல்லை இது காட்ச் – என்று தெரிந்தது அவருக்கு. மட்டையாளனுக்கு ஒரு அம்பது வரும்வரை, நாற்பத்தியைந்து முதல் ஒரு படபடப்பு. வியர்த்து வழிகிறது. அம்பதைத் தொட்டாலே ஒரு அசட்டுச் சிரிப்பு. அநேகமாய் அடுத்த பந்தைக் கிழிச்சிர்றான்கள். அது நாலாக ஆறாக இருக்கலாம். நிறையத் தரம் அவ்ட் ஆவதும் உண்டு! ஆறு பந்தில் ஆறு பவுண்டரி, ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் என்றெல்லாம் சாதனைகள்… கும்ளே என்று நம்மாள், ஒரு டெஸ்ட்மேட்சில் பத்து விக்கெட்டும் அவனே எடுத்திட்டான். மத்த பௌலருக்கெல்லாம் சம்பளமே கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்தார்களா இல்லையா தெரியாது…

வயசு எண்பது. வேலை கிடையாது. உட்கார்ந்த வாக்கில் கொஞ்சம் இப்படி அப்படி அசங்கியபடியே முழு ஆட்டமும் பார்க்கலாம். இளைஞர்களும் இப்படி தொலைக்காட்சியில் முடங்கிக் கிடக்கிறார்களே என்றிருந்தது. பகல்-இரவு ஆட்டத்தன்று தெருவில் அத்தனைபேர் வீட்டிலும் ஆட்டத்தைத்தான் போட்டார்கள். ஹோ ஹோவென்று தெருவே அதிர்ந்து இரைந்தது.

முன்காலத்தில் இப்படி ரேடியோ போடுவார்கள். சிலோன் வானொலி மகா பிரபலம். எல்லார் வீட்டிலும் ஒரே சமயம் சிலோன் ரேடியோ வைத்திருப்பார்கள். ஒரு பாட்டை ஒருவரிகூட விடாமல் காதில் கேட்டுக்கொண்டே தெருவில் போகலாம். இப்ப கிரிக்கெட் ஆட்டம் அப்படியாக காதில் விழுகிறது… ஆட்டம் என்பதால் தனியே வீட்டில் பார்க்கிறதில் இல்லை கிக். நாலுபேர் கூட இருந்து கொண்டாட்டமாய்ப் பார்க்க வேண்டும், என்று நிறையப் பேர் தொலைக்காட்சி விற்கிற கடைகளின் வெளியே நின்றபடி எட்டிப் பார்த்து மகிழ்கிறார்கள். அவனும் ஆட்ட நாளன்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்பைப் போட்டுவிட்டு விடுகிறான்… அவனும் பார்த்தாப்போல ஆச்சி!

கிருஷ்ணவேணிக்கு காது மந்தம். அதனால் விளையாட்டு எடுபடவில்லை. அவளுக்கு ஆட்டம் என்றால் உடல் அலுக்காத விளையாட்டு. பல்லாங்குழி. அவள் பல்லே குழி. பொருத்தமான விளையாட்டுதான். கைமுத்தை முடித்து, வழிச்சி காசி தட்டினால் சிரிப்பு. காசிக்குப் போகிற வயசுதானே!

அன்றன்றைய விளையாட்டு சுவாரஸ்யம் என்பது மட்டுமில்லை. ஐந்து டெஸ்ட். ஐந்து ஒருநாள் போட்டி என்று கோப்பை வைக்கிறார்கள். அதில் ஒண்ணு இவன் ஜெயித்து ஒண்ணு அவன் ஜெயித்தால் மூணாம் போட்டிக்கு டிக்கெட் அபாரமாய் விற்கிறது. சூதாட்டம் எல்லாம் இருக்கிறது, என்கிறார்கள். அதுபற்றிய விவரம் அவருக்குத் தெரியாது. ஒரு பந்துக்கு இவ்வளவு, இந்தப் பந்தின் விளைவு என்ன – ஒரு ரன், நாலு, ரன்அவ்ட், அவ்ட், போல்ட் அல்லது கேட்ச் – என்று துல்லியமாய் முன்பே சொல்லி இவ்வளவு காசு கட்டினால் இவ்வளவு பரிசு. சொன்னது தப்பானால் காசு போச்சு – என்று சூதாட்டம் எல்லாம் கேள்விப்பட்டார். இதில் விளையாடற ஆள்கூடவே பேரம் பேசி சூதாடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டார். பயமாய் இருந்தது எல்லாம்… ஏ தா (ஒரு கெட்ட வார்த்தை.) இதெல்லாம் எங்க கொண்டு விடுமோ. பேசாம தெரிஞ்ச விளையாட்டு விளையாடுங்களேன், என்றிருந்தது.

பெண்டாட்டியை விட தனக்கு இதெல்லாம் தெரிகிறதில் ஒரு பெருமிதம் உண்டு. வேளைக்கு சரியாக எதையாவது சாப்பிடக் குடுத்து விடுகிறாள். அவரை அவள் பட்டினியாக விட்டதே இல்லை. பசி தெரியாமலேயே இத்தனை வருடம் ஓடிவிட்டது. கண் சுமார் என்றாலும் கைப்பக்குவம் தளரவில்லை. மீன்குழம்பு வைத்தால் வாசம் வீட்டைத் தூக்கும். ஒரு கல் உப்பு கூடாது, குறையாது. சில ஆட்கள் என்ன யோசனைன்னாலும் தன்னைப்போல வீடு வந்து சேர்ந்துருவான், அதைப்போல…

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்த் தொடர். இந்தியா ஸ்ரீ லங்கா. ஒண்ணு நாம ஜெயித்து, ஆகான்னு ஆசுவாசப்படுமுன் அடுத்ததை அவர்கள் லபக்கி விட்டார்கள். குப்பென்று ஆகிவிட்டது அவருக்கு. நாளை மறுநாள் மூணாவது போட்டி முக்கியமானது. தோற்றதில் அவருக்குள் குமுறலாய் இருந்தது. எத்தனை கேட்ச்தான் விடுவார்கள். டி.வியில் அதையே திரும்பத் திரும்ப போட்டுக் காட்டுகிறான். இந்தியா பூராவுமே அவனை கெட்ட வார்த்தையில் திட்டும்வரை காட்டுவான் போல. ரன் அவ்ட், ஸ்டம்புக்கு அடிக்கிறான்னு பார்த்தால், ஃபாலோ த்ரு இல்லை. (வர்ணனையாளர் சொன்ன வார்த்தை.) பந்து இப்படி ஓடி நான்கு அதிகப்படி ரன்கள்… சச்சின் விளையாடுவான் என்று பார்த்தால் பந்தைக் கைவிரலில் வாங்கிக் கொண்டு உஸ் என்று உதறினான். அவன்ஆட்டம் முடிந்து அடுத்தாள் ஆடுகையில் அவனை பெவிலியனில் (வர்ணனையாளர் வார்த்தை.) காட்டினார்கள். தவில் வித்வான் போல கையில் தொப்பி. சர்த்தான், அடுத்த போட்டிக்கு விளையாட மாட்டான் என்றிருந்தது….

ஆட்ட சுவாரஸ்யத்தில் கிருஷ்ணவேணியை மறந்திருந்தார். லேசா நெஞ்சு வலி என்றிருந்தாள். சுக்குத்தண்ணி வைத்து அவளே எதோ கை வைத்தியம் போலப் பண்ணிக் கொண்டு நிலைப்படி யருகே படுத்திருந்தாள். வெளியே சீதோஷ்ணநிலையே அத்தனை சரியில்லை.

கடைசி ஓவர். ஆறு பந்து – பத்து ரன்கள். ரெண்டு விக்கெட் – எடுக்க மாட்டார்கள். எடுக்கக் கூடாது. இந்தியா வெற்றி பெற வேண்டும்… என்று படபடப்பாய் இருந்தது. ரொம்ப மோசமான விஷயம்தான். அவருக்கே தெரிந்தது. நம்ம ஆட்கள் அடி விளாசினால் கைதட்டத் தோணுகிறது. எதிரி அடிக்க ஆரம்பித்தால் பலூனில் காத்து போனாப் போல பொங்கும் பால் அடங்கி விடுகிறது… ஒரு நாலு, மோசமான ஃபீல்டிங்கினால் விட்டதுமே, தெரு பூராவிலிருந்தும் ஹ§வென்று சத்தம். கால் கப்பைக்குள் புகுந்து பந்து எல்லைக்கோட்டைக் கடந்துவிட்டது… கிழவி ம் என முனகினாள். அவளுக்குக் காது கேட்காது… தோற்ற அலுப்புடன் அவளிடம் வந்தார்.

”என்னடி பண்றது?”

”ம்”

”உடம்பு சரில்லியா?”

”ம்ம்”

”டாக்டராண்ட போவமா…”

”ம்ம்”

அவர் எதுவும் கேட்கவில்லை. அப்பவும் அவள் ம்ம் என்றாள்… பேச முடியாத உச்ச வலியாய் இருக்கலாம். எப்படி வந்தது தெரியவில்லை. பக்கத்து வீட்டில் போய் அந்தப் பையனைக் கூப்பிட்டார். சிரித்தபடி ”அந்த ஃபோர் – விட்டதுதான்…” என்றான். ”கொஞ்சம் ஆட்டோ கூட்டிட்டு வரியா,” என்றார்…

அவள் செத்துப் போனாள். ஒருவேளை அந்த ஃபோரை விட்டிருக்கா விட்டால் பிழைத்திருப்பாளோ, என நினைத்துக் கொண்டார். சே எனக்குப் பைத்தியம்!

கடைசியாய் அந்த நர்சிடம் எதோ பேச நினைத்தாள் கிருண்ணவேணி. கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்கிறாளா, என்றிருந்தது.

பிள்ளைகள் உடனே விமானம், கால்டாக்சி என்று வந்து இறங்கிவிட்டார்கள். எல்லாரும் காசுக்கார ஆட்கள்தான். பெத்தவர்கள்தான் ஏழைகள் இந்தக் காலத்தில். பிள்ளைகள் நல்ல வசதியோடுதான் வாழ்கிறார்கள்…

என்ன செய்ய என்று திகைப்பாய் இருந்தது. யாருடனாவது இனி அடைய வேண்டும். துக்கத்தை விட திகில் அதிகம் உள்ளாடினாப் போலிருந்தது… யாரோடும் பெரிதாய்க் கலந்துகொள்ளவில்லை. ரொம்ப சௌக்கியமான சாவுதான் அவளுக்கு. வேளை வந்தது. போய்விட்டாள்… எல்லாருக்கும் வாய்க்காத சாவு… என நினைத்துக் கொண்டார்.

பரமபத சோபனம் விளையாடினாளா தெரியாது. பாம்பு கடித்ததோ, ஏணி ஏற்றியதோ கிருஷ்ணவேணி அடைந்தாள் பரமபதம்.

கிருஷ்ணவேணி காரியங்கள் முடிந்த அடுத்த நாள். பெரிய துக்கம் எல்லாம் கிடந்து உள்ளே வாட்டியது என்று சொல்ல முடியவில்லை. ஒருவேளை இந்த ஒரு நிமிடத்தை மனது எதிர்பார்த்திருந்ததோ தெரியாது. எல்லாரும், சுற்றி இத்தனைபேர் இருக்கிறதால் அதிகம் உள்ளே அதிரவில்லையோ?…

பகலிரவு ஆட்டம் தொலைக்காட்சியில் பக்கத்து வீட்டில் யாரோ போட்டிருந்தார்கள். பேரன் வந்திருந்தான். ”உனக்கு கிரிக்கெட் பிடிக்குமா,” என்று கேட்டார். மருமகளைப் பார்த்து ”குழந்தைக்கு போரடிச்சா போடு” என்று அவள் முகத்தைப் பார்த்தார். (பூனை ஞாபகம் வந்தது!)

யானை போல ஆடினான் சேவாக். என்ன வீச்சு. அவனுக்கு பந்து வீசவே எதிரணி பௌலர்கள் பயந்தார்கள். பேரன் முகத்தில் சிரிப்பு. அவருக்கும் புன்னகை. இதெல்லாம் கரணம் தப்பினால் மரணம் கேஸ். நகத்தை வெட்டறேன்னு விரலைக் கீறிக்கக் கூடாது… என நினைத்தார்.

எந்தப் போட்டியையும் சௌகர்யமாக ஜெயித்ததே இல்லை நம் மக்கள். அதேபோல கடைசிப் பந்து. ரெண்டு ரன்கள். படபடப்பு அதிகமாய் இருந்தது அவருக்கு. அட முரளிதரன்!… எப்பவும் போல அவன் மட்டையை கர்லாக்கட்டையாய்த்தான் சுத்துவான். பந்தைப் பார்க்க மாட்டான்… ஒரே வீசு வீ…

”ஊஊ…” என அழ ஆரம்பித்தார்.

·

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்