தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ப. திருஞான சம்பந்தம்


ப. திருஞான சம்பந்தம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்

தொல்காப்பிய மரபையட்டி வளர்ந்த இலக்கண வகைமையாகத் திகழ்வது நிகண்டாகும். இது தொல்காப்பியரின் இடையியல், உரியியல், மரபியல் நூற்பாக்களில் உள்ள பொருள் கூறும் முறைமையைக் கொண்டு வளர்ந்தது. தமிழின் ஐந்திலக்கண மரபு என்ற வகைப்பாட்டில் அடங்காது தனியே சில கிளைகள் உருவாயின. அவ்வாறு தனியே கிளைத்த பிரிவாகவும் நிகண்டைச் சுட்டலாம். நிகண்டைப் பொதுவாக முப்பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. ஒரு பொருள் பல்பெயர்த்தொகுதி
2. ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி
3. பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி
இத்தொகுதி வகைப்பாட்டிற்கு மூலமாகத் தொல்காப்பிய நூற்பாக்கள் விளங்குகின்றன. இவ்வகைப்பாடுகள் நிகண்டுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நிகண்டு நூல்களில் நமக்கு கிடைக்கும் மிகவும் பழைமையான நிகண்டு திவாகரமாகும். இந்நிகண்டின் அமைப்புமுறைமையை மாதிரியாகக் கொண்டே பிற்கால நிகண்டு நூல்கள் உருவாயின. அவ்வாறு உருவான வகைப்பாட்டினுள் காணப்படும் யாப்பிலக்கணம்சார் பதிவுகள் இக்கட்டுரையின் பொருண்மையாக அமைகின்றது. ஆய்வின் தரவுகளாகத் திவாகரம், பிங்கலம், சூடாமணி, அகராதி, உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதிதீபம், ஆசிரிய நிகண்டு, தமிழ் உரிச்சொல் பனுவல் முதலிய நிகண்டு நூல்களில் காணப்படும் யாப்பியல்சார் பதிவுகள் இங்குத் தொகுத்து நோக்கப்படுகின்றன.
தமிழ்நிகண்டுகளும் யாப்பும்
தமிழில் உள்ள நிகண்டு நூல்களின் பாவகை அமைப்பும் அவை எவ்வாறு மனனம் செய்வதற்குரிய வகையில் உள்ளன என்பது பற்றியும் மு. சண்முகம்பிள்ளை கூறும் கருத்துரை கவனிக்கத்தக்கது.
முதலில் வந்த நிகண்டு நூல்கள் நூற்பாவினால் அமைக்கப்பட்ட போதிலும் காலப்போக்கில் மனப்பாடஞ் செய்வதற்கு எளிதாக இருத்தலைக் கருதி வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் முதலிய பாவகைகளாலும் நிகண்டு நூல் செய்வாராயினர். வெண்பா யாப்பில் அமைந்தவை உரிச்சொல் நிகண்டும் நாமதீப நிகண்டும் ஆகும். கட்டளைக் கலித்துறையில் இரண்டு நிகண்டுகள் உள. ஒன்று கயாதரம் மற்றொன்று பாரதிதீபம்… விருத்தபாவில் அமைந்த நிகண்டுகளுள் சூடாமணி நிகண்டு முதன்மையாகக் கொள்ளத்தக்கது. அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு நாநார்த்த தீபிகை போன்றவை இவ்வகையின (1982 23-24).
தமிழ் இலக்கணங்கள் பெரும்பாலும் நூற்பா யாப்பைப் பயன்படுத்தியதைப் போலவே தொடக்க கால நிகண்டுகளும் நூற்பா யாப்பைப் பின்பற்றியுள்ளன. பின்னர் படிப்படியாக வெண்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, பல்வகை யாப்பு எனக் கால மாற்றத்திற்கு ஏற்றார்போல் நிகண்டுகள் பா வகையினையும் இனத்தையும் பயன்படுத்தியுள்ளன.
இத்தகைய பாவகைப் பயன்பாடுகள் அக்காலத்தைய கல்வியின் மனப்பாடப் பயிற்சிக்கு மிகவும் இன்றியமையாததாக அமைந்தன. மனப்பாடப் பயிற்சியில் சொற்களை எளிதில் பயில எதுகை என்ற யாப்பியல் கூறு பேருதவி புரிந்தது. ணூவிபாடும் மரபில் கடைப்பிடிக்கப்பட்ட இவ்வகையான யாப்பியல்சார் இலக்கணக் கூறுகள் நிகண்டுகளை உருவாக்குவதற்கு வழி வகுத்ததைப் போலவே இவற்றில் சில பா, பாவகை சார்ந்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
நிகண்டுகளில் யாப்பியல் பதிவுகள்
நிகண்டுகள் உருவாக்கத்தில் நூற்பா யாப்பு, வெண்பா யாப்பு, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, பல்வகை யாப்பு முதலிய பா வடிவங்களைப் பயன்படுத்தினாலும் எதுகை அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். யாப்பிலக்கண மரபில் ஒரு விகற்பம் இரு விகற்பம் வருக்கம் என எதுகை அமையும். அது போல் நிகண்டுகளிலும் ஒரு விகற்ப இரு விகற்ப எதுகையும் ஒரே வருக்க எதுகையும் ஆட்சி பெற்றுள்ளன. நிகண்டாசிரியர்கள் பலரும் எதுகை அமைப்பை ஒழுங்கு நெறியாகக் கடைப்பிடித்துள்ளதைப் போன்றே அது சிலரால் தவிர்க்கப்பட்டுள்ளதையும் நிகண்டமைப்பில் கண்ணுற முடிகின்றது.
ஊறே யிடையூறும் வற்றறி புலனும்
நூறே பொடியும் நூறு மாகும்
(திவா.2187,2188)
வெள¢ளாடு வெண்பா வெள¢ளை நிறத்தன
வெள¢ளை என்னும் பெயரொடு விரியும்
(தி.வா.2249)
எனத் திவாகரர் எதுகை நயமிக்க நூற்பா யாப்பை அமைத்துள்ளார். எதுகை நயமிக்க வகையில் பாவமைப்பில் நூற்பாக்களை வரைந்த நிகண்டாசிரியர்கள் எதுகை என்பதற்கான இலக்கணத்தைச் சுட்டவில்லை. இது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
நிகண்டுகளில் இடம்பெற்றுள்ள யாப்பியல் பதிவுகள் கீழ்க் காணும் தன்மையில் அமைந்துள்ளன.
 யாப்பு என்பதன் பொருள்
 செய்யுள் உறுப்புகள் (அசை, சீர், அடி, தொடை)
 பா – பாவகை – பாவினம்
 பாவின் இசை வடிவம்- தாண்டகம், சந்தப்பாட்டு, வண்ணம்
இப்பதிவுகள் ஒலிபெயர் பற்றிய பெயர்த்தொகுதி பண்பு பற்றிய பெயர்த்தொகுதி, செயல் பற்றிய பெயர்த்தொகுதி ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி முதலியவற்றில் இடம்பெற்று உள்ளன.
யாப்பு என்பதன் பொருள்
செய்யப்படும் அனைத்தையும் செய்யுள் என்று அழைப்பர். இச்செய்யுளுக்கு பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்று ஏழுவகை வடிவங்கள் அடிப்படையாகும். இவ்வடிவங்களுள் முதன்மையாய் அமைவது பாட்டு. அப்பாட்டிற்குத் துணையாக அமைவன எழுத்து, அசை, சீர், அடி இவை மட்டும் இணைந்து வந்தால் அது பாட்டு ஆகாது. இவ் இணைப்பால் ஏற்படும் பொருள் முடிவின் கோர்வையையே யாப்பு. (ச.வே.சுப்பிரமணியன் 1978, 53).
இவ்வரையறையைப் போல் நிகண்டாசிரியர்களும் யாப்பு என்பதற்கான விளக்கத்தைத் தந்துள்ளனர். திவாகரர் யாப்பு என்பதை இமிழ்த்தல், யாத்தல், பிணித்தல், தொடுத்தல், தொடர்தல், ஆர்த்தல், கட்டல் என்கிறார் (திவா.1682). இதைப்போலவே கயாதரரும் நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே (கயா.370 1) மண்டல புருடரும் யாப்பு (என்ப) கவிதை கட்டு (ஆம்) (சூடா.868) எனப் பதிவு செய்கின்றனர்.
இவ்வாறு யாப்பு என்பதற்கான பல்பொருள்களையும் நிகண்டாசிரியர்கள் ஒருங்கே தொகுத்தளிக்கிறார்கள்.
செய்யுள் உறுப்புகள்
யாப்பு என்ற வடிவத்தைக் கட்டமைக்க உதவும் உறுப்புகளைச் செய்யுள் உறுப்புகள் என்று அழைப்பர். இது எழுத்து, அசை,சீர், தளை அடி தொடை முதலியவற்றைக் கொண்டமையும். இப்பிரிவுகளுள் அசை, சீர், அடி, தொடை சார்ந்த பதிவுகள் நிகண்டுகளில் இடம் பெற்றுள்ளன.
அசை என்பதைத் தமிழ் உரிச்சொல் பனுவல்
கட்டலுந் தங்கலும் வருத்தமு மியக்கமும்
அரும்பா வுறுப்பு மசையென மொழிப
(தமிழ். உரிச். 5483)
என்கிறது.

சீர் என்பதைத் திவாகரம்
பல்வகை இயங்கள் ஓசை பாரம்
சூல்லுதல் காத்தண்டு புழ் அழகு
செல்வம் சீர்மை சீர் என்று ஆகும்
(திவா.2045)
அடி என்பதைச் சூடாமணி
அடி செண்டு வெளி தாள்
ஆதி கலிகையின் பாதம் ஆமே
(சூடா.806: 4)
என்றும் பதிவு செய்கின்றன.
தொடை விகற்பத்தில் உள்ள மோனை இயைபுக்கான பொருளைத் திவாகரம் (1529), பிங்கலம் (2247, 1990), பாரதிதீபம் (416), கயாதரம் (339), தமிழ் உரிச்சொல் பனுவல் (5703) முதலிய நிகண்டுகள் தருகின்றன. இவ்வரையறைகள் யாப்பிலக்கண வரையறைகள் போல் முழுமை நிலையில் இல்லாவிட்டாலும் அசை, சீர், அடி, தொடை என்பதனைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
பா, பாவகை
நிகண்டுகள் பாவின் பெயராகத் தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, கவிதை முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும்
பாட்டும் கவிதையும் பா எனப் படுமே.
(திவா.1846)
என்று திவாகரர் கூற அதைப்பின்பற்றி பிங்கலரும் மண்டல புருடரும் (975) சிதம்பரம் ரேவண சித்தரும் (2440), திருவேங்கட பாரதியும் (494), காங்கேயரும் (207), ஆண்டிப்புலவரும் (210) தமது நிகண்டுகளில் பாவிற்கான பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
பாவின் வகைகளாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலியன வகைப்படுத்தப்பட்டுள்ளன. மருட்பாவை 21 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் உரிச்சொல் பனுவல் குறிப்பிடுகின்றது. வெண்பாவை நிகண்டுகள் முதற்பா, முற்பா, தலைப்பா எனச் சிறப்பு அடைமொழி கொடுத்து அழைக்கின்றன.
முதற்பா வெண்பா (திவா.1847, பிங்.2079, பாரதிதீப.494)
என்று திவாகரமும் பிங்கலமும் பாரதி தீபமும் சிறப்பிக்கின்றன. இதைப்போல் ஆசிரிய நிகண்டும் (210), உரிச்சொல் நிகண்டும் (207), சூடாமணி நிகண்டும் (710), தமிழ் உரிச்சொல் பனுவலும் (5325) வெண்பா குறித்து பதிவு செய்கின்றன.
நிகண்டுகள் ஆசிரியப்பாவை அகவலும் தொகையும் என்று குறிப்பிடுகின்றன. அகவலும் தொகையும் ஆசிரியப்பாவே (திவா.1849) என்றும் பிங்கலமும் (2081) சூடாமணியும் (710) ஆசிரிய நிகண்டும் (210) உரிச்சொல் நிகண்டும் (207) அகராதி நிகண்டும் (93) பாரதி தீபமும் (494) உரிச்சொல் நிகண்டும் (5326) தமிழ் உரிச்சொல் பனுவலும் (5326) பதிவுசெய்கின்றன. கலிப்பாவை முரற்கை (திவா.1848, சூடா.710, த.உ.5327) என்று பதிவு செய்கின்றன. வெண்பா ஆசிரியப்பாவில் விகற்பித்து வருவதைக் கலிப்பா என்று பிங்கலம் (2080) குறிப்பிடுகின்றது. கலிப்பாவின் உறுப்பாக வரும் முடுகியல், அராகம், குளகம் முதலியனவும் நிகண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. வஞ்சிப்பாவைப் பெயர் அளவில் மட்டுமே நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.
மருட்பாவை
கலவைப் பாவு மயங்கியற் பாவும்
மருட்பா வென்ன வழங்கற் குரிய (தமிழ்.உரிச்.5329)
எனத் தமிழ் உரிச்சொல் பனுவல் குறிப்பிடுகிறது. இவ்வாறு வெண்பா முதல் மருட்பா வரையிலான பா வகைகள் குறித்த பதிவுகள் நிகண்டுகளில் இடம் பெற்றுள்ளன.
இசைப்பாடல் வடிவங்கள்
இசைப்பாடல் வடிவங்களான வண்ணம், சந்தம், தாண்டகம் பற்றிய குறிப்புகள் நிகண்டுகளில் இடம் பெற்றுள்ளன. வண்ணம் என்பதை ஆசிரியப்பாவின் இனமாக யாப்பிலக்கணங்கள் சுட்டும். ஆனால் இது பற்றிய குறிப்புகள் எதுவும் நிகண்டுகளில் இல்லை. அராகம், முடுகியல், வண்ணம் ஆகும் (திவா.1850). வண்ணம், சந்தம் (திவா.140,பிங்.1946), வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் (சூடா.817) என வண்ணம் குறித்த பதிவுகள் நிகண்டுகளில் உள்ளன.
சந்தம் தாண்டகம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய வடிவமாகும். இதைப் பற்றி யாப்பருங்கல விருத்தியுரை குறிப்பிடுகின்றது. சந்தம் தாண்டகம் இரண்டிற்குமான ஒற்றுமை எழுத்து எண்ணிக்கையிலும் சீர் எண்ணிக்கையிலும் குறிப்பிடப்படும். இங்குச் சந்தம் தாண்டகம் இரண்டிற்கான எழுத்து எண்ணிக்கையும் அடி அளவும் பதிவு பெற்றுள்ளன. அவை,
இருபது மேலும் இருமூன்று எழுத்து நான்கு
அடியும் வருவது சந்தப் பாட்டே
மற்று அதன் மிகுத்த சொல் தரும்பெயர்த் தாண்டகம்
(திவா.1852, 1853)
… நான்கடி எய்தும் செய்யுள்

(பாரதிதீப.495)
எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதைப் போலவே பிங்கலமும்(4023) சூடாமணியும்(559,711,858) ஆசிரியநிகண்டும்(195,210) கயாதரமும்(308) அகராதி நிகண்டும்(1373,3123) சந்தம், தாண்டகம் பற்றிப் பதிவு செய்கின்றன.
தொகுப்புரை
• தமிழ் நிகண்டுகள் கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்வடிவங்களுக்கான இலக்கணங்களைப் பதிவு செய்தலையும் முன்னெடுத்துள்ளன.
• யாப்பு என்பதற்குரிய பல்பொருள்களையும் நிகண்டுகள் ஒருங்கே தொகுத்தளித்துள்ளன.
• பா வடிவங்களுக்கான இலக்கணங்களைப்போல் பா வகைகளைக் கட்டமைக்க உதவும் செய்யுள் உறுப்புகள் பற்றிய சில செய்திகளையும் நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளன.
• வடமொழி இலக்கண மரபுகளாக உள்வாங்கப்பட்ட சந்தம், தாண்டகம் பற்றிய குறிப்புகளும் நிகண்டுகளில் இடம் பெற்றுள்ளன.
• யாப்பியல் குறித்த பதிவுகள் ஒலி பற்றிய பெயர்த் தொகுதியில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

துணை நூல்கள்

1. சற்குணம். மா., 2002, தமிழ் நிகண்டு ஆய்வு, இளவழகன் பதிப்பகம், சென்னை.
2. சுப்பிரமணியன், ச.வே., 1978, இலக்கணத்தொகை யாப்பு பாட்டியல், தமிழ்ப்பதிப்பகம், சென்னை.
3. சண்முகம் பிள்ளை . மு., 1982, நிகண்டுச் சொற்பொருட் கோவை, மதுரைகாமராசர் பல்கலைக் கழகம். மதுரை.
4. மணிகண்டன் . ய., 2001, தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை.
5. ஜெயதேவன் .வ., 1999, தமிழ் அகராதியியல் அன்றும் இன்றும் அஸ்வினி புக் கம்பனி, சென்னை.

Series Navigation

ப. திருஞான சம்பந்தம்

ப. திருஞான சம்பந்தம்