பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6

This entry is part of 29 in the series 20070201_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக்-6

‘ வனவாசம் ‘ ?

அண்ணாதுரை, கருணாநிதியைத் தொடர்ந்து சினிமாவுக்கு கதை வசனங்கள் எழுதிய
திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, ஏ.கே.வில்வம் , திருவாரூர் தங்கராசு, முரசொலிமாறன், தென்னரசு என்று நீளுகிறது. பாவேந்தர் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி ஆகியோரின் பாடல்களும் சினிமாவில் தி. இ. முழக்கங்களாக முழங்கியுள்ளன.
இவ்வாறான தி. இ. எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு.
கதை, வசனங்கள், பாடல்கள் என்று முன்று துறைகளிலும் புகுந்து விளையாடியது கவியரசு கண்ணதாசனின் பேனா. இவரது தமிழ், சொக்க வைக்கும்; சாட்டையை சொடுக்கும் ; சரசமாடும்; சதிராடும். இந்த விஷயத்தில் கலைஞரின் பேனாவுடன் சரிக்கு சமமாக தோள் தட்டி நின்றது கவியரசின் பேனா. வசனங்களுக்காகவே படங்களை வெற்றி பெற வைத்த வல்லமையில் முன்னவருக்கு சளைத்தவரல்ல பின்னவர்.

கவிஞர் கண்ணதாசனுக்கு கதை, வசன கர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர்,
நடிகர், பத்திரிக்கையாளர் என்று பல முகங்கள் உண்டு. சினிமா எழுத்துகள் மட்டுமின்றி
கவிதைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத்தின் அனைத்து எல்லைகளையும் தொட்டவர் அவர்.

கவியரசு கண்ணதாசனின் எழுத்து வாழ்க்கையை (சினிமா மற்றும் இலக்கியம் உள்பட) மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை : 1. திராவிட இயக்க காலம்; 2. காங்கிரஸ் அல்லது காமராஜர் அபிமான காலகட்டம்; 3. ஆன்மீகம்.

******

ராமநாதபுரம் அருகே சிறுகூடற்பட்டி என்கிற சிறு கிராமத்தில் 24- 6-1927ல் பிறந்த முத்தையா, 1940களின் துவக்கத்தில் கண்ணதாசனாக சினிமாத் துறையில் கால் பதித்திருந்த போது அறிமுகமானது தான் மு.கருணாநிதியுடனான நட்பு. சேலம் மாடர்ன்
தியேட்டர்ஸில் கதை வசன இலாகாவில் பணியாற்றிய போது மலர்ந்த இந்த நட்பு , கண்ணதாசனை திராவிட இயக்க கருத்துகளின் தாக்கத்துக்கு உள்ளாக்கியது.

அண்ணாதுரை தலைமையில் அணி திரண்டார் கண்ணதாசன். 1949ல் உருவான தி.மு.க.வில் சேர்ந்தார். நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டையுடன் காணப்பட்ட ஆஸ்திக முத்தையா ,
நாஸ்திக கண்ணதாசனாகி திராவிட இயக்க ‘மரபு’ப்படி, பிராமணர்களையும், கடவுள்களையும், வைதீக சமயச் சடங்குகளையும் சகட்டுமேனிக்கு திட்டியும் கிண்டலடித்தும் கட்டுரைகள் எழுதலானார். நேரு, காமராஜர் என்று காங்கிரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.
திராவிடம், தனிநாடு என்றெல்லாம் முழங்கி வந்தார். அவற்றை பத்திரிகைகளிலும் ,
சினிமாக்களிலும் எழுதி தள்ளினார்.

புகழ்ந்தால் இமயத்துக்கு உயர்த்தி நிறுத்துவதும், இகழ்ந்தால் படு பாதாளத்துக்கு தள்ளுவது
மாகவே இருந்தது அவரது எழுத்துபாணி.

திராவிட இயக்கக் கருத்துகளை, தான் எழுதிய திரைப்பாடல்களிலும் , வசனங்களிலும் வெளிப்படுத்தினார்.

அண்ணா கதை வசனத்தில் என்.எஸ்.கே.தயாரித்த ‘பணம்’ (1952) படத்தில் “தீனா..மூனா..கானா” என்ற பாடலில் திமுக பிரச்சாரத்தை அப்பட்டமாக செய்திருந்தார் கண்ணதாசன்.

இவர் 1959ம் ஆண்டில் சொந்தமாக தயாரித்து திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதிய ‘ சிவகங்கைச் சீமை’ என்ற படத்தில் ‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது’ என்று கதாநாயகனை பாட வைத்தார். இந்த பாட்டில்,
” மன்றம் மலரும்; முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம்நாடு.
……………..
………………
எக்குலத்தோரும் ஏந்தி புகழ்வது எங்கள் பெருமையடா..”
-என்று வரிகள் தொடரும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மன்றம்’, ‘ முரசொலி’ , ‘ நம்நாடு’ ஆகியவை அப்போது திமுகவின் பிரசாரப் பத்திரிகைகள். அவற்றின் முறையே நாவலர் நெடுஞ்செழியன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஆசிரியர்களாக நடத்தி வந்தனர். திமுகவினர் மத்தியில் பிரபலமாக இருந்த அந்த பத்திரிகைகளைப் பற்றியும் ‘திராவிடர்’ புகழ் பாடிய அப்பாடலில் பொருத்தமாக சேர்த்து தானொரு தீவிர திமுககாரர் என்பதை காண்பித்துக் கொண்டார் கண்ணதாசன்.

அதே படத்தில் எதிரி நாட்டு தூதனிடம், “எங்கள் தென்னவர் நாடு எப்போதும் வெல்லும்” என்ற பாணியில் வாளை உயர்த்தி காண்பித்து நாயகன் வசனம் பேசுவான். (அதே 1959ம் ஆண்டு , காங்கிரஸ் அபிமானிகளான பந்துலு தயாரித்து, சிவாஜிகணேசன் நடித்து
வெளியான தேசிய உணர்வையூட்டும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு போட்டியாக அதே சமயத்தில் ‘சி.சீமை’யையும் வெளியிட்டார் ‘திராவிட இயக்க’ கண்ணதாசன்)

அதற்கு முன்பே , திராவிட இயக்கத்துடன் ‘ ஸ்நானப் பிராப்தி ‘ கூட இல்லாத பாட்டுக்கார
நடிகரான டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக வைத்து தான் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ (1958) படத்தில் கூட ‘திராவிடப் பொன்னாடே..’ என்ற பாடலை வைத்தார் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான ‘மன்னாதி மன்னன்’ படத்தில்
“அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
“கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே…”

– என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

மதுரை வீரன் படத்தில் ,
“கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா…”
– என்று தொடரும் இப் பாடலில் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.

அதே படத்தில் இன்னொரு பாடல்.
” செந்தமிழா எழுந்து வாராயோ – உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ”
– என்று சொல்வார்

எம்.ஜி.ஆர். தயாரித்த ‘ நாடோடிமன்னன் ‘ படத்தில், ‘செந்தமிழே வணக்கம்..” என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் ‘அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்” என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.

************
காலமெனும் திரைப்படத்தில் எப்போது எந்தெந்த திருப்பங்கள் வருமென யாராலும்
கணிக்கவே முடியாதென்பதற்கு கவியரசரே சிறந்த உதாரணமெனலாம்.

திரையில் மட்டும் நின்றிடாது நேரடியாகவும் கட்சி நடவடிக்கைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டவர் கண்ணதாசன். 1953ல் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு
போலீசாரிடம் ரத்தம் வழிய வழிய அடிபட்டு சிறையில் அடைபடுமளவுக்கு திமுக மீது கண்ணதாசன் காட்டிய தீவிரத்துக்கு 1961ல் முற்றுப்புள்ளி விழுந்தது.

திமுகவை வானளாவ உயர்த்தி ‘கழக மகாகாவியம்’ என்ற நூலையே எழுதிய அதே கைகள் தான், திமுகவில் தான் இருந்த காலத்தை வனவாசத்தில் இருந்த இருண்ட காலமாக எழுதி வசைமாரியும் பொழிந்தது.

கட்சியில் சினிமாகாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதென ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வந்தவர் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வி.கே.சம்பத். இவர் 1961ல் உட்கட்சி பூசல் காரணமாக திமுகவில் இருந்து விலகி ‘தமிழ் தேசியக் கட்சி’ என்ற தனிக்கட்சியை கண்டபோது அவர் பின்னாலேயே கண்ணதாசனும் போனார் ; இரு வண்ணத்தை உதறி விட்டு மூவண்ணத்தை நோக்கி.

ஆம். கவியரசின் அடுத்த அவதாரம் ஆரம்பமானது !

(வளரும்)

அடுத்து: புதிய பயணம்

vee.raj@rediffmail.com

Series Navigation