கடிதம்

This entry is part of 57 in the series 20060317_Issue

ரமேஷ்கிருஷ்ணன்


அன்புடையீர்

வணக்கம். ஒரு மூத்த எழுத்தாளர் என்கிற வகையில் தம் எழுத்துலக அனுபவங்களையும் பத்திரிகையாளர் என்கிற வகையில் சமூக அனுபவங்களையும் இக்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் கொடுக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் அல்லது நம்பிக்கையில் திண்ணை கொடுத்த இடத்தில் மலர்மன்னன் தன் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் இதுவரை தொடர்ந்து முன்வைக்க முயற்சிசெய்தபடி இருப்பது ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைபாடுகளைமட்டுமே. துரதிருஷ்டவசமாக, தேன் தடவிய நஞ்சு வார்த்தைகள் நிரம்பியவையாகவே அவரது எழுத்துகள் இதுவரை வெளிப்பட்டுள்ளன. வம்புகளையும் மோதல்களையும் ஞாபகப்படுத்திச் சொல்வதையே ஆதார குணமாகக் கொண்டுள்ளன. பாடங்கள் சொல்லத்தர மறந்த செய்திகளையெல்லாம் சொல்லித்தருவதாக இவற்றைப்பற்றி பல இளைஞர்கள் தகவலனுப்புவதாகக் குறிப்பிடுகிறார். பழிவாங்கும் உணர்ச்சியை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை. பல சமயங்களில் குடும்பங்களில்கூட சொல்லித்தருவதில்லை. பழிவாங்குதலை ஒரு வழிமுறையாகத் தொடங்கிவிட்டால் ஆயிரம் காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு தரப்பும் தொடைதட்டிக் குதிக்கத் தொடங்கலாம். மகாபாரதக் கதையின் ஒரு துளி சாரத்தைக்கூட நம் இதயம் உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றால் அந்தக் கதையையெல்லாம் தலைமுறைதலைமுறையாக எதற்காகப் படித்துக்கொண்டிருக்கிறோம் ? வெறுமனே பொழுதைப் போக்கவா ?

முதலில் நேருவை எவ்விதமான காரியங்களுக்கும் பயனில்லாதவர் என்கிற குற்றச்சாட்டை வைத்து தர்க்கத்தைத் தொடங்கினார். அடுத்து பட்டேல் போன்றவர்கள் நெஞ்சில் உரம் மிக்கவர்கள் என்று முழங்கினார். அதற்கடுத்து காந்தியடிகள் கொல்லப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னார். பிறகு கோட்ஸேக்கு தியாகிப்பட்டமும் கொடுத்தாயிற்று. இப்படி வளர்ந்து வளர்ந்து இப்போது காந்தியடிகளை மகாத்மா என்றெல்லாம் சொல்வது மிகப்பெரிய வார்த்தையாகிவிடும், அவர் சாதாரணமான மனிதர் தான் என்று சொல்கிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் வார்த்தை ஜாலங்கள் அவருக்கு அழகாக உதவி செய்கின்றன. நாட்டுமக்களின் நெஞ்சில் அன்பை விதைத்தவர்களையெல்லாம் கையாலாகாதவர்களாகவும் ஒற்றுமையை உணர்த்தியவர்களையெல்லாம் துணிச்சல் அற்றவர்களாகவும் மிகவும் தந்திரமாகத் திரித்துக்காட்டுகிறார்.

சரித்திரத்தை தன் சொந்த அறிவை மூலதனமாகக்கொண்டு அறிய முற்பட விரும்பாதவர்களுக்கும் சாதியைவிட மதத்தைவிட வாழ்வுநெறிகளின்மீதும் மனத்துாய்மையின்மீதும் நம்பிக்கைகொள்ள விரும்பாதவர்களுக்கும் இவர் வார்த்தைகள் வழிகாட்டும் விளக்கங்களாகப் படலாம். அப்படித்தான் படுகிறதுபோலும். அதனால்தான் அவருடைய அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது போலும். கற்பகவிநாயகமும் சுந்தரமூர்த்தியும் வீணாக மாரடித்துக்கொள்கிறார்கள்.

நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் இந்த இடத்தில் கேட்க விரும்புகிறேன். மலர்மன்னனை அல்ல. எனக்கு அவரோடு விவாதிக்க விருப்பமும் இல்லை. போதிய அவகாசமும் இல்லை. பத்து ஊரைச் சுற்றி பத்துப்பேரைப் பார்த்தால்தான் மாதச் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்கமுடிகிற நிலை. எனக்குக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தைக் கழிக்கப் பயனுள்ள வழிகள் பல உள்ளன. நான் கேட்க விரும்புவது பெரியவர் வெங்கட்.சாமிநாதனிடமும் எழுத்தாளர் கோபால் ராஜாராமனிடமும். ஆச்சரியப்படவேண்டாம். மலர்மன்னன் பல இடங்களில் இந்த இரண்டு முக்கியஸ்தர்களின் பேர்களையும் திரும்பத்திரும்பச் சொல்கிறார். அதனால்தான் இவர்களைக் கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்திலும் வெறுப்பையும் நஞ்சையும் பகைமையுணர்ச்சியையும் கலந்துகலந்து வடிக்கும் இத்தகு படைப்புகள் எழுதப்படவேண்டும் என்பதும் அது இந்தத் தலைமுறையினரால் படிக்கப்படவேண்டும் என்பதுதான் அவரை எழுதத்தூண்டுவதற்கு முன்பு உங்கள் விருப்பமாக இருந்ததா ? நீங்கள் காலமெல்லாம் மேலான ரசனை மேலான ரசனை என்று வலியுறுத்திச் சொன்ன ரசனையின் தடத்தை இப்படைப்பில் காண்கிறீர்களா ? இவையே என் கேள்விகள். விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

இப்படிக்கு

ரமேஷ்கிருஷ்ணன்

15.03.06

rameshkrishnan1970@yahoo.co.in

( மலர் மன்னனை மட்டுமல்ல, மலர் மன்னனுக்கு நேர் எதிரான கருத்துகள் கொண்டவர்களையும் எழுதுமாறு திண்ணை கேட்டுக் கொண்டுள்ளது என்பதை திண்ணை பக்கங்களைக் கொண்டே அறியலாம். – திண்ணை குழு )

Series Navigation