பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7

This entry is part of 37 in the series 20070208_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக் 7

புதிய பயணம்

திமுகவில் இருந்து பிரிந்து வந்து எந்த வேகத்தில் ‘தமிழ் தேசிய கட்சி’ என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தாரோ அதே வேகத்தில் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தும் விட்டார் ‘சொல்லின் செல்வர்’ ஈ.வி.கே.சம்பத். இந்த நிகழ்விலிருந்து புதிய திசையில் கண்ணதாசனின் பயணம் ஆரம்பமானது.

கறுப்பு சிவப்பு என்ற இரு வர்ணத்திலிருந்து சிவப்பு,வெள்ளை பச்சை என மூவர்ணத்துக்கு மாறினார் கண்ணதாசன். முன்பு ‘ திராவிட நாட்டை வென்றவர் கிடையாது ‘ என
மார்தட்டிய கவியரசின் அதே பேனா தான்,
“அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா
அஞ்சி அஞ்சி கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ நேர்ந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தை போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
ஒற்றுமை காண்போம் – அதில்
வெற்றியும் காண்போம் “

-என்று தேச ஒற்றுமையை இப்போது ஆணித்தரமாக வலியுறுத்தியது. (படம் : ‘ராமன் எத்தனை ராமனடி’ )

” வந்தே மாதரம் என்னும் வார்த்தையாலே
தேசத்தை ஒன்றாக்கி வைத்தாரே
உத்தமராம காந்தியண்ணல்
அவரை மறக்காதீர்; அன்புடைய பெரியோரே !
அம்மம்மா…தம்பி என்று நம்பி….”

-என்று உருகவும் செய்தது (படம் : ராஜபார்ட் ரங்கதுரை)
——–
எந்த சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு போட்டியாக 1959ல் ‘சிவகங்கை சீமை’ படத்தை தயாரித்து திராவிட இயக்க பிரச்சாரம் செய்தாரோ அதே சிவாஜியை வைத்து 1963ல் ‘ரத்தத் திலகம்’ என்ற படத்தை தயாரித்தார் கவிஞர்.
(சீனப் படையெடுப்பின் போது , தேச பக்தியை வலியுறுத்தும் வகையில் இப்படத்தை உருவாக்கினார் கண்ணதாசன்)

முன்பு சி.சீமை படத்தின் பாடலில் திமுக ஆதரவு பத்திரிகைகளின் பட்டியலிட்ட அதே கண்ணதாசன், ராஜபார்ட் ரங்கதுரை (1973) படத்தில் வரும் “இன்குலாப் ஜிந்தாபாத்..”
பாடலில்
” நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெற வேண்டும்
ஆர்ப்பாட்ட அலையோசை எழ வேண்டும்…”

-என்று காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிகைகளாக அப்போதிருந்த ‘ நவசக்தி ‘, ‘ அலைஓசை ‘ ஆகியவற்றிற்கு பாடலில் பப்ளிசிட்டி தந்தார்.

திராவிட இயக்கத்தின் வலுவான பிரச்சார களமாக இருந்த தமிழ் டாக்கியில், காங்கிரஸ் தேசிய அரசியல் பிரச்சாரமும் வலுவான இடத்தை பிடிக்கத் தொடங்கியது, எழுத்தாற்றலுக்கு பேர் பெற்ற திராவிட இயக்க குரு குலத்தில் பாடம் பயின்று தேறிய கண்ணதாசனின் வருகைக்கு பிறகு தான் என்றால் அது மிகையாகாது.

சினிமாவில், எம்.ஜி.ஆருடன் வலுவான கூட்டணி வைத்திருந்த நிலை மாறி அவரது நேரடி போட்டி நடிகரான சிவாஜியுடன் இறுகக் கைகோர்த்துக் கொண்டார் கண்ணதாசன்.

தி. இ. பாணியில், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் சினிமா மூலமாக பாமரர்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியை திரையில் இக்கூட்டணி துவக்கியது. திமுகவை குறிப்பாக அக்கட்சியின் அரசியல் உருவமாக விளங்கிய கருணாநிதியையையும் திரை உருவமாக திகழ்ந்த எம்.ஜி.ஆரையும் கண்ணதாசனின் பாடல்கள் குறிவைத்து மறைமுகமாக தாக்குவதாக உணரப்பட்டது.

இந்த வரிசையில் ஆண்டவன் கட்டளை (1964) படத்தில் ‘சிரிப்பு வருது..சிரிப்பு வருது’
பாடலில்,
” மேடையேறி பேசும் போது
ஆறு போல பேச்சு.
மேடை இறங்கி கீழே வந்தா
சொன்னதெல்லாம் போச்சு”

– என்று வரும் வரிகள் மேடைப் பேச்சுக்கலையில் வல்லவர்களாக கருதப்படும் திமுக தலைவர்களை சாடுவதாக அர்த்தம் கொள்ளப்பட்டது.
——
அதேபோல், சிவாஜி நடித்த ‘என் மகன்’ (1974) படத்தில் வரும் ‘நீங்கள் அத்தனை பேரும்..’
பாடலில் வரும்
” கொள்ளையடிப்பவன் வள்ளலைப் போலே
………………………………………….
…………………………………………..
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே வாழ்கின்றான்”

-வரிகள் கருணாநிதி மற்றும் எம்ஜிஆரை ஒருசேர மறைமுகமாகத் தாக்குவதாக சிவாஜி
ரசிகர்களால் அல்லது காங்கிரஸ் தொண்டர்களால் புரிந்துக் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டது.
———
படிக்காத மேதை படத்தில் ,
” படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் பேருண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

-பாடல் வரிகள் பெருந்தலைவர் காமராஜை குறிப்பதாக கொள்ளப்பட்டது.
———
‘தாய்’ (1974) என்ற படத்தில்
” நாடாரு வந்தாரு
நாடாள வந்தாரு
ராஜாங்கம் பண்ணாரம்மா;
கல்லாமைக் கண்டாரு
இல்லாமை வென்றாரு
கல்லூரி தந்தாரம்மா”

-என்றும் காமராஜர் புகழ் பாடினார் கவியரசு (நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் காமராஜர்)
———–
1962லிலும் அதற்கு பிறகு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வென்று காமராஜர் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்று கண்ணதாசனுக்கு பெரும் ஆசை இருந்து வந்தது அவர் எழுத்துகளில் அடிக்கடி புலப்பட்டது.

1960களின் துவக்கத்தில் சிவாஜி நடிப்பில் வந்த ‘எல்லாம் உனக்காக’
படத்தில்,
” கடமையைச் செய்வோம் ; கவலையை மறப்போம்
கிடைப்பது கிடைக்கட்டும் தோழர்களே – நாம்
பதவியை விடுவோம்; உதவிகள் புரிவோம்
நடப்பது நடக்கட்டும் நாட்டினிலே.
அன்பு வளர்ப்பவர் ; பண்பு நிறைந்தவர்
தம்பிடி தந்தாலும்
பதவி அதிகாரம் தரும் கோடிகளை விட
அது தான் மேலாகும்
தன்னலமற்றவர் உண்மை உழைப்பினை
தாயகம் தேடுதடா
கையில் பொன் பொருளற்றவர் – ஓடி
உழைத்திட வந்தால் போதுமடா”

– என்று தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிட காங்கிரஸ் தொண்டர்களை அழைப்பதாக கருதப்பட்டது.
———
” எதற்கும் ஒரு காலம் உண்டு
பொருத்திரு மகளே…
……………………………..
……………………………..
சிவகாமி பெற்றெடுத்த பிள்ளையல்லவா – நாளை
இந்த மண்ணையாளும் மன்னனல்லவா “

– இது 1974ல் வெளியான ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் வரும் பாடல். (காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி)
———
சிவாஜி நடித்த படம் தானென்றில்லை. அரசியல் சாயம் பூசிக்கொள்ளாத மற்ற நடிகர்கள் நாயகர்களாக நடித்த படங்களிலும் கூட பாடல்களில் தனது காமராஜர் அபிமானத்தை வெளிப்படுத்த தயங்கவில்லை கண்ணதாசன். ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த
‘ மாணிக்கத் தொட்டில் ‘ என்ற படத்தில் “ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்” என்று தொடங்கும் பாடலில்,
” எல்லார்க்கும் கல்வி தந்தான்
சிவகாமி செல்வனடி
என் மகனும் அவர் போல
வளர்ந்து வரும் தலைவனடி…”

– என்று சுட்டிக்காட்டுவார் கவியரசு.
——–
எதிரியை தாக்குவதற்கு மாத்திரமின்றி, சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களை பூடகமாக தெரிவிக்கும் சாமர்த்தியத்தில் கரைகண்ட திராவிட பாரம்பரியத்தில் ஊறித் திளைத்தவராயிற்றே கவியரசு. கட்சி மாறினாலும் அந்த கெட்டிக்காரத்தனம் எங்கே போய் விடும்! அந்த உத்தியை காங்கிரஸிலும் பிரயோகித்தார்.
‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,

” சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
சேரும் நாள் பார்க்க சொல்லடி.
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”

– என்று பாடல் நீளும். 67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.
————
அழைப்புக்கு மட்டுமல்ல. ஆறுதலுக்கும் இந்த உத்தியை பயன்படுத்த தவறவில்லை கவியரசு.
திமுகவை விட்டு பிரிந்து வந்தாலும் அதன் தலைவர் அண்ணாதுரை மீது கண்ணதாசனுக்கு கடைசி வரை தனிப்பட்ட முறையில் அபிமானம் இருந்தே வந்தது. 1967ம் ஆண்டு அண்ணா தமிழக முதலமைச்சராகி சில நாட்களிலேயே அவருக்கு உடல் நலம் குன்றியது. அவர் மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பிய நேரத்தில், எதிர் முகாமில் இருந்தாலும் அண்ணாவின் உடல் நிலை குறித்து கவலைப்பட்ட கவியரசு, பாடல் மூலமாக உடல் நலம் விசாரித்தார்.
கத்தி காயம் பட்ட கதாநாயகனைப் பார்த்து நாயகி அக்காட்சியில் பாடினாலும் அது உண்மையில் அறிஞர் அண்ணாவை மனதில் வைத்து எழுதப்பட்டதாகவே அறியப்படுகிறது.
கவியரசின் மனித நேயத்தை வெளிப்படுத்திய அந்தப் பாடல் 1968ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற,
” நலம் தானா, நலம் தானா ?
உடலும் உள்ளமும் நலம் தானா?
…………………………………….
……………………………………
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்;
புண் பட்ட சேதியை கேட்டவுடன் – இந்த
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு”

– இந்த பாடலிலேயே ”இலை மறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல்லின்று ” அண்ணாவுக்கு தகவலும் சொல்வார் கண்ணதாசன்.
————
இதற்கிடையே, தீவிர அரசியலில் இருந்து ஆன்மீகத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியது கண்ணதாசனின் கவனம். வெறும் அரசியல்வாதி மற்றும் பாடலாசிரியர் அல்லது இலக்கியவாதி என்ற நிலையை கடந்து ஆன்மீகம் என்கிற உன்னதமான திசையை நோக்கி 3வது கட்டமாக புறப்பட்டது அவரது பயணம். 10 தொகுதிகளாக எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலும், ‘ஏசுகாவியம்’ நூலிலும் இன்றளவும் நிலைத்து நின்றிருக்கிறார் கவியரசு.

வெறும் 8ம் வகுப்பு மட்டுமே படித்திருந்த கண்ணதாசன், எழுதியது 20க்கும் மேற்பட்ட நாவல்கள். 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் கூடுதலாக திரை இசைப் பாடல்கள். தனது ‘ சேரமான் காதலி’ நாவலுக்காக சாகத்ய அகாடமி பரிசும் பெற்றார்.

*******************

‘ கை நீட்டி கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டி தாவுகின்ற குழந்தை’ என்று கலைஞர் கருணாநிதி வர்ணித்தது போல கண்ணதாசன் உணர்ச்சிமிக்க குழந்தைமனம் கொண்ட வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர். வேஷம் போடத் தெரியாதவர். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர் என்பதற்கு அவர் எழுதிய சுய சரிதையே சான்று.

எதிரிகளும் ரசிக்கும் பிள்ளை குணமும், தமிழும் கண்ணதாசனுடையது. எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதும் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவியளித்து கவுரவித்தார். தனது தமிழுக்கும் புலமைக்கும் கிடைத்த அந்த கவுரவுத்துடனேயே 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தனது 54 வயதில் இந்த மண்ணுலகை விட்டு பறந்தது அந்த கவிக்குயில்.

(வளரும்)

அடுத்து: உருண்டது உத்ராட்ச கொட்டை !


vee.raj@rediffmail.com

Series Navigation