கடிதம்

This entry is part of 36 in the series 20060811_Issue

பரி


தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி> என்ற தலைப்பில் திண்ணையில் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது. “தமிழிசை என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் வெறும் போலி” என்பதுதான் கட்டுரையின் அடிநாதம். அதற்கு அதன் ஆசிரியர் வைக்கும் வாதங்கள், தமிழர்களின் இசையறிவு பற்றிய அவரின் கண்டுபிடிப்பு கொஞ்சம் நெளிய வைக்கிறது.

இந்தப் பத்தியைப் படிக்கும் எவருக்குமே முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் இருக்கும் முரணை எளிதில் கண்டுகொள்ளலாம்.

மேற்கோள்:
“முதலில் தமிழ் இசை என்பதே ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். தமிழ் இசை என்று எதுவுமே இல்லை. ஆமாம், தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. தமிழர்கள் பாவிக்கும் இசை இருக்கிறது. தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை
மரபு இருக்கிறது.”

தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை மரபு இருக்கிறது, ஆனால் தமிழிசை என்று ஒன்று தனியாக இல்லை. “மரபு” என்ற ஒரு வார்த்தையை வைத்து அடுத்த வாக்கியம். நான் ஒரு இசை ஞானசூனியம். எனவே இந்த வார்த்தை விளையாட்டு
புரியவில்லை.

மேற்கத்திய இசை நாடகங்கள்(Opera), பாகிஸ்தான் இந்துஸ்தானி என்று ஒரு சுற்று போய்விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார். பிரச்சினை என்னவென்றால், அவர் கிளம்பியது டிசம்பர் மாத கச்சேரி மேடையிலிருந்து. திரும்ப நுழைவது கோடம்பாக்கத்தில்.

என்னையும் சேர்த்து பெரும்பாலான தமிழர்களுக்கு இசை என்றால் அது திரை இசைதான். திரை இசைய ரசிக்க அறிவுக்கூர்மையும் நுண்ணுணர்வும் அவசியம் இல்லை.

“தமிழ்ப் பாடலைப் பாடாதே என்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்?” என்று கேட்கிறார். “தமிழர்கள்” பேணி வளர்த்த டிசம்பர் மாத “மரபு”க் கச்சேரிகளில் எத்தனை சதவீதம் தமிழ் இடம்பெறுகிறது என்று அவருக்கே தெரியும்.

பிரபல இசை(pop)க்கும் மரபிசைக்கும் தனித்தனி இரசிகர்கள் உண்டு. இது உலகம் முழுவதும் பொதுதான். மரபிசையை இரசிக்க அதுபற்றிய அறிவு கொஞ்சமாவது வேண்டும். அது கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, சிம்ஃபொனி இசையாக இருந்தாலும் சரி. பெரும்பாலான தமிழர்கள் இரசிப்பது பிரபல இசையைத்தான். இதைக் கண்டுபிடிக்க ஆசிரியர் உலகம் சுற்றியிருக்கத் தேவையில்லை.

கொசுறு: Nothing but wind-க்கு “காற்றைத் தவிர வேறில்லை” என்பது நல்ல தமிழாக்கம்.

-பரி (parimels (at) gmail.com )

Series Navigation