கடிதம்

This entry is part of 39 in the series 20060512_Issue

ஜடாயு


அன்புள்ள ஆசிரியருக்கு,

சமீப காலமாக ‘திண்ணை’யில் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பகுதிகள் தேவைக்கு அதிகமான அளவு வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் திண்ணை வாசகர்கள் இவர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள்? எத்தனை பேர் இந்த விஷயங்களோடு தொடர்புடையவர்கள் அல்லது இவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்?? திண்ணை ஆசிரியர் குழு இதை எண்ணிப் பார்க்க வேண்டும். உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதம் பாரதம் உட்பட பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தான் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இஸ்லாம் முற்றும் அதைப் பின்பற்றுபவர்களது வழிமுறைகள் பற்றி மண்டையை உடைத்துக் கொண்டு ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதே அன்றி, அறிவு அல்லது ஆன்மீகத் தேடலுக்காகவோ அல்லது இலக்கிய, சமூக, சமய நோக்கிலோ இஸ்லாம் பற்றிய விவாதங்களும் விமரிசனங்களும் நடைபெறுவதும் இல்லை, அதற்கான சாத்தியங்களை சிறிதும் சகிப்புத்தன்மையற்ற இஸ்லாமியக் குழுக்கள் (‘அறிவு ஜீவிகள்’ உட்பட) உருவாக்கவும் இல்லை. கார்டூன் வரைந்தவன் கழுத்துக்கே கத்தி வரும் கதியில் தான் இஸ்லாம் பற்றிய கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன.

இந்நிலையில், திண்ணையில் வெளியாகும் இஸ்லாம் பற்றிய எல்லா சமாசாரங்களும், பிரசார நோக்கிலேயே எழுதப்படுகின்றன. தீவிரவாத்தை நியாயப் படுத்துதல், எல்லா விமரிசனங்களுக்கும் ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் – ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்? சில மதவெறிக் குழுக்கள் தங்களது கருத்துக்களைப் பரப்பிட திண்ணையைப் பயன்படுத்துகின்றனவோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. திண்ணை ஆசிரியர் குழு இதனைப் பரிசீலித்து , பெரும்பாலான தமிழ் அன்பர்களுக்கும் தேவையான, பயனுள்ள, சுவை கூட்டுகின்ற விஷயங்களையே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

Series Navigation