G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue


G8 உச்சிமாநாடு ஜெனோவா (இத்தாலி) நகரத்தில் 20-22 சூலை அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு உலகத்தலைவர்களும் இந்த மாநாட்டு எதிர்ப்பாளர்களும் ‘உலகமயமாதலை ‘ விவாதிக்க வருகிறார்கள். G8 உச்சிமாநாடு என்றால் என்ன ? அதற்கு ஏன் எதிர்ப்பு ?

G8 மற்றும் G7 என்பது என்ன ?

G7 அல்லது ஏழுவரின் குழு என்பது தொழில்மயமான, பணக்கார ஏழு உலகநாடுகளின் கூட்டமைப்பு. இதில் அமெரிக்கா (USA), ஜப்பான், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பிரிட்டன், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் இருக்கின்றன. 1975இலிருந்து வருடாவருடம் இந்த நாட்டுத்தலைவர்கள் கூடி உலக பொருளாதாரம் பற்றி விவாதிக்கிறார்கள்.

உலகத்தின் பணக்கார நாடுகளுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு தோன்றியபோது, அது உலகத்துப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தபோது, இந்த உச்சிமாநாடுகள் ஆரம்பித்தன. இப்போதும், உலகம் பொருளாதார தடங்கல்களைச் சந்திக்கும் வேளையில், இந்த பொருளாதார சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆராய மீண்டும் சந்திக்கிறார்கள்.

ஆயினும், இந்த வருடாந்தர உச்சிமாநாடு, பலவருடங்களில், சுற்றுச்சூழல், பணச்சலவை செய்தல், உலக சுகாதாரப் பிரச்னைகளை சேர்த்து விவாதித்திருக்கிறது.

1991இல் ரஷ்யா இந்த குழுவுக்குள் பொருளாதாரமற்ற விஷயங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. 1994இல் இது நிரந்தரமாக்கப்பட்டு,G7 உச்சிமாநாடு G8 உச்சிமாநாடாக ஆனது.

இந்த தலைவர்கள் சந்திப்பு இந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளைர், ஃப்ரான்ஸ் ஜனாதிபதி ஜாக்ஸ் சிராக், ஜெர்மானிய சான்ஸலர் ஜெரார்ட் ஷ்ரோர்டர், கனடாவின் பிரதமர் ஜீன் க்ரேஷியன், இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, ஜப்பானிய பிரதமர் சுனிசிரோ கோய்சுமி, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர்கள்.

அடுத்த வருடம் இந்த சந்திப்பு கனடாவில் நடைபெறும்

இந்த சந்திப்பு சாதிக்க விரும்புவது என்ன ?

பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பது, உலகத்தின் ஏழைகளுக்கு உதவுவது போன்றவை இந்த உச்சி மாநாட்டின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், சில முக்கியமான விஷயங்களில் எல்லோரும் ஒப்பிய எண்ணம் வருவது கடினம்.

உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் எவ்வாறு உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதில் வேறுபட்டக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் வட்டிவீதத்தை குறைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. க்யோட்டோ ஒப்பந்தத்தை அமெரிக்கா மறுத்துவிட்டதால், ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவிடம் கோபமாக இருக்கிறார்கள் (அல்லது இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் பெரும்பாலான தேசங்கள் இந்த கியோட்டோ ஒப்பந்தத்தை இன்னும் கையெழுத்திடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). இந்த கியோட்டோ ஒப்பந்தம் பற்றிய விஷயங்களை விவாதிக்க இந்தக் குழு வரும் வாரம் ஜெர்மனியில் உள்ள போன் நகரத்தில் கூடும்.

ருஷ்யர்கள் அமெரிக்கா தனது ராக்கெட்டு பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்ற தொனியில் பேசிவருகிறார்கள். ஏபிஎம் என்ற ஒப்பந்தம் ராக்கெட்டுகளை உருவாக்குவதை தடைசெய்யும் ஏபிஎம் என்ற ஒப்பந்தத்தை (இது பனிப்போரின் போது அமெரிக்காவும் ருஷ்யாவும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம்) கைவிட அமெரிக்கா தயாராவது கண்டு ருஷ்யா கோபமாக இருக்கிறது.

பணச்சலவை செய்வதைப் பற்றியும், உலகளாவிய ஏமாற்றுவேலைகளைத் தடுப்பதிலும், எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய சுகாதார அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றியும், ஏழை நாடுகளில் குறைந்த விலையில் எய்ட்ஸ் மருந்துகளை வினியோகம் செய்வது பற்றியும் பேசுவதில் ஏதேனும் ஒப்பந்தங்கள் வரலாம்.

யார் எப்போது இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் ?

வெள்ளிக்கிழமை இந்தத்தலைவர்கள் மதியச் சாப்பாட்டு நேரத்துக்கு இத்தாலியின் ஜெனோவா நகரத்தில் கூடுகிறார்கள். உலக வியாபாரம், உலக பொருளாதாரம் பற்றிய எதிர்பார்ப்புகள், உலக பண நிறுவனங்களை (உலகவங்கி, ஐ எம் எஃப் ஆகியவை) சீர்திருத்துவது போன்றவற்றை விவாதிக்கப் போகிறார்கள்.

மாலையில், ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் (தென்னாப்பிரிக்கா, மாலி தேச தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்), உலக சுகாதார நிறுவனம், உலக உணவு விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றவற்றின் தலைவர்கள் ஆகியோர் பேசப் போகிறார்கள். டிபி, மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்த 10 கோடி டாலர் கொண்ட உலக சுகாதார அமைப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறார்கள்.

சனிக்கிழமை, இந்தத் தலைவர்கள், ஏழ்மைகுறைப்பையும், சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பற்றியும் பேசப்போகிறார்கள். சனிக்கிழமை ருஷ்ய ஜனாதிபதி புடின் மதியச் சாப்பாட்டுக்கு இணைகிறார்.

தனித்தனியாக இந்தத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்காக, மதியத்துக்கு அப்புறம் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உச்சிமாநாட்டின் எதிர்ப்பாளர்கள் என்ன கோருகிறார்கள் ?

G8 போன்ற உச்சிமாநாட்டுகள் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமானவை. ஏனெனில் உலகத்தின் பணக்கார நாடுகள் இணைந்து எடுக்கும் முடிவுகள், வாயற்ற உலகத்தின் எல்லா மக்களையும் வெகுவாகப் பாதிக்கின்றன என்று கருதுகிறார்கள்.

உலகத்தின் ஏழை நாடுகளுக்கு இருக்கும் கடனை குறைக்க எந்த வழியிலும் இந்த G8 உச்சிமாநாடு உதவப்போவதில்லை என்ற ஏமாற்றமும் பரவலாக இருக்கிறது.

வியாபார சம்பந்தமாக இந்த G8 நாடுகள் எடுக்கும் முடிவுகள், ஏழை நாடுகளை தங்களது சந்தைகளை வெளிநாட்டு பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு திறந்து விடவும், சுதந்திர வியாபார பேச்சுக்களை முடுக்கி விடவும், செய்வதில், ஏழை நாடுகள் இன்னும் ஏழையாகும் எனவும் விவாதம் நடக்கிறது.

அமெரிக்கா தட்பவெப்ப மாறுதலை தடுக்க ஏற்பட்ட கியோட்டோ ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதால், பணக்கார நாடுகள் செய்த சுற்றுச்சூழல் சேதத்துக்கான பொறுப்பை ஏழை நாடுகள் மீது சுமத்த முயலுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

ஆயினும், இந்த எதிர்ப்பாளர்கள், பலதரப்பட்ட கொள்கைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பசுமையை முன்னிருத்தும் சுற்றுச்சூழல் இயக்கத்தினரிலிருந்து, ஏழைநாடுகளின் கடனை பணக்கார நாடுகள் மறந்துவிட வேண்டும் எனச் சொல்கிறவர்களிலிருந்து, தீவிரவாத கம்யூனிஸ்ட்களிலிருந்து, குழப்பத்தையே எதிர்க்காலமென முன்னிருத்தும் குழப்பவாதிகள் anarchists வரை ஏராளமான விதவிதமான கொள்கையாளர்கள் இந்த எதிர்ப்பில் பங்கு கொள்கிறார்கள்

இதுவரை நடந்த G8 உச்சிமாநாடுகள் சாதித்தது என்ன ?

முதல் உச்சிமாநாடுகள் பெரும்பாலும் பொருளாதார கொள்கைகளையே பற்றிப் பேசின. முக்கியமாக 1970இல் இருந்த நிரந்தர பணமாற்று விகிதத்தை மாற்றி, இன்று இருக்கும், தினமும் மாறும் பணமாற்று வீதமாக மாற்றின.

1980களில், G7 உச்சிமாநாடுகள்ப்ளாசா மற்றும் லோவேர் ஒப்பந்தங்களை நிறைவேற்றி, அமெரிக்க டாலர் விலை ஏறிக்கொண்டே போவதை தடுத்து நிறுத்தி, உலக வளர்ச்சிக்கு உதவும் படி டாலரின் மதிப்பை சமப்படுத்தின.

சமீபத்தில், G8 உச்சிமாநாடுகள் உலகளாவிய பயங்கரவாதம், ருஷ்யாவுக்கு பண உதவி, முன்பு சோவியத் யூனியனின் இருந்து பின்னர் விலகிய மற்ற நாடுகளுக்கு பண உதவி, ஏழை நாடுகளின் கடனை குறைத்தல் போன்றவற்றை செய்தன. இவை கோலோன் நகரத்தில் 1999இலும், 2000 ஆண்டில் பல எதிர்ப்புப் பேரணிகளாலும் எழுதப்பட்டன.

மக்கள் எதிர்ப்பை எவ்வாறு தலைவர்கள் எதிர்கொள்கிறார்கள் ?


சுமார் 100000 மக்கள் ஜொனோவா நகரத்தில் கூடி இந்த எதிர்ப்புப் பேரணியை நடத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. போலீஸ் இந்த நகரத்தை மூடிவிட்டார்கள். விமான தளம் மூடப்பட்டிருக்கிறது. இதனையும் தாண்டி, தலைவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக கப்பல்களில் உட்கார்ந்து பேசுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறார்கள். போலீசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த தகராறில் ஒரு எதிர்ப்பாளர் உயிரிழந்தார். பலர் காயமுற்றார்கள். இறந்தவரை படத்தில் காண்கிறீர்கள்.

Series Navigation

செய்தி

செய்தி