கடிதம் ஜூன் 3,2004

This entry is part of 47 in the series 20040603_Issue

மதிவாணன்


தேர்தல் முடிவுகளும் எண்ணங்களும் என்ற சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்தேன். பின்னர் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரையையும் படித்தேன்.

முன்னதாக சின்னக்கருப்பன் மற்றும் சிலர், நா.இரா.குழலினியின் கட்டுரைகளுக்கு எழுதிய எதிர்வினைகளையும் படித்தேன். திண்ணையில் உட்கார்ந்துகொண்டு காற்றில் விஷம் பரப்பும் இந்த நபர்கள் மிகுந்த ஆபத்தானவர்கள் என்பதால் இந்த எதிர்வினை.

இவர்களின் கருத்துப்போர் ரொம்பவும் வினோதமானதாக இருக்கிறது. இவர்கள் கண்டு அச்சப்படும்ி வலுவான எதிரியாக உண்மை மட்டுமே இருக்கிறது. அதனைச் சந்திக்க நேரும்போது ஜாக்கிசான் சண்டை முறையைப் பின்பற்றி, சந்து பொந்துகளில் புகுந்து ஓடி, என்ன ஆயிற்று என்று தெரியாமலடித்து ஜகஜால வித்தை புரிகிறார்கள். இவர்களின் மான் கராத்தே பற்றி இவர்களுக்கு பயங்கர திருப்தி. மற்றொரு புறம், ரசிக மகா ஜனங்கள் கைதட்டி ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை வேறு.

எனவே, மிகச்சுருக்கமாகவும் சாரமாகவும் மட்டும் சிலச் செய்திகளை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

சின்னக்கருப்பனின் அனைத்துவிதமான விவர முன்வைப்புக்குப் பின்னும் ஒளிந்துகொண்டிருக்கும் செய்தி ஒன்றுதான். அது அவரின் கட்டுரையின் முதல் பத்தியிலேயே வந்துவிட்டது. ‘இது சோனியா காந்தி போட்ட பிச்சை என்று கருதுவது மடமை ‘ என்று அவர் விவாதத்தைத் தொடங்குகிறார். (அந்த மடமையைச் செய்தவர் முன்பத்தியில் சொல்லப்பட்ட, உண்மையான டாக்டர் பட்டம் வாங்கிய மன்மோகன!ி)

இவரின் கட்டுரையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்:

1) வெளிநாட்டவர் ஒருவர் பிரதம மந்திரி, எதிர்கட்சித் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் வகிப்பது தவறு.

2) கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது தவறு.

முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.

இன்றைய நிலைமைகளில் புலம் பெயர்வதும், வேற்று நாட்டு குடிமக்கள் ஆவதும் பெரிய அளவில் நடக்கிறது. இது ஒரு இயல்பான முன்னேற்றமான நிகழ்வாகும். அதன் காரணமாக புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்கள் ஜனநாயக்ததில் பங்கெடுப்பதும், தேர்ந்தெடுக்கப்படுவதும் நடக்கிறது. பிஜி உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பிரதான அரசு அதிகாரப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, சின்னக்குழுக்களில் எல்லைகட்டி வேறுபாடு பாராட்டிய மானுட சமூகம் உலக சமூகமாக முன்னேறுவதில் உள்ள பல்லாயிரக்கணக்கான படிகளில் ஒன்று. இதனை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

சோனியா விவகாரத்தில் உள்ள மற்றொரு சாரமான பிரச்சனை அவர் பிரதமர் ஆவதற்கு மக்கள் வாக்களித்தார்களா மற்றும் அது சட்டபூர்வம் என்பதால் ஒப்புக்கொள்ள முடியுமா என்பது.

மிக எளிமையான உண்மையை நேருக்கு நேர் பார்ப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப் பெரும் கட்சி சோனியாவை தனது தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அவ்வளவுதான் அது. அதற்கு அந்த கட்சிக்கு உரிமையிருக்கிறது.

நிச்சயமாக அதனைப் பற்றி கருத்துச் சொல்லவும் அக்கட்சியைத் தவிர்த்த மற்றவர்களுக்கு உரிமையிருக்கிறது. ஆனால், சின்னகருப்பன் மற்றும் இன்ன பிறரின் ஆட்சேபம் ஆரம்பிக்கும் முகாந்திரம் என்ன ? சொல்லும் காரணம் என்ன ? நோக்கம் என்ன ?

முகாந்திரம் சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பதுதான். எந்த நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் மற்றொரு நாட்டின் குடியாகிவிட்டால் அந்நாட்டில் அவர் எந்தப் பதவிக்கும் வருவது சாத்தியமாக இருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனெனில் அதுதான் உலகம் முன்னேறி வரும் வழி.

அவர் சொல்லும் காரணம் என்ன ?

இந்தியாவின் ரகசியங்கனை வெளிநாட்டுக்குக் கொடுத்துவிடுவார்காளாம். சரி. இதுவரையிலான அரசுகள் என்னதான் செய்திருக்கின்றன ? இந்திய ராணுவத் தளவாடத் துறையையே வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்க முயற்சி நடந்தது. நடக்கிறது. அதில் பாஜக விற்கும் பங்குண்டு. இந்திய மண்ணில் அமெரிக்க ராணுவத்தின் கால் பதிக்க இடமளித்தது யார் ? வாஜ்பாய் அரசுதான். எனவே,. இந்தியர்களாகப் பிறந்த தலைவர்கள் வெளிநாட்டவருக்கு அடிபணிய மாட்டர்கள், வெளிநாட்டவர் இந்திய ரகசியங்களை விற்றுவிடுவார்கள் என்பதெல்லாம் மூடர்களின் விருப்பமான பொய்கள். அவ்வளவுதான்.

சின்னக்கருப்பன் வகையறாக்களின் நோக்கம் என்ன ?

இந்தியர் என்று, இன்னும் சொல்லப்போனால் இந்து என்ற மாயையைக் கட்டமைக்க வேண்டும் என்பதுதான். அதுதான் மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைக்க உதவும் வலுவான திரை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்திய மக்களின் அடிப்படையான பிரச்சனை என்ன ? உணவு, வேலை, வாழ்க்கை. அது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றுதான். இந்த அடிப்படையான போராட்டத்தில் மக்கள் முன்னேறுவது என்பது பழமைப் பிசாசுகளுக்கு ஆபத்தானது.

ிஅச்சப்படும் அளவுக்குத் தேசபக்தியைக் கட்டுரையில் அரவிந்தன் காட்டுகிறார். சீக்கியர் ‘படுகொலையுடன் ‘ குஜராத் :கலவரத்தை ‘ ஒப்பிட்டுப் பார்க்கிறார். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற உத்தமமான ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

பிஜேபி வகையறா கொடுமையான மத வெறியைப் பின்பற்றுகின்றன என்றால், காங்கிரஸ் வகையறாக்கள் (தமிழ்நாட்டு திமுக வரை) மென்மையான இந்துத்துவாவைப் பின்பற்றுகின்றன. சீக்கியப் படுகொலையும், குஜராத் (முஸ்லீம்) இனவொழிப்பும் மானுட இனத்துக்குக் களங்கம். அவற்றைச் செய்தவர்கள் எத்தனை நூற்றாண்டு தாண்டினாலும் தண்டிக்கப்படுவார்கள்.

இந்திய தேசப்பற்று என்பது இந்திய மக்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பது. அமெரிக்ிகா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்யும் வாஜ்பாயும், பாஜகவும், சோனியாவும், காங்கிரசும் இந்திய மக்கள் விரோதிகள். தேசவிரோதிகள். சோனியாவை வெளிநாட்டுக்காரி என்று சொல்வதன் நோக்கம் இந்துத்துவக் கும்பலின் தேசவிரோதச் செயலை மறைத்து தேசபக்தி வேடம் கட்டி ஆட மட்டுமே. பாஜக பதவியை விட்டுச் செல்வதற்கு முன்னதாக இந்திய விவசாயத்தை பன்னாட்டு மன்சாண்டோவுக்கு விற்றதை நாம் தேசபக்தி சேவை என்று பாராட்டமுடியுமா ? (பாஜக வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்திய) அமெரிக்க ஆதரவு நிலையைத் தொடர்வதாக அறிவித்திருக்கும் சோனியாவின் காங்கிரசின் தேசபக்தியை தேசபக்தி என்று சொல்ல முடியுமா ?

ஆட்சியில் இடதுசாரிகள் பங்கேற்பது குறித்து இப்போது பேசுவோம்.

நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். எந்த சீர்திருத்தத்தை முன்னுக்கொண்டு சென்றதற்காக பிஜேபியை மக்கள் தோற்கடித்தார்களோ அந்த சீர்திருத்தத்தைத்தான் காங்கிரஸ் அமுல்படுத்தும் என்பதை CMP தெளுவாகக் காட்டுகிறது. அந்த அரசுக்குள் இடதுகள் இருப்பது என்பது சாத்தியமில்லை. அப்படிப் பங்கெடுத்தால் சீர்திருத்தத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரி வரிசையில் இடதுகள் நிற்கவேண்டியிருக்கும். இந்துத்துவ சக்திகள் மக்கள் நண்பர்கள், தேச பக்தர்கள்வேடம் போட்டு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமாகும். அதற்காகத்தான் கருப்பன் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் இடதுகள் ஆட்சியில் இடம்பெற வேண்டும் என்ற ஞான ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக கொஞ்சம் பெரும்பான்மை பற்றிப் பேச வேண்டும். இந்த நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மை அல்ல. மாறாக, உழைத்துவிட்டு வாழவழியில்லாமல் இருக்கும் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களே பெரும்பான்மை. அந்த பெரும்பான்மை மக்கள்தான் பிஜேபிக்கு எதிராக வாக்களித்து அதனை வெளியேற்றியிருக்கிறார்கள்.

C. மதிவாணன்

mathivanan_c@yahoo.com

Series Navigation