கடிதம்

This entry is part of 29 in the series 20060303_Issue

மு சுந்தரமூர்த்தி


இன்னொரு காசி யாத்திரை

நிஜமாகவே காசி யாத்திரை சென்று வந்துள்ள மலர் மன்னன் இப்போது காசி யாத்திரை போகும் மாப்பிள்ளைப் போல முறுக்கிக்கொண்டு போய்விட்டார். பெண்வீட்டார் கணக்காக திண்ணை ஆசிரியர் குழு முதற்கொண்டு ‘உண்மைகளை மட்டும் அறிய விரும்பும் ‘ ஆவல் கொண்ட வாசகர்கள் வரை அவரை தடுத்தாட்கொள்ள முனைவது திருமணச் சடங்கு போலவே நல்ல நகைச்சுவையாக இருக்கி றது.

மலர் மன்னனை திண்ணையில் எழுதவேண்டும் என்று அழைத்து வந்தவர் திண்ணையின் முதன்மை ஆசிரியர் கோ. ராஜாராம். வாழ்த்தி வரவேற்றவர் திண்ணையில் தொடர்ந்து பங்களிக்கும் பி.கே. சிவகுமார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தைப் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு எழுதப்பட்ட ஓர் எதிர்வினையைத் தவிர, அவரை எழுதப் பணித்த ராஜாராமோ, குதூகலத்துடன் வரவேற்ற பி.கே. சிவகுமாரோ இதுவரை வேறெதுவும் சொன்னதில்லை. நாதுராம் கோட்சே மஹாத்மா காந்தியைக் கொலை செய்ததை நியாயப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைக்காவது காங்கிரஸ் இயக்கத் தின் மீதும், காந்தியின் மீதும் பற்று வைத்த தேசியவாதியான பி.கே.சிவகுமாரிடம் இருந்து கடுமையான எதிர்வினை வரும் என்று நினைத்திருந்தேன். ஒரு சிறு முணுமுணுப்பைக்கூட வெளியிடவில்லை என்பது ஏமாற்றமாகத் தான் இருந்தது. மலர் மன்னனின் குறிப்பிட்ட கட்டுரையை அவருடைய நண்பர் ஒருவர் வலைப்பதிவிலும் வெளியிட்டிருந்தார். வலைப்பதிவுகளிலும் தேசியவாதம் பேசும் எவரிடமிருந்தும் எதிர்வினை வரவில்லை. குறிப்பிடும்படியான எதிர்வினைகள் வந்தது பெரியார் ஆதரவாளர்கள் சிலரிடமிருந்தும், இஸ்லாமியர்களிடமிருந்து மட்டும் தான். இப்போது காந்தியின் தேவையும், அக்கறையும் இஸ்லாமியர்களுக்கும், பெரியார் ஆதரவாளர்களுக்கு இருக்கும் அளவுக்கு கூட சிவகுமார் உள்ளிட்ட தேசியவாதிகளுக்கு இல்லை என்பது ஆச்சரியம் தான். சிவகுமாரைக் குறிப்பிட்டு எழுதக் காரணம், பெரியார் பற்றி எழுதச்சொல்லி பெரியார் ஆதரவாளர்கள் கேட்கவேண்டியதை தான் கேட்கவேண்டியிருப்பதாக மலர் மன்னன் எழுத வந்தபோது எழுதியவர். பெரியாருக்காக பரிந்து பேசும் அவருடைய ஆதரவாளரல்லாத தேசியவாதியான ஒருவர், காந்திக்காக பரிந்து வாய்திறக்காதது ஏன் என்பது புரியவில்லை. பெரியார் பற்றிக்கேட்டு மலர் மன்னனின் வாயைக் கிளறினால் வெளியே வந்து விழுவது என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து பெரியார் ஆதரவாளர்கள் கேட்காமலிருந்திருக்கலாம். ஆனால் சிவகுமார் ரொம்ப அக்கறையோடு கேட்டார். மலர் மன்னனும் நன்றாகவே அர்ச்சனையை செய்தார்.

எது எப்படியோ, மலர் மன்னன் கோபம் தணிந்து மீண்டும் தனக்குத் தெரிந்த எல்லா ‘உண்மை ‘களையும், ‘வரலாற்றை ‘யும் தொடர்ந்து எழுதினால் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராமும், கடந்த இதழில் நொந்துபோய் கடிதம் எழுதியுள்ள தேசபக்தியின் குத்தகைக்காரர்களும், சிவகுமார் போன்ற காங்கிரஸ் தேசியவாதிகளும் அனைவருமே மகிழ்ச்சியடைவார்கள். கற்பகவிநாயகத்தையும், இன்னபிற ஈவேரா ஆதரவு தேசவிரோதிகளையும் விட்டுத்தள்ளுங்கள். அவர்களுக்கு தர்ம அடி போட திண்ணை ஆசிரியர் குழுவிலிருந்து இன்னும் கடிதம் எழுதாத திண்ணை வாசகர் வரை ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் திருப்பணியைத் தொடருங்கள். இப்போதைக்கு உங்களை விட்டால் இப்பணியைச் செய்ய வேறு யாருமில்லை. இனிமேல் உங்கள் மேல் அடி விழாதவாறு திண்ணை ஆசிரியர் குழுவினர் பார்த்துக்கொள்வார்கள்.

மு. சுந்தரமூர்த்தி

msundaramoorthy@bellsouth.net

Series Navigation