ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)

This entry is part of 48 in the series 20110313_Issue

சத்யானந்தன்


பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் வாசிக்கப்படுவது. அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் இலக்கியவாதிகளும் பல விவாதங்களுக்கு ராமாயணத்தை ஒரு ஆதாரமாகவும் துவங்கு புள்ளியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் ஒரு உதாரணம். இன்னொன்று சமீபத்தில் வெளி வந்த ராவணன் திரைப்படம். பக்தி செய்பவர்களை விட அதிகமாக ராமாயணம் என்னும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுப்போர் ஆராய்ச்சிக்காகவும் இலக்கிய நயத்துக்காகவும் பண்பாடு பற்றிய புரிதலுக்காகவும் மீண்டும் மீண்டும் வாசிப்போரே. குறிப்பாக கம்ப ராமாயணம் பல்வேறு பரிமாணங்களில் ரசனைக்குரியது. வெவ்வேறு மொழிகளில், பண்பாடு மற்றும் பூகோளப் பின்னணியில் ராமாயணம் பல வண்ணமும் மணமும் உடைய நந்தவனங்களாய் நம்மை ஈர்க்கும்.

ஒரு காவியத்தை வாசிக்கும் அனுபவமும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கமும் வித்தியாசமானவை. ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் முன்னோரின் காலம் பற்றிய முக்கியமான ஆவணமாகக் காவியம் திகழ்கிறது. எனவே நம் காவியங்களுள் தலையாய இரு இதிகாசங்களில் மூத்ததான ராமாயணம் அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் கதையின் போக்கிலும் நம்மைப் பாத்திரங்களோடு ஒன்ற வைக்கிறது. ஏனெனில் இன்றும் நமது குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் நிகழும் பரிமாற்றங்களில் நாம் ராமாயண கதாபாத்திரங்களுள் ஒன்றாக நிற்கிறோம்.
மகாபாரதம் தற்காலச் சூழ்நிலைக்கு மிகவும் அருகாமையிலுள்ளதாகவும் ராமாயணம் இலட்சியவாதமும் தியாகமும் பற்றிப் பேசுவதாகவும் ஒரு கருத்து உண்டு. ஆனால் ராமாயணத்தை நுட்பமாக வாசிக்கும் போது மகாபாரத்துக்கு இணையாக பல்வேறு அதிகாரப் பகிர்வுக்கான போட்டி பொறாமை மற்றும் யுத்தங்களைக் காண்கிறோம். இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.

முதலாவது கைகேயி தனது மகனுக்கு (பரதனுக்கு) நாடாளும் உரிமை கோரியது. அதைக் கோரிய விதமும் அவள் இட்ட ஷரத்துக்களும். இரண்டாவது சீதை மாரீசனின் குரலை ராமனின் குரல் என்றெண்ணி உடனே கிளம்பாத இலக்குவனை வெறுப்புடன் சந்தேகப்படுகிறாள்.

இந்த இரண்டுமே இந்த நங்கையரின் பின்னணி மற்றும் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சால்புகளைப் பார்க்கும் போது மிகவும் கசப்பும் தரக்குறைவுமானவை. எனவே ராமாயணம் மனித உறவுகள் பற்றிய மிகப்பெரிய ஆவணமாய் நம்முன் நிற்கிறது. பாத்திரங்கள் கடவுள் அவதாரமாக அன்றி மானிடராய் இயங்குகின்றனர்.

மனித உறவுகள் பற்றிய மேற்கத்திய அணுகு முறைக்கும் தொன்மை இந்தியாவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு தர்மம் பற்றியதாகும். தர்மம் என்பதை ஆங்கிலத்தில் ethics என்று ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்.

ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிகாசங்களில் தர்மம் என்பது கிட்டத்தட்ட எல்லா கதாப் பாத்திரங்களின் செயல்களுக்குக் காரணியாக அமைகிறது. தர்மம் அல்லாதது அதர்மம்.

ஆனால் தர்மம் (மனசாட்சி மற்றும் பொறுப்பு தொடர்பான கடமை) ஒருவரது குலம், பதவி, உறவு, சூழல், எடுத்துக் கொண்ட பணி என பலவேறு பரிமாணங்களில் காணப் படுகிறது. அரசனின் கடமை, போர் வீரனின் கடமை என்பதெல்லாம் க்ஷத்திரிய தர்மத்தின் கீழ் வருகிறது. கொடுத்த வாக்கை காப்பது எல்லோருக்கும் பொதுவான தர்மம் ஆகிறது.

எளிதாகத் தோன்றும் தர்மம் அதைக் காப்பாற்றி ஒழுகும் போது சிக்கலாக ஆகி விடுகிறது. ஏனெனில் ஒரு அரசன் ஆள்பவன் மட்டுமல்ல; ஒரு தகப்பன், கணவன் மற்றும் கொடுத்த வாக்குக்குக் கட்டுபட்டவன். ஒரு மகன் தனது தாய், சித்தி, தந்தை யார் சொல்லுக்கும் கட்டுப்பட வேண்டியவனே. ஒருவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இன்னொருவரின் சொல்லை மீற வேண்டி வந்தால்? ஒரு வகையில் தர்மத்தின்படி செயற்பட்டு இன்னொரு விதத்தில் தர்மம் தவறினால்? இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட ராமாயணம் முழுக்கத் தென்படுகிறது. பல இடங்களில் நாம் இதைக் காண்கிறோம். எனவே ஒரு படிப்பினை நூலாக மதநூலாக ராமாயணத்தைக் காண்போர் அதன் நுட்பமான செய்தியை உள்ளே நிகழும் போராட்டத்தைச் சித்தரிக்கும் அற்புதமான காவிய ரசனையை இழக்கிறார்கள்.

ஆழ்ந்து நோக்கும் போது ராமாயணத்தின் பல பிரதிகளில்(அனேகமாக எல்லாவற்றிலும்) ராமன் துவக்கத்தில் ஒரு அவதாரமாகவே சித்தரிக்கப்படுகிறான். மனிதனாக இளவரசனாக எவ்வளவோ தவ வலிமைகள் பெற்று பல திவ்யாஸ்திரங்கள் எனப்படும் ஆயுதங்களைப் பெற்றவனாகத் திகழ்கிறான்.

இருந்தும் தனது மனையாளை அபகரித்த இராவணனிடமிருந்து அவளை மீட்கும் பணியை பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து இறுதியிலேயே தனது பகைவனை வெல்கிறான். சீதையும் தனது தாயான பூமாதேவியை அழைக்காது அல்லலுறுகிறாள்.

இது எவ்வளவு பெரிய முரண் ? தண்டிக்கப்பட வேண்டியவனைத் தண்டித்து, மீட்கப்பட வேண்டியவளை மீட்டுத் தனது கடமையினின்று வழுவாது நிற்க வேண்டிய பராக்கிரமசாலியான ராமன் ஏன் இந்த அளவு நீண்ட, சுற்றி வளைத்த, இடர்கள் நிறைந்த ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ராமன் எடுத்த முடிவுகளில் எது வழிகாட்டி ஆனது ?

எதை வழிகாட்டுதலாக ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும்? தனது விருப்பு வெறுப்புகள் அல்லது நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும் ? தனது விருப்பங்கள் மற்றும் கடமை கட்டுப்பாடுகள் இணையும் ஒரு புள்ளியில் தொடங்க வேண்டுமா ? அல்லது தனது சுய விருப்பங்கள் என்ற ஒன்றையே புறக்கணித்துத் தனக்குக் காட்டப்படும் வழியில் செல்ல வேண்டுமா?

தனிமனிதனா? சமுதாய அங்கமா?
எது ஒருவரின் அடையாளம்?

இந்தக் கேள்வி ராமாயணத்தால் மிக அழுத்தமாகத் துவக்கப்பட்டது. அதற்கான விடைகள் இன்று வரை முடிவானதாயின்றி சிந்தனையைத் தூண்டுகின்றன. ராமாயணம் முழுக்க முழுக்க இந்தக் கேள்விக்கான வெவ்வேறு விடைகளும் அதன் விளைவான குடும்ப, சமுதாய, அரசியல் நிகழ்வுகளும் மனப்போராட்டங்களும் விரவிக் கிடக்கின்றன.

விடைக்கான தேடலில் ஒவ்வொரு காண்டமாக நாம் ராமாயணத்தை ஒரு மறு வாசிப்புச் செய்வோம்.

மூலப்பிரதி எனக் கருதப்படும் வால்மீகி ராமாயணத்தையும், செவ்வியல் அழகு மிளிரும் கம்பராமாயணத்தையும், பக்தி மயமான (சூர்தாஸின்) ராமசரித்மானஸையும் இந்தக் கேள்வியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த வாசிப்புச் செய்வோம்.

Series Navigation