பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5

This entry is part of 43 in the series 20070125_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


அரசியலில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் ; அரசியல் மற்றும் சினிமாவில் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, தமிழ் சினிமாவில் திராவிட இயக்க நடிகர்கள் பட்டாளம் உருவானது. அவர்களில் 1. எம்.ஆர். ராதா, 2. கே.ஆர். ராமசாமி, 3. எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் 4. எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த நான்கு பேரும் காமிரா முன் வசனம் பேசி போவோர்களாக இல்லாமல், திராவிட இயக்கத்தில் இணைந்து அதன் பிரச்சார பீரங்கிகளாகவும் விளங்கியவர்கள்.

இவர்களின் இந்த பயாஸ்கோப் பாலிடிக்ஸ்சை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை : 1. தான் பின்தள்ளி இருந்துக் கொண்டு தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கருத்துகளையும் இயக்கத் தலைவர்களின் புகழையும் மாத்திரம் முன்னிலைப்படுத்துவது;
அதாவது இயக்கத்தின் ‘ ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ ஆக மாத்திரம் கடைசி வரையில் இருப்பது.
2. கட்சியையும் அதே நேரத்தில் தன்னையையும் முன்னிலைப்படுத்தி சமமான இரு தண்டவாளத்தில் சாமர்த்தியமாக பயணம் செய்வது

இந்த வகையில் பார்த்தால், நாலாம் ‘ரா’ மட்டுமே 2ம் வகையை சேர்ந்தவர். இந்த வகையை புதியதாக உருவாக்கியவரென்றே கூட சொல்லலாம். திராவிட இயக்க வரலாற்றில் தனி அத்தியாயமாவே ஆகி விட்ட அவரை பற்றி பின்னர் விரிவாக காணலாம்.
முதலில், முதலாம் வகையில் வரும் மும்மூர்த்திகளை பார்ப்போம்

**********
திராவிட இயக்க கலைஞர்களில் எம்.ஆர்.ராதா மூத்தவர். முன்னோடியும் கூட. 1907ம் ஆண்டு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ராதா, பாலகனாக இருந்த போதே நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

அவர் வாலிபப் பருவம் எட்டிய போது, சுயமரியாதைச் சூறாவளி மையம் கொள்ளத் தொடங்கியிருந்த காலகட்டம். வழக்கம் போல் இந்த இளைஞனையும் பெரியார் பற்று பற்றிக் கொண்டது. இந்த அபிமானம், 1943ல் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற பெயரில் தனியாக நாடக கம்பெனி ஆரம்பித்து பகுத்தறிவு, சமூக சீர்திருந்த கருத்துகளை வலியுறுத்தும் நாடகங்களை நடத்தி கலக்குமளவுக்கு போனது.

இதனிடையே, சினிமாவில் நுழையவும் முயன்று வந்தார். 1940ல் ‘சத்தியவாணி’ என்ற படத்தில் கதாநாயகன் வேடம் முதன் முறையாக கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு நாயகன் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்திடவில்லை.

எனினும், நாடக உலகில் அவரது ஸ்தானம் நாயகனாகவே இருந்து வந்தது. போர்வாள், தூக்குமேடை என்று ஏராளமான நாடகங்கள். மூட நம்பிக்கைகளை முகத்தில் அறைந்தாற் போல் சாடினார். பகுத்தறிவு, விதவைகள் மறுமணம் என்று பெரியாரிய கருத்துகளை அவரது ஒவ்வொரு நாடகத்தின் மூலமும் பாமரர்களிடம் கொண்டு சென்றார். அன்றைய ஆட்சியாளர்கள் கெடுபிடியையும் அடக்குமுறையையும் ஏவி விடுமளவுக்கு ராதாவின் நாடகங்களில் அனல்பறந்தது.

சினிமாவைப் பொருத்தவரை, ராதா பெரியளவில் கதாநாயகனாக பரிமளிக்கவில்லையென்றாலும், காமெடியன், வில்லன், காமெடி கலந்த வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட வேடங்களில் தனது வித்தியாசமான குரல் தன்மை, வசன உச்சரிப்பு, பாடி லேங்குவேஜ் மூலம் ஜொலித்தார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பெரியார் கருத்துகளை வசனங்களில் வெளிப்படுத்தினார், தனது பிரத்யேக பாணியில்.

தமிழ் சினிமாவில் அரசியல் மற்றும் சமூக அங்கதம் அல்லது நையாண்டிக்கு எம்.ஆர்.ராதாவே பிதாமகர் என்று சொல்லலாம் . மூட நம்பிக்கைச் சாடலானாலும், அரசியல் குத்தலானாலும் அவர் திரையில் ஒரு டயலாக்கை சாதாரணமாக விட்டாலும் கூட அது பெரும் கைத்தட்டலை தியேட்டர்களில் எழுப்பியதை யாராலும் மறந்து விட முடியாது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது போல, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பெரியாரிய பிரச்சாரத்துக்கு ‘ரத்தக் கண்ணீர்’ படமே போதும்.

திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் உருவானது தான் ‘ ரத்தக் கண்ணீர் ‘. முதலில் நாடகமாக ஒரு கலக்கு கலக்கி விட்டு 1954ல் திரைப்படமாக வந்தது. (திரைப்படமாக வெளி வந்த பிறகும் கூட ரத்தக்கண்ணீரை தொடர்ந்து நாடகமாக நடத்தப்பட்டது).

கலைப்பித்து என்ற பெயரில் போலி நாகரீகத்தில் மூழ்கிய கதாநாயகன் மோகன், பெற்றத் தாயையும் கட்டிய மனைவியையும் உதாசீனம் செய்து விலைமாது காந்தாவின் வீடே கதியென கிடக்கிறான். ஒரு கட்டத்தில் தொழு நோய் பீடிக்கப்பட்டு விலைமாதால் விரட்டியடிக்கப்படுகிறான். கண்பார்வை இழக்கிறான். தவற்றை உணர்ந்த அவன், தன்னிடம் எந்த தாம்பத்திய சுகத்தையும் அனுபவிக்காமல் பட்டமரமாக நிற்கும் மனைவியை அவளுக்கு ஆதரவாக இருக்கும் தனது நண்பனுக்கே மணமுடித்து உயிரை விடுகிறான்.

ஸ்திரி லோலனுக்கு வாழ்க்கைப்பட்டு குறைந்தபட்ச சுகத்தைக் கூட அனுபவிக்காமல் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் விடும் கண்ணீர் தான் ரத்தக் கண்ணீர். இவர்களின் ரத்தக்கண்ணீரை மாற்ற இது போன்ற சீர்திருத்தம் (மறுமணம்) தவறில்லை. அவசியமானதும் கூட என்பதே ‘ ரத்தக்கண்ணீர் ‘ படத்தின் கதைக் கரு.

புரட்சிகரமான கருத்து. கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. பகுத்தறிவும், சீர்திருத்தமுமாக வசனங்கள் ஒவ்வொன்றும் குத்தூசி தான்.

கதாநாயகன் மோகன் பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா. எதிர்மறை நாயகன் (ஆன்டி-ஹீரோ) பாத்திரமானாலும் தனது அலட்சிய நடிப்பாலும் வசன உச்சரிப்பு தொனியாலும் ரசிக்க வைத்தார் ராதா. மூட நம்பிக்கைகளை அல்லது சமய சடங்குகளை தாக்கும் போது நையாண்டியும், சீர்திருத்தக் கருத்து சொல்லும் போது நெருப்புத் துண்டுகளாக வசனங்கள்.
போதாதா ராதாவுக்கு !

கதாநாயகனுக்கு திருமணம் முடித்து சாந்தி முகூர்த்ததுக்கு நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள். அவரிடம் சந்திரன், சூரியன் என்று கிரகங்களின் நிலையை கூறி இன்றைக்கே நல்ல நாள் என்று ஜோசிய அந்தணர் சொல்வார். அப்போது விலைமாது காந்தா வீட்டுக்கு போகும் அவசரத்தில் இருக்கும் மோகனுக்கும் (நாயகன்) ஜோசியருக்கும் இடையே நடக்கும் உரையாடல்:

மோகன்: ” ஏய் மேன். இந்த சந்திரன், சூரியன், சுக்கரனெல்லாம் யாரு ?”
ஜோசியர்: ” அவாள்லாம் கிரகங்கள்”
மோகன் : ” இன்னைக்கு எனக்கு டைமில்லே. அவங்களையெல்லாம் இன்னைக்கி லீவு எடுத்துட்டு போயிட்டு நாளைக்கு வரச் சொல்லு மேன்”
———
அதே போல், தொழு நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வையையும் இழந்து பிச்சைக்காரனாக வரும் மோகன், ஒரு வீட்டில் ” தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்” என்று பக்தி பாட்டு பாடி பிச்சை கேட்பான். அப்போது அந்த வீட்டுக்காரன், ” அப்ப ஏன்டாப்பா. உன்னோட வியாதியை கோவிந்தன் தீர்த்து வைக்கலை ? ” என்று நக்கலாக சிரித்தபடி கேட்க, அலட்டிக்காமல் ராதா பதில் சொல்வார் பாருங்கள்:
” அப்பாடா. உங்களுக்கெல்லாம் புத்தி வந்திருக்கே.” – என்று சந்தோஷமாக குறிப்பிட்டு பெரியாரின் பிரச்சாரத்தால் ஜனங்கள் மத்தியில் பகுத்தறிவு பரவத் தொடங்கியுள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டினார் ராதா.
————
இதையடுத்தக் காட்சியில், இன்னொரு குத்தல். ராதாவுக்கும் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் தர்க்கம்:

“மனுஷன் கடவுளை ஒரு இடத்துலே கும்பிடறான். இன்னொரு இடத்துலே உதைக்கிறான். ஆமா, திருவண்ணாமலையிலே தீபமெரிஞ்சா அரோகரான்னு கன்னத்துலே போட்டுகிறீங்களே. அதேன்?” – இது மோகன் (எம்.ஆர்.ராதா)

” ஆமா. அது அக்கினி பகவான் ” – இது எதிர் கதாபாத்திரத்தின் பதில்.

” அப்படியா. சரி. வூடு எரிஞ்சா மட்டும் ‘ஐயோ அம்மா’ன்னு அலர்றீங்களே. அப்போ உங்க அக்கினி பகவான் எங்கேடா? ” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பி, ” அடப் போடா.போ. பெருசா கடவுளுக்கு செக்கரட்டரியாட்டம் பேச வந்துட்டான் ” என்று அந்த கதாபாத்திரத்தை விரட்டியும் விடுவார் ராதா.
—————

‘வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டோம். ஜீவகாருண்ய கட்சியிலே சேர்ந்துட்டோம். உயிர்களை கொல்லக் கூடாதென்பது அதன் கொள்கை ‘ என்று கூறும் நண்பனிடம் ராதா விடும் டயலாக்:

“திங்கரத்துக்கும் கூட கட்சியை வெச்சிட்டாங்கடாப்பா. ஏண்டாப்பா. ராத்திரியிலே மூட்டபூச்சி கடிச்சா என்ன செய்வீங்க. சும்மா இருந்திடுவீங்களாப்பா?”
————
அதே போல் இன்னொரு பஞ்ச்:

” கஷ்டப்படும் போது உதவாமல் அவன் செத்த பிறகு மண்டபம் கட்டுற நாடுடா இது ”
———–

படத்தின் கிளைமாக்ஸில் தனது மனைவியை நண்பனுக்கு மறுமணம் செய்து வைக்கிறான்
மோகன் (எம்.ஆர். ராதா). பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பெரியாரிய சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் இக்காட்சியில் அனல் பறக்க பிரசார மழையாக ராதா கொட்டும் டயலாக்:

” மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;
சமூகத்தை காக்க முனையும் பெரியோர்களே;
இந்த மறுமணம் தவறா?
தமிழ் மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.
என்னைப் போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு
தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என
ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.
இந்த அவல நிலை மாறட்டும். லட்சக்கணக்கான அபலைப் பெண்கள் சிந்தும்
ரத்தக்கண்ணீர் இனியாவது நிற்கட்டும்”
————
தனது சினிமா வாழ்க்கையில் திமுக நடிகர்களான எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர், மற்றும் காங்கிரஸ் அபிமான நடிகரான சிவாஜிகணேசன் ஆகிய கதாநாயகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் , பின்னாளில் சில சாமி படங்களில் கூட நடித்திருந்தாலும் தனது தி.க. லேபிளை மட்டும் ராதா இழந்து விடவில்லை. பெரியார் அபிமானியாகவே 1979ம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா
காலமானார்.

***********************
கே.ஆர்.ராமசாமி. திராவிட இயக்க நடிகர் என்பதற்கும் மேலாக அறிஞர் அண்ணாவின் பரம பக்தர் என்று சொல்வதே சரியாக இருக்கும். அண்ணாவுக்காக எதையும் செய்ய தயாராக இருந்த ராமசாமி, பக்கா தி.மு.க.காரர்.

அடிப்படையில் நாடக நடிகர் கே.ஆர்.ஆர். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் இருந்தார். பிறகு சொந்தமாகவே நாடகக் கம்பெனி நடத்துமளவுக்கு உயர்ந்தார். திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்த கே.ஆர்.ஆர், தனது நாடகங்கள் மூலமாக திராவிட இயக்கத்தின் கருத்துகளை பரப்பி வந்தார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமா வாய்ப்புக்கும் முயன்றார். 1940களின் மத்தியில் வெளியான ‘பூம்பாவை’ அவருக்கு முதல் படம். தொடர்ந்து சில படங்களில் சின்ன வேடங்கள் தான் கிடைத்தன. அறிஞர் அண்ணா கதை வசனத்தில் 1950ல் வெளியான ‘ வேலைகாரி ‘ படத்தில் கே.ஆர்.ஆருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் ராமசாமியின் சினிமா வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கடுத்தாண்டு அறிஞர் அண்ணாவின் எழுத்து வண்ணத்தில் வந்த ‘ ஓர் இரவு ‘ படத்திலும் ராமசாமியே நாயகன். ‘சுகம் எங்கே’ (1954) , ‘ சொர்க்கவாசல் ‘ (1954) உட்பட மொத்தம் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் தான் இவர் நடித்தார்.

திராவிட இயக்க நடிகர்களில் கே.ஆர்.ராமசாமி தான் முதலாவது கதாநாயக நடிகர். மற்றபடி தமிழ் டாக்கியில் இவரது தனி முத்திரை என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதை விட அண்ணா எழுதிய வசனங்களை திரையில் ஒலிபரப்பும் ‘ வாய்ஸ் ‘ ஆக மட்டுமே இருந்தார் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். திரையில் தன்னை முன்னிலைப்படுத்திக்
கொள்ளாமல் கட்சியையும் அதன் கொள்கைகளையும் தலைவரையும் முதன்மைப்படுத்தவே விரும்பிய இவரது ஆழ்ந்த கட்சி விசுவாசமே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கலாம்.

கே.ஆர்.ஆர்., தான் சார்ந்திருந்த தி.மு.க., மீதும் அதன் தலைவர் அண்ணா மீதும் அதிக நேசம் வைத்திருந்தார். சினிமாவில் முன்னேறி பணம், புகழ் குவிப்பதை விட கட்சிக்காக உழைக்கவே விரும்பினார். சினிமாவை விட கட்சிக்காகவே பெரும்பாலான நேரங்களை செலவிட்டாரென திமுகவினர் இன்றளவும் நினைவுகூருகின்றனர்.

1951ல் சென்னையில் நடந்த திமுகவின் முதல் மாநில மாநாடு தொடங்கி அக்கட்சியின் மாநாடுகள் பலவற்றில் கே.ஆர்.ராமசாமியின் நாடகங்கள் இடம் பெற்று வந்தன.

திமுக துவக்கப்பட்டதும் அதில் அமைக்கப்பட்ட பொதுக் குழுவில் இடம் பெறுமளவுக்கு கட்சியில் அவருக்கு ஈடுபாடிருந்தது. நடிப்பும் பாடும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால் கே.ஆர்.ராமசாமிக்கு ‘ நடிப்பிசைப் புலவர் ‘ என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தது. திமுக. மேலும், திமுக சார்பில் முதன்முறையாக அவரை எம்.எல்.சி. பதவிக்கு தேர்ந்தெடுத்தும் பெருமைப்படுத்தியது கட்சி.

பின்னாளில் 1969ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ நம்நாடு’ படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் மட்டும் வந்து போகும் கவுரவ வேடத்தில் நடித்தார் கே.ஆர்.ஆர்.

கடைசி வரை, நிறம் மாறாமல் தி.மு.க.காரராகவே இருந்து 5-8-1971 ல் மறைந்தார் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி.

********************

நிமிடத்துக்கு நிமிடம் ‘பிராண நாதா’, ‘கிருஷ்ணா கோவர்த்தனா’ போன்ற ரகத்தில் பாடல்கள் என்றிருந்த தமிழ் டாக்கியை தங்களின் துள்ளல் தமிழ் வசனங்களால் கையகப்படுத்தியிருந்த திராவிட இயக்கத்தாருக்கு அதற்கேற்ற வெண்கலக் குரல் வளத்துடன் கிடைத்தவர் தான் சேடப்பட்டியை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் எஸ்.எஸ்.ராஜேந்திரனும். சிவாஜி கணேசனும் இவரும் ஒரே சமயத்தில் அதாவது ‘ பராசக்தி ‘ படத்தின் மூலமே சினிமாவில் பிரவேசித்தவர்கள். ஆரம்பத்தில் தி.மு.க.காரராக இருந்த சிவாஜி சீக்கிரமே எதிர் முகாமிற்கு சென்று விட்டார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை , அவரைப் போலவே உயிரோட்டமான வசன உச்சரிப்பை கொண்டிருந்த ராஜேந்திரனை கொண்டு நிரப்ப பார்த்தது திமுக. அவருக்கு ‘லட்சிய நடிகர்’ என்ற பட்டத்தையும் கொடுத்து ஊக்குவித்தது.

எஸ்.எஸ்.ஆரும் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார். 1962ல் நடந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் எஸ்.எஸ்.ஆருக்கு சீட் தந்தார் அண்ணா. அத்தேர்தலில் தேனித் தொகுதியில் நின்று சுமார் 12 ஆயிரத்து 800
வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வென்று எம்.எல்.ஏ.வும் ஆனார் எஸ்.எஸ்.ஆர்.

இந்திய வரலாற்றிலேயே, ஒரு அரசியல் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆன முதல் சினிமா நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். ( இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரையே முந்தியவர் இவர்). பின்னர், திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆக்கப்பட்டார் ராஜேந்திரன்.

1950களில் தனி திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க. பலமாக வலியுறுத்தி வந்த நேரம். எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த படங்கள் பலவற்றில் ‘ வெல்க திராவிட நாடு ; திராவிடர்கள்’ என்று அவர் மூலமாக திரையில் பேச வைத்தது திமுக எழுத்தாளர்களின் பேனா.

வசனங்களை விடவும் பாடல்கள் கூடுதல் வலிமையானவை. வானொலி மற்றும் இசைத் தட்டுகள் மூலமாக எந்நேரமும் மக்களை சென்றடையக் கூடியவை. அவர்கள் (மக்களின்) வாயில் எளிதாக ரீங்காரமிடுபவை என்று திராவிட இயக்க சினிமாக்காரர்கள் உணர்ந்து சினிமா பாடல் வரிகள் மூலமாகவும் தங்கள் பிரசாரத்தை வலுவாக இறக்கத் தவறவில்லை.

அப்போது தீவிர தி.மு.க.காரராக இருந்த கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘ சிவகங்கைச் சீமை ‘ (1959) படத்தில் கீழ்கண்ட பாடலை பாடிக் கொண்டே எஸ்.எஸ்.ஆர்., அறிமுகமாவார்.

(பாடலாசிரியர் – கண்ணதாசன்)
” வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது
………………………………………..
…………………………………………
தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி
……………………………………
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிடத் திருநாடு…”

ராஜேந்திரன் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ‘ அம்மையப்பன்’ ( 1954) படத்தில்
‘ திராவிடப் பொன்னழகை வாழ்த்திடுவாயே ‘ என்று பாடல் வரும். (கதை வசனம் :
மு.கருணாநிதி)

அதே 1954ம் ஆண்டு வெளியான ‘மனோகரா’வில் கதாநாயகன் சிவாஜிகணேசனின் தோழனாக வரும் எஸ்.எஸ்.ஆர்., படத்தின் கிளைமாக்ஸில் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு கடைசியில் வென்றே தீரும்” என்று அழுத்தந்திருத்தமாக டயலாக் சொல்லி படத்தை முடிப்பார் (வசனம்: மு.க).

அதே போல், எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘ தங்கரத்தினம் ‘ (1960) படத்தில் , “துன்பம தீராதோ..” எனத் தொடங்கும் பாடலில்,

” ஜாதி ஒழியாதோ- இந்த சஞ்சலம் தீராதோ
நீதி தழைக்காதோ- நாட்டில் நேர்மை நிலைக்காதோ..” என்று வரிகள் வரும். இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை எஸ்.எஸ்.ஆரே தான்.

அதே படத்தில் மற்றொரு பாடலில் , ” என் இதய வானிலே உதயசூரியன் எழுந்தது…” என்று வரிகள் வரும். ( திமுகவின் சின்னம் ‘உதயசூரியன்’ என்பதை நினைவில் கொள்க)

எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘தங்கதுரை’ (1972) படத்தில்
” மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
கடவுளைத் தேடி கண்ணை இழந்தான்
அன்பே தெய்வமென்றால் அதை யாரும் நம்பவில்லை.
…………………………….
……………………………….
பாவ புண்ணியம் பேசிப் பேசி பறந்தது காலமடா
உண்டு தெய்வமென்று சொல்ல மனமே கூசுதடா ”
– என்று கடவுள் மறுப்பு கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருணாநிதி கைவண்ணத்தில் உருவான ‘ அவன் பித்தனா’ (1966) படத்தில் பிரபலமான ‘ இறைவன் இருக்கின்றானா’… என்ற பாடலில் ” மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவனில்லை” என்று எஸ்.எஸ்.ஆர்., வாயால் சொல்ல வைக்கப்பட்டிருக்கும்.
—————————-
பின்னர், ஒரு கட்டத்தில் திமுகவிலிருந்து விலகி பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்டு விட்டு தற்போது தீவிர அரசியலில் இருந்தும் சினிமாவிலிருந்தும் ஒதுங்கியிருக்கிறார் லட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்.

(வளரும்)

அடுத்து: ‘வனவாசம்’ ?

——————————————————-

vee.raj@rediffmail.com

Series Navigation