கடிதம்

This entry is part of 43 in the series 20060602_Issue

ரெ.கா.


இரா.மு.வின் எடின்பரோ குறிப்புகளில் கவிஞர் சந்திப்பு அங்கமும் அதை அவர் சொல்லியிருந்த விதமும் மிக அழகு. ப்ரையன் ஜோன்ஸ்டனின் அவரின் அப்பா பற்றிய கவிதையும் மிக அருமையாக இருந்தது. பார்க்கும்போது தமிழில் வரும் நவீன கவிதைகள் இந்தக் கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சிறப்புள்ளவை என்றும் தோன்றுகிறது. தமிழ் நவீன கவிதைகளை நாம் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஏதாகிலும் அங்கீகாரம் வருமா? வைரமுத்துவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்ன எதிர்வினை பெற்றன என்பது பற்றி ஒரு தகவலும் தெரியவில்லையே!
மனுஷ்யபுத்திரன் அண்மையில் மலேசியா வந்திருந்தார். அவருக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணமாம். ஒரு கலந்துரையாடலில் ஏன் தமிழ் நவீன கவிதையில் இவ்வளவு இருணமை படிந்து கிடக்கிறது என்று கேட்டேன். தமிழ் நவீன கவிதை உருவான ந.பிச்சமூர்த்தி காலத்தில் இந்திய அரசியலில் படிந்திருந்த இருள்தான் அது; இன்னும் அகலவில்லை என்றார்.
சரிதான். “இருளில் வாங்கினோம்; இன்னும் விடியவே இல்லை” என்ற கதைதானோ?

“இங்கேயும் கவிஞர் சந்திப்பு உண்டு. நம்ம பக்கம் போல் போஸ்ட் கார்டில் ‘வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டாங்கிப்பட்டியில் கவிஞர் கூடல் நடக்கிறது. தவறாமல் வந்து சேரவும்’ என்று அழைப்பு அனுப்பி, கிடைத்த பெண் கவிஞர்களை அரண்டு மிரண்டு அந்தாண்டை ஓடிப்போக வைக்கிற சமாச்சாரம் இல்லை இது.
மூன்று மாதம் முன்னால் முறையாக அறிவிக்கப்பட்டு, ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.
எங்கேயும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆஜராகிற முப்பது சில்லரை பேர்தான் இங்கேயும். அடுத்த தடவை சப்ஜாடாக முப்பது ஜோல்னாப்பை சென்னை காதி கிராமயோக் பவனில் வாங்கி வந்து இவர்கள் எல்லோருக்கும் அன்பளித்து ஒரு high-brow இலக்கிய ரசனை அட்மாஸ்பியரை உருவாக்க மனதில் முடிச்சு போட்டுக் கொண்டானது.
ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர் – நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான John Burnside கலந்து கொண்டு கவிதை வாசித்தார். அண்மையில் வெளியாகிப் பரவலாகப் பேசப்படும் அவருடைய சுயசரிதப் படைப்பான ‘Lying about my father’ பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஸ்காட்லாந்தின் தனி மனித – சமூக வாழ்க்கையில் ஊடும் பாவுமாகப் பின்னிப் பிணைந்த குடிப்பழக்கத்தைப் பற்றி, அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் குடும்ப உறவுகளைப் புறக்கணித்த தன் அப்பா பற்றி, அவரைத் தீர்த்துக்கட்டத் தெருமுனையில் கத்தியோடு ஒளிந்திருந்த தன் பனிரெண்டு வயதுக் கொலைவெறி பற்றி எல்லாம் சிறப்பாக ஜான் பர்ன்சைட் எழுதியிருப்பதாக விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டுகிற புத்தகம் இது.
ஜான் கவிதை வாசிப்புக்கு முன்னுரையாக தாட்டியான ஒரு அம்மையார் மெய்சிலிர்த்த நிலையில் பேசினார் – ‘இந்த நாள் நமக்கெல்லாம் மறக்க முடியாத தினம்; இன்றைக்கு உலகில் சுவாசித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களிலேயே தலைசிறந்த ஜான் இங்கே நம்மோடு இருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற கவிதைகளை அவருடைய சொந்தக் குரலில் வாசிக்கிறார். கனவா நினைவா இது?’ என்று plattitude-களைத் தொடர்ந்து தட்டி விட்டபடி இருக்க, ஜான் கொஞ்சம் கூச்சத்தோடு கவிதை வாசித்தார். அவர் முடித்த பின்னும் இந்தக் காக்கைத் தம்புராட்டி அவருக்கு ஆயிரத்தெட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை செய்யத் தவறவில்லை. எல்லா ஊரிலும் கவிஞர்களுக்குச் சாபம் காக்கைகள் தான்.
ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் Brian Johnstone கவிதை வாசிக்க எழுந்தபோது முப்பது பேரில் பத்து பேர் பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள்.
பர்ன்சைடை விடக் கம்பீரமான குரல் ப்ரையனுக்கு. வயதும் அதிகம். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.
இது போன்ற சமயங்களில்
கண்ணாடிக்குள் இருந்து
என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.
இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,
கண்ணாடிக்குள் தட்டுப்படும்
என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.
என் முகத்தில் வளர்ந்த
அவர் தாடி ரோமத்தை மழிக்கிறேன்.
அவர் நடையை நடக்கிறேன்.
அவருடைய வேகத்தில் ஓடுகிறேன்.
அவருடைய நிர்வாணம்
பருத்துக்கொண்டிருக்கும் என் உடம்பை உலுக்குகிறது.
மற்றவர்களும்கூட அவரை என்னில் பார்க்கிறார்கள்
புகைப்படங்களில், தெறித்து நகரும் பார்வையில்,
உள்கண் மெல்லத் திரும்பும்போது
என் கூடவரும் பயணியாக.
அவருடைய எதிரொலிகள்
உண்மையானவை என்ற மரியாதையோடு
அந்தக் கையைப் பற்றுகிறேன்.
நான் புரிந்துகொள்ளாமல்
சண்டை போட்ட அவருடைய ஆவியை
என்னுள் வாங்கிக்கொள்கிறேன்.
ப்ரையன் ஜான்ஸ்டோனிடம் பேசிக்கொண்டிருக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்னிந்திய எழுத்தாளன் என்றதும் தமிழ் தானே, கிரேக்க மொழியை விடப் பழையது இல்லையா, அதில் எழுத நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றார். எழுத்து, தொழில் பற்றி ஆர்வமாக விசாரித்தார். மறு விசாரிப்பில் அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்தது.
The Lizard Silence என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப்போட்டு …”

ரெ.கா.
karthi@streamyx.com.

Series Navigation