கடிதம்

This entry is part of 48 in the series 20060519_Issue

இப்னு பஷீர்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

ஹெச்.ஜி. ரசூலின் ‘அல்லாவும் வகாபும்’ என்ற கட்டுரையை படித்தபோது வியப்பு மேலிட்டது. அதைப் படிக்க நேர்ந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார், “ஒரு முஸ்லிமின் எழுத்து நடைபோலவே தெரியவில்லையே!”

ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.’

இதை ஹெச்.ஜி.ரசூல் பொருள் உணர்ந்துதான் சொன்னாரா? அல்லது இந்த அடிப்படைகூட தெரியாத ஒரு ‘முகமதிய’ பெயர் தாங்கியாக மட்டுமே அவர் இருக்கிறாரா என்பது அவருக்கும் அவரது ‘ரஸூலுக்கும்’ மட்டுமே தெரிந்த விஷயம்!

வஹ்ஹாப் என்பது இறைவனின் பெயர்களுள் ஒன்று.
அப்துல் வஹ்ஹாப் என்பதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள்.

இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும்.

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!

இப்னு பஷீர்
ibnubasheer@gmail.com

Series Navigation