மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2

This entry is part of 38 in the series 20090820_Issue

மதுமிதா


15. உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும்
சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா?

மேசன் சங்கம் 600 வருடங்களாக இயங்கி வருவதாகச் சொல்கிறார்கள். உலக நாடுகள் முழுவதிலும் அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். தற்போதைய அங்கத்தவர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க இந்தச் சங்கம் வியாபித்து இருக்கிறது. எனக்கு இந்தச் சங்கத்துடன் ஒரு தொடர்பும் கிடையாது. உலகப் பிரபலமான பலர் இதில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவை நான் விட்டபோது என்னுடைய தொடர்பும் முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

16. உலகத்தின் பல்வேறு இடங்களில் பயணம், வாழ்க்கைமுறை மாற்றம் இல்லையென்றால், உங்கள் படைப்பு எத்திசை நோக்கி பயணப்பட்டிருக்கும் என
எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

நான் அதுபற்றி நிறைய தடவை சிந்தித்திருக்கிறேன். என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘அக்கா’ 1964ல் வெளிவந்தது. அதற்கு பின்னர் நான் வெளிநாடு போய்விட்டேன், இலங்கைக்கு திரும்பவே இல்லை, அவ்வப்போது விடுமுறைக்கு போனதோடு சரி. கிட்டத்தட்ட 25 வருடங்கள் நான் எழுதவில்லை. தமிழ் நூல்களோ பத்திரிகைகளோ படிக்க கிடைக்கவில்லை. அப்பொழுது இணையமும் இல்லை. ஆனாலும் நான் ஆங்கில நூல்களைப் படிப்பதை நிறுத்தவில்லை. பெரிய இடைவெளிக்கு பிறகு திரும்பவும் எழுத வேண்டி வந்தது. நான் இலங்கையை விட்டு புறப்படாமல் தொடர்ந்து எழுதியிருந்தால் என்னநடந்திருக்கும்? என்னுடைய எழுத்து இன்னும்சிறப்பாக அமைந்திருக்குமா, சொல்லமுடியாது.
உலகத்தில் பயணங்களும், பலநாட்டு அனுபவங்களும் ஓர் எழுத்தாளனுக்கு முக்கியமானவை. இலக்கியம் என்றால் என்ன? ஒரு துளி சம்பவத்தை எடுத்து பெருக்கி உலக அனுபவமாக மாற்றுவதுதானே. வைரம் அரித்த இரண்டு பெண்களின் கதை உலகத்தின் எந்த நாட்டிலும் நடந்திருக்கலாம். மிதவையில் இறந்த கிழவியின் கதையும் எந்த ஒரு நாட்டிலோ நடந்திருக்கலாம். அந்த அனுபவங்கள் உலகத்துக்கு பொதுவான அனுபவங்கள். என்னுடைய மொழி சிறந்தது, கலாச்சாரம் சிறந்தது, இனம் சிறந்தது போன்ற குறுகிய சிந்தனை பயணத்தின்போது அடிபட்டு போய்விடுகிறது. எல்லாவற்றிலுமே சிறப்பான அம்சம் உண்டு என்ற எண்ணம் உண்டாகுகிறது. ஆப்பிரிக்காவில் மரங்கள்
பொதுவானவை. யார் வேண்டுமென்றாலும் யார் வீட்டு மரத்திலும் பூக்களை, காய்களை, பழங்களை ஆய்ந்துகொள்ளலாம். மரங்கள் கடவுளுக்கு சொந்தமானவை, ஆகவே பொதுவானவை. எவ்வளவு பெரிய தத்துவம். தமிழிலே ‘உவன்’ என்ற வார்த்தை உண்டு. வேறு ஒரு மொழியிலும் அப்படி வார்த்தை இல்லை. ஆகவே தமிழ் சிறந்த மொழியா?
அல்கொங்குவின் மொழியில் ‘நான், நாங்கள்’ போன்ற வார்த்தைகள் இல்லை. ‘நீ’ மட்டும்தான் இருக்கிறது. ஆகவே அது தாழ்ந்த மொழியா? ஒவ்வொரு நாட்டிலும்
உள்ள தனித்தன்மை, மனிதப் பண்பு, மொழி, கலாச்சாரம் அவற்றின் உயர்வு கண்ணுக்கு படுகிறது. எழுதும்போது அது ஒரு பொதுத்தன்மையை பெறுகிறது. அதுதான்
இலக்கியத்தின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன்.

17. பாதிக்கிணறு, அம்மாவின் பாவாடை, அம்மா திருவிழாவில் தொலைந்தது, பேச்சுப்போட்டியில் உங்களுக்கு பரிசு கிடைக்காத நாளில் அது குறித்து
அம்மா எதுவும் கேட்காமல் உங்களை உணவு உண்ணச் செய்தது என அம்மா குறித்த உங்கள் பதிவுகள் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் பெண்ணின்
ஆளுமையை வெளிப்படுத்துகிறதே. அவர் குறித்த நினைவுகள் முழுக்க பதிவு செய்யவில்லை என்று தோன்றுகிறதா?

அம்மாவைப்பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது எதை விடுவது என்பதுதான் பிரச்சினை. சமீபத்தில் ஒரு நாவலைப் பற்றிய விமர்சனம் படித்தேன்.
‘இந்த எழுத்தாளர் ஒரு காட்டை வர்ணிக்கப் புகுந்தால் ஒவ்வொரு மரமாக வர்ணித்து தீர்த்துவிட்டுத்தான் நிறுத்துவார்’ என்று எழுதியிருந்தது. ஒரு மரத்தை மட்டுமே வர்ணித்து காட்டை முன்னே நிறுத்துவதுதான் எழுத்து. அம்மாவைப் பற்றிய பதிவு போதும் என்றே நினைக்கிறேன். அம்மா இறந்தபோது எனக்கு வயது 13தான். ஆனால் இன்றுவரை ஒருநாள் ஒருமுறையாவது அம்மாவை நினைக்காமல் என் நாள் கழியவில்லை.

18. தந்தை குறித்து இதே அத்தியாயங்களில் வந்தாலும் சீத்தலைச் சாத்தனார் போல தலையில் அடித்துக்கொள்ளும் அப்பாவே அதிகம் முன்நிற்கிறார்.
உங்கள் வாசிப்புக்கு, எழுத்துக்கு உங்கள் சகோதரியின் வாசிக்கும் பழக்கமும் வித்திட்டதா?

எங்கள் வீட்டில் அக்காதான் தவறாமல் நாவல்களும் வாரப் பத்திரிகைகளும் படித்தார். எல்லாம் இரவல் வாங்கியது. அவர் படித்தபடியால் நானும் படித்தேன். என் வாசிப்பு பழக்கம் அவரைப் பார்த்து ஆரம்பித்ததுதான். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன். நீங்கள் குருவிக்கூட்டைப் பார்த்தால் சில குருவிக் குஞ்சுகள் எப்பவும் வாயை திறந்து கூட்டுக்கு வெளியே தலையைநீட்டிக்கொண்டிருக்கும். தாய் பறவை உணவு கொண்டுவரும்போது அது தவறிப்போமோ என்ற பயம்தான் காரணம். நானும் அந்த பறவைக் குஞ்சுபோலத்தான். எங்கே எந்த விசயமாவது தவறவிட்டுவிடுவோமோ என்பதுபோல வாயை திறந்தபடி காத்திருப்பேன்.

19. கல்கியின் எழுத்துநடையின் பாதிப்பு ( நகைச்சுவை மிகுந்த நடை, வரலாற்றுப் பிண்ணனியுடன் காட்சிப்படுத்துதல், சுவாரஸ்யமாக செய்திகளை
அளித்தல்) அவருடைய மறைவிற்குப் பிறகு இன்றைய காலகட்டம் வரை உங்களின் எழுத்துகளில் மட்டுமே பார்க்கக்கூடியதாகத் தெரிகிறதே. நீங்கள் அதை
உணர்கிறீர்களா? வேறு யாரேனும் இது குறித்து உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?

கல்கியை நான் பள்ளிப் பராயத்தில் ஆர்வமாகப் படித்தது உண்மை. அவர் எனக்கு எழுதிய ஓர் தபால் அட்டையை நீண்டகாலமாகப் பாதுகாத்துவைத்திருந்தேன். ஆனால்
அவரைப்போல எழுதவேண்டும் என்று நான் முயற்சித்தது இல்லை. அவருடைய சாயலில் எழுதுவதாகவும் நினைத்ததில்லை. யாரும் சொன்னதும் கிடையாது. அவருடைய நடையும் எழுத்தும் முற்றிலும் வேறு விதமானது என்றே நினைக்கிறேன்.

20. விமான நிலையத்தில் தலையில் பாதுகையைத் தூக்கிச் செல்லும் சித்திரம் இன்னும் கண்முன்னே தெரிகிறது. பாதுகாப்புக்காக சப்பாத்துகளைக் கண்காணிப்பது இன்னும் தொடர்கிறதா?

நான் அடிக்கடி பயணம் செய்வேன். வருடத்தில் பத்து தடவையாவது விமான பாதுகாப்பு கடவையில் சப்பாத்தைக் கழற்றி தூக்கிக்கொண்டு கடக்கும் பயணிகளுடன் நானும் காணப்படுவேன். உலகம் முழுக்க பயணிகளுக்கு இதுதான் விதி. உலகத்தில் விமானப் பயணத்தில் அதிக மாற்றம் உண்டாக்கியது பின் லாடன் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில்லை, நான் சொல்லுவேன் அது ரிச்சார்ட் ரீட்தான் என்று. சப்பாத்தில் குண்டுவைத்து அதைக் கொளுத்த முற்பட்டவன். அவன் இப்பொழுது அமெரிக்க சிறை ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறான். இன்று உலகத்து விமானப் பயணிகள் எப்படி பயணம் செய்யவேண்டும் என்பதை தீர்மானித்தது அவன்தான். உலகத்தில் விமானப் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகள் அவனை நாளுக்கு ஒருகணமாவது நினைவுகூருவார்கள்.

21. காதலித்து மணம் செய்துகொண்ட மனைவி, பணிக்கென சென்ற இடங்களில் பேச்சு மொழியைக் கற்று எல்லாவற்றிலும் உறுதுணையாய் இருந்து சுமுகமாக
இல்லறம் நடத்தியவர், நீங்கள் பணிஓய்வு பெற்ற போது எனக்கு எப்போது ஓய்வு (நோபல் பரிசு பெற்ற காப்ரியலின் மனைவி மேர்சிடிஸ் உங்களுடன் இத்தனை
வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த சாதனைக்காக நோபல் பரிசு தரவில்லையென்றது போல) என்று ஒரு மில்லியன் டாலர் கேள்வியினைக் கேட்டவர், உங்களின் படைப்புகள் நன்றாக இருக்கிறதென ஒரு வரியுடன் விமர்சனத்தை முடித்துக்கொள்பவர், உங்கள் எழுத்துப்பணியில் சிரமம் தராத அவரின் ஆகச் சிறந்த குணமாக நீங்கள் கருதுவது?

என் மனைவி அபூர்வமாக நான் எழுதுவதை படிப்பார். அதைவிட அபூர்வமாக எப்போதாவது நல்லாயிருக்கு என்று ஒரு வார்த்தையை உதிர்ப்பதுண்டு. (உலகப் புகழ்
பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோயிசின் மனைவி நோறா கணவனின் எழுத்தை படித்ததே இல்லை. ஆனால் படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பாராம்.) நான் மனைவியிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அவரிடமுள்ள அற்புதமான குணம் பொறுமை. வீட்டை அப்பழுக்கின்றி சுத்தமாக வைத்திருப்பது அவருக்கு முக்கியம். ஒரு தூசி கிடந்தால் அதை அப்புறப்படுத்தாமல் நகரமாட்டார். நான் எதிரான பழக்கம் உள்ளவன். தூசிகளை உண்டாக்கத்தான் தெரியும். ஒரு புத்தகத்தை படிக்க எடுத்தால் அதை
திரும்பவும் எடுத்த இடத்தில் வைக்க முயற்சித்ததில்லை. வீடு முழுக்க ஒரு கட்டத்தில் பாதி படித்த புத்தகங்கள் திறந்தபடி இறைந்துகிடக்கும். குறிப்பு புத்தகங்களும் போட்டது போட்டபடி கிடக்கும். மனைவி பொறுமையாக அவற்றை எடுத்து உரிய இடங்களில் அடுக்கி வைப்பார். அதே பொறுமையுடன் நான் அவற்றை மீண்டும் கைப்பற்றி விட்ட இடத்தை தேடிப்பிடித்து படிக்கத் தொடங்குவேன். யாருக்கு பொறுமை அதிகம் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

22. யுவராசா பட்டம் அத்தியாயத்தை கடைசியில் மேலாளர் வந்த இடத்துடன் அனைவரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க நீங்கள் கோப்பில் முகம்
புதைத்திருப்பதாய் முடித்துவிட்டீர்கள். கையாளப்பட்ட பணம் குறித்து நீங்கள் எடுத்துச் சொன்னீர்களா? என்ன ஆனார் முதன்மை இயக்குநர்? படபடக்கும்
ஆர்வத்துடன் பல வழிகளில் வாசகர்கள் சிந்திக்கட்டும் என்று அத்துடன் முடித்துவிட்டீர்களா?

அது மோசமான ஓர் அனுபவம். நான் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்தேன். வாசகர்கள் புத்திசாலிகள், அவர்கள் ஊகித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.

23. உங்கள் ஐயா சொன்னதில் ஒன்று உண்மையானது. மற்றொன்று பொய்யானது என்று போகிறபோக்கில் சொல்வது போல் சுளுவாக எழுதிவிட்டீர்கள். அது
அளிக்கும் கனமான சுமையை இறக்கி வைக்க இயலவில்லை. வாசிக்கையில் ரணமாய் வலிக்கிறது. இவ்வளவு இயல்பாக வலியில்லாதது போல எப்படி
எழுதினீர்கள்?

ஐயா சொன்னதில் ஒன்று உண்மையானது, ஒன்று பொய்த்தது என்பதைக் கண்டுபிடிக்க நான் 50 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. நான் நடந்ததை எழுதினேன். சில ஞாபகங்கள் தூரக் கண்ணாடியால் பார்க்கும்போது துல்லியம் கொண்டுவிடுகின்றன. பழையதை அசை போடும்போது அவை மனதை அசைத்துவிடுவதும் உண்மை. எழுத்து என்பது ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்துவதுதானே. புறநானூற்றில் ஓர் உவமை வரும், மறக்கமுடியாதது. எல்லோரும் அணிலைப் பார்த்திருப்பார்கள். எல்லோரும் வெள்ளரிக்காயையும் பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தப் புலவருக்குத்தான் ‘அணில் முதுகு வரிபோல கோடுபோட்ட வெள்ளரிக்காய்’ என்று சொல்லத் தோன்றுகிறது. அங்கேதான் இலக்கியம் பிறக்கிறது. சாதாரண விசயம் நாங்கள் வியக்கும் இலக்கியமாகிவிடுகிறது.

24. உங்கள் இசை அனுபவம் இன்னும் தொடர்கிறதா?

இசை அறிவு என்பது எனக்கு மிகக் குறைவு. ஒரு வகை தவளை இருக்கிறது. பாம்பு அதைப் பிடிப்பதுபோல அபாயம் வரும்போது அது காற்றைக் குடித்து உப்பி
தன்னை இரண்டு மடங்கு பெரிசாக்கிக்கொள்ளும். என் எழுத்தும் அப்படி ஒரு தோற்றத்தை கொடுத்திருக்கலாம். இசை ஞானத்தை வளர்த்திருக்கவில்லையே என்ற
ஆதங்கம் எனக்கு உண்டு.

25. புத்தாயிரத் தொடக்கத்தைக் கொண்டாட நமீபியாவில் லோர்ரியின் சிறுத்தைக் காப்பகத்தைத் தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதுபோன்று நீங்கள் வேறு எங்கேனும் போய்ப் பார்க்க நினைத்த இடம் பார்க்க இயலாமல் இருக்கிறதா? இச்சிறுத்தைக் காப்பகத்தைத் தேர்ந்தெடுக்க வேறு ஏதேனும் முக்கிய காரணம் உண்டா? (இன்னொரு அத்தியாயத்தில் நாவலில் விலங்கினும் மக்களைக் காண்கையில் குரூசோ மிரண்டு போவான் என்று எழுதியிருப்பீர்கள். அதுபோல மக்கள் நடுவில் இருப்பதை விடவும் விலங்குகளிடையில் இருக்கலாம் என நினைத்தீர்களோ) அதற்குப் பிறகேனும் வெல்வெட்சியா தாவரத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்ததா?

வாழ்நாள் முழுக்க ஞாபகம் வைத்திருக்கக்கூடிய ஓர் இடத்தை தேர்வு செய்யவேண்டும் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. வெல்விட்சியா மிகவும் அபூர்வமான
பாலைவனத் தாவரம். மிகச் சிலரே அதைப் பார்த்திருப்பார்கள். சமீபத்தில் என்னுடைய மகன் பூமியின் ஆதிப் பாலைவனம் என்று சொல்லப்படும் நமீபியா பாலைவனத்தை கால்நடையாக 14 நாட்கள் நடந்து கடந்தான். அப்போது இந்த தாவரம் பலதைக் கண்டதாகக் கூறினான். இது ஒரு சுயநலம் பிடித்த தாவரம். தனக்கு கிட்ட வேறு தாவரம் முளைக்கக்கூடாது என்று தன்னைச் சுற்றி நிலத்தில் ஒரு நச்சுத் திரவத்தை பரப்பி வைக்கும். அதேபோல துரோகி தாவரம் ஒன்று ஸொலமன் தீவுகளில் உண்டு, பெயர் strangler fig tree. இதற்கு தானாக நிலத்திலே வளரத் தெரியாது. மரத்திலே விழுந்த விதையிலிருந்து வளர்ந்து கிடுகிடென்று மரத்தைச் சுற்றிபிடிக்கும். விழுதுகளை இறக்கி நிலத்திலிருந்து உணவை எடுக்க பழகிய பின்னர் உயிர் கொடுத்த தாய் மரத்தை நசுக்கி கொன்றுவிடும். மனிதர்களைப்போல மரங்களிலும் பலவகை உண்டு.

26. ஏதாவது ஹாபி உண்டா? பிராணிகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகமா? ஆப்பிரிக்காவில் முயல்கள் வளர்த்தபின்பு வேறு வளர்க்கவில்லையா?

ஆப்பிரிக்காவில் இருக்கும்போது பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்று முயல் வளர்த்தோம், கிளி வளர்த்தோம் இன்னும் லவ் பேர்ட்ஸ் நிறைய வளர்த்தோம். பல வருடங்களாக வீட்டில் நாய்கள் வளர்த்தோம். ஆனால் கனடா வந்த பின்னர் ஒன்றுமே வளர்ப்பதில்லை. நாங்கள் அடிக்கடி பயணம் செல்வதால் அவற்றை பார்த்துக்கொள்ள மாற்று ஏற்பாடு செய்வது பிரச்சினையானது. ஆகவே செல்லப் பிராணி வளர்ப்பதில்லை. தோட்டத்திலும் வீட்டிலும் மரங்கள் செடிகள் பூக்கன்றுகள் வளர்க்கிறோம்.

27. பல நாடுகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் 5 தேசத்து எழுத்து, எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

இது ஒரு நீளமான பதிலைக் கோரும் கேள்வி. பதில் பக்கம் பக்கமாக எழுதலாம். கீழே சொல்லும் எழுத்தாளர்களை எல்லாம் நான் சந்தித்திருக்கிறேன்.
இன்றுவரை அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். இந்தக் கணக்கில் இலங்கை
இந்திய எழுத்தாளர்களை நான் சேர்க்கவில்லை.

அ) சிமமண்டா ங்கோசி.
இளம் நைஜீரியப் பெண். இவர் இதுவரை இரண்டு நாவல்களும் பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். Half of a Yellow Sun, Purple Hibiscus என்ற இரண்டுமே
புகழ் பெற்ற நாவல்கள். இவருடைய சிறுகதைகள் முன்மாதிரியானவை. இதற்கு முன்னர் வந்திருக்கும் சிறுகதைகளை விஞ்சியிருக்கும். சமீபத்தில் அமெரிக்காவின் Genius விருது $500,000 இவருக்கு கிடைத்தது. இவர் நைஜீரியாவில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பரிசுச் செய்தி தொலைபேசியில் வந்தது. அப்பொழுது அவர்
நிருபர்களிடம் சொன்னார் ‘அமெரிக்கா என்னுடைய தூரத்து மாமா மாதிரி. என்னுடைய பெயர் அவருக்கு ஞாபகமிராது; ஆனால் அடிக்கடி pocket money
கிடைக்கும்.’

ஆ) மொகமட் நசிகு அலி
ஓரு சிறுகதை தொகுப்பு மட்டும் எழுதியவர், The Prophet of Zongo Street. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகள் பிரபலமான ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நியூ யோர்க்கர், நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவார். இசையமைப்பதிலும் ஆர்வம் உண்டு. சமீபத்தில் இவர் இசையமைத்த படம் ஒன்று ஒஸ்கார் பரிந்துரையில் சிறந்த நடிகர் பிரிவில் தேர்வாகியிருந்தது. படத்தின் பெயர் The Visitor. ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏ.ஆர்.
ரஹ்மான் பரிசு பெற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்.

இ) கார்ல் இயக்னெம்மா
இவர் அமெரிக்கர், எழுதிய நூல்கள் The Expeditions, On the Nature of Human Romantic Interaction. இவருடைய சிறுகதை Best American Short Stories ல்
தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். ஆராய்ச்சி நேரம் தவிர மீதி நேரம் எழுதுகிறார். முடிவடையாத பல சிறுகதைகள் தன் மேசையை நிறைந்திருப்பதாக சமீபத்தில் என்னிடம் கூறினார். சிறுகதை எழுதுவதில் புதிய உத்தியை புகுத்தி அதை இன்னொரு தளத்துக்கு உயர்த்தியவர். இந்த நூற்றாண்டின் சிறுகதை போக்கையே மாற்றிவிடும் சக்தி இவர் எழுத்துக்கு இருக்கிறது.

ஈ) டேவிட் பெஸ்மொஸ்கிஸ்
கனடிய எழுத்தாளர். ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வெளியிட்டார், பெயர் Natasha. ஆனால் அதிகப் புகழ் பெற்றவர். பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. டைம்
பத்திரிகை இவருடைய எழுத்தை புகழ்ந்து எழுதியது. சமீபத்தில் இவர் திரைக்கதை எழுதி இயக்கிய Victoria Day படம் வெளியாகியிருக்கிறது. கான் திரைப்பட விழா
பாரிசில் நடைபெறுவதுபோல சண்டான்ஸ் திரைப்பட விழா வருடா வருடம் அமெரிக்காவில் நடைபெறும். அந்த விழாவில் இந்த படம் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உ) டேவிட் செடாரிஸ்.
பாரிசில் வசிக்கும் அமெரிக்க எழுத்தாளர். பல நூல்கள் எழுதியிருக்கிறார், Me Talk Pretty One Day, Dress Your Family in Corduroy and Denim, Barrel Fever, Naked.
பல விருதுகள் பெற்றவர். இவருடைய புத்தகங்கள் பல மொழிகளில் இன்றுவரை ஏழு மில்லியன் நூல்கள் விற்பனையாகி இருக்கின்றன. 2008 டிசெம்பரில் இவர்
ரொறொன்ரோ வந்திருந்தார். 2000 பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கத்தில் தோன்றி தன்னுடைய புத்தகத்தில் சில பக்கங்களை ஒரு மணி நேரம் வாசித்தார். இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். என் வாழ்நாளில் ஓர் எழுத்தாளருக்கு இத்தனை வாசகர்கள் டிக்கட் வாங்கி வந்ததை நம்பமுடியவில்லை. பலர் டிக்கட் கிடைக்காமல் திரும்பி போனார்கள். இதை இவருக்கு கிடைத்த கௌரவமாக நான் நினைக்கவில்லை, ஓர் எழுத்தாளருக்கு கிடைத்த கௌரவமாகவே
நினைக்கிறேன்.

28. உங்களின் புகைப்படங்களில் நூலை அல்லது ஒரு பத்திரிகையை வாசிப்பது போலவே போஸ் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு பிரத்யேகமான காரணம்
ஏதும் உண்டா?

லியர்னாடோ டாவின்ஸி வரைந்த மோனா லிசா நேர்கொண்ட பார்வையும் பாதிப் புன்னகையும் கொண்டவர். உலகத்திலே அதிக மக்கள் பார்த்து மகிழ்ந்த அந்தப் பெண்மணி ஓவியத்திலிருந்து நேரே பார்க்கலாம், சிரிக்கலாம். உலகத்திலேயே அதிக மதிப்புள்ள ஓவியம் என்று அதைக் கூறுகிறார்கள். நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. நான் விழித்திருக்கும் நேரத்தில் பாதி நேரம் ஏதாவது படித்தபடி இருக்கிறேன். புகைப்படக்காரர் வந்தபோது நேரத்தை மிச்சப்படுத்த படித்துக்கொண்டிருக்கலாம். அடுத்த தடவை மோனாலிசாவை தோற்கடிக்கும் ஒரு புன்னகையை தரலாம் என்றிருக்கிறேன். மோனாலிசாவின் 500 வருடப் புகழ் அத்துடன் முடிந்தது.

29. உங்கள் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

எழுதுவதை நிறுத்துவேன் என்று சொல்லமாட்டேன், குறைப்பேன்; வாசிப்பை கூட்டுவேன். இரண்டு வருடங்கள் முன்பு ஒரு கூட்டத்தில் அலிஸ் மன்றோ (கனடா எழுத்தாளர்) தான் எழுதுவதை நிறுத்தப்போவதாக அறிவித்தார். ஆனால் மறுடியும் எழுத ஆரம்பித்துவிட்டார். இப்போழுது 82 வயது காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (நோபல் பரிசு பெற்ற
எழுத்தாளர்) தனக்கு களைப்பு வருகிறெதென்றும் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் அவரால் நிறுத்த முடியாது, மீண்டும் எழுதுவார்.
ஏனென்றால் களைப்பிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி எழுதுவதுதான்.

அன்புடன்
மதுமிதா

Series Navigation