கடிதம் ஜூலை 15,2004

This entry is part of 50 in the series 20040715_Issue

இப்னு பஷீர்


எங்கெல்லாமோ தேடிப்பிடித்து நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் இஸ்லாத்தை குறை கூறுவதாகவே அமைந்துள்ளன. ஒருவேளை அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கலாம். என்ன காரணத்தினாலோ அதை நேரடியாக சொல்லாமல் ஒத்த கருத்துடைய மற்றவர்களின் கட்டுரைகளை முகமூடியாக அணிந்து கொண்டு வருகிறீர்கள் என்று தோன்றுகிறது.

பழங்கள் நிறைந்த மரத்தின் மீதுதான் கல்லடி விழும். இஸ்லாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் அதற்கு ஒரு சான்று. இந்த ‘கல்லடி’ வீரர்கள் எழுதும் கட்டுரைகளில் உண்மை இருப்பது போல உங்களுக்கு தோன்றலாம். குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதை உங்களுக்கு தெரியும் அல்லவா ? அந்த குருடர்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். பாவம், அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்! ஆனால் அது யானையின் குற்றமல்ல. இது யானையப்பற்றி முழுதாக விளங்கிக் கொண்டவர்களுக்கு தெரியும்.

உங்களின் இத்தகைய மொழிபெயர்ப்பு ‘சேவை’க்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்:

1. இஸ்லாத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவது – பதில்: இஸ்லாத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரிந்தால் அது இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளாகத்தான் இருக்கும். ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்றால் அது அந்நாட்டின் சட்டங்களின் தவறு அல்ல, அவற்றை முறையாக பின்பற்றாத குடிமக்களின் தவறே!

2. இஸ்லாத்தின் கொள்கைகளை விமரிசனம் செய்வது – பதில்: இஸ்லாத்தை பற்றி முழுதாக தெரிந்து கொண்டு பிறகு முயற்சி செய்யவும்.

3. இஸ்லாத்தை முழுதாக தெரிந்து கொள்ள முயற்சிப்பது – பதில்: இஸ்லாத்தை பற்றி நன்கு அறிந்தவர்களை அணுகவும். இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கவும். உங்கள் அபிமான கட்டுரையாளர்கள் போன்ற அரைகுறை ‘ஞானி’களிடமிருந்து நீங்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவே முடியாது.

உங்கள் மொழிபெயர்ப்பு திறமையை பயன்படுத்தி வேற்று மொழியிலுள்ள நல்ல இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வந்தாலாவது, தாய் மொழிக்கு நல்ல தொண்டு செய்த பலன் கிடைக்கும். இந்த ஆலோசனையை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation