கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is part of 39 in the series 20050203_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

என் கடிதங்களையும் கட்டுரைகளையும் கவனத்துடன் படிப்பவர்கள் ‘பிராமண ஜாதியினருக்கு மட்டுமான ஒரு மடமாகத்தான் சங்கர மடம் நீடிக்க வேண்டும் என்று ஜோதிர்லதா கிரிஜா விரும்புகிறாரா ?’ எனும் கேள்வியைக் கனவிலும் கேட்கமாட்டார்கள்! ஜாதி, மதம் தொடர்புள்ள அனைத்துக் குழுமங்களையும் சங்கங்களையும் சட்டத்துக்கு விரோதமானவை என்று அறிவிக்கவேண்டும் என்பதே நமது கோட்பாடு. எனினும் இப்படி யெல்லாம் சட்டம் இயற்றுவதை விடவும் மனிதர்களின் மனங்களில் உறைந்து போயிருக்கும் ‘ஜாதி உணர்ச்சியை’ ஒழிக்க வேண்டியதே அதனினும் தலையாயது என்பது நமது கருத்து. ‘நான் இன்ன ஜாதி’ என்கிற உணர்வும் இந்த நாட்டில் ஒருவனைவிட்டுப் போகவில்லை; ‘இவன் / இவள் இன்ன ஜாதி’ என்று பிறரைப் பற்றி நினைக்கிற நினைப்பும் போகவில்லை! இதுதான் கசப்பான உண்மை!

மதங்கள் எல்லாமே பொதுவாக மனித நேயம், அன்பு, பிறர்க்கு உதவுதல் போன்ற நல்ல்வற்றைத்தான் போதிக்கின்றன. எனவே திருந்தவேண்டியவர் மனிதரே! மனிதர்கள் திருந்தினால் எந்த மதமும் குறை கூற முடியாத அளவுக்கு இருக்கும்.

‘ஓர் இந்துவாகப் பிறந்து தொலைத்துவிட்டமைக்கு’ நாம் சலித்துக்கொண்டதாகவும் நண்பர் குறிப்பிடுகிறார். இல்லை. ‘மேட்டுக்குடி’ எனப்படும் பார்ப்பன இனத்தில் பிறந்தமை குறித்துத்தான் அவ்வாறு எழுதினோம். எந்த மதமும் இழிவானதன்று. எல்லாமே நல்லவற்றைத்தானே போதிக்கின்றன ? சில திமிர் பிடித்த மனிதர்கள் எல்லா மத நூல்களி உண்மையான தத்துவங்களைப் புறக்கணித்து இடைச்செருகல்களும், தப்பான விளக்கங்களுகும் தங்களின் (ஆண்களின்) தன்னலத்தால் செய்திருப்பதற்கு மதம் என்ன செய்யும் ? எனவே கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, பெளத்தர்களோ தங்கள் மதம் பற்றி வெட்கமுற எந்த அவசியமும் கிடையாது!

‘வக்கிரமான பார்வை என்பது ஆணாதிக்கத்தின் ஓர் அடக்குமுறைதானே ?’ என்று கேட்கிறார் நன்பர். இதற்கு என்ன செய்ய முடியும், அல்லது செய்ய வேண்டும் என்கிறார் இவர் ? வக்கிரப் பார்வை சிந்தும் கண்களையெல்லாம் பிடுங்கிப் போட்டுக்கொண்டிருக்கவா முடியும் ? அவர்கள் திருந்துகிற (!) வரையில் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா ? என்ன கேள்வி இது ?

ஜோதிர்லதா கிரிஜா

jothigirija@hotmail.com

Series Navigation