Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue


” என் அப்பா அவரது கழகப் பணத்திலிருந்து குருவி மாதிரி சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்குப் படம் எடுப்பதற்காகக் கொடுத்தார். நான் இளைய தளைபதி விஜயை வைத்துப் படம் எடுத்து ஊத்திக் கொண்டுவிட்டது. இப்போது என் அப்பா அவரது கட்சி நடத்தக்கூட பணமில்லாமல் இருக்கிறார். ஆகவே தயைகூர்ந்து இந்த மின்னஞ்சலைப் பத்து பேருக்கு அனுப்பவும். நீங்கள் பத்து பேருக்கு அனுப்பினால் எனது உறவினர்களான x-மிருந்தும், y-மிருந்தும் பத்து பைசா கிடைக்கும். என் தந்தை முதலமைச்சரானால் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கெல்லாம் அரசாங்க வேலை கொடுக்க ஆவன செய்யப்படும்.”
போன வாரம் 12 கோடி குறுஞ்செய்தியில் (SMS) காலை, மாலை வணக்கம் செய்திகள் 1 கோடி, அங்க, இங்க, மேல கீழ முத்தங்கள் 1 கோடி, சர்தார் ஜோக் 1 கோடி, செய்திகள் 0.5 கோடி, விஜய் மற்றும் குருவி படம் பற்றிய செய்திகள் 8 கோடி. முன்னணியில் குருவி… எல்லாத் தொலைபேசி நிறுவனங்களும் மகிழ்ச்சியாய்த் தங்களது நன்றியை இளைய தளபதிக்கும், குருவிக்கும் தெரிவித்துக்கொள்கின்றன. வோடபோனின் நாயின் இடத்தைக் குருவி எடுத்துக்கொண்டதாக விளம்பர நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
“அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, குருவி [விஜய்,திரிஜா நடித்த] என்கிற படத்தைப் பார்த்தபின் 30 நாட்களுக்குப் பின் இறந்தால் மட்டுமே நமது எல்லா பாலிசிகளிலிருந்தும் பணம் வரும். இறப்புக்குக் காரணம் குருவி என்று நிறுவப்பட்ட எந்தச் சந்தாதாரருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எந்தக் காரணம் கொண்டும் இழப்பீடு தர முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேற்சொன்ன படத்தைத் திரையரங்குகளில் பார்ப்பது, திருட்டு விசிடியில் பார்ப்பது, கேபிளில் பார்ப்பது போன்ற வகைகள் ‘Critical Illness’ மட்டும் தற்கொலை சார்ந்த முயற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மறுபடியும் தெரிவிக்கிறோம் “LCI of India ஜீவன் கடைசி வரைக்கும் வருவோம், குருவியில்லாமல்”
‘குருவி படம் வந்ததற்கு அப்புறம் யாரும் சிட்டுக்குருவி லேகியம் கூட வாங்கமாட்டேங்கறாங்க சாமீய்’ என்று ஒரு நாடோடி கும்பல் தமிழக முதல்வரிடம் கொடுத்த மனுவையடுத்து, அரசு செலவிலே குருவி லேகியம் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்க ஆவன செய்யப்படும் என்றும் அதை மறுபடியும் உதயநிதியே தயாரிப்பதே சாலச் சிறந்தது என்பது தனது கட்சியில் ஒருமித்த கருத்து என்றும் அவர்களுக்கு உறுதியளித்திருக்கிறார் முதல்வர். குருவிகள் தமிழக கலாசாரத்தின், திராவிட கலாச்சாரத்தின் நீண்ட நெடிய சாட்சிகள் என்றும் அதற்கேற்ப குத்துப் பாட்டு, பத்துப் பாட்டு, எட்டுத் தொகையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். அப்போது அவையே மேஜையைத் தட்டி ஆர்ப்பரித்தது. சத்தத்தில் பக்கத்து மரத்திலிருந்த சில குருவிகள் பதறி விழுந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை
‘கழுகுகள் எப்படி குருவிகளைக் காப்பாற்ற முடியும். அதுவும் அவையெல்லாம் குடும்பக் கழுகுகள்’ என்று எதிர்க் கட்சியினர் காக்காய் பிரியாணி ஏப்பம் விட்டவாறு பேசியதைக் கர்ஜித்ததாய்ச் செய்தித் தாள்கள் முழங்கின. வெயில் அதிகமானதால் திராட்சை தோட்டத்தில் எந்தக் குருவிகளும் போகவில்லை. தமிழ்க் குருவிகளை இழித்தவர்களைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று தமிழர் பறவை சங்கம் அறிக்கை விடுத்தது. ‘முரணியங்கியல் என்பது மார்க்சிச சிந்தனையின் ஊற்று என்றும் அது முதலாளித்துவ சிந்தனையோடு முரணியங்கியதால்தான் பொருளாதார வீழ்ச்சி என்றும் அதனால்தான் அடிமட்ட குடிமகன் குருவி பார்க்க முடியாமல் போனது என்றும் விளக்கம் கொடுத்தார்’ கம்யூனிச எம், எல், அ, ஆ, அஆ, ஒஓ மற்றும் தேசிய ஆகிய மொத்தபிரிவுக்க்கும் தேர்தல் நேரத்திற்குமட்டும் தலைவராகயிருக்கும் கண்ணுவரதர்.
‘குருவிகளுக்கு படம் எடுக்கக் காசு கொடுக்கும் முதல்வர், குரங்குகள், அணில்கள் பற்றிய ஆவணத்திற்கு ஏன் அரசுப் பணத்தைக் கொடுக்கவில்லை. அணில்கள், குரங்குகள்தான் ராமர் பாலம் கட்டப் பேருதவி செய்தன என்கிற வரலாற்று உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும்’ என்று தேசிய வலதுசாரி கட்சியின் வெறும் மூன்று பேர் மட்டும் பின்னால் நிற்க வினா எழுப்பியதைக் கனமலரும், ஆதவ டிவியும் மட்டுமே வெளியிட்டன. இதற்கு கண்மூடி பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு தேசியகட்சி மாங்கிரஸீம் அதனது ரோமனிய தலைவியும்தான் இதற்குப்பின்னாலான சூத்திரதாரிகள் என்று சொன்னதை கனமணி நாளேடு தலையங்கத்தில் தீட்டியிருந்தது.
முன்னாள் முன்னாள் நடிகரும், முன்னாள் அரசியல்வாதியும், தற்போதய புள்ளிவிவர அமைச்சரான Statsகாந்த் அளித்த தமிழகத்தில் எத்தனை குருவிகள் சாகின்றன, எத்தனை பிறக்கின்றன என்ற கணக்குகளை யாரும் கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு விளம்பரம் அல்லது வாய்ப்பாடு என்று எண்ணிவிட்டது தமிழகத்தின் அறிவு துரதிருஷ்டம்தான். தேவைப்பட்டால் மரங்களை மறுபடியும் குருவிகளுக்காக அழிப்போம் என்று மறந்து கூறிவிட்டு பின் நடுவோம் என்று திருத்திக்கொண்டார் அந்த அரசியல்வாதி.
குருவி தமிழ்ப் பெயரா, வினையெச்சமா, பெயரெச்சமா, வேறேதாவது எச்சமா என்கிற மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரையைத் தென்னை மொழி என்கிற வெளியிட்டவர் கூட அச்சிலேறியதைப் படிக்காத பத்திரிகையில் தமிழ்க்குறவர் என்கிற பெருமகனார் கட்டுரை தீட்டியிருந்தார். ‘பாலச்சந்தரின் மொக்கை படங்கள் ஓடின. மணிரத்தினத்தின் கொய்யோ முய்யோ இருட்டுக் கடை அல்வா படங்கள் ஓடுகின்றன. மலையாளத்தான் படம் ஓடுகிறது. நம் தமிழன் எடுத்த படம் ஓடவில்லை. ஏன்? தலைமுறை தலைமுறையாய் ஆரிய ஆதிக்கம் இதைத்தானே செய்தது. உயர்சாதிக்கார்களின் மீடியா சதியே இதற்குக் காரணம்’ என்று கைதி என்கிற நாளேடில் அறிவுப்பொதி என்கிற இனமான உணர்வாளர் நிறைய தகவல்களை அள்ளித் தெளித்து ஆராய்ச்சிக் கட்டுரையில் அலசியிருந்தார்.
குருவி என்பது அத்வைத தத்துவத்திலிருந்து வெளியே கிளம்பி, விசிட்டாத்துவைத்தில் நுழைந்து பின் தனது பிரம்ம புராண நாவலில் குறீயிடாக பயன்படுத்தப்பட்டு, காட்டில் நுழைந்து பின் நவீனத்துவ சமாதி அடைந்தது என்பதையே தனது பின் தொடரும் நிழல்களில் ஓலமிட்டிருப்பது தற்செயலான செயலல்ல என்று இந்த நூற்றாண்டில் இணையற்ற நாவலாசிரியரும் அதிகமான சர்ச்சைகளுக்கு உள்ளானதால் சர் பட்டம் பெற்றவருமான பயமோகன் என்கிற இலக்கியவாதி இணையத்தில் எழுத, கிறுக்க, ‘அவனுக்கென்ன தெரியும் அவன் ஒரு கிறுக்கு’ என்று சிற்றிலக்கிய சிறு, பெரு சீத, வாதபேந்தி அபேட்சர்கள் எழுதித் தள்ளினார்கள்.
‘குருவியின் பின்புறம் மண்டிக் கிடக்கும் மயிர்கள் தனக்கு பிரான்சு நாட்டுப் பெண்ணின் முழங்கையை ஞாபகப்படுத்துகின்றன என்றும் அதனது எச்சங்கள் பின்நவீனத்துவ பிதாமகனான சாம்யூவின் எழுத்துகளுக்கு முன்னோடியென்றும் அப்படிப்பட்ட நாட்டின் விஸ்கியைக் குடிப்பது தன்னைப் போன்ற எழுத்தர்களின் உரிமை, அதற்காக இணையத்தில் எல்லாரும் 9.99$ உடனே அனுப்புவது வாசக கடமையென்றும் அதன் மூலம் தனது அடுத்த புராஜக்டான ‘குருவியின் ராசலீலா குனிந்த டிகிரியில்’ என்கிற எழுத்துகளே இல்லாத புது நவீனத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் சொன்னது இலக்கிய வட்டத்தில் சில அலைகளை எழுப்பியது. குருவி -150 என்கிற சிறப்பிதழ் வரப் போகிறது என்கிற செய்தியே நிறைய பேருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சந்தாதாரர்களுக்கு ஐந்து வருடத்திற்கு சீட்டுக் குருவி லேகியம் குருவிசாமி புகைப்படத்தோடு அவரது ஒவ்வொரு வருட நூற்றாண்டு விழாவிலும் வெளியிடப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்படும்.
‘குருவிகள் குடும்பத்தை ஞாபகப்படுத்தும் தோற்கடிக்கப்படவேண்டிய ஜந்துகள், அவைகள் அடைக்கப்பட்ட பெண்ணினத்தின் அடையாளங்கள்தான். அவைகள் தான் தோற்று தனது தளைகளை அறுத்து அதன் மூலம் தொப்புள்கொடியை நட்டிருக்கிறது. இதிலிருந்து ஆணாதிக்க புரையோடிய சமுதாயத்தின் அவலட்சணங்களும், உடலரசியலின் யதார்த்தங்களும் வெளிவந்திருப்பது நல்லதும் கூட’ என்று எங்கல்ஸையும், நமது நாட்டின் பாதரசத்திருமேனியும் மேற்கோள் காட்டி அந்த சூடான பெண்ணியவாதி சொன்னதும் அதை தொடர்ந்து யோனி, காணி, நடுஇரவு, ஜாமம், கொங்கைகள் என்று புதுபுதுக் கவிதைத்தொகுப்புகள் வரலாயின. குருவிகள் குடும்பத்தை உடைக்கின்றன என்று சிலரும் திருமணத்தை பதிவு செய்யாமல் காமம் மட்டும் தேவைப்படும்போது வைத்துக்கொள்கின்றன என்று சிலரும் சொன்னதில் பெண்ணியவாதிகள் பிளவுபட்டதை தொடர்ந்து கொஞ்ச நாட்களிலேயே இந்த விசயம் மறத்துப்போனது.

‘நான் குருவிக்கறி அன்றைக்கு கொண்டு சென்றேன். என்னைத் தள்ளி உட்காரச் சொன்னார் என் நண்பர். கேட்டால், சனிக்கிழமை பெருமாள் விரதம் என்கிறார். இப்படி தலைமுறை தலைமுறையாய் ஒதுங்குதலும், ஒதுக்கலுமே கொண்ட பராம்பரியம் உயர் சாதியிலிருந்து தொடங்கி, இடைநிலை சாதியில் வளர்ந்து அடிமட்ட சாதிகளை ஒடுக்குகின்றன” என்றார் அந்த இலக்கிய எழுத்தாளர் புத்தக வெளியீட்டு விழாவில்.
“குருவிகள் சேரிகளுக்கு வருவதில்லை. குருவிகளின் தோல்விகள் இடைச்சாதிகளின் நிலப்புரத்துவ முறை அழிந்து, அடிமட்ட தாழ்த்தப்பட்ட இனங்களின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டும். யானைகளை நிலத்தில் அனுப்பி அழிப்போம். அதை கார்க்கிசிய கட்சிகளே முன்னின்று நடத்தின மற்ற கட்சித் தலைவர்கள் அரிதாரம் பூசிக்கொண்டிருந்த போது. ஆகவே தேசியத்தின் அழிவு ஆரம்பமாகி, இனக் குழுக்களின் இனப் பெருக்க விந்து இப்போதுதான் ஆரம்பமாகிறது. இங்கிலாந்திலும், பிரான்சிலும் கூட இப்படித்தான்.. ” என்றார் சு.கார்க்சு.

“சவிக்குமார் குருவிக் கும்பலோடு கும்மாளம் அடிக்கும் மோகம் முப்பதுநாள் இன்பத் தேநிலவுகள் அதிர்ச்சியும், வேதனையையும் அளிப்பவை. ‘குருவி கெடுத்த காளை’ என்கிற நாவலில் தமிழினமும், அடிமட்ட சாதியும் எவ்வாறு அறிவார்த்தமாய் நாம் சீரழிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கொண்டே நமது எதிரிகளை நாம் கணித்துக்கொள்ளலாம்” என்று எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் அறிக்கை மட்டுமே கொடுத்தார் ரமுனா காசேந்திரர்.
இந்தக் கும்மாளத்தில் எல்லோரும் மறந்து போன கேள்வி, “படத்திற்குப் பணம் எப்படி வந்தது?”
“அங்கிருந்து வந்தது ”
“அங்கிருந்தா..- அப்ப அங்கவிற்கு எங்கிருந்து வந்தது ”
ஹ¤ம். குருவிகள். காக்கைகள். பருந்துகள். கழுகுகள்..


mani@techopt.com

Series Navigation

மணி

மணி